டெபாசிட்தாரர்களை கைவிடுகின்றனவா வங்கிகள்?

டெபாசிட்தாரர்களை கைவிடுகின்றனவா வங்கிகள்?
Updated on
3 min read

‘வட்டி’ என்பதை காத்திருப்பதற்காகக் கொடுக்கப்படும் வெகுமதி என்கிறது பொருளாதாரம். அதாவது பணத்தை கடனாகக் கொடுத்த ஒரு நபர், அதைத் திரும்பப் பெறுவதற்கு சில காலம் காத்திருக்க வேண்டி உள்ளதல்லவா, அந்தக் காத்திருப்புக் காலத்திற்காக அவருக்கு, அவர் கொடுத்த பணத்துடன் சிறிது பணத்தையும் சேர்த்து கொடுப்பதுதான் ‘வட்டி’ எனப்படுகிறது.

வட்டிக்காக கடன் கொடுக்கும் தனி நபர் முதல் தேசிய வங்கிகள் வரை இந்த பார்முலாவில்தான் செயல்படுகின்றன. சுருக்கமாகச் சொன்னால் வட்டிதான் வங்கித் தொழிலின் அடிப்படை. வங்கியில் பணம் போடுபவர் இல்லையென்றால் ஒரு வங்கி தன் வணிகத்தை நடத்த முடியாது. மக்களின் வைப்புத் தொகையை, கடன் தேவைப்படுவர்களுக்குக் கொடுத்து, அதற்கு வட்டியைப் பெறுவதன் மூலமே வங்கிகள் இயங்குகின்றன. அதனால், வங்கியில் பணம் போடும் வாடிக்கையாளர்களை வங்கிகள் மிகவும் மதிப்புடன் நடத்திவந்தன.
ஆனால், கடந்த இருபது ஆண்டுகளாக நிலைமை மாறியுள்ளது. அதாவது, ஒரு காலத்தில் மதிப்புடன் நடத்தப்பட்டு வந்த வைப்புதாரர்கள், தற்போது வேண்டா வெறுப்பாக வேறு வழியின்றி வங்கிகளுக்கு வந்துகொண்டிருக்கின்றனர்.

வட்டி விகிதத்தின் அவலம்

வங்கிகள் வைப்புதாரர்களுக்கு வழங்கிவரும் வட்டி விகித்தில் ஏற்பட்டுவரும் தொடா் வீழ்ச்சிதான் வைப்புதாரர்களின் தற்போதைய பரிதாபநிலைக்குக் காரணம். 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை வங்கியில் போடப்படும் தொகை 5 ஆண்டுகளில் இரண்டு மடங்காகி விடும். அதாவது ரூ.1 லட்சம் வைப்பீடு செய்தால் 5 ஆண்டுகள் கழித்து ரூ.2 லட்சத்தை வங்கி தரும். 1988-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்திர விகாஸ் பத்திரங்கள் 5 ஆண்டுகளில் வைப்பீட்டை இரண்டு மடங்காக திருப்பித்தந்தன.

ஆனால் இன்றைக்கு நிலைமை என்ன? வங்கியில் செய்யும் வைப்பீடு இரண்டு மடங்காக பெருக 10 வருடங்கள் காத்திருக்க வேண்டும். வைப்புகளுக்கு அளிக்கப்பட்ட வட்டி விகிதம் 16 சதவீதத்திலிருந்து படிப்படியாக இறங்கி வந்து, இன்றைக்கு 6 சதவீதத்தி்ல் நிற்கிறது. இந்த 6 சதவீதமும் தொடர்ந்து இருக்குமா அல்லது அதுவும் இறக்கம் கண்டு விடுமா என்ற பயத்தில்தான் இன்றைய டெபாசிட்தாரா்கள் உள்ளனா், ஒருவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.1 லட்சம் வைப்பீடு செய்தால் அவருக்கு வங்கி 12 சதவீதம் வட்டி அளித்தது. இதனால் அவருக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.1000 வட்டி வருமானமாகக் கிடைத்தது. இந்தத் தொகையைக் கொண்டு அப்போது அவர் தனது வாழ்க்கை செலவில் ஒரு பகுதியை சமன் செய்ய முடிந்தது. ஆனால் இன்றைக்கு அதே ரூ.1 லட்ச ரூபாய்க்கு வைப்புதாரருக்கு கிடைக்கும் மாதாந்திர வட்டி ரூ.500க்கும் கீழ்தான். இன்றைய நிலையில் ஒரு கூலித் தொழிலாளிக்கு குறைந்தபட்சம் ரூ.500 நாட்கூலியாக கொடுக்க வேண்டி உள்ளது.

