

உலகளாவிய முன்னணி நிறுவனங்களில் இந்தியர்கள் தலைமைப் பொறுப்புக்கு வருவது தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. ஏன் வெளிநாட்டு நிறுவனங்கள் தலைமைப் பொறுப்புக்கு இந்தியர்களைத் தேர்ந்தெடுக்கின்றன? தலைமைத்துவத்தில் இந்தியர்கள் எங்கு தனித்துவம் கொள்கிறார்கள்? விரிவாகப் பேசுகிறது ஸ்டீவ் கொரியா (Steve Correa) எழுதிய ‘இண்டியன் பாஸ் அட் வொர்க்: திங்கிங் குளோபல், ஆக்டிங் இண்டியன்’ (Indian Boss At Work: Thinking Global, Acting Indian) புத்தகம்.
தாங்கள் வேலை செய்யும் இடங்களில் தங்களுக்கு வழங்கப்படும ்பொறுப்புகளுக்கு, அது சார்ந்து எதிர்கொள்ளும் குழப்பங்களுக்கு, எதிரெதிர் நிலைப்பாடு கொண்ட சூழ்நிலை களுக்கு தலைமைப் பொறுப்பில் இருக்கும் இந்தியர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதைப் பற்றிவிரிவான பார்வையை அவர் இந்தப் புத்தகத்தில்முன்வைக்கிறார். ‘இந்தியா என்பதும் இந்தியன் என்பதும் ஒரு நாடு, ஒரு தனி நபரை மட்டும் குறிப்பதில்லை. இந்தியா பல கலாச்சாரங்களையும், உப கலாச்சாரங்களையும் கொண்ட பன்முகத் தன்மைக் கொண்டாதாகும்’ என்ற கோட்பாட்டை முன் வைத்து, ஒரு இந்திய ஆளுமையை எவையெல்லாம் சேர்ந்து உருவாக்குகின்றன என்பதைஸ்டீவ் கொரியா அலசுகிறார்.
இந்த நூலை எழுதுவதற்கு அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகளும் ஆய்வுகளும் ஒவ்வொரு பக்கத்திலும் பளிச்சிடுகிறது. மனித மேலாண்மை குறித்தும் தலைமைத்துவம் குறித்தும் தொழில் கொள்கைப்பற்றியும் பலர் செய்த ஆய்வுகளும், நூல்களும் மேற்கோளாகக் காட்டப்பட்டிருப்பதோடு தலைமைத்துவம் குறித்து மேற்கத்திய கருத்தியல்களோடு வேதங்களில் கூறப்பட்டிருப்பதையும் ஒப்பிட்டு எழுதியிருப்பது இந்நூலை தனித்துவமாக்குகிறது.
பொதுவாக எந்தவொரு மேலாண்மை நூல்களை எடுத்துக்கொண்டாலும் மேலாண்மை என்கிற கருத்தியல் மேலை நாடுகளையும் அங்கிருக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் உரித்தானது என்பது போன்ற ஒரு பிம்பத்தை அது கட்டமைக்கும். இந்த நூலில் நடத்தைப் பண்புகள், தலைமைத்துவப்பாணிகள், கலாச்சார நுணுக்கங்கள், ஆளுமைத் திறன் ஆகியவை குறித்த பார்வை இந்திய நோக்கிலேயே கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்தியக் கார்ப்பரேட் உலகைச் சேர்ந்த ஹர்ஷ் மாரிவாலா, சோம் மிட்டல், நய்னா லால் கித்வாய், கிரண் மஹூம்தார்ஷா ஆகியோர் பகிர்ந்துகொண்ட அனுபவங்களை ஸ்டீவ் கொரியா நமக்குத் தொகுத்து வழங்குகிறார்.
