கூகுள் ஆண்டவரும் குபேரக் குழாயும்!

கூகுள் ஆண்டவரும் குபேரக் குழாயும்!
Updated on
2 min read

பெருந்தொற்று காலத்தில் பல தொழில்கள் முடங்கியதையும் லட்சக்கணக்கானப் பணியாளர்கள் வேலை இழந்ததையும் அனைவரும் அறிந்திருக்கக்கூடும். இந்த காலகட்டத்தில் யூடியூபர்களின் எண்ணிக்கையும், யூடியூப் சேனல்களின் எண்ணிக்கையும் அபரிமிதமாக வளர்ச்சி அடைந்திருப்பதையும் நீங்கள் கண்டிருப்பீர்கள். சிறியவர் முதல் பெரியவர் வரை ஆன்மிகம், சமையல், அரசியல், விமர்சனம், வீடியோ கேமிங் ஏதோ என ஒரு வகையில் யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து வருமானம் பார்த்து வருகின்றனர்.

உலக அளவில் அதிக யூடியூப் பயனாளர்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. இந்தியாவில் 46 கோடி மக்கள் யூடியூப் பயன்படுத்துகின்றனர். கரோனா காலகட்டத்தில் இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவிலும் புதிதாக பலர் யூடியூப் சேனல்கள் ஆரம்பித்து வருவாய் ஈட்டிவருகின்றனர். 2021-ல் யூடியூபின் வருவாய் 30.4 சதவீதம் அதிகரித்து 28.8 பில்லியன் டாலராக (ரூ.2.17லட்சம் கோடி) உள்ளது.

உலக அளவில் 260 கோடி பேர் யூடியூப் பயன்படுத்துகின்றனர். மொத்தமாக யூடியூபில் 3.7 கோடி சேனல்கள் உள்ளன. யூடியூபில் தினமும் 100 கோடி வீடியோக்கள் பார்க்கப்படுகின்றன. 1 மணி நேரத்துக்கு 500 வீடியோக்கள் பதிவேற்றமாகின்றன.

அந்த வகையில் யூடியூப் என்பது மிகப் பெருளாதார வாய்ப்பைக் கொண்ட தளமாக உள்ளது. சமீபத்தில் வெளியான ஆக்ஸ்போர்டு எகானமிக்ஸ் அறிக்கை இந்தியப் பொருளாதாரத்தில் யூடியூப்பின் பங்களிப்பு என்ன, தொழில்முனைவோர்களின் மத்தியில் எத்தகைய மாற்றத்தை அது உருவாக்கி இருக்கிறது என்பது தொடர்பான விவரங்களை அளிக்கிறது.

இந்தியாவில் யூடிப் சேனல்களின் வளர்ச்சியானது 2020-ம் ஆண்டு ஜிடிபியில் சுமார் ரூ.6,800 கோடி அளவில் பங்களித்திருப்பதாகவும் 6.8 லட்சம் பேருக்கு முழுநேர வேலைவாய்ப்பு அளித்திருப்பதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

இந்தியாவில் ஏறக்குறைய 40,000 யூடியூப் சேனல்கள் ஒரு லட்சத்துக்கு மேலான சப்ஸ்கிரைபர்களையும், 4000 யூடியூப் சேனல்கள் 10 லட்சத்துக்கு மேலான சப்ஸ்கிரைபர்களையும் கொண்டிருக்கிறது. இந்த வளர்ச்சி முந்தைய ஆண்டை விட 50 சதவீதம் அதிகம் என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

தற்போது தொலைக்காட்சி சேனல்களுக்கான முக்கியத்துவம் குறைந்துவிட்டது. யூடியூப் சேனல்கள் தான்
எங்கும் நிறைந்திருக்கின்றன. பல இந்திய யூடியூப் சேனல்களுக்கு உலகளாவிய அளவில் சப்ஸ்கிரைபர்கள் உள்ளன.

முன்னணி பிராண்டுகள், விளம்பரத்துக்காக யூடியூப் சேனல்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுவருகின்றன. யூடியூப் சேனல்கள் பொருளாதார ரீதியாக பல்வேறு சாத்தியங்களை உருவாக்கித் தந்துள்ளது. ஏதேனும் ஒரு துறையில் அனுபவம் கொண்டவர்கள் அந்தத் தகுதியை பணமாக மாற்றுவதற்கான வாய்ப்பை யூடியூப் ஏற்படுத்தித் தந்துள்ளது. வீட்டுப் பெண்கள், தங்கள் சமையல் திறனை யூடியூப் மூலமாக பணமாக்கிவருகின்றனர் வீடியோ கேம் விளையாடுவதை யூடியூப்பில் பதிவேற்றம் செய்து பல இளைஞர்கள் லட்சக் கணக்கில் சம்பாதித்து வருகின்றனர்.

தொழில்முனைவோர்கள் தங்கள் வணிகத்துக்கான தளமாக யூடியூப் சேனல்களை பயன்படுத்துகின்றனர். அதன் மூலம் அவர்கள் பல்வேறு தொழிற்வாய்ப்புகளைப் பெறுகின்றனர். யூடியூபில் செயல்படுவதால் அவர்களால் அதிக எண்ணிக்கையில் வாடிக்கையாளர்களை பெறமுடிகிறது என்ற அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. இதில் மற்றொரு கவனிக்கத்தக்க அம்சம், நிறுவன ஊழியர்கள் யூடியூப் மூலம் துறைசார்ந்து புதிய விசயங்களை கற்றுக்கொள்வதால் நிறுவனமும் மேம்படுகிறது. பலர் யூடியூப் மூலம் மேக்கப், கோடிங், டிசைன் உள்ளிட்டவற்றைக் கற்று நிறுவனங்களில் வேலை வாய்ப்பும் பெறுகின்றனர்.

யூடியூப் கற்றலை ஜனநாயகப்படுத்தியுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் யூடியூப்பை பாடங்கள் கற்க பயன்படுத்துகின்றனர். நடனம், உடற்பயிற்சி, ஓவியம், கார் ஓட்டுதல், வீடு கட்டுதல் முதல் சைக்கிளுக்குப் பஞ்சர் ஒட்டுவது வரையில் அனைத்தையும் யூடியூபில் கற்றுக்கொள்ளும் வகையில் அறிவுக் களஞ்சிய
மாக அது உள்ளது. அந்த வகையில் யூடியூப் பொருளாதாரத் தளத்தில் மட்டுமல்ல, அறிவுத் தளத்திலும் புதிய சாத்தியங்களைத் திறந்துள்ளது.

அனைத்து தகவல்களை அள்ளித்தரும்,வழிகாட்டும் கூகுள் தளத்தை கூகுள் ஆண்டவர் என்கின்றனர் வேடிக்கையாக. அப்படியெனில் அதன் அங்கமான யூடியூப் நிறுவனத்தை காசு கொட்டும் குபேரக் குழாய் என்று சொல்லலாம் போல.!

தொடர்புக்கு: (sidvigh@gmail.com)

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in