

இன்றைய இளைஞர்களுக்கு கல்வியை முடித்தவுடன், சொந்தமாகத் தொழில் தொடங்கி, அதில் வளர்ச்சியடைந்து, பணம் சம்பாதித்து, வாழ்க்கையில் ‘செட்டில்’ ஆக வேண்டும் என்ற கனவு அதிகம். இதில் குறிப்பிட்ட சதவீத இளைஞர்களே கடுமையாக உழைத்து தங்களது கனவை நனவாக்குகின்றனர். அவ்வாறு கடின உழைப்பின் வழியே தனது கனவை நனவாக்கியவர்தான் ‘மில்கி மிஸ்ட் டெய்ரி ஃபுட்’ நிறுவனத்தின் நிறுவனரும் அதன் முதன்மை நிர்வாக இயக்குநருமான டி.சதீஷ்குமார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் இயங்கும் ‘மில்கி மிஸ்ட் டெய்ரி ஃபுட்’ நிறுவனத்தை, டி.சதீஷ்குமார் தனது கடின உழைப்பின் மூலம் தேசிய அளவில் முன்னணி நிறுவனமாக நிலைநிறுத்தியுள்ளார். தனி நபராக தொழிலில் நுழைந்து, பின்னர் தனக்கென தனி ‘பிராண்டை’-உருவாக்கி, தொழிலில் முன்னோடியாக மாறியவர். தொழிலில் உச்சத்தை அடைய இவர் கடந்து வந்த பாதைகள் மிகவும் கரடு முரடானவை. தனது அனுபவங்களை ‘இந்து தமிழ் திசை’ வணிக வீதி வாசகர்களுக்காக அவர் பகிர்ந்து கொண்டார்.
‘ஈரோடு மாவட்டத்திலுள்ள தயிர்பாளையம் என்ற குக்கிராமத்தில், பாரம்பரிய விவசாய குடும்பத்தில் பிறந்தேன். அப்பா விவசாயத்தோடு, குடிசைத் தொழிலாக பால் வியாபாரமும் செய்தார். பள்ளிக்கல்வியை முடித்த பின்னர், 1991-ல் அதாவது, எனது 17 வயதில் தந்தைக்கு துணையாக, அவருடன் பால் வியாபாரத்தில் நுழைந்தேன். திரும்பிப் பார்ப்பதற்குள் சில ஆண்டுகள் ஓடிவிட்டன. புதிய தொழிலை தொடங்கலாமா என யோசனை எனக்குள் அப்போது ஏற்பட்டது. அதுவே நாளடைவில், தொழில் தொடங்கி வென்று காட்ட வேண்டும் என வெறியாக மாறியது.
அன்றைய காலகட்டத்தில், ‘பனீர்’ மிகவும் பிரசித்தி பெற்றது. பனீர் வடமாநில மக்கள் பெரிதும் பயன்படுத்தும் பொருளாக இருந்தாலும், தென் மாநிலத்திலும் அதற்கு வரவேற்பு இருந்தது. எனவே, பனீர் உற்பத்தியை சிறு தொழிலாக தொடங்கினேன். ஆரம்பத்தில் சூப்பர் மார்க்கெட்டுகள் மூலம் விற்பனை செய்தேன். பின்னர், அனைத்துத் தரப்பினருக்கும் எளிதில் கிடைக்க சாதாரண சிறு அங்காடிகளிலும் கிடைக்கும் அளவுக்கு பனீர் வியாபாரத்தை விரிவுபடுத்தினேன். பனீரை மக்களிடம் கொண்டு சேர்க்க ‘பிராண்ட்’ பெயர் தேவைப்பட்டது. நீண்ட தேடுதலுக்குப் பிறகு 1997-ல் ‘மில்கி மிஸ்ட்’ பெயரை தேர்ந்தெடுத்தேன்.
27 வகையான பொருள்கள் உற்பத்தி
பனீரை ‘மில்கி மிஸ்ட் டெய்ரி ஃபுட்’ பெயரில் சந்தைப்படுத்தினேன். ஒரு வகையை மட்டும் தொடராமல், பனீரில் பல்வேறு வெரைட்டிகளை அறிமுகப்படுத்தினோம். அது வாடிக்கையாளர்களை கவர்ந்தது. பனீரை அனைத்து தரப்பு மக்களுக்கானது என மாற்றினோம். பின்னர், தொழிலில் அடுத்த கட்டத்துக்குச் செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டது. பனீருடன் சேர்த்து, பால் சார்ந்த மற்ற பொருள்களையும் ஒவ்வொன்றாக உற்பத்தி செய்யத் தொடங்கினோம். தற்போது ‘மில்கி மிஸ்ட் டெய்ரி ஃபுட்’ பெயரில் ‘பனீர்’, ‘குக்கிங் பட்டர்’, ‘பட்டர் சிப்லெட்’, ‘கிரீம்’,‘கோவா’, ‘சீஸ் ஸ்லைசஸ்’, ‘குளோப் ஜாமுன் டின்’ என 27 வகையான பொருள்களை உற்பத்தி செய்கிறோம். ஆரம்பத்தில் பனீர் உற்பத்தியை சந்தைப்படுத்தும்போது பல சிரமங்களை எதிர்கொண்டேன். ‘சில்லர்’-ஸ் கூட இல்லை. பனீருக்கு சில்லர் வசதி (குளிர்சாதன பெட்டி) அவசியம்.
