

சித்தார்த்தன் சுந்தரம்
sidvigh@gmail.com
சுந்தர் பிச்சை (அல்ஃபபெட்ஸ்), இவான் மெனிசிஸ் (டியாஜியோ), சத்யா நாதெள்ளா (மைக்ரோசாஃப்ட்), சைலேஷ் ஜெஜூரிக்கர் (பி அண்ட் ஜி), அர்விந்த் கிருஷ்ணா (ஐபிஎம்), வசந்த் நரசிம்மன் (நோவார்டிஸ்), ராஜ் சுப்ரமணியம் (ஃபெடெக்ஸ்), தாமஸ் குரியன் (கூகுள் கிளவுட்), இந்திரா நூயி (பெப்சிகோ-வின் முன்னாள் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி) என இன்னும் பலருடைய பெயர்களை எழுதிக் கொண்டே போகலாம். இவர்கள் அனைவரும் உலகளவில் மிகப் பெரிய, பிரபலமான நிறுவனங்களின் `மூலை அறை’களை (Corner Office) அலங்கரித்து தலைமை நிர்வாக அதிகாரிகளாகவும், மேலாண்மை இயக்குநர்களாகவும் அதிகாரம் செலுத்திக் கொண்டிருப்பவர்கள். கார்ப்பரேட் உலகில் ‘கார்னர் ஆஃபிஸ்’ என்பது பெரும்பாலும் தலைமை அதிகாரிகளின் அலுவலக அறையாக இருக்கும். இந்த அறைக்கு `மவுசு’ அதிகம்!
சமீப காலமாக வெளிநாடுகளுக்குச் செல்லும் எந்தவொரு நாட்டுத் தலைவரும் அவர் செல்லக்கூடிய நாடுகளின் தலைவர்களைச் சந்திப்பதோடு அந்தந்த நாட்டைச் சேர்ந்த மிகப் பெரிய நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளையும் சந்திப்பது என்பதை ஒரு சம்பிரதாயமாக இல்லாமல் கட்டாயமான ஓர் அலுவலாகவே வைத்திருக்கின்றனர். சமீபத்தில் பிரதமர் நரேந்திரமோடி அமெரிக்கா சென்றிருந்தபோது சந்தித்த ஐந்து பெரிய நிறுவன அதிகாரிகளில் இருவர் அமெரிக்க நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பிலிருக்கும் இந்தியர்கள் – அடோப் நிறுவனத்தைச் சேர்ந்த சாந்தனு நாராயண், ஜெனரல் அடாமிக்ஸ் குளோபல் கார்ப்-பைச் சேர்ந்த விவேக் லால் – என்பது குறிப்பிடத்தக்கது.
படிப்படியான வளர்ச்சி
உலகளவில் நுகர்வோர்களுக்கான பொருள்களைத் (consumer goods) தயாரிக்கும் மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றான புராக்டர் அன்ட் கேம்பிள் (P&G) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக அக்டோபர் முதலாம் தேதி நியமிக்கப்பட்டிருப்பவர் மும்பையைச் சேர்ந்த சைலேஷ் ஜெஜூரிக்கர். தொழில்நுட்பம் தவிர்த்து மருத்துவம் சம்பந்தப்பட்டத் துறையிலும் இந்தியர்கள் தலைமைப் பொறுப்பில் இருந்து வருகின்றனர். குறிப்பாக, ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த மிகப் பெரிய மருந்துத் தயாரிப்பு நிறுவனமான நோவார்ட்டிஸில் கிட்டத்தட்ட 1.1 லட்சம் பணியாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இந்நிறுவனத்தின் ஆண்டு வருமானம் சுமார் 49 பில்லியன் டாலர். இதன் தலைமை நிர்வாக அதிகாரியாக இருப்பவர் தமிழகத்திலிருந்து 1970-களில் அமெரிக்காவில் குடியேறிய பெற்றோர்களுக்கு பிறந்து ஸ்விட்சர்லாந்தில் வசித்து வரும் டாக்டர் வசந்த் நரசிம்மன்.