இதை வைத்துப் பார்த்தால் வங்கிகள் அளிக்கும் வட்டி அளவின் அவலம் நமக்குப் புரியும். வைப்புதாரர்களின் மனக்குமுறல் ஆங்கிலேயர் காலத்திலிருந்து செயல்பட்டு வந்த பென்சன் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் நிறுத்திவிட்டன. பங்களிப்பு ஓய்வூதியம் என்பது இன்னும் விடை காண முடியாத விஷயமாகவே இருக்கிறது. அரசுகளும் நிறுவனங்களும் தன் ஊழியர்களுக்காக வருங்கால வைப்பு நிதி ஆணையத்தில் செலுத்த வேண்டிய தொகையை செலுத்தாமல் கோடிக்கணக்கில் நிலுவை வைத்துள்ளன.

இந்த நிலையில் வைப்பீடுகளில் இருந்து கிடைக்கும் வருமானம்தான் பல்வேறு பிரிவினருக்கு வருமான ஆதாரமாக இருந்துவருகிறது. பல்வேறு நிதி நிறுவனங்கள் அதிக வட்டி தருவதாக ஆசை காட்டினாலும், பாதுகாப்பான முதலீட்டுக்கு வங்கியைத்தான் மக்கள் தோ்ந்தெடுக்கிறார்கள். ஆனால் இன்றைக்கு வங்கிகள் அளிக்கும் வட்டி விகிதங்கள் மிகவும் சொற்பமாக உள்ளது. வங்கிகளில் பணம் போடுவது ஆதாயமற்றது என்பது வைப்புதாரா்களுக்கு தெரிந்து இருந்தாலும், அவர்களுக்கு வங்கிகள் தவிர வேறு வழிகள் தெரியவில்லை. இவ்வாறு வங்கித் தொழிலின் அஸ்திவாரமாக இருக்கும் வைப்புதாரர்களின் மனக்குமுறலில்தான் இன்றைய வங்கிகள் தங்கள் தொழிலை நடத்துகின்றன.

சுரண்டப்படும் வைப்புதாரர்கள் இது ஒருபுறமிருக்க, வங்கிகள் தன் கடனாளர்களுக்கு வட்டி விகிதங்களை தொடா்ந்து குறைத்து கொண்டே வருகிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை அதிகபட்சமாக கடன்தாரர்களிடமிருந்து வங்கிகள் 20 சதவீதம் அளவில் வட்டி வசூலித்தன. ஆனால் இன்றைக்கு வீட்டுக் கடன் 8 சதவீதம் முதல் 10 சதவீதம் வரையிலான வட்டியில் கிடைக்கிறது. நகைக்கடன், தொழில் கடன் மற்றும் அரசின் முன்னுரிமை திட்டக் கடன்கள் ஆகியன அதிகபட்சமாக 10 சதவீத வட்டிக்குள் கிடைக்கின்றன.

நாட்டின் தொழில் வளா்ச்சி மற்றும் சுய வேலை வாய்ப்பைக் கருத்தில் கொண்டு வங்கிகள் குறைந்த வட்டியில் கடன்களை அளிப்பது நல்ல விஷயம்தான். ஆனால், இந்த நல்ல விஷயத்திற்கான விலையை கொடுப்பவா்கள் வங்கிகளில் வைப்பீடு செய்திருக்கும் வாடிக்கையாளர்கள் என்பதை நாம் புரிய வேண்டும். சுருக்கமாகச் சொன்னால் வங்கிகள், கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைக்கின்றன. இன்றைய வங்கி வணிகத்தில் குறைந்த வட்டியில் கடன் கிடைப்பதால் கடனாளர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். ஆனால், இதற்கு காரணகர்த்தாவாகிய வைப்புதாரர்கள் மன வேதனை அடைகிறார்கள்.