ஆனால், நான் தொழில் தொடங்கிய காலத்தில் ‘சில்லர்’ என்பது சாதாரண மானதல்ல. பனீர் விற்பனை செய்யும் கடைகளுக்கு சில்லர்களை நாங்களே அளிக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது. சில்லர்களை கடைகளுக்கு அளித்தோம். எங்களது உற்பத்திப் பொருட்களில் தரம் மிகவும் முக்கியம். வாடிக்கையாளர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்கும் நாங்கள், எவ்வாறு பாதுகாப்பாக ஒரு பொருளை உற்பத்தி செய்கிறோமோ, அதே அளவுக்கு அந்தப் பொருள் பாதுகாப்பாக நுகர்வோரின் கைக்குச் செல்ல வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்கிறோம். பொருள்களை உற்பத்தி செய்ய, ஐரோப்பிய நாடுகளின் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறோம். எங்களது பொருட்களின் தரத்துக்கு நூறு சதவீதம் தொழில்நுட்பங்களை புகுத்துவது மட்டுமின்றி, அதை அப்டேட் செய்வதும் அவசியம். தொழில்நுட்பங்கள் அதிகரிக்கும்போது, தரமும் அதிகரிக்கும்.
நாங்கள் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து அடுத்தடுத்து வளர்ச்சியை நோக்கி பயணிக்க, சக போட்டியாளர்களின் போட்டியை பயன்படுத்திக் கொண்டோம். ஒரே இடத்தில் தேங்கிவிடாமல், உற்பத்திப் பொருட்களின் வகைகளை அதிகப்படுத்துதல், அதை அனைவருக்கும் கிடைக்கும் வகையில் சந்தைப்படுத்துதல், குறைந்த தொழில்நுட்பங்களின் பங்களிப்பு, முழு தொழில்நுட்பங்களின் பங்களிப்பு என நாங்கள் அடுத்தடுத்து வளர்ச்சியை நோக்கி சென்றுகொண்டே இருக்கிறோம். அகில இந்திய அளவில் ஒரு ‘நேஷனல் பிராண்டு’ ஆக வரவேண்டும் என்பதே எங்கள் இலக்கு. இன்றைய இளைஞர்களுக்கு நான் சொல்வது என்னவென்றால், நீங்கள் என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறீர்களோ அதை நோக்கிச் செல்லுங்கள். எடுத்தவுடன் நினைத்த அனைத்தும் கிடைத்துவிடாது. இலக்கை அடைய விடா முயற்சியுடன் கூடிய, கடின உழைப்பு அவசியம். அதுவே வெற்றியின் மூலதனம். எந்த ஒரு செயலையும் உறுதியுடன் செய்ய இளைஞர்கள் பழகிக்கொள்ள வேண்டும்.
சுற்றுச்சூழல் ஆர்வம்
சூரியமின்சக்தி உற்பத்தியில் மற்றவர்களுக்கு முன்னோடியாக இருக்க நான் விரும்புகிறேன். கடந்த 2016-ல் முதல் முறையாக சூரிய மின்சக்தி உற்பத்தியை எங்களது நிறுவனத்தில் புகுத்தினோம். ஆரம்பத்தில் 4 மெகாவாட்டும், தற்போது 15 மெகா வாட்டும் உற்பத்தி செய்கிறோம். நம்பியூரில் இதற்காக 25 ஏக்கர் பரப்பளவில் நாங்கள் ஆலை வைத்துள்ளோம். 100 சதவீதம் சூரிய மின்சக்தி உற்பத்தி மின்சாரத்தை நாங்கள் பயன்படுத்துகிறோம்.
சுற்றுச்சூழலைப் பாதுகாக்க நமது பங்களிப்பு இருக்க வேண்டும். மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு சமூகப்பணிகளையும் நாங்கள் செய்து வருகிறோம். தஞ்சாவூர் மாவட்டத்தில் 55 குளங்களை தூர்வாரிக் கொடுத்துள்ளோம். இதன் மூலம் நீர் தேங்கும் அளவு அதிகரிப்பதோடு, நிலத்தடி நீர் மட்டமும் அதிகரித்து, விவசாயிகளின் பாசனத்துக்கு பயன் உள்ளதாக இருக்கும். அதேபோல், பள்ளிகளுக்கு கழிப்பிடங்களை கட்டித் தருதல் போன்ற பணிகளையும் சேவை அடிப்படையில் செய்து வருகிறோம் என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.