Published : 03 Jan 2022 12:22 PM
Last Updated : 03 Jan 2022 12:22 PM

உங்கள் கதை என்ன?

சித்தார்த்தன் சுந்தரம்
sidvigh@gmail.com

அன்றிலிருந்து இன்று வரை கதை கேட்பது எல்லோருக்கும் பிடிக்கும். ஆனால் கதை சொல்வது என்பது ஒரு சிலருக்கு மட்டுமே கைவந்த கலையாகும். இன்றைக்கு நிறுவனங்கள்கூட தங்களது பொருள்கள், சேவைகள், வளர்ச்சி மற்றும் மேம்பாடு குறித்து அனைத்துத் தரப்பினரையும் சென்றடைவதற்கு கதை சொல்லும் பாணியைக் கையாள ஆரம்பித்திருக்கின்றன.

இப்படியான ஒரு சூழலில் வெளியாகி இருக்கும் புத்தகம்தான் ‘வாட் இஸ் யுவர் ஸ்டோரி?’ பயனுள்ள வணிகத் தொடர்புக்கு, வளர்ச்சிக்கு, சந்தைப்படுத்தலுக்கு கதை சொல்லும் உத்தியை எப்படி பயன்படுத்துவது என்பது பற்றி இந்நூல் விவரிக்கிறது. இந்தப் புத்தகத்தை மூன்று பேர் சேர்ந்து எழுதியிருக்கிறார்கள். மூவருமே செய்தித் தொடர்புத் துறையில் பல ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தவர்கள்.

இந்த நூல் மூன்று பிரிவுகளைக் கொண்டிருக்கின்றன. 1. கூறுகள் - elements (செய்தி, தலைப்பு, படம், தரவு, தெளிவு, மக்கள்), 2. செய்தி பரப்பும் வழி - channels (முக்கிய ஊடகங்கள், சமூக ஊடகம், பாட்காஸ்ட், விளம்பரதாரரின் உள்ளடக்கம்), 3. வகைகள் - types (முக்கியமான செய்தி, நெருக்கடி மேலாண்மை, நிகழ்வுகள், அறிக்கைகள்).

நாம் சொல்லும் கதையானது நிறுவனத்தின் குறிக்கோளைத் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும். நிறுவனங்கள் அல்லது அமைப்புகள் செய்யும் பிரச்சாரமானது மக்களுக்கு ஒரு தெளிவான கண்ணோட்டத்தைக் கொடுக்க வேண்டும். கதைகள் / நிறுவனத்தின் விளம்பரங்கள் மக்களை ஈர்க்கும் வகையிலான தலைப்பைக் கொண்டிருக்க வேண்டும் என்று இந்நூலின் ஆசிரியர்கள் வலியுறுத்துகிறார்கள்.

‘உலகெங்கிலும் இருக்கும் மக்களுக்கு இடையேயான தொடர்பு’ - இது சாக்லேட் மற்றும் சாஸ் தயாரிக்கும் நிறுவனமான ‘ஹெர்ஷே’வின் ஒரு விளம்பர வாசகம். இந்த வாசகத்தைப் படிக்கும்போது சாக்லெட் நிறுவனத்தின் விளம்பரம் போலவா இருக்கிறது? இந்த வாசகம் ‘ஹெர்ஷே’ நிறுவனத்தின் தயாரிப்பான மிட்டாய்கள் மற்றும் சாக்லெட் குறித்து எதையும் சொல்லவில்லை. இந்த வாசகமானது உலகளாவிய எந்தவொரு நிறுவனத்துக்கும் பொருத்தமானதாக இருக்கக் கூடியது. ‘நீங்கள் சிறப்பாக வாழ்வதற்காக பணத்தை சேமிக்க உதவுகிறது’ என்று வால்மார்ட் விளம்பரம் செய்கிறது. ஆனால் இதில் அந்நிறுவனம் வாக்குறுதியை நிறைவேற்றுகிறதா என்பது ஒரு கேள்விக்குறியாகும். இத்தகைய தெளிவற்ற வாசகங்கள் கூடாது என்கிறார்கள் இந்நூலாசிரியர்கள். நிறுவனங்களின் குறிக்கோள் என்ன என்பது அதில் பணிபுரியும் பணியாளர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் தெளிவாகப் புரியும்படி இருக்க வேண்டுமென்பதில் அந்தந்த நிறுவனங்கள் அக்கறை கொள்ள வேண்டும் என்கிறார்கள்.

