

முன்பு, டீ கடை, குழாயடியில் நடந்த சண்டைகள் இப்போது ட்விட்டருக்கு இடம் பெயர்ந்திருக்கின்றன. அஜித், விஜய் ரசிகர்கள் சண்டை, என சினிமா சண்டைகள் ட்விட்டரில் அதிகம் நடந்தாலும் இப்போது அந்த அக்கப்போர்கள் கார்ப்பரேட் நிலையிலும் நடக்க ஆரம்பித்திருக்கின்றன.
சிறிய வயது, முதிர்வில்லாமல் கருத்து சொல்லிவிட்டார் என்றெல்லாம் நினைக்க முடியாது. வயது வித்தியாசம் இல்லாமல் கருத்துகளை அள்ளித்தெளித்து அக்கப்போர்களை உருவாக்கி வருகிறார்கள். சமீபத்தில் பிளிப்கார்ட் நிறுவனர் சச்சின் பன்சால் மற்றும் ஸ்நாப்டீல் நிறுவனத்தின் குணால் பாஹல் இருவரும் ட்விட்டரில் மோதிக்கொண்டனர்.
சண்டைக்கான காரணம் இதுதான். அலிபாபா நிறுவனம் இந்தியாவில் பேடிஎம், ஸ்நாப்டீல் உள்ளிட்ட நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கிறது. இருந்தாலும், நேரடியாக இந்தியாவில் இ-காமர்ஸ் நிறுவனம் தொடங்க திட்டமிட்டிருப்பதாக அலிபாபா கடந்த வாரத்தில் அறிவித்தது.
அதனைத் தொடர்ந்து பிளிப்கார்ட் தலைவர் சச்சின் பன்சால், அலிபாபா இந்தியாவில் நேரடியாக களம் இறங்குவது ஏற்கெனவே செய்துள்ள முதலீடுகள் (அதாவது பேடிஎம், ஸ்நாப்டீல்) பெரிய வெற்றியடையவில்லை என்பதையே காட்டுகிறது என்று ட்விட் தட்டினார்.
முன்னதாக பிளிப்கார்ட் நிறுவனத்தில் முதலீடு செய்திருந்த அமெரிக்க நிறுவனமான மார்கன் ஸ்டான்லி பிளிப்கார்ட் சந்தை மதிப்பை 500 கோடி டாலர் அளவுக்கு குறைத்தது. இதனை குறி வைத்து ஸ்நாப்டீல் தலைவர் குணால் பாஹல் மார்கன் ஸ்டான்லி பிளிப்கார்ட் நிறுவனத்தில் பணத்தை இழக்கவில்லையா? உங்களுடைய வேலையை மட்டும் பார்க்கவும். கருத்து சொல்ல வேண்டாம் என்று தெரிவிக்க இந்த இரண்டு நிலைத் தகவல்களும் வேகமாக பரவின.
சச்சின் பன்சால் ஸ்நாப்டீலுக்கு எதிராக கருத்து சொல்வது இது முதல்முறையல்ல. கடந்த வருடம் ஸ்நாப்டீல் நிறுவனத்தின் இணை நிறுவனர் ரோஹித் பன்சால் கூறிய கருத்துக்கு சச்சின் பன்சால் எதிர்வினையாற்ற அதுவும் சர்ச்சையானது.
இந்தியாவில் திறமையான பொறியாளர் களுக்கு பற்றாக்குறையாக இருக்கிறது. அதனால் புராடக்ட் நிறுவனங்கள் இங்கு உருவாகவில்லை. ஸ்நாப்டீல் இந்த பிரச் சினையை சந்தித்திருக்கிறது என்று கூறினார். அப்போது நீங்கள் சரியான பொறியாளர்களை வேலைக்கு எடுக்கவில்லை என்பதற்காக இந்தியாவின் மீது குறை கூறாதீர்கள் என்று சச்சின் பன்சால் ட்விட் தட்டினார்.
இவர்கள் படிக்காதவர்கள் அல்ல, சந்தை நிலவரம் தெரியாதவர்கள் அல்ல, மார்க்கெட்டிங் தெரியாதவர்கள் அல்ல. இதெல்லாம் இவர்களுக்கு தெரிந்து ஏன் ட்விட்டரில் வாக்குவாதத்தை வளர்க்கிறார்கள். ஒரு வேளை இதையும் அவர்கள் மார்க்கெட்டிங் உத்தியாக நினைக்கிறார்களா என்னவோ?