இங்கிலாந்தைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான ரெக்கிட் பெங்கிஸரின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருப்பவர் சென்னையில் பிறந்த லக்ஷ்மண் நரசிம்மன். இவர் இந்தப் பதவியில் 2019-ஆம் ஆண்டிலிருந்து இருந்து வருகிறார். இது போல பன்னாட்டு நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் அனைவரும் சிறுவயதிலேயே மேற்கத்திய நாடுகளில் குடியேறி படித்துப் பட்டம் பெற்றவர்கள் இல்லை. மாறாக, பெரும்பாலானோர் இந்தியாவில் பிறந்து, படித்து மேற்படிப்புக்காக வெளிநாடுகளுக்குச் சென்று அதன் பின் சிறிய அளவில் தங்களது பணி வாழ்க்கையை ஆரம்பித்தவர்கள்.
இந்தியர்களின் தனித்துவம்
மேற்கத்திய நாடுகளில் அன்றாட வாழ்க்கையில் சிக்கல்கள், பிரச்சினைகள், கொந்தளிப்புகள் குறைவு. ஆனால், இந்தியாவில் அவைதான் வாழ்க்கை. எனவே பிரச்சினைகளை சமாளிப்பதில் அவர்களை விட நம்மவர்களுக்கு அனுபவமும் பக்குவமும் அதிகமாக இருப்பதோடு பல மொழிகள், பரந்துபட்ட கலாச்சாரப் பழக்க வழக்கங்கள் என பன்முகத் தன்மை கொண்ட ‘இந்தியத்துவமும்' (Indianness), அனுசரித்துப் போகும் வழக்கமும் அனைவரையும் ஏற்கச் செய்யும் முடிவுகளை எடுப்பதற்கானத் திறனைப் பயிற்றுவித்திருக்கிறது. இதோடு கல்வியும் தொழில் அனுபவமும் சேர்ந்து நம்மவர்களை வையத் தலைமை கொள்ளச் செய்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் ‘சிலிக்கான் வேலி’யில் உள்ள நிறுவனங்களில் ‘கோடிங்’ சம்பந்தமான வேலைகளில் மட்டுமே ஈடுபட்டுவந்த நம்மவர்கள் இன்றைக்கு ஃபார்ச்சூன் 500 பட்டியலில் இடம் பெறும் பல உலகளாவிய நிறுவனங்களுக்கு தலைமைப் பொறுப்பேற்கும் அளவுக்கு முன்னேறியிருப்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
கடினமான உழைப்பு
ஃபார்ச்சூன் 500 பட்டியலில் இடம் பெறும் நிறுவனங்களில் முப்பது சதவிகித நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பிலும், சிலிக்கான் வேலி பகுதியில் வேலை செய்யும் பொறியியலாளர்களில் மூன்றில் ஒருவரும், உலக அளவில் இயங்கி வரும் சிறந்த தொழில்நுட்ப நிறுவனங்களில் பத்தில் ஒரு நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பில் இந்தியர்கள் இருந்து வருகிறார்கள். 'இண்டயஸ்போரா' (Indiaspora) என்கிற அமைப்பு செய்த ஆய்வின்படி, இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட 58 பேர் தலைமை அதிகாரிகளாக 11 நாடுகளில் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் நிர்வகித்து வரும் நிறுவனங்களில் வேலை செய்து வரும் ஒட்டு மொத்தப் பணியாளர்களின் எண்ணிக்கை சுமார் 36 லட்சம். மொத்த வருமானம் ஏறக்குறைய 1 டிரில்லியன் டாலர். நிறுவனங்களின் சந்தை மூலதனம் சுமார் 4 டிரில்லியன் டாலர். இவர்களில் பெரும்பாலோர் அமெரிக்காவிலிருந்து செயல்பட்டு வருகிறார்கள்.
