ஒரு சர்வதேச நிறுவனத்தின் அஸ்தமனம்!

ஒரு சர்வதேச நிறுவனத்தின் அஸ்தமனம்!
Updated on
3 min read

சூரிய உதயத்தை அறிந்தவர்களுக்கு அஸ்தமனமும் புரியும். சூரிய மின்னுற்பத்தியில் சர்வதேச அளவில் பிரபலமான சன் எடிசன் நிறுவனம் அஸ்தமனமனத்துக்கு தயாராகி வருகிறது. ஆமாம் நிறுவனம் திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த சன் எடிசன் நிறுவனம் 1959-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. கலிபோர்னியா மாகாணம் பெல்மான்ட் பகுதியில் மேரிலாண்ட் ஹைட்ஸ் எனுமிடத்தில் இதன் தலைமை அலுவலகம் உள்ளது. நியூயார்க் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட இந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக அகமது சாதிலா உள்ளார்.

இந்நிறுவனம் தொடங்கப்பட்டபோது இதன் பெயர் மான்சான்டோ எலெக்ட்ரானிக் மெட்டீரியல்ஸ் கம்பெனி (எம்இஎம்சி) என்பதாகும். மான்சான்டோ நிறுவனத்தின் அங்கமாக 1989-ம் ஆண்டு வரை இது செயல்பட்டது. நிறுவனம் கைமாறியபோதிலும் 2013-ம் ஆண்டு வரை எம்இஎம்சி என்ற பெயரிலேயே இயங்கி வந்தது.

2009-ம் ஆண்டு வட அமெரிக்காவில் செயல்பட்டு வந்த மிகப் பெரிய சூரிய மின்னுற்பத்தி நிறுவனமான சன் எடிசன் நிறுவனத்தை ஜிகார் ஷாவிடமிருந்து எம்இஎம்சி வாங்கியது. பாலிசிலிக்கான், செமி கண்டக்டருக்கான தேவை குறைந்ததையடுத்து 1,300 பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பியது சன் எடிசன்.

தற்போது இந்நிறுவனத்தில் 7,200 பணியாளர்கள் உள்ளனர். உலகம் முழுவதும் இந்நிறுவனத்துக்கு அலுவலகங்கள் உள்ளன. இந்தியாவில் சென்னையில் இந்நிறுவன அலுவலகம் செயல்படுகிறது.

2014-ம் ஆண்டிலிருந்து சன் எடிசன் நிறுவனம் காற்றாலை, நீர் மின்சாரம் மற்றும் சூரிய மின்னுற்பத்தி ஒப்பந்தங்களை மேற்கொண்டது. பாஸ்டனைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஃபர்ஸ்ட் விண்ட் என்ற நிறுவனத்தையும் வாங்கியது.

இந்நிறுவனம் டெரா ஃபோர்ம் பவர் மற்றும் டெரா ஃபோர்ம் குளோபல் என்ற இரண்டு நிறுவனங்களை 2014-ம் ஆண்டு உருவாக்கியது.

2015-ம் ஆண்டில் இங்கிலாந்தில் செயல்படும் மார்க் குழும நிறுவனத்துக்குச் சொந்தமான நிறுவனத்தை வாங்கியது. மேலும் சீனா, இந்தியா, தென் ஆப்பிரிக்கா, உருகுவே மற்றும் சில தென் அமெரிக்க நாடுகளில் மரபு சாரா மின்னுற்பத்தி ஒப்பந்தங்களைப் பெற்றது.

அமெரிக்காவின் யுடா மாகாணத்தில் செயல்படும் விவின்ட் சோலார் நிறுவனத்தை வாங்க கடந்த ஆண்டு முயற்சித்தது. 220 கோடி டாலருக்கு இந்நிறுவனத்தை வாங்க மேற்கொண்ட ஒப்பந்தத்தை விவின்ட் நிறுவனம் கடந்த மாதம் ரத்து செய்தது. ஒப்பந்தப்படி பணத்தை அளிக்க சன் எடிசன் தவறிவிட்டதால் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக விவின்ட் தெரிவித்ததிலிருந்து பிரச்சினை கிளம்பியது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்நிறுவனத்தின் ஒரு பங்கு விலை 30 டாலராக இருந்தது. இப்போது 36 சென்ட்டாக சரிந்துவிட்டது.

இந்நிறுவனத்துக்கு 1,100 கோடி டாலர் கடன் சுமை இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் 2014-ம் ஆண்டு 240 கோடி டாலரை வருமானமாக ஈட்டிய இந்நிறுவனம் தற்போது கடன் பொறியில் சிக்கியிருப்பது பலரையும் வியப்பிலாழ்த்தியுள்ளது.

ஓராண்டுக்கு முன்பு வரை இந்நிறுவனப் பங்கு விலை 175 சதவீதம் வரை உயர்ந்திருந்தது. கடந்த ஆண்டு இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு 1,000 கோடி டாலராக இருந்தது. ஆனால் இப்போது திவாலாகும் நிலை உருவானதற்கு என்ன காரணம்?

2014 மற்றும் 2015-ம் ஆண்டில் இந்நிறுவனம் உருவாக்கிய துணை நிறுவனங்களான டெரா ஃபோர்ம் பவர் மற்றும் டெரா ஃபோர்ம் குளோபல் நிறுவனங்கள்தான் என்று கருதப்படுகிறது. இவ்விரு நிறுவனங்களும் பெரிய நிறுவனங்களின் செயல்பாட்டு சொத்துகளை நீண்ட கால அடிப்படையில் வருமானம் தரும் ஒப்பந்தமாக மாற்றியதே காரணம் எனக் கூறப்படுகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்நிறுவனம் அசுர கதியில் விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டதே 1,100 கோடி டாலர் கடன் சுமைக்குத் தள்ளியுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

தங்களின் முதலீடுகள் உரிய பலனை அளிக்கவில்லை என நிறுவனம் உணர்ந்து டெக்சாஸ் மற்றும் மலேசியாவில் உள்ள பாலி சிலிக்கான் உற்பத்தி ஆலையை கடந்த ஆண்டு இந்நிறுவனம் மூடிவிட்டது. முதலீட்டாளர்கள் மத்தியில் நிறுவனம் மீதான அபிப்ராயம் சரியத் தொடங்கிய உடனேயே நிறுவனத்துக்கு கெட்ட நேரம் ஆரம்பமானது.

