பியூச்சரின் எதிர்காலம்?

பியூச்சரின் எதிர்காலம்?
Updated on
3 min read

பியூச்சர் குழுமம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? `பிக் பஜார்’ விற்பனையகம் இருக்கிறதல்லவா, அது பியூச்சர்
குழுமத்துக்குச் சொந்தமானதுதான். பிக் பஜார் போல ஆடை, அழகு சாதனம் உட்பட பல்வேறு பிரிவுகளில் சில்லரை வணிகம் செய்யும் நிறுவனங்களை உள்ளடக்கியது பியூச்சர் குழுமம். இந்தியாவின் மிகப் பெரும் சில்லரை வணிக நிறுவனங்களில் ஒன்று அது. பியூச்சர் குழுமத்தின் அங்கமான ‘பியூச்சர் ரீடெயில்’ நிறுவனத்தை வாங்கிவிட வேண்டும் என்ற விருப்பம் முகேஷ் அம்பானிக்கு இருந்தது.

ஏனென்றால், இந்நிறுவனத்தை வாங்கிவிட்டால், ரிலையன்ஸ் தனது சில்லரை வணிகத்தை மூலை முடுக்கு
களுக்குக் கொண்டு செல்ல முடியும். இந்த நோக்கில் ரூ.24,713 கோடிக்கு இந்நிறுவனத்தை வாங்க முகேஷ் அம்பானி விருப்பம் தெரிவித்தார். பியூச்சர் குழுமம் அதற்கு சம்மதம் தெரிவித்தது. அதையடுத்து ரிலையன்ஸுக்கும் பியூச்சர் குழுமத்துக்கும் இடையே 2020 ஆகஸ்டு மாதம் விற்பனை தொடர்பான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அந்த ஒப்பந்தத்துக்கு சட்ட ரீதியாக பல்வேறு நெருக்கடிகள் வந்தன. இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு அந்த ஒப்பந்தத்தை முகேஷ் அம்பானி ரத்து செய்துள்ளார்.

என்னதான் பிரச்சினை?

2001-ல் பிக் பஜார் மூலம் வணிகத்துறையின் கவனத்தை ஈர்த்தார் கிஷோர் பியானி. படிப்படியாக பல்வேறு பிரிவுகளிலும் சில்லரை வணிகத்தை அவர் கைப்பற்றினார். இந்நிலையில் 2013-ல் ‘பியூச்சர் குழுமம்’ என்ற பெயரில் அந்நிறுவனங்கள் அனைத்தும் ஒரே குடைக்குள் கொண்டுவரப்பட்டன. ஆனால், எதிர்பார்த்ததற்கு மாறாக, அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள்ளாகவே அக்குழுமம் சரிவை நோக்கி பயணப்படத் தொடங்கியது. விரிவாக்கம் என்கிற பெயரில் கிஷோர் பியானி அகலக் கால் வைத்ததேஇந்தச் சரிவுக்குக் காரணம் என்றுகூறப்படுகிறது.

பல ஆயிரம் கோடிரூபாய் கடன் சுமை அக்குழுமத்துக்கு ஏற்பட்டது. நிறுவனங்களை விற்றால் தான் கடனைச் சமாளிக்க
முடியும் என்ற நிலைமைக்கு அவர் வந்தார். இதே காலகட்டத்தில்தான், ஜெஃப் பிசோஸ் இந்தியாவில் ஆஃப்லைன் வர்த்தகத்திலும் கால் பதிக்க தருணம் பார்த்துக்கொண்டிருந்தார். பியூச்சர் குழுமம் ‘சிரம திசையில்’ இருப்பதை அறிந்த அவர், பியூச்சர் ரீடெயிலின் அங்கமான ‘பியூச்சர் கூப்பன்’ நிறுவனத்தில் ரூ.1,500 கோடி முதலீடு செய்து, அதன் 49 சதவீதப் பங்குகளை வாங்கினார்.

இதெல்லாம் நடந்தது 2019-ல். மேற்குறிப்பிட்ட பரிவர்த்தனையின்போது, பியூச்சர் குழுமம் அதனுடைய சொத்துகள் எதையும் அமேசானின் அனுமதியின்றி ரிலையன்ஸுக்கு விற்கக் கூடாது என்கிற நிபந்தனையையும் உள்ளடக்கியதாக ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தம்தான் தற்போதைய சிக்கலுக்குக் காரணமாக அமைந்துள்ளது. 2020-ல் கரோனா பரவல்
தொடங்கியதையெடுத்து, பியூச்சர் ரீடெயில் மிகப் பெரும் இழப்பைச் சந்திக்கத் தொடங்கியது. அந்நிறுவனத்தின் கடன் நெருக்கடியை கரோனா சூழல் இன்னும் தீவிரப்படுத்தியது. இந்நிலையில் அந்நிறுவனத்தை வாங்கரிலையன்ஸ் விருப்பம் தெரிவித்தது.

