Published : 14 Mar 2016 10:52 AM
Last Updated : 14 Mar 2016 10:52 AM

உன்னால் முடியும்: தடைகளை தாண்ட வைத்த தன்னம்பிக்கை

தொழில்வளர்ச்சி, கல்வி, வேலைவாய்ப்பு என அனைத்திலும் பிற மாவட்டங்களோடு ஒப்பிடுகையில் பின்தங்கிய மாவட்டம் பெரம்பலூர். அங்கிருந்து ஒரு தொழில் முனைவோர் உருவாகிறார் என்றால் மிகவும் சவாலானதுதான். அதிலும் பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்ப பின்னணியிலிருந்து முதல் தலைமுறையாக கல்வி கற்பவர்களுக்கு உள்ள சிரமங்கள் என்பது மேலும் சவாலானது. அந்த சவால்களிலிருந்து வந்தவர் அருண்குமார். தனது ஆகர் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் மூலம் சோலார் பேனல்கள் உற்பத்தி செய்து, சந்தைப்படுத்தி வரும் இவர் இந்த வாரம் ``வணிக வீதி’’-யில் இடம்பெறுகிறார்.

எங்கள் கிராமத்தில் நான்தான் முதல் பட்டதாரி, முதன் முதலில் வேலைக்குச் சென்றதும், சொந்த தொழில் செய்வதும் நான்தான் என்று பேசத்தொடங்கினார். அப்பா விவசாயி, அம்மா சத்துணவு அமைப்பாளர். பள்ளி படிப்பில் கொஞ்சம் விளையாட்டுத்தனம் இருந்தாலும், கல்லூரி காலத்தில் மிகுந்த பொறுப்போடு இருந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். படித்து முடித்ததும் சொந்தமாக பிசினஸ் ஆரம்பிக்க வேண்டும் என்பதுதான் எனது எண்ணம். ஆனால் முதலில் கற்றுக் கொள்வது அவசியம் என்பதை உணர்ந்தேன். படிப்பு முடித்ததும் ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். அங்கு ஒரு வருடம் பணியாற்றினேன். இதுபோல நான்கு வருடங்களில் நான்கு நிறுவனங்கள் சேர்ந்தேன். தொழில்நுட்பம், மார்கெட்டிங் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு சேவை என நேரடி அனுபவங்கள் இந்த நிறுவனங்கள் மூலம் கிடைத்தன.

இதற்கடுத்து சொந்த தொழிலில் இறங்கலாம் என நம்பிக்கை வந்தது. 2011 வாக்கில் மின்தட்டுப்பாடு அதிகமாக இருந்ததால் இன்வெர்ட்டர் தயாரித்து விற்பனை செய்யத் திட்டமிட்டேன். இன்வெர்ட்டர்களுக்கான தேவைகள் அதிகமாக இருந்ததால் விற்பனையும் நன்றாக இருந்தது. ஆனால் இந்த தொழிலில் உள்ள சிக்கல் என்னவென்றால், தொழிலில் நீண்ட காலத்துக்கு நீடிப்போம் என்கிற நம்பிக்கையை மக்களுக்குக் கொடுக்க வேண்டும். சர்வீஸ் கிடைக்கும் என்கிற நம்பிக்கை வந்தால்தான் வாங்குவார்கள். ஏனென்றால் இதுபோன்ற தொழில்களில் ஈடுபவர்கள் பலரும் அந்தந்த பருவ காலத்தில் மட்டும் கவனம் செலுத்துபவர்களாக இருப்பார்கள். இதனால் தொழிலில் வளர முடியாது. எனவே விற்பனை செய்வதற்கான வேலைகளுடன் நீண்ட காலத்துக்கும் நிற்பதற்கான அடிப்படைகளுக்கும் திட்டமிட்டேன்.

இதனால் தொழிலை விரிவாக்கம் செய்யும் முயற்சியாக சூரிய மின்உற்பத்தி துறையில் இறங்கினேன். வீடுகளுக்கான சூரிய ஆற்றல் மின்விளக்குகள் அமைத்துக் கொடுப்பதில் கவனம் செலுத்தினேன். இதற்கான மூலப் பொருட்களை வெளி நாடுகளிலிருந்துதான் இறக்குமதி செய்ய வேண்டியிருந்தது.

