ஆயுத பஜார்
கரோனா முதல் அலை, இரண்டாவது அலை முடிந்து இப்போது ஒமைக்ரான் பீதி ஆரம்பமாகி இருக்கிறது. 2019-லிருந்து தொடர்ந்து ஏதாவது ஒரு ரூபத்தில் கரோனா அச்சம் உலக மக்களை ஆட்டிப்படைத்துக் கொண்டுதானிருக்கிறது. 2020-ம் ஆண்டில் உலக பொருளாதாரம் மைனஸ் 3.1 சதவீதமாக சரிந்தது. கரோனா அச்சம், பொருளாதார வீழ்ச்சி போன்ற நெருக்கடிகள் ஒருபுறமிருந்தாலும் கடந்த ஆண்டில் ஆயுத விற்பனை மட்டும் ஜரூராக நடந்துள்ளது.
கடந்த ஆண்டில் உலக அளவில் ஆயுத விற்பனை 1.3 சதவீதம் உயர்ந்துள்ளது. 100 நிறுவனங்கள் 2020-ம் ஆண்டில் மட்டும் ரூ.40 லட்சம் கோடிக்கு (53,100 கோடி டாலர்) ஆயுதங்களை விற்பனை செய்துள்ளன. ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி மையம் இந்த விவரங்களை வெளியிட்டுள்ளது.
இது முன்னணி 100 நிறுவனங்கள் மேற்கொண்ட ஆயுத வர்த்தக விவரம்தான். சிறிய அளவில் ஆயுதங்களை விற்பனை செய்த நிறுவனங்கள் இதில் இடம்பெறவில்லை. அவற்றையும் சேர்த்தால் கடந்த ஆண்டில் ஆயுத விற்பனை ரூ.50 லட்சம் கோடியை விட அதிகமாக இருக்கும். தொடர்ந்து 6 ஆண்டுகளாக ஆயுத தளவாட விற்பனை ஏறுமுகத்திலேயே இருந்து வருகிறது.
அந்த முன்னணி 100 நிறுவனங்களில் 41 நிறுவனங்கள் அமெரிக்காவைச் சேர்ந்தவை. சீன நிறுவனங்கள் விற்பனையில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளன. அமெரிக்க நிறுவனங்களின் மொத்த ஆயுத விற்பனை அளவு 28,500 கோடி டாலராகும். முந்தைய ஆண்டைக் காட்டிலும் 1.9 சதவீத வளர்ச்சியை அமெரிக்க நிறுவனங்கள் எட்டியுள்ளன. அந்தவகையில் மொத்த ஆயுத விற்பனையில் அமெரிக்க நிறுவனங்களின் சந்தைப் பங்களிப்பு 54 சதவீதமாக உள்ளது. சீன நிறுவனங்கள் 6,680 கோடி டாலருக்கு ஆயுதங்கள் விற்பனை செய்துள்ளன. இது 2019-ம் ஆண்டைவிட 1.5 சதவீதம் அதிகம். இந்தப் பட்டியலில் 5 சீன நிறுவனங்கள் இடம் பெற்றுள்ள பட்டியலில் 26 ஐரோப்பிய நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.
இவை அனைத்தின் மொத்த சந்தைப் பங்களிப்பு 21 சதவீதம். மொத்த மதிப்பு 10,900 கோடி டாலர். இதில் 7 பிரிட்டன் நிறுவனங்கள் அடங்கும். இவற்றின் வர்த்தகம் 3,750 கோடி டாலர். பட்டியலில் 6 பிரெஞ்சு நிறுவனங்கள் இடம் பெற்றிருந்தாலும், முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் அவற்றின் வர்த்தகம் 7.7 சதவீதம் சரிந்துள்ளது. கரோனா காலகட்டத்தில் பொருள் விநியோக சங்கிலியில் ஏற்பட்ட தொய்வே விற்பனை சரிவுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.பட்டியலில் இடம்பெற்றுள்ள 4 ஜெர்மனி நிறுவனங்களின் மொத்த ஆயுத விற்பனை 890 கோடி டாலராகும்.
தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக ரஷ்ய நிறுவனங்களின் விற்பனை சரிந்துள்ளது. 9 ரஷ்ய நிறுவனங்களின் ஆயுத விற்பனை 2,640 கோடி டாலராகும். இஸ்ரேலைச் சேர்ந்த 3 நிறுவனங்கள் 1,004 கோடி டாலருக்கு வர்த்தகம் புரிந்துள்ளன. 5 ஜப்பான் நிறுவனங்கள் 990 கோடி டாலருக்கு தளவாடங்களை விற்றுள்ளன. பட்டியலில் இடம்பெற்றுள்ள 4 தென் கொரிய நிறுவனங்களின் பங்கு 650 கோடி டாலராகும்.
இதில் கவனிக்கத்தக்க ஒரு விஷயம்: 3 இந்திய நிறுவனங்கள் - ஹெச்ஏஎல், ஆர்டினன்ஸ் பேக்டரி, பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் - இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளன. அவற்றின் விற்பனையும் 1.7 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்திய நிறுவனங்களின் பங்கு சுமார் ரூ. 48,750 கோடி (650 கோடி டாலர்) ஆகும். இந்தியாவிலிருந்து ராணுவ தளவாடங்கள் 70 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆயுதங்கள் விற்பனை அதிகரிப்பது என்பது உண்மையில் நாம் வருத்தம் கொள்ள வேண்டிய ஒரு விஷயம். ஆக்கிரமித்தல் எண்ணத்தையும், அழித்தல் எண்ணத்தையும் உலகம் இன்னும் தன்னுள் சுமந்துகொண்டிருக்குமெனில், நம்மை நாம் நாகரிமடைந்த மனிதகுலம் என்று சொல்லிக் கொள்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது?
