

இந்தியாவில் கார் விற்பனையில் புதிய மாற்றம் நிகழ்ந்துவருகிறது. புதிய கார்களை வாங்குவதை விடவும் பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்க மக்கள் ஆர்வம் காட்டிவருகின்றனர். 2021-ம் ஆண்டில் மட்டும் 45 லட்சத்துக்கு மேல் பயன்படுத்தப்பட்ட கார்கள் இந்தியாவில் விற்பனையாகியுள்ளன. இந்த எண்ணிக்கை 2025-ம் ஆண்டில் 70 லட்சமாக உயரும் என்று கணிப்புகள் கூறுகின்றன.
அந்த வகையில் இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட கார்கள் விற்றல் - வாங்கல் சந்தை மிகப் பெரிய அளவில் வளர்ந்துவருகிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 10 புதிய கார்களுக்கு 12 பயன்படுத்தப்பட்ட கார்கள் விற்பனையாகுமெனில், தற்போது 10 புதிய கார்களுக்கு 22 பயன்படுத்தப்பட்ட கார்கள் விற்பனையாகின்றன. அதாவது புதிய கார் மற்றும் பயன்படுத்தப்பட்ட காருக்கிடையிலான விகிதாச்சாரம் 1:2.2 என்பதாக உள்ளது.
ஏன் இந்த மாற்றம்?
கார்ஸ்24 (Cars24), ஸ்பின்னி (Spinny), கார்டேகோ (CarDekho), ட்ரூம் (Droom) ஆகிய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இந்த மாற்றத்துக்கு முக்கிய காரணிகளாக உள்ளன.
இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட வாகன விற்பனையில் 80 சதவீதம் அமைப்புசாரா முறையில் நடந்து வருகிறது. பொதுவாக, ஒவ்வொரு நகரங்களிலும் பயன்படுத்தப்பட்ட வாகனங்களை விற்க, வாங்குவதற்கென்று தனியே கடைகள் உண்டு. வியாபாரிகள், பல்வேறு பகுதியிலிருந்து பயன்படுத்தப்பட்ட வாகனங்களைப் பெற்று விற்பனைக்காக வைத்திருப்பார்கள். நாம் அவர்களிடம் சென்று நம்முடைய பழைய வாகனங்களை விற்கலாம் அல்லது அவர்களிடமுள்ள பழைய வாகனங்களை வாங்கி வரலாம்.
இந்தக் கட்டமைப்பில் என்ன சிக்கல் என்றால், பயன்படுத்தப்பட்ட வாகனத்துக்கு அந்த வியாபாரிகள் சொல்லும் விலை. நாம் நம்முடைய வாகனத்தை அவர்களிடம் விற்கச் சென்றால் அடிமாட்டு விலைக்கு வாங்குவார்கள். அதுவே அதே வாகனத்தை நாம் அவர்களிடமிருந்து வாங்கச் சென்றால், 50%-60% வரையில் அதன் விலையை ஏற்றிக் கூறுவார்கள்.
இந்தக் கட்டமைப்பில் உள்ள சிக்கலைத்தான் கார்ஸ்24, ஸ்பின்னி, கார்டேகோ, ட்ரூம் உள்ளிட்ட ஸ்டாட்அப் நிறுவனங்கள் தீர்த்து வைக்கின்றன. இந்த நிறுவனங்கள் இணையதளத்தின் வழியே பயன்படுத்தப்பட வாகனங்களின் விற்றல், வாங்கலை சாத்தியப்படுத்துகிறது. வாகனத்தை விற்பவர் அவர் எதிர்பார்க்கும் விலையை நிர்ணயம் செய்துகொள்ளலாம். அந்த விலை ஒருவருக்கு ஏற்றதாக தோன்றினால் அவர் வாகனத்தை வாங்கிக்கொள்ளலாம். இடையில் எந்த இடைத்தரகரும் கிடையாது. இதில் இருவருக்கும் லாபம். வாகனத்தை விற்க நினைப்பவர் வியாபாரிகளிடம் சென்று விற்பதை விட கூடுதலான தொகைக்கு இத்தளங்கள் மூலம் விற்க முடியும். வாகனம் வாங்க நினைப்பவர் வியாபாரிகளிடம் சென்று வாங்குவதைவிட குறைவான விலைக்கு வாங்க முடியும். அந்த வகையில், இந்த தளங்கள் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் சந்தையில் புதிய வாய்ப்புகளை திறந்துள்ளன.