அதுபோல தொழில் சார்ந்த சொற்றொடர்களை நிறுவனங்களின் செய்தித் தொடர்பு சாதனங்களில் கூடிய மட்டும் தவிர்ப்பது நல்லது. உதாரணமாக கூட்டியக்கம் (synergy), சூழ்நிலை அமைப்பு (ecosystem) போன்ற சொற்கள் இன்றைய கார்ப்பரேட் உலகில் விருப்பான சொற்களாக பவனி வந்தாலும் பெரும்பாலானவர்களால் இவற்றின் உட்பொருளைப் புரிந்து கொள்ள முடியாது. எந்தவொரு செய்தியும் மிகவும் எளிமையாகவும் நேரடியாகவும் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். மக்களைக் கவர வேண்டுமென்பதற்காக தங்களது படைப்பாற்றலை பறைசாற்றும் வகையில் அலங்கார வார்த்தைகள் உபயோகிக்கும்பட்சத்தில் அது நிறுவனத்துக்கு எதிரான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

அதுபோல பிரசண்டேஷனில் இப்போது பயன்படுத்தப்படும் ‘புல்லட் பாயிண்ட்’களைத் தவிர்த்து படங்கள், கிராஃபிக்ஸ் ஆகியவற்றை உபயோகித்தால் சொல்லக்கூடிய செய்தி ‘நச்’ என்று பார்ப்பவர்கள் மனதில் பதியுமென்றும் `ஒரு படம் ஆயிரம் சொற்களுக்கு சமம்’ என்பது முதுமொழி மட்டுமல்ல அனுபவ மொழியும் கூட என்று நூலாசிரியர்கள் கோடிட்டுக் காட்டியிருக்கிறார்கள்.

இன்றைய காலகட்டத்தில் செய்தியைக் கொண்டு செல்வதற்கு பல ஊடகங்கள் இருக்கின்றன. அவற்றில் தங்களுக்கு எது சரியானது என்பதை நிறுவனங்கள் கவனத்துடன் தெரிவு செய்ய வேண்டும். ஊடகத்தைத் தெரிவு செய்யும் போது செய்திக்கான இலக்கு யார் – ஆண், பெண், இளையவர், முதியவர், வயது, வருமானம் - போன்ற பல காரணிகளை மனதில் கொண்டு அதற்கேற்ற ஊடகத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். நிறுவனத்தின் சிஇஓ பேசுவதை சிலர் யூடியூபில் கேட்க விரும்பலாம். வாசிப்பதற்கு நேரமில்லாதவர்கள் பாட்காஸ்டை விரும்பலாம். பத்திரிகையைத் தெரிவு செய்வதிலும் அந்தப் பத்திரிகையை வாசிப்பவர்கள் நிறுவனத்துக்கான இலக்கு வாடிக்கையாளர்களா என்பதை நன்கு தெரிந்து கொண்டு பயன்படுத்த வேண்டும்.

நாம் நிறுவனத்தைத் தெரிந்து கொள்ள வேண்டுமா இல்லை அந்த நிறுவனம் சம்பந்தப்பட்டவரைத் தெரிந்து கொள்ள வேண்டுமா? வாரன் பஃபெட்டை தெரிந்த அளவுக்கு அவரது நிறுவனமான பெர்க்‌ஷயர் ஹாத்வேயை தெரிந்திருக்காது அது போல ரிச்சர்ட் பிரான்சன்னை தெரிந்த அளவுக்கு அவரது வர்ஜீன் குழுமத்தைத் தெரிந்திருக்காது. இது குறித்தும் நிறுவனமானது நிறுவனத்தை முன்னிலைப்படுத்துவதா அல்லது தனிநபரை முன்னிலைப்படுத்துவதா? என முடிவெடுத்து அதற்கேற்ப தங்களது செய்தித் தொடர்பை மேற்கொள்ள வேண்டும். நிறுவனம் சார்ந்த அனைத்துத் தரப்பினரையும் சென்றடைவதற்கு செய்தித் தொடர்பு மிகவும் முக்கியமானதாகும். இந்நூலின் சில இடங்களில் செய்தியை திறமையுடன் கொண்டு சேர்ப்பதற்கு கடைபிடிக்க வேண்டிய விதிகளைக் கண்டிப்புத் தொனியில் குறிப்பிட்டிருந்தாலும் அது நிறுவனங்களின் சில அடிப்படைக் கொள்கைகளை உரசிப் பார்த்துக் கொள்ளப் பயன்படும். இனிமேல் நிறுவனங்கள் சிறந்த கதை சொல்லிகளையும் வேலைக்கு அமர்த்தினால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

பதிப்பகம்: பென்குவின் (போர்ட்ஃபோலியோ)

பக்கம்: 240

விலை ரூ.599

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x