

மாருதி என்றாலே கார்கள்தான் என்றிருந்த நிலையை மாற்றி பிற வாகனங்களைத் தயாரிக்க அந்நிறுவனம் முயன்று வருகிறது. முதல் கட்டமாக இலகு ரக வர்த்தக வாகனங்களை (எல்சிவி) தயாரித்து சந்தைப்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
``சூப்பர் கேரி’’ என்றும் ``ஒய்9டி’’ என்றும் இந்த சரக்கு வாகனத்துக்கு பெயர் சூட்டி வெள்ளோட்டம் விட்டுள்ளது மாருதி. 2014-15-ம் நிதி ஆண்டிலேயே இந்த வாகனங்களை அறிமுகப்படுத்த இந்நிறுவனம் திட்டமிட்டு நடப்பு நிதி ஆண்டில் இவற்றை சந்தைப்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. மாருதியின் 30 ஆண்டுக்கால வரலாற்றில் ஒரு தயாரிப்பு சந்தைக்கு வருவதற்கு ஏறக்குறைய 18 மாதங்களுக்கு மேல் ஆனது இப்போதுதான் என்கின்றனர் மாருதி சுஸுகி அதிகாரிகள்.
புதிய வாகனம் 1.5 டன் முதல் 2 டன் வரை எடையை சுமந்து செல்லக் கூடியதாக இருக்கும். 0.8 லிட்டர் இரட்டை சிலிண்டருடன் டிடிஐஎஸ் இன்ஜினைக் கொண்டதாக இருக்கும். செலெரியோ மாடல் கார்களில் ஆரம்பத்தில் இந்த இன்ஜின்தான் பொறுத்தப்பட்டிருந்தது. இது 47 பிஹெச்பி திறனுடன் 125 நியூட்டன் மீட்டர் டார்க் சக்தியை வெளிப் படுத்தக் கூடியது. அனைத்துக்கும் மேலாக எரிபொருள் சிக்கனமானது. சோதனை ஓட்டத்தில் ஒரு லிட்டர் டீசலுக்கு 27 கி.மீ. தூரம் ஓடியுள்ளது. சிஎன்ஜி மாடலில் 1.2 லிட்டர் இன்ஜின் பொறுத்தப்பட்டுள்ளது. இது எகோ மாடல் கார்களில் உள்ள இன்ஜி னாகும்.
இரண்டு மாடல்களில் அதாவது டீசல் மற்றும் சிஎன்ஜியில் செயல்படும் வகையில் இந்த சூப்பர் கேரி இருக்கும். 800 சிசி திறன் கொண்டதாக உள்ள இந்த வாகனத்தை குர்காவ்னில் உள்ள ஆலையில் தயாரிக்கப்படுகிறது. முதல் கட்டமாக ஆண்டுக்கு 80 ஆயிரம் தயாரிக்க முடிவு செய்துள்ளது.
இது டாடா ஏஸ் மற்றும் மஹிந்திராவின் மேக்ஸிமோவுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலகு ரக வாகனங்களுக்குள்ள சந்தையை நன்கு உணர்ந்து 2007-ம் ஆண்டிலேயே டாடா நிறுவனம் ஏஸ் மாடல் வாகனத்தை அறிமுகப்படுத்தியது. இது தற்போது கிராமப்பகுதிகளில் மிகவும் பிரபலமாக உள்ளது. இதைத் தொடர்ந்து மஹிந்திரா நிறுவனமும் 2009-ம் ஆண்டில் ஜியோ எனும் சரக்கு வாகனத்தை அறிமுகப்படுத்தியது. அசோக் லேலண்ட் நிறுவனம் 2012-ம் ஆண்டில் தோஸ்த் எனும் இலகு ரக வாகனத்தை சந்தைப்படுத்தியது.
இலகு ரக வாகன விற்பனையில் 50 சதவீத இடத்தைப் பிடித்துள்ளது டாடா. மாருதியின் சூப்பர் கேரி வாகனம் எந்த நிறுவனத்தின் சந்தையைப் பிடிக்கப் போகிறது என்பது அதன் செயல்பாடுகளின் மூலம்தான் தெரியும்.