Published : 02 May 2016 12:59 PM
Last Updated : 02 May 2016 12:59 PM

மாயவலை

``ஒரு மிஸ்டு கால் கொடுங்க, உங்கள் வாழ்க்கையையே நாங்கள் மாத்தி காட்டுகிறோம்’’ என்கிற பல விளம்பரங்கள், தொலைபேசி அழைப்பு கள் உங்களுக்கு வந்திருக்கும். இது போன்ற அழைப்புகளுக்கு முக்கியத் துவம் கொடுத்து பேசி சூடு பட்ட அனு பவமும் சிலருக்கு ஏற்பட்டிருக்கலாம்.

முதலில் உங்களது ஆசைகளைத் தூண்டும் இந்த அழைப்பாளிகள் பிறகு மெல்ல உங்களது பர்சுக்கு பங்கம் வைக்கும் தூண்டிலை போடுவார்கள். சுதாரித்தவர்கள் பணத்தை இழக்காமல் தப்பிப்பார்கள். கொஞ்சம் முயற்சித்து பார்ப்போமே என்பவர்கள் முதலை வாயில் சிக்கியவர்கள்தான். பணத்தை இழந்துவிட்டு கடைசியில் யாரிடம் போய் சொல்வது என்பது தெரியாமல் புலம்பிக் கொண்டிருப்பார்கள்.

இப்படி சமீப காலமாக சில நூதன வழிகளில் மாயவலைகள் வீசப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதில் சிக்கி விடாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது நமது பொறுப்புதான்.

சமீபத்தில் எனது சில நண்பர்கள் காவல் நிலையங்களுக்கு நடையாய் நடந் தார்கள். ஒரு நிறுவனத்தின் மீது பண மோசடி நடவடிக்கை எடுக்க வேண்டும் கூறினார்கள். என்ன ஏதென்று விசாரித்த போது அவர்கள் ஏமாற்றப்பட்டத்தின் முதல் தொடக்கப்புள்ளி ஒரு தொலை பேசி அழைப்பு என்று கூறினர்.

``சார் உங்க தொலைபேசி எண்ணுக்கு பரிசு விழுந்திருக்கிறது. உங்க மனைவியும் நீங்களும் வந்து அதை வாங்கிக்கொள்ளுங்கள் என்று ஒரு அழைத்திருக்கிறார்கள். மேற்கொண்டு விசாரிக்க சின்ன மீட்டிங் இருக்கும் சார், மீட்டிங் அட்டண்ட் பண்ணனும் அது முடிச் சதும் உங்களுக்கு பரிசு கொடுப்பாங்க என்று பேசியிருக்கின்றனர். ஏதோ ஒரு பரிசு குலுக்கல்தானே என்று சென்றால், அதுபோல 50-க்கும் மேற்பட்டவர்கள் அங்கு வந்துள்ளனர். எல்லோருமே தங்களுக்கு பரிசு விழுந்துள்ளது என்கிற ஆசையில் வந்தவர்கள்.

அதுபோதுமே.. கூட்டம் நடக்கிறது. எங்களிடம் ஆயுள் காப்பீடு பாலிசி எடுத்தால் அதே தொகைக்கு அந்த இன்ஷூரன்ஸ் நிறுவனத்திலேயே கடன் வாங்கிக் கொள்ளலாம் என்கிறார்கள். கூட்டத்துக்கு வந்திருந்த அனைவருமே ஏதாவது ஒரு வகையில் சுயதொழில் செய்பவர்கள், சிறிய மளிகைக் கடை, ஆட்டோ ஓட்டுபவர்கள், அரசு ஊழியர் என நடுத்தர மக்களிலும் சற்று கீழ் நிலையில் இருப்பவர்கள். எதாவது செய்து ஓரளவுக்கு முன்னேற வேண்டும் என்கிற வேட்கையும் துடிப்பும் கொண்டவர்கள்.

கூட்டத்தில் மூளைச் சலவை செய்யப் பட்டாலும் பரிசும் வேண்டாம், இன்ஷூரன் ஸும் வேண்டாம் என மறுத்தவர்கள் பாதிப்பேர் என்றால், இன்ஷூரன்ஸ் ஒரு பிரீமியம் கட்டினால் கடனுதவி கிடைக்கும் அதை வைத்து தொழிலை இன்னும் சிறப்பாக செய்யலாம் என் யோசித்தவர்கள் பாதிப்பேர்.

இவர்கள் ஒவ்வொருவரிடமும் தனியாக பேசி அவர்களது தேவைகளை அறிந்தபின், இதுக்கு ஆபரும் இருக்கு இன்னைக்கே உடனடியாக வீட்டில் தங்க நகை இருந்தா அடகு வைத்து கட்டுங்க, அடுத்த வாரத்துல கடன் வாங்கிய தும் திருப்பிட போறீங்க, அப்பறம் தொழிலை டெவலப் செய்யலாம் என மூளைச் சலைவை செய்ததில் பத்து பேர் மசிந்துள்ளனர். பணத்தை வாங்கி ஒரு இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் முறையாக கட்டிவிட்டு சில நாட்களில் பத்திரத்தையும் அளித்துள்ளனர். கடன் எப்போ வாங்கலாம் எனக் கேட்டால் வேறு ஒரு கடன் வழங்கும் நிறுவனத்துக்கு கை காட்டியிருக்கிறார்கள்.

