விரைவு வணிகம் இ-காமர்ஸின் அடுத்த நகர்வு

விரைவு வணிகம் இ-காமர்ஸின் அடுத்த நகர்வு
Updated on
3 min read

அண்ணாச்சிக் கடைகளுக்குப் போட்டியாக ஆன்லைன் கடைகள் (இ-காமர்ஸ்) வந்தன. இப்போது ஆன்லைன் கடைகளே நுகர்வோர்களிடம் பொருள்களை விரைவாகக் கொண்டு சேர்க்கும் வகையில் ‘குவிக் காமர்ஸ்’ (Q-Commerce) என அறியப்படும் ‘விரைவு வணிக’த்தை முன்னெடுக்க ஆரம்பித்திருக்கின்றன. ‘விரைவு வணிக’ச் செயலிகள், அன்றாடம் தேவைப்படும் அத்தியாவசியப் பொருள்களை 10 முதல் 30 நிமிடங்களுக்குள் டெலிவரி செய்துவிடுகின்றன. பெருநகரங்களில் வசிப்பவர்கள் ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட், டன்ஸோ டெய்லி உள்ளிட்ட விரைவு வணிகச் செயலியை பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். பணி வாழ்க்கையானது ஒழுங்கற்றதாகவும் தாறுமாறானதாகவும் இருக்கும் இக்காலகட்டத்தில் திட்டமிட்டு மளிகை சாமான்கள் வாங்குவதற்கு பலருக்கும் நேரம் கிடைப்பதில்லை. இத்தகையவர்களுக்கு பயனுள்ளதாக விரைவு வணிகம் இருக்கிறது. அலுவலகத்துக்கு செல்பவர்கள் என்று இல்லை, வீட்டு வேலையை மட்டும் கவனிப்பவர்கள் கூட, நேரடியாக சூப்பர் மார்க்கெட்டுக்குச் சென்று தேவையான மளிகைப் பொருள்களை வாங்குவதற்குப் பதிலாக விரைவு வணிகச் செயலிகளை பயன்படுத்துகின்றனர்.

வெளிநாடுகள் பலவற்றில் விரைவு வணிகம் ஏற்கனவே நடைமுறையில் இருந்துவருகிறது. கரோனா தொற்று ஆரம்பித்த பிறகு இந்தியாவிலும் விரைவு வணிகம் கிளைபரப்பத் தொடங்கியுள்ளது. கரோனா காலத்தில் மக்கள் பலவிதமான பொருள்களை வாங்க ஆன்லைன் தளங்களைப் பயன்படுத்துவது அதிகரித்தது. அதிலிருக்கும் வசதி, அவை அளிக்கும் தள்ளுபடி ஆகியவை நுகர்வோர்களைத் தொடர்ந்து ஈர்த்து வருகிறது. இப்போது இந்தியாவில் விரைவு வணிகத்தின் சந்தை மதிப்பு 0.3 பில்லியன் டாலராக உள்ளது. 2025-ம் ஆண்டுக்குள் இது 5 பில்லியன் டாலராக உயரும் என்று ரெட்சீர் (Redseer) என்கிற ஆலோசனை நிறுவனம் கணித்துள்ளது.

டார்க் ஸ்டோர்ஸ்

இந்தியாவில் பிளிங்கிட், ஸெப்டோ, ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட், டன்ஸோ உள்ளிட்ட நிறுவனங்கள் விரைவு வணிகத்தில் இறங்கியுள்ளன. தற்போது இந்நிறுவனங்கள் ‘டார்க் ஸ்டோர்ஸ்’ என அறியப்படும் ‘இருட்டுக் கடைகளை’ நிறுவுவதில் மும்முரமாக ஈடுபட்டிருக்கின்றன. டார்க் ஸ்டோர்ஸ் என்பது பொருள்களை இருப்பில் வைத்துக் கொள்வதற்கான குடோன் போன்றது. இங்கு நேரடியாகப் பொருள்கள் விற்கப்படுவதில்லை. ஒரு நகரத்தில் குறிப்பிட்ட சில
கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் நுகர்வோர்களின் ஆர்டர்களை குறிப்பிட்ட சில நிமிடங்களில் டெலிவரி செய்யும் வகையில் இந்த குடோன்கள் அமைக்கப்படும். இதன் மூலம் நுகர்வோர்களுக்குத் தேவையான பொருள்களை 10 முதல் 30 நிமிடங்களுக்குள் டெலிவரி செய்ய முடியும்.