சூரிய பலகைகள் (சோலார் பேனல்கள்) இங்கு தயாரிக்கும் பட்சத்தில் விலை குறைவாக விற்பனை செய்ய முடியும். மேலும் தொழிலில் நீண்ட காலத்துக்கு நீடிக்க வேண்டும் என்றால் உற்பத்தியாளராக உருவானால் மட்டும்தான் சாத்தியம் என்பதை உணர்ந்தேன். இதற்காக ஜெர்மனி, சிங்கப்பூர் நாடுகளுக்குச் சென்று இந்த தொழில்நுட்பத்தை கற்றுக் கொண்டு வந்தேன்.

இதற்கான முதலீடைக் கேட்டு பேங்க் ஆப் பரோடா வங்கியை அணுகினேன். எனது திட்ட வரைவு, வெளிநாட்டு பயிற்சி, கடந்த கால செயல்களை பார்த்து எந்த பிணையமும் இல்லாமல் ஒரு கோடி ரூபாய் கடனுதவி வழங்க முன்வந்தனர். பெரம்பலூரிலேயே ஒரு வாடகை கட்டிடத்தில் சோலார் பேனல்கள் உற்பத்தியில் இறங்கினேன்.

வீடுகளுக்கான சோலார் விளக்குகள் அமைத்துக் கொடுப்பது உள்ளிட்ட பல சூரிய மின்னாற்றல் திட்டங்களை இப்போது எனது நிறுவனத்தின் மூலம் தமிழகத்தின் பல பகுதிகளில் அமைத்து கொடுத்து வருகிறேன். தவிர பேனல்கள் சில்லரை விற்பனையும் செய்கிறேன். தற்போது சோலார் பேனல்கள் தயாரிப்பில் முக்கியமான செல்தான் மூலப்பொருளாக இருக்கிறது. அதை தயாரிப்பதற்கான இலக்கு வைத்துள்ளேன். இதற்கிடையில் வங்கிக் கடனை முறையாகக் கட்டி வருவதால், கூடுதலாக கடனுதவி வழங்க வங்கியும் தயாராக உள்ளது. தற்போது சிட்கோவின் மூலம் தொழிலகம் அமைக்க சொந்தமாக இடம் வாங்கியுள்ளோம்.

இப்போதுகூட எங்களுக்கு நல்ல வீடு கிடையாது. வீடு கட்டலாம் என நான் சொன்னாலும், வேண்டாம் முதலில் தொழிற்சாலை கட்டுங்கள், பிறகு வீடு கட்டுவோம் என என்னை மேலும் ஊக்கப்படுத்துகிறது என் குடும்பம். பின்தங்கிய சூழலில் படித்து உத்வேகமுள்ள 20 இளைஞர்களுக்கு வேலை அளித்து வருகிறேன். எல்லோருமே தங்களை ஏதாவது ஒரு வகையில் முன்னேற்றிக் கொள்ள ஆர்வமுடன் உள்ளவர்கள் என்பதால் நேரம் காலம் பார்க்காமல் வேலை செய்கிறோம். தொழிலில் நீண்ட காலம் தாக்கு பிடிப்பீர்களா என கேட்கும் வாடிக்கையாளர்களுக்கு 24 மணி நேரமும் வாடிக்கையாளர் சேவை கொடுப்போம் என்று உறுதியளிக்கிறோம்.

வெற்றியாளராக உருவாகுவதற்கான வாய்ப்புகளும், காரணங்களும் எவ்வளவு வேண்டுமானாலும் உங்களைச் சுற்றி இருக்கலாம். ஆனால் அதைப் பயன்படுத்திக் கொள்ளும் ஆர்வம் உங்களிடம் இருக்க வேண்டும். எனக்குள் இருந்த தன்னம்பிக்கை மட்டுமே எல்லா சவால்களையும் தாண்ட வைத்தது. இப்போது எனது ஊரில் என்னை அடையாளம்காட்டி பலரும் உத்வேகம் அடைகின்றனர். இதுதான் எனது உழைப்பின் மிகப் பெரிய பலன் என்று கருதுகிறேன் என்று முடித்தார்.

நீரை மகேந்திரன்

maheswaran.p@thehindutamil.co.in


Sign up to receive our newsletter in your inbox every day!

 
x