அந்த நிறுவனமோ இன்ஷூரன்ஸ் பத்திரத்துக்கு எல்லாம் கடன் கிடைக் காது என விரட்டாத குறையாக அனுப்பி யுள்ளனர். விசாரித்த பிறகுதான் தெரிந் தது பணத்தை வசூலித்த நிறுவனம் இன்ஷூரன்ஸ் சப் ஏஜெண்ட் வேலை களை பார்க்கிறது. ஆவணங்கள் சட்ட ரீதியாக சரியாக இருக்க, வாய்மொழி உத்தரவாதங்களுக்கு வைத்து புகார் கொடுக்க முடியாமல் இப்போது அலைந்து கொண்டிருக்கின்றனர்.

இப்படி வாய்மொழி உத்தரவாதங் களை நம்பி ஏமாறுவது ஒருபக்கம் என்றால் இப்போது ஒப்பந்தங்கள் மூலம் உத்தரவாதம் அளிக்கும் சுற்றுலா கிளப் மோசடிகளும் இந்த கோடைக் காலத்தில் அதிகரித்துள்ளன. சுற்றுலா விரும்பிகளை மையமாக வைத்து இத்தகைய மோசடிகள் நடந்து வருகின்றன. இந்த மாயவலை யும் செல்போன் மூலம்தான் விரிக்கப் படுகிறது.

25 ஆண்டுகளுக்கு, ஆண்டுக்கு பத்து நாட்கள் சொகுசான சுற்றுலா விடுதி களில் தங்கலாம். இதற்கு ஒருமுறை மட்டும் பணம் கட்டினால் போதும் என அன்பு அழைப்புகள் வருகிறது. ஒரு விசார ணைக்காக திரும்ப அந்த எண்ணுக்கு அழைத்தால் அவர்கள் சொல்லும் கணக்குகள் நம்மை அழகாக வலையில் சிக்க வைக்கிறது. இந்தியா முழுவதும் உள்ள அவர்களது கிளப்புகளில் இலவசமாக தங்கிக் கொள்ளலாம். உறவினர்களை அழைத்துச் சென்றால் சலுகை, நீங்கள் தங்கிக் கொள்ளாத நாட்களை நண்பர்களுக்கு கிப்டாகக் கொடுக்கலாம் என ஆசைகளை தூண்டுவதாகத்தான் இருக்கிறது. ஆனால் இதற்கு பின்னால் மறைமுகக் கட்டணங்கள் என ஒவ்வொரு முறையும் பல வகைகளில் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன என்கிறார்கள்.

தவிர நாம் புக்கிங் செய்ய விரும்பும் நாட்களில் அறைகள் காலி இல்லை என்பதும், பண்டிகை நாட்களில் இந்த உறுப்பினர்கள் பயன்படுத்த முடியாது என்பதும் இந்த கார்ப்பரேட் கிளப்புகள் குறித்து ஏற்கெனவே புகார்களும் குவிந்து வருகின்றன.

ரூபாய் 1 லட்சத்தில் உறுப்பினராக லாம் என்று அழைக்கும் இந்த விளம்ப ரங்கள் ஆயுள் கால உறுப்பினர், 25 ஆண்டுக்கால உறுப்பினர் என ரூ.3 லட்சம் ரூ.4 லட்சம் என்று நிற்கிறது. நாம் தனி யாக சென்றாலே இவர்களுக்கு கொடுக்கும் கட்டணத்தைவிட குறைவாக செலவு செய்யலாம். தவிர நமது தேவைக்கு ஏற்ப வும் திட்டமிட முடியும். இதில் பணம் கட்டி ஏமாந்தவர்களும் இருக்கின்றனர்.

உங்கள் கடன் சுமைகளை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம் என்று இன் னொரு தொலைபேசி அழைப்பு, கூடவே குறுஞ்செய்திகள் தினசரி வருகின்றன். ``அடமானம் வைத்த தங்க நகைகளை திருப்புவதில் சிக்கலா நாங்கள் இருக்கி றோம்’’ என்று அழைக்கிறார்கள். இந்த மறு கடன் புரோக்கர்கள் முன்பிருந்தே இருந்து வருகிறார்கள் என்றாலும் இப் போது தொலைபேசியிலும் குறுஞ்செய்தி வழியாகவும் வரத் தொடங்கிவிட்டனர். இதுவும் ஒரு மாயவலை என்பதை பலரும் புரிந்து கொள்ளவில்லை.

நமது தங்க நகைகள் அடமானம் இருப்பது குறித்து அவர்களுக்கு என்ன கவலை இருக்க முடியும். அடமானம் இருக்கும் தங்க நகைகள் ஏற்கெனவே ஒரு குறிப்பிட்ட சதவீத வட்டியில் இருக்கிறது என்றால், இவர்களிடம் அதிக வட்டிக்கு வாங்கி திருப்ப வேண்டியிருக்கும். தங்க நகைகளை திருப்பினாலும் சில மாதங்களில் இவர்களது நெருக்கடியும் ஆரம்பமாகிவிடும். சில வேளைகளில் இவர்கள் வழங்கும் கடன்களுக்கு ஈடாக தங்க நகைகளை இழக்க வேண்டியிருக்கலாம்.

எல்லா விளம்பரங்களையும் அப்ப டியே நம்பும் அப்பாவிகள்தான் இவர் களின் இலக்கு. அப்பாவிகளாக இருக்கிறோமா அல்லது சாமார்த்தியமாக இருக்கிறோமா என்பதை நமது ஆசைகள் தீர்மானிக்க வேண்டாம். இந்த மாய வலைகளைக் கண்டறிய எந்த மந்திரமும் தேவையில்லை. கொஞ்சம் நிதானமாக முடிவெடுப்பதே நிம்மதிக்கு வழி வகுக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x