இந்நிறுவனங்களின் சந்தை மதிப்பே, பயன்படுத்தப்பட்ட வாகனச் சந்தையின் வளர்ச்சியை நமக்குக் காட்டுகிறது. கார்ஸ் 24 - 3.3 பில்லியன் டாலர், ஸ்பின்னி - 1.8 பில்லியன் டாலர், ட்ரூம் 1.2 பில்லியன் டாலர், கார்டேகோ 1.2 பில்லியன் டாலர் மதிப்பைக் கொண்டு யுனிகார்ன் பட்டியலில் உள்ளன.
மக்களின் மன மாற்றம்
பயன்படுத்தப்பட்ட கார்கள் விற்பனை அதிகரிப்பதற்கு மக்களிடையே ஏற்பட்டிருக்கும் மனமாற்றமும் ஒரு முக்கிய காரணம் ஆகும். கரோனாவுக்குப் பிறகு பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்துவதில் மக்களுக்கு ஒரு அச்ச உணர்வு ஏற்பட்டிருப்பதை பார்க்க முடிகிறது. பலரும் சொந்தமாக வாகனம் வைத்திருக்கவே விரும்புகின்றனர். ஆனால், அதற்காக புதிய வாகனம் வாங்க அவர்கள் விரும்புவதில்லை.
தற்போது பிஎஸ் 6 வாகனங்களே சந்தையில் உள்ளன. பிஎஸ் 4 அடிப்படையில் வெளியான வாகனத்தைவிட பிஎஸ்6-ல் வெளியாகும் வாகனத்தின் விலை சாலை வரி, ஜிஎஸ்டி என பல வரிகளை உள்ளடக்கி 30 சதவீதம் அதிகமாக உள்ளது. இதனால், மக்கள் பயன்படுத்தப்பட்ட காரை நோக்கி நகர்கின்றனர்.
இதை நாம் பணம் சார்ந்த பிரச்னையாக, அதாவது, புதிய கார் வாங்க பணமில்லை, அதனால், பயன்படுத்தப்பட்ட கார் வாங்குகிறார்கள் என்று குறுக்கிவிட முடியாது. மக்கள் புதிய கார்களில் பணத்தை செலவிடுதை தேவையற்ற ஒன்றாக கருதுகின்றனர். குறிப்பாக இளைய தலைமுறையினர். இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்குபவர்களில் 80 சதவீதம் இளம் தலைமுறையினர் என்பது கவனிக்கத்தக்க விஷயம். முன்பு ஒரு புதிய காரை 6 ஆண்டுகள் பயன்படுத்திய பிறகு அதை விற்பார்கள் என்றால், இப்போது 3 ஆண்டுகள் பயன்படுத்தியதுமே விற்றுவிடுகிறார்கள். இதனால், நல்ல நிலையில் உள்ள பயன்படுத்தப்பட்டக் கார்களை வாங்கிவிட முடிகிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் வாகனங்கள் மட்டுமல்ல, நாற்காலி, மேஜை, வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ் என பயன்படுத்தப்பட்ட வீட்டு உபயோகப் பொருட்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது. ஓஎல்எக்ஸ், குயிக்கர் போன்ற தளங்கள் அதை சாத்தியப்படுத்தியுள்ளன.
ஒட்டுமொத்த அளவில், 2010-க்குப் பிறகு இந்தியாவில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொழில் சார்ந்து மட்டுமல்ல, மக்களின் வாழ்வியல் நடைமுறை சார்ந்தும் புதிய சாத்தியங்களையும் புதிய வாய்ப்புகளைம் திறந்துள்ளன!
தொடர்புக்கு: riyas.ma@hindutamil.co.in