

சுற்றுச் சூழலை பாதிக்காத கார்களை உருவாக்கும் முயற்சியில் அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறியுள் ளது ஹோண்டா நிறுவனம். இந்நிறுவனம் கடந்த வாரம் ஜப்பானில் கிளாரிட்டி என்ற பெயரிலான ஹைட்ரஜனில் ஓடக் கூடிய கார்களை அறிமுகப்படுத்தி யுள்ளது. ஐந்து பேர் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த கார்தான் ஹைட்ரஜனில் செயல்படும் முதலாவது காராகும்.
முதல் ஆண்டில் 200 கார்களைத் தயா ரித்து அரசு அலுவலகங்கள், நகராட்சி அமைப்புகளுக்கு அளிக்கத் திட்டமிட் டுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் தகஹிரோ ஹசிகோ தெரிவித்தார்.
அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் இது பொதுமக்களுக்கு விற்பனைக்கு விட திட்டமிட்டுள்ளது ஹோண்டா. இந்தக் காரின் விலை 76 லட்சம் ஜப்பான் யென் (ரூ. 45 லட்சம்) சுற்றுச் சூழலை பாதிக்காத இந்த காருக்கு 20 லட்சம் ஜப்பான் யென் மானியம் அளிக்கப்படும் என ஜப்பானிய அரசு தெரிவித்துள்ளது.
ஹைட்ரஜனும் ஆக்சிஜனும் சேர்ந்து உருவாகும் ஆற்றலில் மின்சாரம் உற்பத்தியாகி அதன் மூலம் இந்த கார் ஓடுகிறது. இந்த கார் ஓடும்போது வெறுமனே தண்ணீர் மட்டுமே வெளியாகும். புகை வெளியேறாது.
இந்த ஆண்டிலேயே இந்த காரை அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளி லும் அறிமுகப்படுத்த உள்ளதாக ஹோண்டா தெரிவிக்கிறது. பொதுவாக பேட்டரிகள் மின்னுற்பத்தி செய்பவை. இவற்றில் தேக்கி வைத்துள்ள மின்சாரம் தீர்ந்தவுடன் இவற்றை ரீ சார்ஜ் செய்ய வேண்டும்.
ஆனால் பியூயல் செல் பேட்டரிகள் ரசாயன மாற்றத்தில் மின்னுற்பத்தி செய்பவை. இதற்கு மூல பொருள் ஹைட்ரஜன், ஆக்சிஜன் சேரும்போது மின்னுற்பத்தி செய்யும். இத்தகைய பியூயல் செல் ஹைட்ரஜன், ஆக்சிஜன் சப்ளை இருக்கும் வரை மின்சாரத்தை உற்பத்தி செய்யும். இத்தகைய பியூயல் செல்கள் மிகச் சிறிய அளவிலிருந்து பெரிய அளவில் வரை தயாரிக்கப்படுகின்றன.
சுற்றுச் சூழலை காக்கும் இந்த ரகக் கார்களை ஊக்குவிக்க ஹைட்ரஜன் வாயு நிரப்பு நிலையங்களை அதிக எண்ணிக்கையில் தொடங்க ஜப்பான் அரசு முடிவு செய்துள்ளது.
ஹைட்ரஜன் வாயுவை ஒரு முறை நிரப்பினால் 750 கி.மீ தூரம் வரை இது ஓடும்.
பேட்டரி கார்களை ரீசார்ஜ் செய்ய நீண்ட நேரம் பிடிக்கும். ஆனால் பியூயல் செல் கார்களுக்குத் தேவைப்படும் ஹைட்ரஜனை நிரப்ப அதிகபட்சம் 5 நிமிஷம் போதுமானது. அந்த வகையில் இந்த காருக்கு மிகுந்த வரவேற்பிருக்கும் என்பது நிச்சயம்.