துணை நிறுவனத்தின் குற்றச்சாட்டு

துணை நிறுவனமான டெரா ஃபோர்ம் குளோபல் நிறுவனம் நிதியை சரியாகக் கையாளவில்லை என சன் எடிசன் மீது குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக டெலாவெர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில் 23 கோடி டாலர் தொகையை அளித்தகாவும் இந்த நிதியைக் கொண்டு இந்தியாவில் திட்டப் பணிகளை நிறைவேற்றுமாறு கூறியதாகத் தெரிவித்துள்ளது. ஆனால் அந்த நிதியை தனது கடன் சுமையைக் குறைக்க சன் எடிசன் பயன்படுத்திக் கொண்டாதக் குற்றம் சாட்டியுள்ளது. நிறுவனத்தின் தலைவர் அகமது சாதிலா, தலைமை நிதி நிர்வாகிகள் மார்டின் டுரையோங், பிரையன் உபெல்ஸ் ஆகியோர் 23 கோடி டாலர் தொகையை திருப்பி விட்டதற்கு இவர்களே பொறுப்பு என நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

பொதுவாக தாய் நிறுவனம் வலுவாகவும், துணை நிறுவனங்கள் வலுவிழந்தும் இருக்கும். ஆனால் சன் எடிசன் விவகாரத்தில் துணை நிறுவனங்களே தாய் நிறுவனம் மீது வழக்குத் தொடரும் விபரீத நிலை உருவாகியுள்ளது.

சுற்றுச் சூழலை பாதிக்காத திட்டங்களை செயல்படுத்திய சன் எடிசன் நிறுவனத்தின் நோக்கம் மிகச் சிறந்தது. ஆனால் அதிக நிறுவனங்களைக் கையகப்படுத்தியது. குறைந்த விலையில் டெண்டர் பணிகளை ஒப்புக் கொண்டது ஆகியன பாதகமாக அமைந்துவிட்டது.

சூரிய ஒளியில் ஜொலிக்க வேண்டிய இந்நிறுவனம் அஸ்தமன இருளில் முடங்கிப் போய்விட்டது.

சுற்றுச் சூழலை பாதிக்காத திட்டங்களை செயல்படுத்திய சன் எடிசன் நிறுவனத்தின் நோக்கம் மிகச் சிறந்தது. ஆனால் அதிக நிறுவனங்களைக் கையகப்படுத்தியது. குறைந்த விலையில் டெண்டர் பணிகளை ஒப்புக் கொண்டது ஆகியன பாதகமாக அமைந்துவிட்டது.

இந்தியாவில்…

இதுவரை இந்நிறுவனம் 470 மெகாவாட் மரபுசாரா மின்னுற்பத்தி நிலையங்களை உருவாக்கியுள்ளது. தமிழகம், ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களில் இந்நிறுவனம் 146 மெகாவாட் சூரிய மின்னுற்பத்தி ஆலைகளை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த 18 மாதங்களில் 1,500 மெகாவாட் மின்னுற்பத்தி இலக்கை சூரிய ஆற்றலிலிருந்து பெற இலக்கு நிர்ணயித்திருந்தது.

இந்தியாவில் இந்நிறுவனத்துக்குச் சொந்தமான அனைத்து சொத்துகளையும் விற்றுவிட முடிவு செய்துள்ளது. அல்லது இந்தியப் பிரிவை வாங்கும் வசதி படைத்த நிறுவனத்திடம் தாங்கள் பெற்ற சூரிய மின்னாற்றல் ஒப்பந்தப் பணிகளை ஒப்பந்த அடிப்படையில் (இபிசி) மேற்கொள்ளலாம் என முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் இந்நிறுவனத்தை வாங்க அதானி குழுமம் முன்வந்துள்ளது. இந்நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பர் மாத ஆந்திர மாநிலத்தில் 500 மெகாவாட் சூரிய மின்னுற்பத்தி நிலையம் அமைப்பதற்கான ஒப்பந்தப் பணியைப் பெற்றது. மிகக் குறைந்த அளவிலான தொகைக்கு கேட்டதால் இந்நிறுவனத்துக்கு ஒப்பந்தப் பணி வழங்கப்பட்டது. இந்தியாவில் 1,000 மெகாவாட் சூரிய மின்னுற்பத்தி மற்றும் காற்றாலை திட்டங்களை செயல்படுத்தவிருந்தது.

திட்டப் பணிகளை நிறைவேற்ற உரிய கடன் வழங்கு பங்குதாரரை எதிர்நோக்கியிருப்பதாக ஆசிய பசிபிக் பிராந்திய தலைவர் பசுபதி கோபாலன் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இந்தியாவில் 32 சூரிய மின்னாற்றல் நிலையங்கள் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. இந்நிறுவனத்துக்கு ஏற்பட்டுள்ள சரிவு இந்தியாவின் சூரிய மின்னுற்பத்தி திட்டங்களுக்கு பின்னடைவாக அமைந்துவிடும் எனக் கருதப்படுகிறது.

- எம். ரமேஷ்
ramesh.m@thehindutamil.co.in

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in