Published : 25 Apr 2016 11:12 AM
Last Updated : 25 Apr 2016 11:12 AM

உன்னால் முடியும்: நிலையான வருமானம் தந்த பெர்மாகல்சர்

சேலத்தைச் சேர்ந்தவர் அல்லி. தையல் கலைஞராக பரபரப்பாக இயங்கியவர், தற்போது பெர்மாகல்சர் என்கிற நிலையான விவசாய முறையை பரவலாக்கும் முயற்சிகள் இறங்கியுள்ளார். குறிப்பாக கடந்த மூன்றாண்டுகளாக பெர்மாகல்சர் தோட்டத்தை அமைத்துக் கொடுக்கும் ஆரண்யா ஆர்கானிக் பார்மிங் என்கிற நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இவரது தொழில் அனுபவம் இந்த வாரம் இடம் பெறுகிறது.

விவசாய குடும்ப பின்னணி என்றாலும் திருமணத்துக்கு பிறகு விவசாயத்தை விட்டு அந்நியமாகவே இருந்தேன். ஆனாலும் ஏதாவது உருப்படியாக செய்ய வேண்டும் என்கிற எண்ணம் இருந்தது. இதனால் தையல் தொழிலைக் கற்றுக் கொண்டு முதலில் சிறிய அளவில் ஒரு தையலகம் தொடங்கினேன். அடுத்தது இரண்டு டைலர்களுடன் கடையை விரிவாக்கம் செய்து இப்போது பத்து பேருக்கு மேல் வேலைவாய்ப்பு வழங்கி வருகிறேன். ஆனால் இப்போது எனது மகளிடம் இந்த வேலைகளை விட்டு விட்டு நான் முழு நேரமாக விவசாய துறையில் இறங்கிவிட்டேன்.

ஒருமுறை எங்களது விவசாய நிலத்தில் எனது மகன் விளையாடிக்கொண்டிருந்தபோது, அவனது காயத்தில் அங்கு சிந்திக்கிடந்த பூச்சிகொல்லி மருந்து பட்டு விட்டது. இதனால் அவனது உடல்நலம் பாதிக்கப்பட்டு இரண்டு மூன்று நாட்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அந்த அனுபவத்திலிருந்து பூச்சிக் கொல்லி மருந்து அடித்த பயிர்கள் என்றாலே பயம் ஏற்பட்டு விட்டது. அதற்கு பிறகு எங்களது தேவைக்கு ஒரு ஏக்கர் நிலத்தை ஒதுக்கிக்கொண்டு அதில் பூச்சிக் கொல்லி மருந்துகள் இல்லாத விவசாயத்தை மேற்கொண்டோம். இயற்கை முறையிலான விவசாய பணிகளிலும் கவனம் செலுத்துகிறேன் என்றதும் எனது வீட்டினரும் பக்கபலமாக இருந்தனர்.

தையல் பணிகளைப் பார்த்துக் கொண்டே வீட்டுத் தோட்டம் அமைத்து கொடுக்கும் முயற்சிகளிலும் இறங்கினேன். சேலம் மாநகரில் 350க்கும் மேற்பட்ட வீடுகளில் நான் அமைத்து கொடுத்த வீட்டுத்தோட்டம் உள்ளது. இதற்கு பிறகு, இயற்கை விவசாயத்தில் வேறு முயற்சிகளில் ஈடுபடலாம் என்று யோசித்தபோதுதான் பெர்மாகல்சர் விவசாயத்தை முயற்சித்து பார்க்கலாம் என்று இறங்கினேன்.

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அய்யாவின் சீடர் குமார் அம்பாயிரம் உதவியோடு எங்களது அரை ஏக்கர் நிலத்தில் இந்த வேலைகளில் இறங்கினோம். சாதாரணமாக இயற்கை விவசாயத்தில் கிடைக்கும் விளைச்சலை விட இந்த பெர்மாகல்சர் முறையில் ஐந்து மடங்கு கூடுதல் மகசூல் எடுக்க முடியும். இதற்கு நிலத்தை சரியாக மதிப்பிட்டு தொடர்ச்சியான சில அடிப்படை வேலைகளை செய்து கொள்ள வேண்டும். நீர், காற்று, சூரிய ஒளியை சரியான முறையில் பயன்படுத்தும் விவசாய முறை இது. இந்த முறையில் எங்களது நிலத்தை பண்படுத்தி நிலையான விளைச்சலை கொண்டு வர இரண்டரை ஆண்டுகள் ஆனது. இப்போது எந்த உரங்களும் இல்லாமல் விளைந்த காய்கள், கீரைகள் மற்றும் சில பழ வகைகள் எங்களது நிலத்தில் விளைகிறது.

இந்த விவசாய முறையை கேள்விப் பட்ட சென்னை போரூரைச் சேர்ந்த பிரதிமா கணேஷ்ராம் அவர்களது 5,000 சதுர அடி நிலத்தில் இதை அமைத்து தர கோரினார். அந்த வாய்ப்புக்கு பிறகு மேலும் பல இடங்களிலிருந்தும் அழைப்பு வரத் தொடங்கியது. இப்போது ஆறு புராஜக்ட்கள் முடித்துள்ளேன். இதன் மூலம் நிரந்தரமாக பத்து நபர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கியுள்ளேன். தேவைக்கு ஏற்ப கூடுதல் தொழிலாளர்களை அழைத்துக் கொள்கிறேன். இப்போது இதன் அடுத்த கட்ட வளர்ச்சி என்னவென்றால் வீடுகளில் அழகு தோட்டங்களுக்கு பதில் இந்த விவசாயத்தை மேற்கொள்ளலாம் என்பதை மக்களிடத்தில் கொண்டு செல்கிறேன்.

சேலத்தில் எங்களது வீட்டுக்கு அருகில் இருக்கும் கட்டுமான நிறுவனம் அவர்களது அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் பெர்மாகல்ச்சரை அமைக்க இடம் ஒதுக்கி கொடுத்துள்ளது. வீடு வாங்கும் மக்கள் இங்கு இயற்கையாக விளையும் கீரைகள் காய்களை பயன்படுத்தலாம் என அறிவித்துள்ளனர். தவிர இந்த முறையில் 5,000 சதுர அடியில் மாதம் 30 ஆயிரம் வரை வருமானம் கிடைக்கும் என்பதும் எங்களது அனுபவத்தில் நாங்கள் கண்டது. இதை தொழிலாக மேற்கொள்ள தொடங்கினால் வீட்டுத் தேவைகள், தொழில்வாய்ப்பு சுற்றுச் சூழல் என பல முனைகளிலும் நல்லது. இதற்கு பலரும் முன்வர வேண்டும் என்றார். இந்த அமைதி புரட்சிக்கு எல்லோரும் ஆதரவளிக்கலாம்.

maheswaran.p@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x