இப்படி அமைக்கப்படும் குடோன்களை நிர்வகிக்க இந்நிறுவனங்கள் அந்தந்தப் பகுதிகளில் இருக்கும் வியாபரிகளுடன் கூட்டு சேர ஆரம்பித்திருக்கின்றன. உள்ளூர் வியாபாரிகளுக்கு அவர்கள் இருக்கும் பகுதியில் வசிக்கும் மக்கள் வாங்கும் பொருள்களும், அவர்கள் வாங்கும் முறைகளும் தெரிந்திருக்கும். அது விரைவு வணிகத்துக்கு மிகவும் உதவும் என்பதால் இந்த மாதிரியான ஒரு ஏற்பாட்டை இந்நிறுவனங்கள் முன்னெடுத்து இருக்கின்றன. பிளிங்கிட் இது வரை 300 டார்க் ஸ்டோர்களை அமைத்திருப்பதாக கூறியிருக்கிறது. ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் வியாபாரிகளின் உதவியுடன் 150 டார்க் ஸ்டோர்களை நிறுவியிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது. ஸெப்டோ 100 டார்க் ஸ்டோர்களை இதுவரை திறந்திருக்கிறது. ஒவ்வொரு குடோனும் சுமார் 2500 ஆர்டர்களை நிறைவு செய்யும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. இனிவரும் நாட்களில் டார்க் ஸ்டோர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்.

அதிகரிக்கும் முதலீடு

இந்த விரிவாக்கத்துக்கெல்லாம் நிதி எங்கிருந்து வருகிறது? ஸ்விக்கி நிறுவனத்தில் இன்வெஸ்கோ 700 மில்லியன் டாலர் முதலீடு செய்திருக்கிறது. இதை இன்ஸ்டாமார்ட் விரிவாக்கத்துக்கு உபயோகிக்கப் போவதாக ஸ்விக்கி தெரிவித்திருக்கிறது. ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் 18 நகரங்களில் ஒரு வாரத்துக்கு 1 மில்லியன் ஆர்டர்களை டெலிவரி செய்துவருகிறது. பிளிங்கிட்டில் சோமட்டோவின் பங்கு 8 சதவீதம் ஆகும். அதோடு இதனுடைய விரைவு வணிக முன்னெடுப்புக்கு 500 மில்லியன் டாலர் முதலீடு செய்யப் போவதாகவும் சோமட்டோ அறிவித்திருக்கிறது.

இப்போது பிளிங்கிட் 12 நகரங்களில் வாரத்துக்கு 1 மில்லியன் ஆர்டர்களை டெலிவரி செய்து வருகிறது. டன்ஸோ ஆரம்பத்தில் 6 பெரு நகரங்களில் மட்டும் இயங்கி வந்தது. தன்னுடைய சேவையை25-க்கும் அதிகமான நகரங்களுக்கு விரிவாக்க டன்ஸோ திட்டமிட்டிருக்கிறது. ரிலையன்ஸ் ரீடெயில் மூலம் டன்ஸோவுக்கு 200 மில்லியன் டாலர் முதலீடு கிடைத்திருக்கிறது. பழங்கள், காய்கறிகள், இறைச்சி போன்ற விரைவில் கெட்டுவிடக்கூடிய பொருள்களை, ஆர்டர் செய்த சில நிமிடங்களில் டெலிவரி செய்வதற்கான உத்தியை டன்ஸோ வடிவமைத்து அதில் கவனம் செலுத்திவருகிறது.

மும்பையை மையமாகக்கொண்டு இயங்கி வரும் ஸெப்டோவை அமெரிக்காவிலுள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்துக்குப் படிக்கச் சென்று இடைநிறுத்தம் செய்த இரண்டு இளைஞர்கள்தான் நிர்வகித்து வருகிறார்கள். அவர்களுக்கு 19 வயதுதான் ஆகிறது. 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனத்தில் ஏற்கனவே சில முதலீட்டாளர்கள் 160 மில்லியன் டாலர் அளவுக்கு முதலீடு செய்திருக்கிறார்கள். தற்போது இந்த ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் மதிப்பீடு 570 மில்லியன் டாலர் ஆகும். ஓலாவும் இந்த விரைவு வணிகத்தில் அடியெடுத்து வைக்கப் போவதாகத் தெரிவித்திருக்கிறது. இது ஆரம்பிக்கவிருக்கும் சேவைக்குப் பெயர் ‘ஓலா டேஷ்’ ஆகும்.

