ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் பொற்காலம் தொடருமா?

ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் பொற்காலம் தொடருமா?
Updated on
2 min read

2021-ம் ஆண்டை இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் பொற்காலம் என்று சொன்னால் அது மிகையில்லை. கடந்த ஆண்டில் மட்டும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்ட தொகை சுமார் 30 பில்லியன் டாலர். அதோடு 45 நிறுவனங்கள் யுனிகார்ன் (அதாவது 1 பில்லியன் டாலர் மதிப்பீடு கொண்டவை) அந்தஸ்தைப் பெற்றன. பல நிறுவனங்கள் பொது பங்குகளை வெளியிட்டு அதில் வெற்றியும் கண்டன.

2022-ம் ஆண்டில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது என்பதை பறைசாற்றுவதைப் போல உள்ளது.இவ்வாண்டின் முதல் இரண்டு மாதங்களைப் பார்க்கும்போது சென்ற ஆண்டு இதே காலத்திலிருந்த நிலையை விட நன்றாகவே இருக்கிறது. இவ்வாண்டு ஜனவரி-பிப்ரவரி மாதம் மட்டும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சுமார் 775கோடி டாலர் மூலதனத்தைப் பெற்றிருக்கின்றன. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் திரட்டப்பட்ட முதலீடு 263 கோடி டாலராகும்.

எனினும், சமீபமாக ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சார்ந்த முதலீடு குறித்த தயக்கம் எழத் தொடங்கியுள்ளது. உலகளவில் மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தில் காட்டும் இறுக்கம், உலக அரசியல் தளத்தில் நிலவும் பிரச்சினைகள், உள்நாட்டுச் சந்தை, பேடிஎம் போன்ற நவீன நிறுவனங்களின் பங்குச் சந்தை செயல்பாடு போன்ற காரணிகளால் ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கு சாதகமானதாக இல்லை என இத்துறையைத் தொடர்ந்து கவனித்து வருபவர்கள் கூறி வருகிறார்கள்.

தவிர, முதலீட்டாளர்கள் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் தொழில்கட்டமைப்பு மற்றும் அதன் வருவாய் வழிமுறைகள் குறித்தும் தீவிரமாக அலசத் தொடங்கியுள்ளனர். ஏனென்றால், பல ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தங்கள் மதிப்பை மிகைப்படுத்தி முதலீட்டை அதிகம்பெறுகின்றன. சில ஆண்டுகளிலே லாபம் ஈட்டமுடியாமல் முடங்கும் நிலைக்குச் செல்கின்றன. உதாரணமாக, பிளிங்கிட் (இதன் முன்னால் பெயர் க்ரோஃபெர்ஸ்) என்கிற நிறுவனத்தின் ‘விரைவு வணிகம்’ (Q-Commerce) முன்னெடுப்பான ‘10 நிமிட டெலிவரி மாடல்’ முட்டுச் சந்தில் நிற்க, அந்நிறுவனத்தை காப்பாற்ற சொமாட்டோ 15 கோடி டாலர் கடன் உதவி செய்திருக்கிறது.

அதோடு பிளிங்கிட் சில பணியாளர்களையும் வேலை நீக்கம் செய்திருப்பதோடு, டார்க் ஸ்டோர்ஸ் என அறியப்படும் பொருள்களின் கிடங்குகளில் சிலவற்றை மூடிவிட்டதாகவும், பொருள் விநியோகம் செய்தவர்களுக்கு பணம் கொடுப்பதில் தாமதம் செய்து வருவதாகவும் செய்திகள் வெளியாகி வருகிறது. என்றைக்கு இந்நிறுவனம் விரைவு வணிக முன்னெடுப்பை அறிவித்து செயல்பட ஆரம்பித்ததோ அன்றிலிருந்து ஒவ்வொரு ஆர்டரிலும் பணத்தை இழந்து வருகிறது. பெரும்பாலான ஸ்டார்ட்-அப்களின் பிசினஸ் மாடல் குறைபாடு உடையதாக இருப்பதோடு என்ன தொழில் செய்கிறார்கள் என்பதே தெளிவாகத் தெரிவதில்லை.

இனிமேல் முதலீடு என்பது மிகவும் ஆராய்ந்து தெரிவு செய்யப்பட்ட, வலுவான யோசனைகளைக் கொண்ட நிறுவனங்களுக்குத்தான் போகும் என்றும், நிறுவனத்தின் பிசினஸ் மாடல் மிகவும் நுணுக்கமாக ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்றும் இத்துறை சார்ந்தவர்கள் கூறுகிறார்கள். கரோனா ஆரம்பித்த காலத்தில் பைஜு நிறுவனம் 200 கோடி டாலர் முதலீட்டைப் பெற்றது, அதனுடைய மதிப்பீடு 2020-ம் ஆண்டில் 800 கோடி டாலராக இருந்தது. இது 2,200 கோடி டாலர் என்கிற அளவுக்கு அதிகரித்தது. இந்த முதலீடு எந்த அளவுக்கு நிறுவனத்தின் வளர்ச்சிக்குப் பயன்பட்டிருக்கிறது என்பதை முதலீட்டாளர்கள் கவனிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

கரோனா காலத்தில் டிஜிட்டல் துறையில் ஏற்பட்ட அதே வளர்ச்சி கரோனா இல்லாது போகும் காலத்திலும் இருக்குமா என்ற சந்தேகமும் முன்வைக்கப்படுகிறது. அதாவது, மக்கள் மால், சூப்பர் மார்க்கெட் என வெளியே அதிகமாக செல்லும்பட்சத்தில் ஆன்லைன் விற்பனை குறைய வாய்ப்பிருக்கிறது.

ஏற்கனவே முதலீடு செய்திருக்கும் முதலீட்டாளர்கள் பங்குச் சந்தை மூலம் தங்களது பங்குகளை புதிய முதலீட்டாளர்களுக்கு விற்று லாபம் சம்பாதிக்க முடியுமா என்பதும் இனி சிரமம்தான். கடந்த வருடம் சொமாட்டோவின் பங்குகளுக்கு பங்குச் சந்தையில் நல்ல வரவேற்பிருந்தது. ஆனால் இப்போது இருக்கும் நிலையற்ற தன்மையில் அதே மாதிரியான வரவேற்பு பைஜு, ஸ்விக்கி போன்ற நிறுவனங்களுக்கு இருக்குமா என்பது சந்தேகமே. ஏற்கனவே ஐபிஓ-வுக்கு அனுமதி பெற்ற மொபிக்விக், டெலிவரி, ஃபார்ம்ஈஸி போன்ற நிறுவனங்கள் தங்களது திட்டத்தை தள்ளி வைத்திருக்கின்றன. அது போல ‘ஓயோ’ தன்னுடைய பங்கு வெளியீட்டுத் தொகையை மறுபரிசீலனை செய்து வருகிறது.

எனவே, சென்ற ஆண்டைப் போல இந்த ஆண்டும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் ஐபிஓ-க்களுக்கு வரவேற்பு இருக்குமா என்பது சந்தேகம்தான். அதோடு ஸ்டார்ட்அப் நிறுவனங்களை மதிப்பீடு செய்வதிலும் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

தொடர்புக்கு: sidvigh@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in