

இப்போது பெரும்பாலான தொழில்நிறுவனங்களை கவலை கவ்விக் கொண்டுள்ளது. அவர்களை அலற வைக்கும் ஒரே சொல் - கிரேட் ரெசிக்னேஷன் (Great Resignation), அதாவது தமிழில் பெரு ராஜிநாமா. உலகை அச்சுறுத்தும் கரோனா காலகட்டத்தில் உருவானதாலும், வரலாறு காணாத அளவில் மிக அதிக எண்ணிக்கையில் ஊழியர்கள் ராஜிநாமா செய்துகொண்டிருப்பதாலும், இதற்கு ‘பெரு ராஜிநாமா' என்று பெயர் சூட்டியுள்ளனர்.
இந்த வார்த்தையை உருவாக்கியவர் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாண பேராசிரியர் அந்தோனி குலோட்ஸ். 2021 தொடக்கத்தில் புழக்கத்துக்கு வந்தது இந்த சொல். கடந்த ஆண்டில் மட்டும் அமெரிக்காவில் ராஜிநாமா செய்தவர்களின் எண்ணிக்கை 4.70 கோடி. இது நடப்பு ஆண்டிலும் தொடரும் என்கிறார் குலோட்ஸ்.
பொதுவாக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில்தான் ஊழியர்கள் ராஜிநாமா செய்வது வழக்கமான நடைமுறை. இதனாலேயே ஒவ்வொரு காலாண்டு நிதி நிலை அறிக்கையின்போது நிறுவனத்திலிருந்து ஊழியர்கள் வெளியேறும் சதவீதத்தை (attrition) நிறுவனங்கள் வெளியிடுவது வழக்கம். கரோனா பெருந்தொற்று காலத்தில் நிறுவனங்கள் கொஞ்சமும் தயவு தாட்சண்யமின்றி ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பின. இதனால் மனமுடைந்து ஆங்காங்கே சில தற்கொலை சம்பவங்களும் நிகழ்ந்தன. இருக்கும் ஊழியர்களுக்கு சம்பளக் குறைப்பு நிகழ்த்தி வீட்டிலிருந்து பணிபுரியும் நடைமுறையை செயல்படுத்தின. நிலைமை படிப்படியாக சீரடைந்த பிறகும் வீட்டிலிருந்து ஊழியர்கள் பணிபுரிவதால் நிறுவனங்களுக்கு நிர்வாக செலவு குறைந்தது.
இதைநன்குஉணர்ந்த நிறுவனங்கள் இதே நடை முறையை தொடரவும் செய்தன. பல நிறுவனங்கள் பெரிய அலுவலகங்களை காலி செய்துவிட்டு, வெறுமனே கருத்தரங்கு அறை மற்றும் கம்ப்யூட்டர் சர்வரை பராமரிக்க ஒரு அறை ஆகியவற்றைக் கொண்ட சிறிய அலுவலகங்களுக்கு மாறிவிட்டன. கரோனா பெருந் தொற்று காலத்தில் பெரிதும் பாதிக்கபடாத துறையாக தகவல் தொழில்நுட்பத் துறைதான் விளங்கியது.
காலச் சக்கரம் எப்போதும் ஒரு தரப்புக்கு சாதகமாக சுழலாது என்பதைப் போல இப்போது ஊழியர்கள் கொத்து கொத்தாக தங்கள் பதவிகளை ராஜிநாமா செய்துவருகின்றனர். அதிலும் குறிப்பாக நிறுவனங்களின் பிரதான முதுகெலும்பாகத் திகழும் நடுத்தரப் பிரிவு அலுவலர்கள் வெளியேற்றம் நிறுவனங்களை கலக்கமடையச் செய்துள்ளது.