விரைவு வணிகம் தாக்குப்பிடிக்குமா?

இந்த விரைவு வணிகத்திலிருக்கும் மிகப் பெரிய பிரச்சினை என்னவெனில் பெரும்பாலான பொருள்களுக்கான ‘மார்ஜின்’ குறைவு. ஆனால் டெலிவரிக்கு ஆகும் செலவு அதிகம். எனவே மார்ஜினுக்குள் டெலிவரி செய்ய வேண்டுமெனில் ஆர்டருக்கான சராசரி தொகையை அதிகரிக்க வேண்டும். ஒவ்வொரு ஆர்டர் மூலமாகவும் நிறுவனமானது லாபம் சம்பாதிக்க வேண்டுமெனில் டெலிவரி செலவு குறைவாக இருக்க வேண்டுமென்று இத்துறையோடு தொடர்பு கொண்ட ஆலோசனை நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள். இதனால்தானோ என்னவோ பெரிய நிறுவனங்களான அமேசான், ரிலையன்ஸ் போன்றவை இந்த விரைவு வணிக முன்னெடுப்பில் ஆர்வம் காட்டவில்லை.

இத்தகைய விரைவு வணிகம் தொடர்பாக டெக்னோபாக் அட்வைசர்ஸ் என்கிற நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான அரவிந்த் சிங்கல், ‘இந்தியர்கள் வழக்கமாக ஆண்டுக்கு சுமார் 850 பில்லியன் டாலர்களை பல பொருள்கள் வாங்க செலவழிக்கிறார்கள். அதில் ஏறக்குறைய 550 பில்லியன் டாலர் உணவு மற்றும் மளிகைச் சாமான்களுக்கு மட்டுமே செலவிட்டு வருகிறார்கள். இதிலும் முக்கியப் பங்கு வகிப்பது தானியங்களும், சமையல் எண்ணெய்யும்தான்.

இவை பெரும்பாலும் திட்டமிட்டு வாங்கப்படும் பொருள்களாகும். உணவு சம்பந்தப்படாத பொருள்கள் எனப் பார்த்தால் அது நுகர்வோர்களின் செலவில் 10 சதவீதத்துக்கும் குறைவாகத்தான் இருக்கும். அதோடு நுகர்வோர்களில் பெரும்பாலானோர் அண்ணாச்சிக் கடைகளுக்கு செல்வதை வழக்க மாகக் கொண்டிருக்கிறார்கள். பொருள்களின் இருப்புநிலையைப் பொருத்தவரையில் யாராலும் அண்ணாச்சிக் கடைகளை வெல்ல முடியாது. இந்தியாவில் ஆன்லைன் வணிகத்தின் மொத்த மதிப்பு 40 முதல் 45 பில்லியன் டாலர்தான்.

இது மொத்த சில்லறை வணிக மதிப்பில் 5 சதவீதம்தான். எனவே இந்த விரைவு வணிகம் என்பது ‘ரிஸ்கான’ ஒரு முன்னெடுப்பு’ எனக் கூறுகிறார். ஆனால் விரைவு வணிகத்தில் ஈடுபட்டிருக்கும், ஈடுபட நினைத்திருக்கும் நிறுவனங்கள் மிகவும் நம்பிக்கையுடனும் ‘காளைத்தன’த்துடனும் (Bullish) இருக்கின்றன. ‘வரும் நாட்களில் டிஜிட்டல் மூலம் தினசரி ஆர்டர் செய்வது பலமடங்கு அதிகரிப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது’ என்கிறார் டன்ஸோ டெய்லியின் தலைமை நிர்வாக அதிகாரி கபீர் விஸ்வாஸ். அதி விரைவான இந்த நவீன உலகில் ‘விரைவு வணிகம்’ எப்படி பரிணமிக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

sidvigh@gmail.co

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in