Last Updated : 28 Mar, 2016 01:18 PM

 

Published : 28 Mar 2016 01:18 PM
Last Updated : 28 Mar 2016 01:18 PM

பிபிஎப்-ல் முதலீடு செய்யலாமா?

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டியை குறைப்போம் என்று அடிக்கடி சொல்லி வந்த மத்திய அரசு சில நாட்களுக்கு முன்பு அதற்கான வட்டியை குறைத்தது. இந்த புதிய வட்டி விகிதங்கள் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. பொதுவாக வட்டி விகிதங்களில் 0.25 சதவீத அளவுக்கு மாற்றம் இருந்ததையே இதுவரை பார்த்து வந்தோம். ஆனால் முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக அதிகபட்சம் 1.3 சதவீதம் வரை வட்டி குறைக்கப்பட்டது.

இது குறித்து பேசிய மத்திய நிதி அமைச்சர் வட்டி விகித குறைப்பு சரி என்று வாதாடினார். இப்போது குறைந்து வரும் வட்டி விகித நிலை யில் நாடு இருக்கிறது. ஒரு பக்கம் குறைவான வட்டியில் கடன் கொடுத்துவிட்டு, டெபாசிட் களுக்கு அதிக வட்டி வழங்க முடியாது. வட்டி விகிதங்கள் சந்தையால் நிர்ணயம் செய்யப் படுபவை. சந்தை நிலவரத்துக்கு ஏற்பதான் வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்யமுடியும்.

தற்போது பிபிஎப்க்கு(ஏப்ரல் 1-ம் தேதி முதல்) 8.1 சதவீதம் அளவுக்கு வட்டி வழங்கப்படுகிறது. இது மிகவும் சிறப்பான வட்டி விகிதமே. இதில் முதலீடு செய்யப்படும் தொகைக்கு வட்டி இல்லாததால் மொத்தமாக 11 சதவீதத்துக்கு மேல் வட்டி கிடைக்கும் என்று கூறினார்.

ஏற்கெனவே பிபிஎப்-ல் முதலீடு செய்தவர்கள் வட்டி விகிதம் குறித்த ஆராய்ச்சி செய்யாமல் தொடரப்போகிறார்கள். ஆனால் அடுத்த நிதி ஆண்டில் முதலீடு செய்யலாமா, வேண்டாமா என்பது குறித்த தெளிவில்லாமல் இருப்பவர்கள் பல கட்ட யோசனையில் இருப்பார்கள். இந்த வட்டி விகிதம் குறைவு இன்னும் அதிகம் கொடுக்கலாம் என்பது நம் கையில் இல்லை. ஆனால் இப்போதைய வட்டி விகித சூழ்நிலையில் பிபிஎப்-ல் தாராளமாக முதலீடு செய்யலாம் என்பதே வல்லுநர்களின் கருத்தாக இருக்கிறது.

பிபிஎப்-ல் ஏன் முதலீடு

பட்ஜெட்டுக்கு முன்பாக பிபிஎப் வரி விகிதத்தில் மாற்றம் கொண்டு வரப்படும் என்ற பேச்சு இருந்தது. அதாவது இஇஇ என்ற முறையில் இருந்து இஇடி என்ற வரம்புக்குள் கொண்டு வர திட்டமிட்டிருந்தது மத்திய அரசு. பிபிஎப்-ல் செய்யப்படும் முதலீடு, அதற்கு கிடைக்கும் வட்டி, முதிர்வின் போது கிடைக்கும் தொகை என அனைத்துக்குமே வரிச்சலுகை என்பது இஇஇ. இதில் இருந்து முதிர்வின் போது எடுக்கும் தொகைக்கு வரி செலுத்துவது போல அதாவது இஇடி முறைக்கு மாற்ற திட்டமிட்டிருந்தது மத்திய அரசு. ஆனால் பட்ஜெட்டில் மாற்றம் செய்யப்படவில்லை.

அதேபோல பிஎப் தொகையில் எடுக்கப்படும் 60 சதவீத தொகைக்கு வரி செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டது. அதில் பிபிஎப் இல்லை என்று அறிவிக்கப்பட்டு, பொதுமக்கள் எதிர்ப்பின் காரணமாக பிஎப் மீதான வரியையும் மத்திய அரசு நீக்கியது.

இப்போதைக்கு பிபிஎப்-ல் முதலீடு செய்யப்படும் தொகைக்கு வரி கிடையாது, வட்டிக்கு மட்டுமல்லாமல், முதிர்வின் போது கிடைக்கும் தொகைக்கும் வரி கிடையாது. இஇஇ பிரிவில் இருக்கும் மிகச்சில திட்டங்களில் இதுவும் ஒன்று. சமீபத்தில் மத்திய அரசு பல சிறு சேமிப்பு திட்டங்களுக்கு வட்டியை குறைத்தது. அதில் இஇஇ பிரிவில் இருப்பவை பிபிஎப் மற்றும் செல்வமகள் சேமிப்பு திட்டம். (sukanya samriddhi).

பிபிஎப் சலுகைகள் என்ன?

