Published : 29 Nov 2021 11:11 AM
Last Updated : 29 Nov 2021 11:11 AM

ஜூபிடர் ஏர்வேஸ்: அழகப்ப செட்டியாரின் ஆகாய வணிகம்

சுப.மீனாட்சி சுந்தரம்

somasmen@gmail.com

‘சூரரைப் போற்று’ படம் வெளிவந்த போது, அந்தப் படத்தில் சூர்யா நடித்தப் பாத்திரத்தின் நிஜ மனிதரான கேப்டன் கோபிநாத்தை தமிழ் மக்கள் பெருமிதத்தோடு கொண்டாடினர். தற்போது ஏர் இந்தியா நிறுவனம் 68 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் டாடா நிறுவனத்தின் வசம் வந்ததையொட்டி, விமானத் துறையில் ஜேஆர்டி டாடாவின் பங்களிப்பை பெருமிதமாக நினைக்கிறோம். இந்தத் தருணத்தில், இந்தியாவில் விமானத்துறை உருவான தொடக்கக் காலத்தில், அதில் பங்களிப்புச் செய்த இரு தமிழக முன்னோடிகளை நாம் நினைவுகூறலாம் என்று நினைக்கிறேன். ஒருவர், அண்ணாமலை செட்டியார். மற்றொருவர், அழகப்ப செட்டியார்.

கானாடுகாத்தான் ஃபிளையிங்க் கிளப்

இந்தியாவில் பயணிகள் விமானத்தை ஓட்டுவதற்கான உரிமத்தைப் பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமை ஜேஆர்டி டாடாவுக்கு உண்டு. அவர் 1929-ம் ஆண்டு விமானம் ஓட்டுநர் உரிமம் பெற்றார். அதே காலகட்டத்தில், காரைக் குடியைச் சேர்ந்த அண்ணாமலை செட்டியார், மெட்ராஸ் பிளையிங் கிளப்பில் உறுப்பினராக இருந்துள்ளார். என்ன விசேஷம் என்றால், 1930-ம் ஆண்டு 11 நபர்களுடன் தொடங்கப்பட்ட அந்தக் கிளப்பில் ஒரே இந்திய உறுப்பினர் அவர்தான். தனது சொந்த உபயோகத்திற்காக விமானத்தை வாங்கிய அண்ணாமலை செட்டியார், காரைக்குடியில் உள்ள கானாடுகாத்தானில் ஃபிளையிங்க் கிளப்பையும் நிறுவினார். இரண்டாம்உலகப்போரின்போது விமானங்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்கும், வெடிகுண்டுகளை ஏற்றுவதற்கும் கானாடுகாத்தான் விமான நிலையம் பயன்பட்டிருக்கிறது.

ஜூபிடர் ஏர்வேஸ்

விமானத்துறையில் தொழில்ரீதியாக தடம் பதித்த முன்னோடியாக அழகப்ப செட்டியாரைச் சொல்லலாம். அவர் 1933-ல் லண்டனில் பயிற்சி பெற்று விமானம் ஓட்டுநர் உரிமம் பெற்றார். 1945-ல் இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த சமயத்தில் இந்திய அரசு உபரியாக தன்னிடமிருந்த டக்ளஸ் டிசி வகையைச் சேர்ந்த விமானங்களை விற்பனைசெய்வதாக அறிவித் தது. அவற்றில் 8 விமானங்களை அழகப்ப செட்டியார் வாங்கினார். இன்னும் சில ஆண்டுகளிலே பயணிகள் விமானப் போக்குவரத்து சேவை அதிகரிக்கும் என்று கணித்த அழகப்ப செட்டியார், அந்த 8 விமானங்களையும் பயணிகள் விமானங்களாக மாற்றி அமைத்தார். அவரது விமான நிறுவனத்தின் பெயர் ஜூபிடர் ஏர்வேஸ்.

இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை சமயத்தில், சர்கோதா, லியால்பூர், முல்தான், ராவல்பிண்டி, தேரா இஸ்மாயில் கான், பிசல்பூர், மியான்வாலி, சக்வால் மற்றும் கோஹாட் ஆகிய பகுதிகளில் இருந்து வெளியேறிய குடும்பங்களை இந்தியாவிற்கு கொண்டுவந்து சேர்க்கும் பணிக்கு அழகப்ப செட்டியாரின் ஜூபிடர் ஏர்வேஸ் தனது விமானங்களை வழங்கியது. அப்படியாக ராணுவப் பயன்பாட்டில் இருந்த ஜுபிடர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. அந்த விமானம் இன்சூரன்ஸ் செய்யப்பட்டிருந்தாலும் பயணிகள் உபயோகத்திற்கான விமானத்தை ராணுவ பயன்பாட்டிற்காக உபயோகப்படுத்தியதால் உரிய இழப்பு கிடைக்கவில்லை.

வழித்தட உரிமை பெறுவதில் சிக்கல்

டெக்கான் ஏர்வேஸ் கோபிநாத்தை போலவே, அந்தக் காலத்தில் அழகப்பரும் பயணிகள் விமான உரிமை வாங்க படாத பாடுபட்டிருக்கிறார். விமானம் வாங்குவதைவிட, பயணிகள் பறப்பதற்கான வழித்தட உரிமம் வாங்குவது கடினமாக இருந்துள்ளது. 1948 ஜூன் 17 ம் தேதி ஜுபிடர் ஏர்வேஸின் முதல் விமானம் சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்த ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரால் துவக்கி வைக்கப்பட்டது. ஆனால், ஜூபிடர் ஏர்வேஸால் லாபகரமானதாக இயங்க முடியவில்லை. புதிய வழித்தடங்களுக்கு அனுமதி கிடைப்பதில் சிக்கல், ஒரு விமானம் விபத்துக்குள்ளானது போன்றவை ஜூபிடர் ஏர்வேஸை நெருக்கடிக்குத் தள்ளின. ஒரு கட்டத்தில் அந்நிறுவனத்தின் அனைத்து விமானங்களும் விற்கப்பட்டன. அதற்குப் பிறகு, கொஞ்ச நாட்களிலேயே விமானத்துறை
தேசியமயமாக்கப்பட்டது.

முன்னோடிகளுக்கு மரியாதை

கானாடுகாத்தானில் அமைக்கப்பட்ட விமானநிலையம் தற்போது பயன்பாட்டில் இல்லை. மத்திய அரசு, உதான் எனப்படும் பிராந்திய விமான நிலைய மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இதை காரைக்குடி விமான நிலையமாக மாற்றி, பயன்பாட்டுக்கொண்டு வரும் திட்டத்தை அறிவித்தது. ஆனால், அவை இன்னும் செயல்வடிவம் பெறவில்லை. அந்த விமான நிலையத்தை விரைவிலே பயன்பாட்டுக்குக் கொண்டுவருவது தான் விமானத்துறை முன்னோடிகளுக்கு நாம் செய்யும் மரியாதையாக இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x