

ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்குகிறார்.இதுதான் கடந்த ஒரு மாதமாக சர்வதேச அளவில் அதிகம் விவாதிக்கப்பட்ட செய்தி. சாமானியர்கள் முதல் உலகப் புகழ்பெற்ற அரசியல்வாதிகள், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள், களச் செயல்பாட்டாளர்கள், விளையாட்டு வீரர்கள், கார்ப்பரேட் தலைமை அதிகாரிகள் என பலரும் ட்விட்டரைப் பயன்படுத்துகிறார்கள்.
உலக அளவில் 21.7 கோடி பேர் ட்விட்டரைப் பயன்படுத்துகின்றனர். இது ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயனாளர்களின் எண்ணிக்கையைவிடக் குறைவு. ஆனால், ஏனைய சமூக வலைதளங்களை விடவும், உலகெங்கும் கருத்துகளை வடிவமைப்பதில் ட்விட்டர்தான் முக்கியப் பங்கு வகிக்கிறது. அதனால்தான், ட்விட்டர் எலான் மஸ்க் வசம் செல்கிறது என்ற செய்தி பெரும் விவாதப் பொருளாக மாறியது. இதுவே அவர் மெட்டா நிறுவனத்திடமிருந்து இன்ஸ்டாகிராமையோ, வாட்ஸ்அப்பையோ வாங்கி இருந்தால் அது இந்த அளவுக்கு விவாதிக்கப்பட்டிருக்காது.
அமெரிக்காவில் சான்ஃபிரான்ஸிஸ்கோ நகரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் ‘மைக்ரோ ப்ளாக்கிங்’ நிறுவனமான ட்விட்டர், 2006ஆம் ஆண்டு ஜாக் டோர்சே, நோவா க்ளாஸ், பிஸ் ஸ்டோன், ஈவான் வில்லியம்ஸ் ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்டது. ட்விட்டரின் கடந்த ஆண்டு வருமானம் 5.8 பில்லியன் டாலர், நஷ்டம் 221 மில்லியன் டாலர்.
எலான் மஸ்க் ட்விட்டரில் தொடர்ச்சியாக செயல்பட்டுவருபவர். அவரை ட்விட்டரில் 8.5 கோடி பேர் பின்தொடர்கிறார்கள். இந்நிலையில், கடந்த மாத தொடக்கத்தில் எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தில் 9.2 சதவீதப் பங்குகளை 2.89 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கினார். இதையடுத்து, அவர் ட்விட்டர் நிர்வாகக் குழுவில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் இடம்பெறவில்லை. மாறாக,ட்விட்டரின் 100 சதவீதப் பங்குகளையும் வாங்க விரும்புவதாக அறிவித்து அவர் அதிர்ச்சியளித்தார்.
‘கருத்துச் சுதந்திரம் என்பது ஜனநாயக செயல்பாட்டுக்கான அடித்தளமாகும். ட்விட்டர் மிகப் பெரிய சாத்தியக்கூறுகளைக் கொண்டிருக்கிறது. அதை முழுமையாக பயன்படுத்துவதற்கு நான் நிறுவனத்துடனும் பயனாளர் சமூகத்துடனும் இணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்கியிருக்கிறேன்’ என்று எலான் தெரிவித்தார். ட்விட்டரின் சந்தை மதிப்பு 39 பில்லியன் டாலர்தான். ஆனால், ட்விட்டரை வாங்க எலான் மஸ்க் முன்மொழிந்த தொகை 44 பில்லியன் டாலர். இந்திய மதிப்பில் ரூ.3.30 லட்சம் கோடி. ட்விட்டர் ஊழியர்கள் எலான் மஸ்கிடம் நிறுவனத்தை விற்பதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால், எலானின் முன்மொழிவான 44 பில்லியன் டாலர் யாராலும் மறுக்கமுடியாத ஒரு ‘ஆஃபர்’. இதனால், இறுதியில் ட்விட்டர் நிர்வாகக் குழு எலான் மஸ்க்குக்கு நிறுவனத்தை விற்க ஒப்புதல் வழங்கியது. ‘என்னைக் கடுமையாக எதிர்ப்பவர்கள்கூட ட்விட்டரில் தொடர்ந்து இருக்க வேண்டும். ஏனென்றால் அதற்குப் பெயர்தான் கருத்துச் சுதந்திரம்’ என ட்வீட் செய்தார் எலான்.
