

கடந்த பத்து ஆண்டுகளில் உலகின் வர்த்தகம் மற்றும் நிர்வாக நடைமுறை சார்ந்து நிகழ்ந்துள்ள முக்கியமான மாற்றங்களில் ஒன்று, மிடில்மேன் என்று அழைக்கப்படும் இடைத்தரகர்களுக்கான இடம் குறைந்துபோனது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு எனில், தயாரிப்பாளர்களிடமிருந்து ஒரு பொருள் வாடிக்கையாளரை அடைய பல கட்டப் படிநிலைகள் உண்டு. தயாரிப்பாளர்கள் தங்கள் பொருட்களை விற்பதற்கு ஏஜென்ட்களை நாட வேண்டியதாக இருந்தது.
ஏஜென்டுகள் மூலமாகவே மொத்த விற்பனையாளர்களுக்கு அந்தப் பொருள் கொண்டு சேர்க்கப்படும். அவர்களிடமிருந்து சில்லறை வர்த்தகர்களுக்கு. இறுதியாக வாடிக்கையாளர்களுக்கு. இந்தப் படிநிலைகள் பொருட்களின் விலை ஏற்றத்துக்கு காரணமாக அமையும். இந்த இடைத்தரகு அமைப்பு எல்லா துறைகளிலும் வெவ்வேறு வடிவங்களில் இருக்கும்.
இந்தியாவை எடுத்துக்கொள்வோம். இந்தியாவில் பத்து ஆண்டுகளுக்கு முன்பிருந்தச் சூழலை கற்பனை செய்து பார்க்கலாம். பாஸ்போர்டுக்கு விண்ணப்பிப்பதற்கு, ரயில், விமான டிக்கெட் முன்பதிவு செய்தவற்கு அதற்கான ஏஜென்சிக்குச் செல்ல வேண்டும். தியேட்டரில் நேரில் சென்றுதான் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். வெளிநாட்டில் வேலைவாய்ப்புப் பெறுவதற்கு, வெளிநாட்டில் சென்று படிப்பதற்கு ஏஜெண்டுகள் மூலமாகவே மட்டும் செல்லும் நிலை இருந்தது.
அந்த ஏஜெண்டுகளுக்கென்று லட்சங்களில் கமிஷன் வழங்க வேண்டும். வங்கியில் பணம் எடுக்க நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டும். ஆனால், தற்போது அந்த நடைமுறைகள் எப்படி உள்ளன? நம்முடைய மடிக்கணினியில் இருந்தே பாஸ்போர்டுக்கு, ரேஷன் கார்டு, திருமணச் சான்றிதழுக்கு விண்ணப்பித்துவிடலாம், மொபைல் போன் மூலமாகவே பேருந்து, ரயில், விமானத்துக்கான டிக்கெட்டை முன்பதிவு செய்துகொள்கிறோம், மொபைல் போன் வழியாகவே பணத்தைப் பரிமாற்றம் செய்துகொள்கிறோம்.
என்ன மாற்றம் நடந்திருக்கிறது? இடைத்தரகு அமைப்புகள் நீக்கப்பட்டிருக்கின்றன. இணைய வசதி பரவலாக சென்று சேர்ந்தது, உலகம் டிஜிட்டலை நோக்கி வேகமாக நகர்ந்தது ஆகியவை வர்த்தகம், நிர்வாகம் சார்ந்து இருந்த இடைத்தரகு அமைப்புகளை நீக்கியுள்ளன. இடைத்தரகு அமைப்புகள் நீக்கப்பட்டதால், சேவை வழங்குபவருக்கும் சேவை பெறுவோருக்கும் இடையில் நேரடி உறவு சாத்தியப்படுத்தப்பட்டிருக்கிறது.
இடைத்தரகு அமைப்பு நீக்கத்தால் தயாரிப்பாளர் - வாடிக்கையாளர் இடையிலான தூரம் குறைத்துள்ளது. தற்போது கார் தயாரிப்பு நிறுவனங்கள், மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் தொடங்கி கடலை மிட்டாய் தயாரிப்பு நிறுவனங்கள் வரையில் வாடிக்கையாளர்களை நேரடியாக சென்றடைகின்றன. அந்த வகையில், இடைத்தரகு அமைப்புகள் நீக்கப்பட்டதால் வாடிக்கையாளர்களின் நுகர்வு நடைமுறை மேம்பட்டுள்ளது. தவிர, இடைத்தரகு நீக்கமானது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்துகிறது; புதிய பொருளாதார வாய்ப்புகளையும் உருவாக்கித் தருகிறது.