ஊழியர்கள் ராஜிநாமா என்பது ஒரு குறிப்பிட்ட துறையில் மட்டும்தான் அதாவது தகவல் தொழில்நுட்பத் துறையில் மட்டுமே நிகழ்வதாக நினைத்துவிட வேண்டாம். அனைத்து துறைகளிலுமே இது நிகழ்ந்து வருகிறது. ஊழியர்களின் ராஜிநாமா என்பது 3 அல்லது 6 மாதங்களில் சரியாகிவிடும் என்று நிறுவன தலைவர்கள் நினைத்தால் அது தவறு என்பதைத்தான் தற்போதைய புள்ளி விவரங்கள் உணர்த்துகின்றன. அடுத்த 3 முதல் 6 மாதங்களில் 40 சதவீத பணியாளர்கள் தங்களது வேலையை ராஜிநாமா செய்யப் போவதாக தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் மட்டுமே இந்த கணிப்பு நடத்தப்படவில்லை. ஆஸ்திரேலியா, கனடா, சிங்கப்பூர், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளிலும் இதுதான் இப்போதைய நிலவரம். மக்கள் தொகை, வேலையில்லாத் திண்டாட்டம் அதிகம் உள்ள சீனா, இந்தியாவிலும் இதுபோன்ற பாதிப்பு இருக்கத்தான் செய்கிறது. இவ்விரு நாடுகளிலும் புதிய வேலைகளை நோக்கி ஊழியர்கள் நகரத் தொடங்கியுள்ளனர்.
இதில் மற்றொரு முக்கிய அம்சம் என்னவெனில் வேறு வேலை கிடைத்த பிறகுதான் வேலையை ராஜிநாமா செய்கின்றனர் என்று நினைக்க வேண்டாம். 36 சதவீதம் பேர் எந்த வேலையிலும் சேராமலேயே தாங்கள் பணிபுரிந்த நிறுவனத்திலிருந்து வெளியேறியுள்ளது நிறுவனங்களை பீதிக்குள்ளாக்கியுள்ளது. ஊழியர்கள் வெளியேறுவதற்கான காரணத்தை தலைமைப்பொறுப்பில் உள்ளவர்கள் கவனிக்க வேண்டும். எதற்காக வெளியேறுகிறீர்கள் என கேட்டபோது பெரும்பாலான ஊழியர்களின் பதில், தங்களுக்கு போதிய அங்கீகாரம் இல்லை, வேலைக்கும் - வாழ்க்கைக்கும் இடையே சுமுக உறவைப் பேண வேலை உதவவில்லை என்று
குறிப்பிடுகின்றனர். வீட்டிலிருந்து பணி புரியும் சூழலில் ஊழியர்கள் பதவியை ராஜிநாமா செய்வதற்கான காரணத்தை அலசி ஆராய வேண்டிய நிர்பந்தத்தில் நிறுவனங்கள் உள்ளன. அலுவலகத்தில் பணி நேரம் வரையறுக்கப்பட்டுள்ளது.
ஆனால் வீட்டிலிருந்து பணி புரியும்போது 24 மணி நேரமும் பணி புரிவதைப் போன்ற நிலையிலிருப்பதாக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். அதேபோல் வீட்டிலிருந்தபடி வேலை செய்ய விரும்பும் ஊழியர்கள், அலுவலகத்துக்கு வந்து வேலை பார்க்க நிறுவனங்கள் சொல்லும்போது ராஜிநாமாவை நோக்கி நகர்கின்றனர். ஏனென்றால், வீட்டிலிருந்து பணிபுரிவதால் அலுவலகம் செல்வதற்கான பயண அலைச்சல் குறைந்துள்ளது. குடும்பத்துடன் நேரம் செலவிடுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. இதனால், மீண்டும் அலுவகத்துக்குச் சென்று வேலை பார்ப்பதை பல ஊழியர்கள் விரும்புவதில்லை.
ஒப்பந்த பணி நிலை வந்த பிறகு நிறுவனம் - தொழிலாளர் இடையிலான பந்தம் என்பது மறைந்துவிட்டது. ஒரே நிறுவனத்தில் பணியைத் தொடங்கி அங்கேயே ஓய்வு பெறுவது என்ற முந்தைய சித்தாந்தம் இப்போது காலாவதியாகி விட்டது. திறமைக்கு தகுந்த வேலை அளிப்பதாக நிறுவனங்கள் கருதுகின்றன. அந்த திறமையை அங்கீகரிக்கத் தவறும்போது பெரு ராஜிநாமாக்கள் தொடரத்தான் செய்யும். அது கரோனாவுக்குப் பிறகும் என்பதுதான் நிதர்சனம்.