

மிக நீண்ட நெடிய இடைவெளிக்குப் பிறகு புதிய வீடுகளுக்கான சந்தை இப்போதுதான் மீட்சி பெற தொடங்கியுள்ளது. மக்களும் இப்போதுதான் வீடு வாங்குவதில் உள்ள சிரமங்களைப் பொறுத்துக் கொண்டு வீடு வாங்கலாம் என்ற நிலைக்கு வரத் தொடங்கியுள்ளனர். இதனால் வீடு சார்ந்த ரியல் எஸ்டேட் நிறுவன பங்குகளின் விலை 1 டிரில்லியன் டாலர் அளவுக்கு முதலீடுகளை ஈர்க்கும் வாய்ப்புகள் பிரகாசமடைந்துள்ளது. இந்த அடிப்படையில் பார்க்கும்போது 2030-ம் ஆண்டில் இந்தியாவின் ரியல் எஸ்டேட் துறை 1 டிரில்லியன் டாலர் அளவுக்கு வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய வளர்ச்சியை எட்டும்பட்சத்தில் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) இத்துறையின் பங்களிப்பு 13 சதவீத அளவுக்கு இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இவ்விதம் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்ய தயக்கம் காட்டுபவர்கள் இத்துறையில் முதலீடு செய்யும் நிறுவனங்களின் பரஸ்பர நிதித் திட்டங்களில் முதலீடு செய்யலாம். இதில் திரட்டப்படும் நிதி முழுவதும் ரியல் எஸ்டேட் துறையில் நிபுணர்களால் நன்கு கணிக்கப்பட்டு முதலீடு செய்யப்படுகிறது. இத்தகைய நிபுணர்கள் சந்தையின் போக்கை நண்கு அறிந்தவர்கள். இத்துறையில் மிகுந்த அனுபவம் பெற்றவர்கள். இவர்கள் நிர்வகிப்பதால் இத்தகைய பரஸ்பர முதலீட்டுத் திட்டங்கள் மிகச் சிறந்த வருமானத்தை ஈட்டித் தரும் என்பதில் சந்தேகமில்லை.
வளர்ச்சி சாத்தியமாவது எப்படி?
இத்துறையில் வளர்ச்சி சாத்தியம் என்பதற்கு அரசு இத்துறையை மீட்பதற்கான நடவடிக்கையில் தீவிரம் காட்டுவது முக்கிய அம்சமாகும். இதன் ஒரு பகுதியாக நடப்பு நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்துக்கு மத்திய அரசு ரூ. 48 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளது. கடந்த நிதி ஆண்டு ஒதுக்கிய தொகை ரூ. 27,500 கோடி. தற்போது ஏறக்குறைய இரண்டு மடங்கு அளவுக்கு ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளதிலிருந்தே இத்துறைக்கு அரசு அளித்துவரும் முக்கியத்துவத்தை உணர முடியும். தவிர இத்துறையில் 100 சதவீத அன்னிய முதலீட்டுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நகர்ப்புற குடியிருப்பு திட்டப் பணிகளில் அன்னிய நேரடி முதலீடுகளுக்கு அனுமதி வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்துக்கும் மேலாக ரிசர்வ் வங்கியும் தனது நிதிக் கொள்கையில் வட்டி விகிதத்தை 4 சதவீத அளவிலேயே பராமரித்து இத்துறை வளர்ச்சிக்கு உதவுகிறது. அத்துடன் வீட்டுக் கடன் வட்டி விகிதம் குறைந்த அளவிலேயே நிர்ணயிக்கப்பட்டு பராமரிக்கப்படுவதால் இத்துறைக்கான சந்தை தேக்க நிலையிலிருந்து மீண்டு வருகிறது.
மேலும் புவியியல் ரீதியாக இந்தியாவில் நகர்மயமாதல் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இதனால் குறைந்த விலையிலான வீடுகளுக்கான தேவையும் அதிகரித்து வருகிறது. அனைத்துக்கும் மேலாக இந்தியாவில் இளம் வயதுப் பிரிவினரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. சீனாவுடன் ஒப்பிடுகையில் மிக இளம் வயது பிரிவினரைக் கொண்டுள்ள நாடாக இந்தியா திகழ்கிறது. இதனால் இப்பிரிவினர் தங்களின் கனவு இல்லத் திட்டத்தை நனவாக்க முயலும்போது வீடுகளுக்கான தேவை நிச்சயம் உயரும்.
சமீபத்தில் தேசிய பங்குச் சந்தையில் வீட்டு வளர்ச்சிக்கான குறியீடு அறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி வீடு சார்ந்த துறைகளில் முதலீடு செய்ய நினைக்கும் முதலீட்டாளர்கள் வெறுமனே ரியல் எஸ்டேட் அதாவது வீடு கட்டுமான நிறுவனங்களில் மட்டும் முதலீடு செய்யாமல், வீட்டுக் கடன் வசதி அளிக்கும் நிதி நிறுவனங்கள் மற்றும் இத்துறை சார்ந்த பிற நிறுவனங்களான கட்டுமானம், சிமென்ட், பெயின்ட் உற்பத்தி நிறுவனங்கள், டைல்ஸ் தயாரிப்பு நிறுவனங்கள், கட்டுமான பொருள் தயாரிப்பு நிறுவனங்கள், உலோகங்கள், நுகர்பொருள் தயாரிப்பு நிறுவன பங்குகளில் முதலீடு செய்யலாம்.
என்எஸ்இ வெளியிட்டுள்ள வீட்டு வசதி குறியீட்டெண் அடிப்படையில் இது சார்ந்த துறைகளில் முதலீடு செய்வதற்காக ஐசிஐசிஐ புரூடென்ஷியல் நிறுவனம் புதிய நிதியை உருவாக்கியுள்ளது. ஹவுசிங் ஆப்பர்சூனிட்டிஸ் நிதியம் என்ற பெயரிலான இந்த நிதியத்திலும் வாடிக்கையாளர்கள் முதலீடு செய்யலாம்.
- தொடர்புக்கு: ஸ்ரேயா பின்செர்வ் பிரைவேட் லிமிடெட்
subrahari68@gmail.com