இந்நூலை வாசிக்கும்போது இந்தியத் தலைவர்களின் வெற்றிக்கான பண்புகள், தலைமைத்துவப் பாணிகளையும் மனநிலையையும் வடிவமைப்பதில் கலாச்சாரம் ஏற்படுத்திய தாக்கம், எந்தவொரு சூழ்நிலையையும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நெகிழ்வுத்திறன்அவர்களுக்கு எப்படி வந்தது, தலைமைத்துவப் பயிற்சிக்கு இந்தியாவிடமிருந்து மற்ற நாடுகள் கற்றுக்கொள்ள வேண்டியவை என்ன என்பதை நமக்கு உணர்த்துகிறது. இந்தியாவில் செல்வத்தைவிட குடும்ப உறவுக்கு அதிக மதிப்பு. இதற்கு ஓர் உதாரணமாக ஆசிரியர் குறிப்பிட்டிருப்பது அம்பானி சகோதரர்கள் இடையே 2005 ஆம் ஆண்டு ஜுன் மாதம் ஏற்பட்ட பிரச்சினையாகும்.
அவர்களிடையிலான பிரச்சினையைஎந்தவொரு நீதிமன்றமும் தீர்த்து வைக்கவில்லை. மாறாக, அவர்கள் அம்மா கோகிலாபென் தலையிட்டு மகன்கள் இருவரையும் சமாதானம் செய்து பிரச்சினையை சுமூகமாகத்தீர்த்து வைத்தார். கலாச்சார முரண்பாடு குறித்து எழுதும்போது இன்ஃபோசிஸ் நிறுவனத்தை உதாரணம் காட்டுகிறார். இன்ஃபோசிஸ் நிறுவனர்களில் ஒருவரான நாராயணமூர்த்திக்கும் அங்கு சிஇஓ-வாக பணிபுரிந்த விஷால் சிகாவுக்கும் ‘ஆளுகை – Governance, பண்புகள் – Values’ சம்பந்தமாக எழுந்த பிரச்சினையை ஊடகங்கள் பரவலாக வெளியிட்டன. நாராயணமூர்த்தி மத்தியதரக் குடும்பத்திலிருந்து வந்தவர், படாடோபம் இல்லாதவர், எளிமையான வாழ்க்கையையும் பாரம்பரியத்தையும் பின்பற்றுபவர்.
ஆனால் விஷால், இந்தியாவிலிருந்து 20 வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவில் குடியேறியவர் என்பதால் பெரும்பாலும் மேலை நாட்டு கலாச்சாரத்தைப் பின்பற்றுபவராக இருந்தார். இவர்களுக்கு இடையே பிரச்சினை எழுந்தபோது ஐஎம்ஆர்பி என்கிற சந்தை ஆய்வு நிறுவனம் ஒருஆய்வு நடத்தியது. அதன் முடிவில், ‘மூர்த்தியின் கருத்தை 36 சதவீதத்தினரும் விஷாலின் கருத்தை 24 சதவீதத்தினரும் ஆதரித்தனர்.
கார்ப்பரேட் ஆளுகை என வரும்போது மூர்த்தியை 41 சதவீதத்தினரும் விஷாலை 36 சதவீதத்தினரும் ஆதரித்தனர். நிதி நிலைமை பற்றிய கேள்விக்கு மூர்த்தியை27 சதவீதத்தினரும் விஷாலை46 சதவீதத்தினரும்ஆதரித்தனர். மூர்த்தியின் எளிமைத் தன்மையின்காரணமாக மூர்த்திக்கு ஆதரவு அதிகரித்தது என்கிறார் ஸ்டீவ் கொரியா. நாம் நமது இந்தியத்தன்மை குறித்து சங்கடப்படத் தேவையில்லை. இந்த இந்தியத் தன்மைதான் இந்தியர்களை உலக அரங்கிற்கு எடுத்துச் சென்றிருக்கிறது என்பது இந்தப் புத்தகத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.
சித்தார்த்தன் சுந்தரம்
sidvigh@gmail.com
இந்த நூலில் நடத்தைப் பண்புகள், தலைமைத்துவப்பாணிகள், கலாச்சார நுணுக்கங்கள், ஆளுமைத் திறன் ஆகியவை குறித்த பார்வை இந்திய நோக்கிலேயே கொடுக்கப்பட்டிருக்கிறது.
புத்தகம்: தி இண்டியன் பாஸ் அட் வொர்க்
ஆசிரியர்: ஸ்டீவ் கொரியா
பதிப்பகம்: சேஜ்; விலை: ரூ.695