இந்திரா நூயி 2006-ஆம் ஆண்டு பெப்சிகோவின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டதிலிருந்து நம்மவர்கள் தலைமைப் பொறுப்பை நோக்கி முன்னேறுவது அதிகரித்திருக்கிறது. இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்குக் குடியேறி சென்றவர்கள் அமெரிக்க நிறுவனங்களில் தலைமைப் பொறுப்புக்கு நியமிக்கப்படும்போது அவர்கள் அந்நிறுவனங்களுக்கு அளிக்கக்கூடிய தனித்துவமான மதிப்புக் கூட்டல் என்ன என இந்திரா நூயியிடம் பத்திரிகையாளர் ஒருவர் கேட்டதற்கு அவர், ‘கடினமான உழைப்பு, அவரவர் சார்ந்த துறைகளில் திறமையானவர்களாக இருப்பது, சுயமாக இயங்குவது, ஆங்கிலம் பேசத் தெரிந்திருப்பது ஆகியவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்’ என்றார்.
அதிகரிக்கும் முக்கியத்துவம்
உலகளாவிய நிறுவனங்களில் இந்தியர்கள் தலைமைப் பொறுப்புக்கு வருவது அதிகரித்து வருவது குறித்து திருவனந்தபுரத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் ஃபெடெக்ஸ் நிறுவனத்தின் தலைவரும், தலைமைச் செயல்பாட்டு அதிகாரியுமான ராஜ் சுப்ரமணியம் மூன்று காரணங்களை முன்வைக்கிறார். ஒன்று, இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு வருபவர்கள் குறிப்பிடத்தக்க திறமைகளுடனும், டிஜிட்டல் மாற்றத்தின் மீதான உலகப் பொருளாதாரக் கவனத்துடனும் வருகிறார்கள். இரண்டு, அமெரிக்காவில் வேலை பார்க்கும் இந்தியர்களின் எண்ணிக்கை கடந்த 30-40 ஆண்டுகளில் அதிகமாகியிருக்கிறது. மூன்று, உலகளாவிய நிறுவனங்களில் இந்தியா மீது அதிகரித்து வரும் முக்கியத்துவம். தற்போதையை எண்ணிக்கையைக் கூட ஓர் ஆரம்பம் என்றுதான் அவர் கூறுகிறார். அந்த அளவுக்கு இந்தியர்களுக்கான முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது.
கோட்டயத்தைச் சேர்ந்த இரட்டையர்களான தாமஸ் குரியனும் (தலைமை நிர்வாக அதிகாரி, கூகுள் கிளவுட்), ஜார்ஜ் குரியனும் (தலைமை நிர்வாக அதிகாரி, NetApp) கவனிக்கத்தக்கவர்கள். ‘அமெரிக்காவில் இந்தியாவைப் பூர்விகமாகக் கொண்டவர்களின் எண்ணிக்கை சுமார் 45 லட்சம் ஆகும். பன்னாட்டு நிறுவனங்கள் அவர்களின் திறமைகளையும், குணங்களையும், தலைமைத்துவத் திறன்களையும் அங்கீகரித்து அதற்கேற்ற பொறுப்புகளை வழங்கி வருகின்றன’ என்று அமெரிக்க இந்தியர்கள் தலைமைப் பொறுப்பில் இருப்பது குறித்து ஜார்ஜ் குரியன் கூறுகிறார்.
கார்ப்பரேட் உலகில் மட்டுமல்லாமல் அமெரிக்க அரசியலிலும் ஜோ பைடன் அமெரிக்க அதிபர் ஆன பின்பு அமெரிக்க இந்தியர்களில் பலர் முக்கியப் பொறுப்புகளில் நியமிக்கப்பட்டுள்ளனர். துணை அதிபராக இருக்கும் கமலா தேவி ஹாரிஸும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது கூடுதல் சிறப்பாகும். பாரதி கூறிய ‘வையத் தலைமை கொள்’ என்பது அவனது நினைவு நூற்றாண்டைக் கொண்டாடும் இவ்வேளையில் குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்கு நிறை வேறியிருக்கிறது என்றால் அது மிகையில்லை.