இவர் குறிப்பிட்ட ‘கருத்துச் சுதந்திரம்’ என்கிற சொல்லாடல் தற்போது சமூக வலைதளங்களில் விவாதங்களை ஏற்படுத்தி இருக்கிறது. அமெரிக்க அதிபராக இருந்த ட்ரம்ப்பின் கருத்துகள் சர்ச்சையைக் கிளப்பியதால் ட்விட்டரின் முந்தைய நிர்வாகத்தினரால் அவருடைய கணக்கு முடக்கப்பட்டது. ஆனால், எலான் கருத்துச் சுதந்திரம் பற்றி அறிக்கை விட்டிருப்பதால் மீண்டும் ட்ரம்ப்பைப் போன்றவர்களை ட்விட்டருக்குக் கொண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இடதுசாரி சிந்தனையும், நடுநிலைக் கொள்கையும் கொண்ட பலரும் எலான் மஸ்குக்கு எதிர்ப்புத் தெரிவித்து #leavingtwitter என்கிற ஹேஷ்டேக்கை உலகளவில் ட்ரெண்டாக்கினார்கள். இதைத் தொடர்ந்து அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளைச் சேர்ந்த பல பிரபலங்கள் ட்விட்டரை விட்டு வெளியேறியும், வெளியேறவும் இருக்கிறார்கள்.
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த நடிகையும், சமூக ஆர்வலருமான ஜமீலா ஜமீல், ‘எலான் மஸ்க் முன்வைக்கும் கருத்துச் சுதந்திரம் என்பது சட்டத்துக்கு மீறிய வெறுப்பு, மத வெறி, பெண்ணியத்துக்கு எதிரான கருத்துகளில்தான் முடியும் எனவே நான் ட்விட்டரில் இருந்து வெளியேறுகிறேன்’ என ட்வீட் செய்திருக்கிறார். தற்சமயம் ட்விட்டரின் தலைமைச் செயல் அதிகாரியாக இருப்பவர் 37 வயதான பராக் அகர்வால். இவர் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் பிறந்து அமெரிக்காவில் வசித்துவருகிறார். மும்பை ஐஐடி-யில் பி.டெக் படித்துவிட்டு ஸ்டாண்ட்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். ட்விட்டர் முழுமையாக எலான் மஸ்க்கின் கீழ் வந்த பிறகு இவருடைய பதவி என்னவாகும் என்பதும் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
ஒருவேளை, இந்த கையகப்படுத்தலையே எலான் மஸ்க் திரும்பப் பெறக்கூடும் எனவும் அவரை நன்கு அறிந்த வட்டாரங்களிலிருந்து செய்திகள் கசிய ஆரம்பித்திருக்கிறது. ஏனென்றால் இந்த 44 பில்லியன் டாலரில் 21 பில்லியன் டாலர் ரொக்கமாகக் கையளிக்கப்பட வேண்டும். அவரிடம் இப்போது இந்த அளவுக்கு ரொக்கம் கைவசம் இல்லை. அதோடு இந்த டீல் அறிவிக்கப்பட்டதிலிருந்து ட்விட்டர் பங்கின் விலை சந்தையில் குறைய ஆரம்பித்திருக்கிறது. ஒருவேளை, அவர் இதிலிருந்து ‘யூ-டர்ன்’ அடித்தால் அதற்காக அவர் கொடுக்க வேண்டிய தொகை 1 பில்லியன் டாலர்தான்! எனவே, ட்விட்டர் பட்சி உண்மையிலே எலான் மஸ்க்கை நோக்கிப் பறக்கப் போகிறதா இல்லையா என்பது இன்னும் சில நாட்களில் உறுதியாகத் தெரிந்துவிடும்.
- சித்தார்த்தன் சுந்தரம் sidvigh@gmail.com