இதையடுத்துதான் பியூச்சர் குழுமத்தின் சில்லரை வணிகம், மொத்த வியாபாரம், லாஜிஸ்டிக்ஸ், ஸ்டோரேஜ் வசதிகள் என அனைத்தையும் ரூ.24,713 கோடிக்கு வாங்க அந்நிறுவனத்துடன் ‘ரிலையன்ஸ் ரீடெயில் வெஞ்சர்ஸ்’ ஒப்பந்தம் செய்தது. இது ரிலையன்ஸ் தன்னுடைய சில்லரை வணிகத்தை விரிவாக்குவதற்கான பெரும் வாய்ப்பாகப் பார்க்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் அமேசானை கோபம் கொள்ளச் செய்தது. ஏனென்றால், பியூச்சர் கூப்பன் நிறுவனத்தில் முதலீடு செய்யும்போது, பியூச்சர் ரீடெயில் தொடர்புடைய பங்குகளை ரிலையன்ஸ் உட்பட தங்கள் போட்டி நிறுவனங்களுக்கு விற்கக்கூடாது என்று அமேசான் ஒப்பந்தம் போட்டிருந்தது.

முகேஷ் அம்பானி பியூச்சர் ரீடெயில் நிறுவனத்தை வாங்க வேண்டும் என்பதில் எவ்வளவு தீவிரமாக செயல்பட்டாரோ, அதேபோல் முகேஷ் அம்பானியின் கைக்கு அந்நிறுவனம் போய் விடக் கூடாது என்பதில் அமேசானின் ஜெஃப் பிசோஸ் தீவிரமாக இருந்தார். இந்நிலையில் பியூச்சர் ரீடெயில் ரிலையன்ஸுக்கு விற்கப்படுவதென்பது பியூச்சர் குழுமம் தங்களுடன் போட்ட ஒப்பந்த நிபந்தனைகளை மீறுவதாகும் என்று கூறி பியூச்சர்- ரிலையன்ஸ் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று சிங்கப்பூர் நடுவர் மன்றத்தில் (Singapore Arbitration Tribunal) அமேசான் வழக்குத் தொடுத்தது. இந்த நடுவர் மன்றம் பியூச்சர் சொத்து களை ரிலையன்ஸுக்கு விற்பதை நிறுத்த உத்தரவு பிறப்பித்தது.

ரிலையன்ஸின் அடுத்த நகர்வு

இது ரிலையன்ஸுக்கு பின்னடைவைத் தந்தாலும் அது பியூச்சர் ரீடெயிலின் கடைகளைக் கையகப்படுத்தும் எண்ணத்தை விட்டுவிடவில்லை. இந்திய சில்லரை வணிகச் சந்தையின் இன்றைய மதிப்பு சுமார் 900 பில்லியன் டாலராகும். 2024 -ம் ஆண்டு இது 1.3 டிரில்லியன் டாலரைத் தொடக்கூடும் எனக் கணிக்கப்பட்டிருக்கிறது. இப்படியான வாய்ப்பை யார்தான் கைவிட விரும்புவார்கள்? ரிலையன்ஸூக்கு புதிய வாய்ப்பு ஒன்று வந்தது. பிக் பஜார் கடைகள் இருக்கும் இடத்துக்கு பியூச்சர் குழுமம் வாடகை பாக்கி வைத்திருந்தது. இந்நிலையில், பிக் பஜார் அமைந்திருக்கும் இடத்தின் உரிமையாளர்கள் நேரடியாக ரிலையன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ள முன்வந்தனர்.

அதாவது, ‘பியூச்சர் ரீடெயிலின் விற்பனைக்கு சட்டரீதியான அனுமதி கிடைக்கிறதோ இல்லையோ, நீங்கள் எங்கள் இடங்களைப் பயன்படுத்திக் கொண்டு வியாபாரம் செய்யுங்கள். பிக் பஜார் என்ற பெயரை நீக்கிவிட்டு கடைகளுக்கு ரிலையன்ஸ் என்று பெயரிட்டுக் கொள்ளுங்கள்’ என்ற ரீதியில் அவர்கள் ரிலையன்ஸ் நிறுவனத்தை அணுகினர். இதன் மூலமாக, பியூச்சர் ரீடெயிலைச் சேர்ந்த 200 கடைகளும், 30,000 பணியாளர்களும் ரிலையன்ஸின் குடைக்குள் வருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற ஆரம்பித்தன. அந்த 200 கடைகளும் ‘ரிலையன்ஸ் ஸ்டோர்ஸ்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டன.

