

‘என்னுடைய குழந்தைகள் தொழில்முனைவோர்களாக ஆக வேண்டும்’ என எத்தனை பெற்றோர்கள் சொல்லி நீங்கள் கேட்டிருக்கிறீர்கள்? ஏற்கெனவே குடும்பத்தினர் வணிகத்தில் ஈடுபட்டிருந்தால் மட்டுமே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வணிகத்தில் ஈடுபட ஊக்குவிக்கிறார்கள். இல்லையெனில், குழந்தைகளின் எதிர்காலத்தை பற்றி நினைக்கும் பெரும்பாலான பெற்றோர்கள் அவர்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும் தெரிவுகளையே தேர்வு செய்து குழந்தைகளின் மீது வலுக்கட்டாயமாகத் திணிக்கிறார்கள்.
ரிஸ்க் எடுப்பது பெரும்பாலானோருக்கு ஒவ்வாமையாக இருந்தாலும் சிலருக்கு அது `ரஸ்க்’ சாப்பிடுவது போல எளிதாக இருக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை. இந்திய அரசின் `மேக் இன் இண்டியா’
திட்டத்தின் முன்னெடுப்பினால் இந்த சூழல் மாறியிருக்கிறதா? மாறுமா? இந்தியப் பெற்றோர்களும் ஆசிரியர்களும் தங்களுடைய குழந்தைகளையும் மாணவர்களையும் தொழில் துறையில் பிரபலமானவர்களை முன்மாதிரியாகவும் தேசத்தைக் கட்டியெழுப்புபவர்களாகப் பார்க்கும்படி ஊக்குவிப்பார்களா? இந்த நோக்கத்தில் எழுதப்பட்டு சமீபத்தில் வெளிவந்திருக்கும் நூல் `தி ஃபஃபின் புக் ஆஃப் 100 எக்ஸ்ட்ராடினரி இண்டியன்ஸ்”. இதன் ஆசிரியர் வேதியியல் பொறியியலாளரும், இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வருபவருமான வெங்கடேஷ் வேதம்.
இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் பல துறைகளைச் சேர்ந்த நூறு பேரில் சிலர் தொழிலில் கீழ்நிலையி
லிருந்து ஆரம்பித்து அதை சாம்ராஜ்யங்களாக மாற்றியவர்கள், இன்னும் சிலர் தங்களது குடும்பத்
தினர் செய்து வந்த தொழிலை விரிவாக்கியவர்கள், வேறு சிலர் கார்ப்பரேட் உலகில் தங்களது திறமையினால் உச்சம் தொட்டவர்கள்.
கோவிட்-19க்கான தடுப்பூசிகளில் ஒன்றான `கோவாக்சினை’த் தயாரித்து இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகளவில் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து கோடிக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றிய சீரம் இன்ஸ்டிடியூட்டின் தலைமைச் செயல் அதிகாரியான ஆதர் பூனாவாலாவை நூலாசிரியர் இந்தப் புத்தகத்தில் கொண்டாடியிருக்கிறார்.
ஆரம்பத்தில் குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்தைத் தயாரித்துக் கோடிக்கணக்கான குழந்தைகளுக்கு போலியோ வராமல் தடுத்து ஆரோக்கியமான இந்தியா உருவாகக் காரணமாக இருந்தவரும் இவரே. பரிசோதனைக்கு உட்பட்டிருக்கும் மருந்தின் மீது பல கோடி ரூபாய் முதலீடு செய்த போது பலரும் பூனாவாலாவை `பைத்தியம்’ எனக் கூட நினைத்திருக்கக்கூடும். ஆனால் ஓர் இக்கட்டான சூழலில் பல கோடி ரூபாயை பணயம் வைத்து பெரும் உற்பத்தியில் ஈடுபட்டு தேவைப்படும் அளவுக்கு தடுப்பூசியைத் தயாரித்து, மானுடத்தை உய்வித்ததோடு பல கோடி ரூபாய் லாபமும் சம்பாதித்தார். இவருக்கு ரிஸ்க் எடுப்பது என்பது மரபணுவோடு வந்ததாகக் கூட இருக்கலாம்!
1994 ஆம் ஆண்டு பெப்சிகோ நிறுவனத்தில் சேர்ந்த இந்திரா நூயி உலகே வியக்கும் வண்ணம் அந்நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்று திறம்பட நடத்திய இந்தியப் பெண்மணி என்பதோடு உடலுக்கு கேடு விளைவிக்கும் `ஜங்க்’ உணவு மற்றும் குடிபானம் தயாரிக்கும் நிறுவனம் என்கிற தோற்றத்தை மாற்றியமைக்கும் வகையில் ஆரோக்கியமான பொருள்களையும் தயாரித்து நிறுவனத்தின் மீதிருந்த பிம்பத்தை மாற்றியமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அதோடு சில புதுமையான உத்திகள் மூலம் குடிபானம் தயாரிக்கத் தேவைப்படும் தண்ணீரின் அளவையும் குறைக்க வழிவகுத்தவர்.
இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் வேறுசில முன்மாதிரி தொழில் முனைவோர்கள் கல்வித்துறையின் ஸ்டார்ட்-அப்பான `பைஜூ’ வை ஆரம்பித்த ரவீந்திரன், இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறையின் தந்தை என அறியப்படும் ஃபகிர் சந்த் கோலி (F C Kholi), ஹிந்துஸ்தான் யூனிலீவரின் சர்ஃப் `லலிதா ஜி’ க்கு கடுமையான போட்டியளித்த `வாஷிங் பவுடர் நிர்மா’வின் கர்சன்பாய் படேல், ரிலையன்ஸ் பிதாமகன்களில் ஒருவரான முகேஷ் அம்பானி, ஹெச்எஸ்பிசி (HSBC) வங்கியின் தலைமைப் பொறுப்பிலிருந்த நயினா லால் கித்வாய், மைக்ரோசாஃப்டின் சத்யா நாதெள்ளா, “நொறுக்குத் தீனி” தயாரிக்கும் ஹல்திராமின் கங்கா பிஷன் அகர்வால், இந்தியாவின் `ஸ்பைஸ் கிங்’ என அறியப்பட்ட எம்டிஹெச் மசாலா தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த மஹாசே தரம்பால் குலாட்டி, கூகுளின் சுந்தர் பிச்சை மற்றும் பிரபல இந்திய செஃபும், ஹோட்டல் உரிமையாளரும், சமையல் கலை சம்பந்தமான புத்தகங்களை எழுதிவருபவருமான விகாஸ் கன்னா ஆகியோர் பற்றி பல சுவாரசியமான தகவல்களை நூலாசிரியர் கொடுத்திருப்பது வாசிப்பவர்களின் ஆவலைத் தூண்டக்கூடியதாக இருக்கிறது.
முதன் முறையாக ஒரு வெளிநாட்டு வங்கிக்கு இந்திய அளவில் தலைமைப் பொறுப்பை ஏற்ற முதல் பெண்மணி என்ற புகழுக்கு உரியவர் நயினா லால் கித்வாய். அதோடு FICCI என்கிற தொழில் கூட்டமைப்பினுடைய தலைவர் பதவி வகித்த முதலாவது பெண்மணி என்ற பெருமைக்குரியவர். இவர் அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படிக்க விருப்பம் தெரிவித்தபோது இவரது உறவினர்கள் எல்லோரும் ``பணத்தை வீணடிக்காமல் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை அமைத்துக் கொள்’’ என சொல்லியிருக்கிறார்கள். ஆனால் இவர் அதையெல்லாம் உதாசீனம் செய்துவிட்டு ``தன் வழி தனி வழி” என தனக்கென முத்திரை பதித்தார்.
1919 ஆம் ஆண்டு சியால்கோட்டில் (இது இப்போது பாகிஸ்தானில் இருக்கிறது) சன்னிலால் குலாட்டியால் ஆரம்பிக்கப்பட்ட மசாலா நிறுவனம், 1947 ஆம் ஆண்டு இந்தியப் பிரிவினையால் பாதிப்புக்குள்ளானது. அப்போது இவரது மகன் தரம்பால் குலாட்டி, டெல்லிக்குப் புலம் பெயர்ந்து `டோங்காவாலா’ வாக தனது வாழ்க்கையை ஆரம்பித்து அதன் பின் ஒரு சிறிய கடையை எம்டிஹெச் (MDH – Mahashian Di Hatti) என்கிற பெயரில் ஆரம்பித்து தனது தந்தையார் செய்து வந்த மசாலா வணிகத்தைச் செய்ய ஆரம்பித்து `இந்தியாவின் ஸ்பைஸ் கிங்’ என அழைக்கப்படும் அளவுக்குத் தனது கடின உழைப்பால் உயர்ந்தார்.
2019 ஆம் ஆண்டு இவருக்கு பத்மபூஷன் விருது வழங்கி இந்திய அரசு கெளரவித்தது. இன்றைக்கு இந் நிறுவனத்தின் அறக்கட்டளை மூலம் 20 பள்ளிக்கூடங்களையும், பொதுநல மருத்துவமனை, கண் மருத்துவமனை ஆகியவற்றை நடத்தி வருகிறது.
இந்த நூலில் வணிகத்துறை சார்ந்தவர்கள் மட்டுமல்லாமல் மருத்துவர்கள், விஞ்ஞானிகள், ஓவியர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், விளையாட்டு வீரர்கள், ஆன்மீகவாதிகள், சமூக ஆர்வலர்கள் என பல துறைச் சார்ந்தவர்களை வளரும் தலைமுறைக்கு முன்மாதிரியாகக் காட்டியிருக்கிறார் நூலாசிரியர். இதன் மூலம் ஆர்வமும், கடின உழைப்புக்குச் சளைக்காதவர்களும், குறிப்பாக வளரும் தலைமுறையினர், உத்வேகம் பெற்று பழைய பிரச்சினைகளுக்கு புதிய தீர்வுகளைக் கண்டுபிடிப்பதோடு, வேலைகளையும் உருவாக்கி லாபமும் சம்பாதிக்க முடியும் என்பதை ஆதாரப்பூர்வமாக எளிமையான மொழியில் எழுதியிருக்கிறார்.
தொடர்புக்கு: sidvigh@gmail.com
பதிப்பகம்:
பெங்குவின்
இண்டியா ஃபஃபின்
(India Puffin)
ஆசிரியர்:
வெங்கடேஷ் வேதம்
பக்கம்: 352
விலை: ரூ.299