

பிரான்ஸைச் சேர்ந்த ரெனால்ட் நிறுவனத்தின் தயாரிப்பான க்விட் கார்களுக்கு மிகப் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த கார்கள் அதிக அளவில் விற்பனையாவதைத் தொடர்ந்து தங்களது உத்திகளை மாருதி மற்றும் ஹூண்டாய் நிறுவனங்கள் மாற்றிக் கொள்ளத் திட்டமிட்டுள்ளன.
தொடக்க நிலை (Entry Level) கார்களில் மாற்றங்களைச் செய்து புதிய ரகக் கார்களை வெளியிட மாருதி சுஸுகி நிறுவனமும், ஹூண்டாய் நிறுவனமும் திட்டமிட்டுள்ளன.
ஹூண்டாய் நிறுவனம் புதிதாக கார் வடிவமைக்கும் பணியைத் தொடங்கியுள்ளது. இதற்கு ஏஹெச் என பெயரிட்டுள்ளது. (சந்தைக்கு வரும்போது முழுமையான பெயர் சூட்டப்படும். இப்போது சங்கேதமாக இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது). புதிய கார் மூலம் ஆண்டுக்கு ஒரு லட்சம் கார்களை விற்பனை செய்யலாம் என ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது. மைக்ரோ எஸ்யுவி என்ற பெயரில் கேயுவி 100 என்ற பெயரிலான காரை மஹிந்திரா அண்ட் மஹிந்திரா அறிமுகப்படுத்தியுள்ளது. தொடக்க நிலை எஸ்யுவி-க்களில் ஒன்றான இதன் விலை ரூ.4.5 லட்சமாக உள்ளது.
ஆனால் க்விட் கார் அறிமுகமாகி ஓராண்டுக்குள்ளாக ஒரு லட்சம் கார்கள் விற்பனையாகியுள்ளன. அதேசமயம் கேயுவி 100 காருக்கு 37 ஆயிரம் பேர் மட்டுமே முன் பதிவு செய்திருந்தனர். இதற்குக் காரணம் க்விட் காரின் ஆரம்ப விலை ரூ.2.6 லட்சமாக இருந்ததே.
க்விட் வெற்றி குறித்து கருத்து தெரிவித்த மாருதி சுஸுகி நிர்வாக இயக்குநர் கெனிசி அயுகாவா, அந்நிறுவனத்துக்கு வாழ்த்துகளைத் தெரிவிப்பதாகவும், இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் புதிய தயாரிப்புகளை தங்கள் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார். இந்தப் பிரிவில் எத்தகைய காரைத் தயாரித்து அளிப்பது என்று விரைவில் முடிவு செய்வோம் என்று தெரிவித்துள்ளார்.
ஆல்டோ காரின் வடிவமைப்பை மாற்றியமைக்க மாருதி திட்டமிட்டுள்ளது. இதனிடையே இக்னிஸ் காரை சந்தையில் கொண்டு வருவதில் மாருதி சுஸுகி தீவிரமாக உள்ளது. இதன் விலை ரூ.6 லட்சம் என்ற அளவில் இருக்கும். இந்த விலைப் பிரிவானது கார் சந்தையில் 35 முதல் 40 சதவீத இடத்தைப் பிடித்துள்ளதால் இக்னிஸ் சிறந்த வரவேற்பைப் பெறும் என மாருதி சுஸுகி எதிர்பார்க்கிறது. இதனிடையே நிசான் நிறுவனம் ரெடி கோ என்ற காரை அறிமுகப்படுத்த உள்ளது. இது ஜூன் மாதம் விற்பனைக்கு வருகிறது.
புதிய வரவுகள் சந்தையை ஆக்கிரமித்தாலும் ஆண்டுக்கு 2 புதிய அறிமுகம் மூலம் தங்களது விற்பனையை அதிகரிக்க ஹூண்டாய் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.