வைப்புதாரர்களை உற்சாகப்படுத்துங்கள்

வைப்புதாரர்களை உற்சாகப்படுத்தும் வழிகள் வங்கிகளுக்கும் அரசுக்கும் தெரியாமலில்லை. உதாரணமாக ஒரு தானியத்திற்கு குறைந்தபட்ச விலையை மத்திய அரசு நிர்ணயிக்கிறது. இந்த விலை போதாது என்பதால் மாநில அரசு தனியே ஊக்கத் தொகையை அளிக்க முன்வருகிறது.லாபத்தில் இயங்கும் பல கூட்டுறவு அமைப்புகளில் பங்கு ஈவு, சிக்கன சேமிப்பு வட்டி ஆகியன வழங்கப்பட்ட பிறகும், உறுப்பினா்களுக்கு போனஸ் என்ற ஒரு ஊக்கத்தொகை கொடுக்கப்படுகிறது.

இவ்வாறு உற்பத்தியாளா்களுக்கு ஊக்கத்தொகை வழங்க பல வழிகள் கையாளப்படும்போது, வங்கி வைப்புதாரர்கள் சார்ந்து மட்டும் ஏன் மவுனம் காக்கப்படுகிறது? வட்டி விகிதங்கள் ரிசா்வ் வங்கியால் நிர்ணயிக்கப்பட்டாலும்கூட, வங்கிகள் தங்கள் லாபத்திலிருந்த தன் வைப்புதாரர்களுக்கு ஒரு ஊக்கத் தொகையை அளித்து வைப்புதாரர்களை உற்சாகப்படுத்துவதில் என்ன தடை வரப்போகிறது?

கடந்த 2021ம் நிதி ஆண்டில் இந்திய வங்கிகள் ரூ.1,02,752 கோடி லாபம் ஈட்டியிருக்கின்றன. பொதுத்துறை வங்கிகளில் 2 வங்கிகளைத் தவிர மற்றவை லாபத்தில் இருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. வைப்புதாரர்களை சுரண்டி வங்கிகள் தங்கள் லாபத்தை பெருக்கிக் காட்டுவதில் என்ன நியாயம் இருக்க முடியும்? லாபத்தில் இயங்கும் வங்கிகள் தங்கள் வைப்புதார்களுக்கு தங்கள் லாபத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை ஒதுக்குவதற்கான விதிமுறைகளை செயல்படுத்துவதில் என்ன தடை இருக்க முடியும்?

வங்கிகள் தங்கள் லாபத்திலிருந்து அவற்றின் பணியாளர்களுக்கு போனஸ் அளிக்கின்றன. வாராக்கடன் கடந்த ஆண்டில் மட்டும் ரூ.2 லட்சம் கோடி வரை தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. இதையெல்லாம் செய்வதற்கு வங்கிகள் விதிமுறைகளை ஏற்படுத்திக்கொள்ள முனைகிறபோது வைப்புதாரா்களுக்கு மட்டும் ஏன் பாரபட்சம் காட்டப்படுகிறது? இந்த நேரத்தில் மகாத்மா காந்தி, ஒரு வங்கியைத் திறந்துவைக்கும்போது தெரிவித்தக் கருத்தை நினைவு கூறுவது பொருத்தமாக இருக்கும்.

‘வாடிக்கையாளருக்கு வங்கி எஜமானர் அல்ல. மாறாக வாடிக்கையாளர்தான் வங்கிக்கு எஜமானர். வங்கி வாடிக்கையாளருக்கு உதவி செய்யவில்லை. மாறாக வாடிக்கையாளா்தான் வங்கிக்கு உதவி செய்கிறார்.’ இதை வங்கிகள் உணர வேண்டும்!

- தொடர்புக்கு: levinarumugam@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in