ஒரு காலத்தில் பிபிஎப்க்கு 12 சதவீதம் வட்டி இருந்தது. இப்போது 8.1 சதவீதம் என்ற அளவுக்கு வட்டி குறைந்துவிட்டது. இனியும் குறையாது என்பதற்கு என்ன உத்திரவாதம் என்ற கேள்விகள் நியாயமானவை. வருங்காலத்தில் வட்டிவிகிதம் குறைக்கப்பட கூட செய்யலாம். வட்டி விகிதம் சந்தை நிலவரத்துக்கு ஏற்ப இருப்பதால் அனைத்து வட்டி விகிதங்கள் குறையும் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.

பிபிஎப்-ல் ஒருவர் ஆண்டுக்கு 1.5 லட்ச ரூபாய் முதலீடு செய்ய முடியும். இந்த தொகைக்கு 8.1 சதவீத வட்டி. கிடைக்கும் வட்டி அடுத்த வருடம் அசலில் சேரும். அதன் பிறகு அந்த தொகைக்கு வட்டி என்ற கூட்டு வட்டி முறையில் இந்த திட்டம் செயல்படுகிறது என்பதால் முதிர்வின் போது பெரிய தொகை கிடைக்க வாய்ப்புண்டு.

தவிர இந்த திட்டத்தில் முதலீடு செய்த தொகையை 15 வருடங்களுக்கு எடுக்க முடியாது என்பதை சிலர் பாதகமாக பார்க்கின்றனர். தொகையை வெளியே எடுக்க முடியாது என்பதே சாதகம்தான். நீண்ட காலம் எடுக்காமல் இருக்கும் போது பலன் அதிகம் கிடைக்கும் ஓய்வு காலத்துக்கு பயனுள்ளதாக இருக்கும்.

வரிச்சலுகை பெறுவதற்காகவே இந்த திட்டத்தில் பலர் முதலீடு செய்கிறார்கள் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் உண்மை அதுவல்ல. பிபிஎப் திட்டத்தில் முதலீடு செய்யும் பட்சத்தில் 80சி பிரிவில் வரிச்சலுகை பெறலாம். இந்த பிரிவின் கீழ் அதிகபட்சம் 1.5 லட்ச ரூபாய் வரிச்சலுகை பெற முடியும். அதிக சம்பளம் வாங்குபவர்கள் 1.5 லட்ச ரூபாயை வேறு வகைகளில் (காப்பீடு, இஎல்எஸ்எஸ்) காண்பித்துவிடுவார்கள். மீதமுள்ள தொகைக்கு 30 சதவீதம் வரி செலுத்திவிட்டு பிபிஎப்-ல் முதலீடு செய்வார்கள். காரணம். பிபிஎப்-ல் அதிக காலத்துக்கு முதலீடு செய்ய முடியும். கூட்டு வட்டி என்பதால் எடுக்கும் போது அதிக தொகை கிடைக்கும். கிடைக்கும் `அதிக தொகைக்கு’ வரி செலுத்த தேவையில்லை என்பதால் தற்போது 30 சதவீத வரி செலுத்திய பிறகும் பிபிஎப்-ல் முதலீடு செய்கிறார்கள்.

நீண்ட காலத்துக்கு முதலீடு செய்ய முடியும். கிடைக்கும் தொகைக்கு வரி விலக்கு உண்டு, ஓய்வுகாலத்துக்கு பயன்படுத்திகொள்ள முடியும் என்பதால் வட்டி குறைவு என்பதை பற்றி யோசிக்காமல் முதலீடு செய்யலாம். தற்போது வேறு திட்டங்களில் முதலீடு செய்து, 15 வருடங்களுக்கு பிறகு அதிகபட்ச வரி செலுத்துபவராக இருந்தால்? அப்போது யோசித்து பிரயோஜனமில்லை.

செல்வமகள் சேமிப்பு திட்டம்

சமீபத்தில் மத்திய அரசு வட்டி குறைத்த திட்டங்களில் இதுவும் ஒன்று. இந்த திட்டமும் இஇஇ பிரிவில் வருகிறது. அதைவிட முக்கியம் பிபிஎப்-யை விட 0.5 சதவீதம் வட்டி அதிகம். தற்போது 9.2 சதவீதமாக இருக்கும் வட்டி ஏப்ரல் 1-ம் தேதிக்கு பிறகு 8.6 சதவீதமாக குறைக்கப்படும்.

பிபிஎப் அனைவருக்குமான முதலீட்டு திட்டம். ஆனால் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் 10 வயதுக்குள் பெண் குழந்தைகள் வைத்திருப்பவர்கள் மட்டுமே முதலீடு செய்ய முடியும். பிபிஎப்-ல் முதலீடு செய்வதற்கான அனைத்து காரணங்களும் இதற்கு பொருந்தும். தவிர கூடுதல் வட்டியும் உண்டு.

இதுவரை நிதி ஆண்டுக்கு ஒரு முறை வட்டி விகிதம் வழங்கப்பட்டது. இனி காலாண்டுக்கு ஒரு முறை வட்டி விகிதம் மாற்றி அமைக்கப்பட உள்ளது. வட்டி விகிதம் உயர்கிறது, குறைகிறது என்பது பற்றி கவலைப்படாமல் இந்த இரண்டு திட்டங்களிலும் முதலீடு செய்யலாம். காரணம், இவை எதிர்காலத்துக்கானவை.

- karthikeyan.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x