ஆக, அமேசானுக்கும் பியூச்சருக்குமான வழக்கு ஒரு பக்கம் நடந்துகொண்டிருந்தாலும் ரிலையன்ஸ் தன்னுடைய இலக்கில் முன்னகர்ந்து சென்று கொண்டிருந்தது. ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு பிறகு ஏன், தற்போது ரிலையன்ஸ் நிறுவனம் பியூச்சர் உடனான ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது? பியூச்சர்ரீடெயிலை ரிலையன்ஸுக்கு விற்பதற்கான ஒப்பந்தத்தை பியூச்சர் குழுமத்துக்கு கடன் கொடுத்த `பாதுகாப்பான கடனாளர்கள்’ (secured creditors) ஏற்றுக் கொள்ளவில்லை. வங்கிகள், நிதி நிறுவனங்கள் போன்றவை பாதுகாப்பான கடனாளர்கள் வகைமையின் கீழ்வருபவை.

பாதுகாப்பான கடனாளர்களில் 69.29 சதவீதம் பேர் ரிலையன்ஸ் - பியூச்சர் ஒப்பந்தத்துக்கு எதிராக வாக்களித்தனர். அதேசமயம், பாதுகாப்பற்ற கடனாளர்களில் (unsecured creditors) 78.2 சதவீதத்தினரும் பங்குதாரர்களில் 85.9 சதவீதத்தினரும் அந்த ஒப்பந்தத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர். ஆனால் ரிலையன்ஸுக்கும் பியூச்சர் குழுமத்துக்குமான ஒப்பந்தம் வெற்றிபெற வேண்டுமெனில் பாதுகாப்பான கடனாளர்களில் 75 சதவீதத்தினர் சம்மதம் தெரிவிக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை. எனவேதான், ரிலையன்ஸ் குழுமம் இந்தப் பரிவர்த்தனையில் இருந்து தான் விலகிக் கொள்
வதாக அறிவித்தது.

பியூச்சர் ரீடெயிலை ரிலையன்ஸ் குழுமம் வாங்க முடியாமல் போனது குறித்து பிசோஸுக்கு உள்ளூர மகிழ்ச்சி இருக்கலாம். ஆனால், நிலவரமோ முகேஷ் அம்பானி நினைத்த பாதையில் தான் சென்றுகொண்டிருக்கிறது எனரீடெயில் துறை சார்ந்த நிபுணர்கள் கூறுகிறார்கள். ரிலையன்ஸ் நேரடியாக பியூச்சர் குழுமத்தின் சொத்துகளை வாங்கவில்லையென்றலும் கடை உரிமையாளர்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்வதன் மூலம் அக்கடைகளை இனி ரிலையன்ஸ் பெயரில்
‘ரீ பிராண்டிங்’ செய்து முழு மூச்சாக சில்லரை வணிகத்தில் ஈடுபடும். ‘ரீ பிராண்டிங்’ செய்யும் வேலையை ரிலையன்ஸ்பிப்ரவரி மாதமே தொடங்கிவிட்டது.

திவால் நிலையில் பியூச்சர்இனி பியூச்சர் குழுமம் என்னவாகும்? பியூச்சர் குழுமம் அதனுடைய பாதுகாப்பு கடனாளர்களுக்கு ரூ.20,000 கோடியும், பாதுகாப்பற்ற கடனாளர்கள், விநியோகஸ்தர்களுக்கு ரூ.8,000 கோடியும் கொடுக்க வேண்டும். கூடுதலாக, ரூ.2,000 கோடி கடன் பாக்கி உள்ளது. இந்நிலையில், தற்போதைய சட்டச் சிக்கல்களால் பியூச்சர் நிறுவனங்களை வாங்க யாரும் முன்வராதபட்சத்தில் பியூச்சர் குழுமமானது திவால் நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டும். திவால் சட்ட நடவடிக்கையின் முடிவில் கடனாளர்களுக்கு முழுத்தொகையும் கிடைக்குமா என்பது சந்தேகமே. இன்றைய தேதிக்கு பியூச்
சரின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

சித்தார்த்தன்சுந்தரம்
sidvigh@gmail.co

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in