இந்தியாவில் நுழைகிறது கியா மோட்டார்ஸ்

இந்தியாவில் நுழைகிறது கியா மோட்டார்ஸ்
Updated on
1 min read

கொரியாவைச் சேர்ந்த கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் ஆலையை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனம் ஹூண்டாய் நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். ஏற்கெனவே ஹூண்டாய் நிறுவனத்தின் ஆலை சென்னையை அடுத்த இருங்காட்டுக் கோட்டையில் செயல்படுகிறது. இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் கார்களில் மாருதிக்கு அடுத்த இடத்தில் இந்நிறுவனம் உள்ளது.

ஹூண்டாயின் மற்றொரு கார் தயாரிப்பு நிறுவனமான கியா மோட்டார்ஸ் தயாரிக்கும் கார்கள் அமெரிக்கா, சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. கொரியாவிலும் இந்நிறுவனத் தயாரிப்புக்கு பெரும் வரவேற்பு உள்ளது. 2020-ம் ஆண்டில் உலகில் அதிக எண்ணிக்கையில் கார்களைப் பயன்படுத்தும் மூன்றாவது பெரிய நாடாக இந்தியா உயரும் என்று சர்வதேச கணிப்புகள் வெளியாகியுள்ளன. இதை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள கியா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

கியா மோட்டார்ஸ் ஸ்போர்டேஜ் என்ற பெயரிலான காம்பாக்ட் எஸ்யுவி மற்றும் சோல் கிராஸ் ஓவர் மற்றும் ரியோ ஹாட்ச்பேக் கார்களைத் தயாரிக்கிறது. இந்தியாவில் எந்த இடத்தில் ஆலையை அமைக்கலாம் என்பதற்கான கள ஆய்வுகளை இந் நிறுவனம் ஏற்கெனவே தொடங்கி விட்டது. அத்துடன் தங்கள் நிறுவனத்துக் குத் தேவையான உதிரி பாகங்களை சப்ளை செய்யும் நிறுவனங்கள் எங்கு உள்ளன என்பதை ஆராயும் பணியிலும் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

இந்தியாவில் இந்த ஆலை உருவானால், சில மாடல் கார்களை இந்த ஆலையில் ஹூண்டாய் நிறுவனம் தயாரிக்கும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏனெனில் சென்னை ஆலை அதன் முழு உற்பத்தி அளவை எட்டிவிட்டது. மேலும் ஏற்றுமதிக்கான வாய்ப்புள்ள மாடல்களை ஹூண்டாய் இந்நிறுவன ஆலையில் தயாரிக்கும்.

கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் ஆலை அமைக்க வேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளாகவே திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு இந்நிறுவனம் 30 லட்சம் கார்களைத் தயாரித்து விற்பனை செய்துள்ளது. சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார தேக்க நிலை காரணமாக தனது முதலீட்டுத் திட்டத்தை கியா மோட்டார்ஸ் தள்ளிப் போட்டு வந்துள்ளது. கியா மோட்டார்ஸின் கார்களுக்கு சீனாவில் அதிக கிராக்கி நிலவுகிறது. இருப்பினும் கடந்த சில ஆண்டுகளாக அங்கும் தேக்க நிலை நிலவுவதால் இந்திய முதலீட்டு யோசனையை கியா மோட்டார்ஸ் தீவிரப்படுத்தவில்லை.

இருப்பினும் இந்தியாவில் ஆலை அமைத்தாலும் உற்பத்தி தொடங்கி விற்பனை செய்வதற்கு குறைந்தது 3 ஆண்டுகள் தேவைப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆட்டோமொபைல் துறையில் ஜப்பான் நிறுவனங்களுக்குப் போட்டி யாகத் திகழ்பவை கொரிய நிறுவனங் கள்தான். அதிலும் ஹூண்டாயின் மற்றொரு துணை நிறுவனமான கியா மோட்டார்ஸும் இந்தியாவில் தடம் பதிக்க உள்ளதன் மூலம் கொரிய நிறுவனத் தயாரிப்பை பயன்படுத்தும் வாய்ப்பு இந்தியர்களுக்கு சுங்க வரியின்றி கிடைக்கும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in