

தென் கொரியா, சீனா, ஜப்பான், அமெரிக்காவில் 5ஜி பொதுப் புழக்கத்துக்குவந்துவிட்டது. இந்தியாவில் இந்த ஆண்டு இறுதிக்குள் 5ஜி புழக்கத்துக்கு வந்து விடும்போல் தெரிகிறது. அதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கி விட்டன. சமீபத்தில் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (ட்ராய்) 5ஜி அலைக்கற்றை ஏலம் தொடர்பாக
பரிந்துரைகளை வெளியிட்டுள்ளது. சரி இருக்கட்டும். 5ஜி என்ன விதமான மாற்றங்களை கொண்டுவரும்?
5ஜி உலகம்
ஓவ்வொரு தொழில்நுட்ப அறிமுகத்துக்குப் பிறகும் உலகம் புதிய பரிணாமத்துக்குள் நுழைகிறது. லேண்ட் லைனிலிருந்து மொபைல்போனுக்கு மாறியதற்கு அடிப்படை 1ஜி அறிமுகம்தான். 2ஜி வந்த பிறகுதான் மெசேஞ்ஜிங் சேவை அடுத்த தளத்தை நோக்கி நகர்ந்தது. அதன்பிறகு அறிமுகமான 3ஜி, ஸ்மார்ட்போன் பரலவாக்கத்துக்கு அடிப்படையாக அமைந்தது.
3ஜி மூலமே இணையப் பயன்பாட்டு பரவலானது. 4ஜி வந்த பிறகுதான் உலகம் மிக வேகமாக மாறத் தொடங்கியது. லைவ் ஸ்ட்ரீமிங் சாத்தியமானது. யூடியூப் வீடியோக்கள் தடங்கல் இல்லாமல் ஓடின. ஆன்லைன்தான் எல்லாவுமாக மாறியது. கடந்த பத்தாண்டுகளில் வளர்ச்சி அடைந்த இணைய வர்த்தகத்துக்கு 4ஜி-யின் பங்களிப்பு மிக முக்கியமானது. 4ஜி இல்லையென்றால் இவை எதுவும் சாத்தியமில்லை. இந்தச் சூழலில் தற்போது 5 ஜி அறிமுகமாகிறது. 4ஜியை விட 10 மடங்குக்கு மேல் வேகம் கொண்டதாக 5ஜி இருக்கும் என்று கூறப்படுகிறது.
அந்த வகையில் அடுத்த பத்தாண்டுகளில் உலகம் மிகப் பெரும் மாற்றங்களைக் காணப்போகிறது. மெட்டாவர்ஸ், தானியங்கி கார்கள், எலெக்ட்ரிக் வாகனங்கள், செயற்கை தொழில்நுட்பம், பிளாக்செயின் உள்ளிட்ட அனைத்தும் 5ஜி வசதியை அடித்தளமாகக்கொண்டே அமைய உள்ளது. உலகின் போக்கில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தவல்லதாக மெட்டாவர்ஸ் பார்க்கப்படுகிறது. தற்போது மெட்டாவர்ஸ் சார்ந்த கட்டமைப்பு உருவாக்கத்தில் தொழில்நுட்ப நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன.
மெட்டாவர்ஸ் செயல்பாட்டில் 5ஜி மிக முக்கிய பங்கு வகிக்கும். இனி மின்வாகனம் என்பது வெறும் பெட்ரோலுக்குப் பதிலாக பேட்டரியில் இயங்கும் வாகனம் என்பதாக மட்டும் இருக்கப்போவதில்லை. ஸ்மார்ட் வாகனங்களாக இருக்கப் போகின்றன. அதாவது சாலையில் செல்லும் இருவேறு கார்கள், தங்களுக்குள் தகவல் பரிமாற்றம் மேற்கொள்ளும் வகையில் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் தானியங்கி வாகனங்களில். இந்த மாற்றங்கள் அனைத்தும் 5ஜியை அடித்தளமாக கொண்டே அமையும். அலுவலகக் கட்டமைப்பு பெறும் மாற்றத்துக்கு உள்ளாகி வருகிறது. வீட்டிலிருந்து பணிபுரிவது பரவலான நடைமுறையாக மாறி இருக்கிறது. 5ஜி இந்தச் சூழலை இன்னும் மேம்படுத்தும்.
கிளவுட் கேமிங் 5ஜி சேவையினால் மிகப் பெரும் வளர்ச்சி காணும். ஆன்லைன் கல்வி, ஆன்லைன் வர்த்தகம், இசை, சினிமா என அனைத்துத் துறைகளும் புதிய தளத்துக்குள் நுழையும். 4ஜி வசதியின் காரணமாகவே, நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், ஸ்போடிஃபை போன்ற ஸ்ட்ரீமிங் சேவைகள் உருவாகிவந்தன. அவை சினிமா துறையையே பெரும் மாற்றத்துக்கு உள்ளாக்கி இருக்கின்றன. இந்நிலையில் 5ஜி வருகைக்குப் பிறகு ஸ்ட்ரீமிங் துறை அடுத்த தளத்தை நோக்கி நகரும்.
தற்போது தயாரிப்பு நிறுவனங்களில் பல்வேறு வேலைகள் தானியங்கி முறைக்கு மாறிவருகின்றன. 5ஜி வருகை இந்தச் சூழலை இன்னும் துரிதப்படும். செயற்கை தொழில்நுட்பம், பிளாக்செயின் தொழில்நுட்பம் போன்றவை 5ஜி வருகைக்குப் பிறகு பரவாலான பயன்பாட்டுக்கு வரும்.
5ஜி சந்தை
உலக அளவில் 2022-ம் ஆண்டில் 5ஜி இணைப்பு பெற்றிருப்பவர்களின் எண்ணிக்கை 100 கோடியை தொடும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. 2021 நிலவரப்படி உலக அளவில் உள்ள மொத்த மொபைல் இணைய இணைப்புகளில் 5ஜி-யின் பங்கு 6 சதவீதம் ஆகும். 2025 இறுதிக்குள் அது 25 சதவீதமாக உயரும் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் 5ஜி இன்னும் புழக்கத்துக்கு வரவில்லையென்றாலும், 5ஜி மொபைல்கள் சந்தைக்கு வந்துவிட்டன. சென்ற ஆண்டில் மட்டும் 5ஜி ஸ்மார்ட்போன்கள் விற்பனை 600 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.
2021-ம் ஆண்டில் மொபைல் தொழில்நுட்பங்கள் மற்றும் அது சார்ந்த சேவைகளின் வழியே உருவாகிய பொருளாதார மதிப்பு 4.5 டிரில்லியன் டாலர் ஆகும். 5 ஜி நடைமுறைக்குப் பிறகு இது பல மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மூன்று ஆண்டுகளில் 5ஜி சார்ந்து உலக அளவில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 600 பில்லியன் டாலர் அளவில் முதலீடு செய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆக, விரைவில் உலகம் 5ஜி மயமாக மாற உள்ளது.
riyas.ma@hindutamil.co.in