இடைத்தரகு அமைப்பின் புதிய பரிணாமம்
அதேசமயம், இடைத்தரகு அமைப்புகள் முற்றிலும் ஒழிந்து விட்டன என்ற சொல்ல முடியாது. அவை புதிய பரிமாணத்துக்குள் நுழைந்துள்ளன. அமேசான், ஓலா, ஊபர், ஓயோ போன்ற நிறுவனங்களை வர்த்தக இடைத்தரகு அமைப்பின் புதிய பரிணாமத்துக்கு உதாரணமாக கொள்ளலாம். ஓலா நிறுவனத்திடம் சொந்தமாக கார்கள் கிடையாது. ஆனால், அந்நிறுவனம் நாடு முழுவதும் டாக்ஸி சேவை வழங்குகிறது. கார் ஓட்டுநர்களையும், வாடிக்கையாளர்களையும் இணைக்கும் பாலமாக அது செயல்படுகிறது.
முந்தைய இடைத்தரகு அமைப்புக்கும் தற்போதைய இடைத்தரகு அமைப்புக்கும் இடையிலான மிக முக்கியமான வேறுபாடு, முந்தைய இடைத்தரகு அமைப்பில் தயாரிப்பாளர் – வாடிக்கையாளர், சேவை வழங்குபவர் – சேவை பெறுபவர் இடையிலான பரிமாற்றம் மிகச் சிக்கலானதாகவும், அதிக நேரம் எடுகக்கூடியதாகவும் இருந்தது. தவிர, முந்தைய இடைத்தரகு அமைப்பு ஊழல் நடைபெற முக்கிய காரணமாக இருந்தது. தற்போதைய இடைத்தரகு அமைப்பு தயாரிப்பாளர் – வாடிக்கையாளர் இடையிலான பரிமாற்றத்தை மிக எளிமையானதாகவும், வெளிப்படையானதாகவும் மாற்றி உள்ளது. தற்போதைய இடைத்தரகு அமைப்பு வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை வழங்குகிறது.
ஒருவகையில் தற்போதைய இடைத்தரகு அமைப்பு பல விசயங்களை ஜனநாயகப்படுத்தி இருக்கிறது என்று சொல்லலாம். உதாரணத்துக்கு டாக்ஸி சேவையையே எடுத்துக்கொள்வோம். பத்து ஆண்டுகளுக்கு முன் வசதி படைத்தவர் மட்டுமே டாக்ஸி சேவையைப் பயன்படுத்தக் கூடியதாக இருந்தது. ஆனால் தற்போது ஓலா போன்ற தளங்களின் வழியே டாக்ஸி சேவை பரவலாக்கப்பட்டிருப்போதோடு மட்டுமில்லாமல் பயன்படுத்தக்க விலையிலும் உள்ளது.
அதே சமயம், இத்தகைய புதிய இடைத்தரகு அமைப்புகள் வேறு சில பிரச்சினைகளையும் கொண்டுள்ளன.
ஓலா தளத்தின் கீழ் வாகனம் ஓட்டபவர்களுக்கு அந்நிறுவனம் சார்ந்து நிறைய புகார்கள் உண்டு. ‘இரவு, பகலாக நாங்கள் வாகனம் ஓட்டுகிறோம். ஆனால், எங்கள் வருவாயில் 30 சதவீதம் வரையில் அவர்கள் கமிஷனாக எடுத்துக்கொள்கிறார்கள்.’ அமேசான், சொமேட்டோ, ஸ்விக்கி போன்ற உணவு விநியோக தளங்களில் வேலை செய்பவர்களின் நிலைமையும் இதுதான். தொழில்நுட்பங்கள் வளர வளர உலகின் போக்கில் புதிய மாற்றங்கள் நிகழ்வது இயல்பே. பிளாக்செயின் தொழில்நுட்பமானது வர்த்தகம், நிர்வாகம் சார்ந்து புது மாற்றங்களைக் கொண்டுவந்தபடி உள்ளது. கிரிப்டோ கரன்சி என்பது இடைத்தரகு நீக்கத்தின் உட்சபட்சம். அது அரசையே இடைத்தரகு அமைப்பாக பார்க்கிறது!