

riyas.ma@hindutamil.co.in
கரோனா, வேலைச் சூழல் சார்ந்து மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்திருக்கிறது. முன்னெப்போதையும்விடவும் 2021-ல் மிக அதிக எண்ணிக்கையில் பணியாளர்கள் அவர்கள் பணிபுரியும் நிறுவனத்திலிருந்து ராஜினாமா செய்து வேறு நிறுவனத்தை நோக்கி நகர்கின்றனர். அமெரிக்காவில் இவ்வாண்டு ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 43 லட்சம் பணியாளர்கள் வேலையிலிருந்து ராஜினாமா செய்துள்ளனர். மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் ஆய்வு ஒன்று, உலக அளவில் 40 சதவீத பணியாளர்கள் இவ்வாண்டில், அவர்கள் வேலை செய்யும் நிறுவனத்திலிருந்து ராஜினாமா செய்யும் எண்ணத்தில் இருப்பதாகக் கூறுகிறது. கடந்த ஆண்டு கரோனா பரவத் தொடங்கிய சமயத்தில், நிறுவனங்கள் ஆட்குறைப்பை மேற்கொண்டன. வேலையிழப்பு மிகப் பெரும் பிரச்சினையாக வெடித்தது. ஆனால், இப்போது பணியாளர்கள் தாமாகவே நிறுவனத்தை விட்டு விலகுகின்றனர். ஓராண்டுக்குள்ளாகவே ஏன் இவ்வளவு பெரிய மாற்றம்?
ஏனென்றால், வேலையைத் தாண்டி தனிப்பட்ட வாழ்க்கை ஒன்று இருக்கிறது. அதை முழுமையாக வாழ வேண்டும் என்பதை இந்த ஓராண்டு காலத்தில் மக்கள் தீவிரமாக உணர்ந்துள்ளனர். அதன் விளைவாக, அதிக நேரம் வேலை வாங்கும், குறைந்த ஊதியம் வழங்கும் நிறுவனங்களில் இனியும் பணிபுரிய அவர்கள் விரும்பவில்லை. தற்போது அதிக அளவில் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகிவருகிற நிலையில், அத்தகைய நிறுவனங்களிலிருந்து விலகுகின்றனர்.
ராஜினாமா அதிகரிப்பதில் வீட்டிலிருந்து பணிபுரிதல் என்பது முக்கியக் காரணமாக உள்ளது. சென்ற ஆண்டு கரோனா முதல் அலை தீவிரம்கொள்ளத் தொடங்கிய சமயத்தில் உலக அளவில் நிறுவனங்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் நடைமுறைக்கு மாறின. பணியாளர்கள் அவர்கள் வீட்டிலிருந்தபடியே வேலைகளைச் செய்து முடித்தனர். ஒருவகையில் அது வேலை நேரம் சார்ந்து நெகிழ்வை அளித்தது. அதாவது விரும்பிய நேரத்தில் வேலை பார்த்துக்கொள்ளலாம். இந்நிலையில் தற்போது கரோனா பரவல் முற்றிலும் குறைந்துள்ள நிலையில், பல நிறுவனங்கள் மீண்டும் அதன் பணியாளர்களை அலுவலகத்துக்கு அழைக்கத் தொடங்கி இருக்கின்றன.
ஆனால், வீட்டிலிருந்து வேலை செய்வதில் உள்ள சாதகத்தை உணர்ந்த பணியாளர்கள் அலுவலகம் சென்று வேலை பார்ப்பதில் சலிப்பு காட்டுகின்றனர். ஏனென்றால், அலுவலகத்துக்குச் சென்று வேலை பார்க்க வேண்டுமென்றால், தினமும் போக்குவரத்து நெருக்கடியில் பயணம் செய்ய வேண்டும். பயணத்திலே குறிப்பிட்ட நேரம் செலவாகும். பலர் அலுவலகத்துக்கென்றே, சொந்த ஊரிலிருந்து புலம்பெயர்ந்து அலுவலகம் இருக்கும் நகரில் வீடு எடுத்துத் தங்க வேண்டும். ஊதியத்தில் பெரும் பகுதி வாடகைக்கு சென்றுவிடும். இதனால், எந்த நிறுவனம் வீட்டிலிருந்து வேலை பார்ப்பதை நடைமுறையாகக் கொண்டிருக்கிறதோ அந்நிறுவனத்தை நோக்கி செல்ல ஆர்வம் காட்டுகின்றனர்.
30 – 45 வயதுக்குட்பட்டவர்களே அதிக எண்ணிக்கையில் ராஜினாமா செய்வதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. தாங்கள் சார்ந்த துறையில் நல்ல பணி அனுபவமும், திறனும் கொண்டிருப்பதால் எளிதில் வேலையைவிட்டு விலகும் முடிவுக்கு அவர்கள் வருகின்றனர். ஐடி துறையில் மிகப் பெரிய அளவில் வேலைவாய்ப்பு உருவாகி வருவதால்,
இத்தகைய அனுபவம் கொண்டவர்களுக்கு புதிய வேலையைப் பெறுவது சிரமமாக இல்லை. மேற்கத்திய நாடுகளில் முழு நேர வேலையைவிட்டு விலகி பகுதி நேரம் மற்றும் ப்ரீலான்ஸ் வேலையை நோக்கி நகர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. வேலையைவிட்டு விலகுதல் ஐடி போன்ற துறைகளில் மட்டுமல்ல எல்லா துறைகளிலும், எல்லா நிலைகளிலும் நடந்துவருகிறது.
கரோனா முதல் அலையின்போது சொந்த ஊருக்குத் திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்கள் இன்னும் முழுமையாக நகரங்களுக்குத் திரும்பவில்லை. இவ்வாண்டில் வேலைக்காக புலம்பெயரும் தொழிலாளிகளின் எண்ணிக்கை 10 சதவீதம் அளவில் சரிந்துள்ளது. பெரு நகரங்களில் கட்டிட வேலைகளில், உணவு விடுதிகளில், வாயிற்காவலர் பணிகளில் புலம்பெயர் தொழிலாளர்களே அதிக அளவில் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இந்நிலையில், அவ்வேலைகளில் ஆட்களுக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. சென்ற ஆண்டு ஊரடங்கின்போது சொந்த ஊருக்குத் திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்களில் பலர், அவர்களது சொந்த கிராமங்களிலே வேலையைத் தேடிக்கொண்டனர். பெரும்பாலானோர் விவசாய வேலைகளிலும், மத்திய அரசின் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வரும் வேலைகளிலும் ஈடுபடுகின்றனர்.
இப்படி பணியாளர்கள் வேலையிலிருந்து விலகிச்செல்வது நிறுவனங்களுக்கு நெருக்கடியாக அமைந்துள்ளது. நிறுவனங்கள் பணியாளர்களைத் தக்க வைப்பதற்காக, அவர்களுக்கு கூடுதல் சலுகை வழங்க வேண்டிய நிலையிலும், அவர்களுடன் நல்ல உறவை கடைப்பிடிக்க வேண்டிய நிர்பந்தத்திலும் உள்ளன. இனிவரும் காலங்களில் பணியாளர்கள் நலனை முதன்மைப்படுத்தும் பணிச்சூழல் உருவாகட்டும்.