என்ன செய்யப்போகிறது சீனா?

என்ன செய்யப்போகிறது சீனா?
Updated on
4 min read

நீங்கள் அந்த வீடியோவைப் பார்த்திருக்கக்கூடும். இல்லையென்றால், யூடியூப்பில் 15 high rise building demolished என்று தேடிப் பாருங்கள். ஆகஸ்ட் 27 அன்று, சீனாவின் குன்மிங் நகரில் உள்ள 15 அடுக்குமாடி கட்டிடங்கள், 4.6 மெட்ரிக் டன் வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட 85,000 வெடிபொருள்கள் கொண்டு 45 வினாடிகளில் தகர்க்கப்பட்டன. சீட்டுக்கட்டுகள் சரிவதுபோல் அந்த கான்கிரீட் கட்டிடங்கள் சரிந்துவிழுந்தன.

2013-ம் ஆண்டு முதலே போதிய பணம் இல்லாமல் கட்டிடப் பணியைத் தொடர முடியாமல் பாதியில் நிறுத்தப்பட்டக் கட்டிடங்கள் அவை. சீனாவில் இது புதிதல்ல. 2017ம் ஆண்டு இதே போல் ஜெங்ஜோ நகரில் பாதியில் நிறுத்தப்பட்டிருந்த 36 அடுக்குமாடிக் கட்டிடங்கள் வெடிவைத்துத் தகர்க்கப்பட்டன. சமீப ஆண்டுகளாக சீனாவில் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் கடும் சரிவைச் சந்தித்து வருகின்றன. தற்போது அது சீனாவின் பொருளாதார அடித்தளத்தையே ஆட்டம் காண செய்யும் அளவுக்கு விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. சமீபத்திய உதாரணம் -எவர்கிராண்ட்.

எவர்கிராண்ட் சாம்ராஜ்யத்தின் சரிவு சீனாவின் மிகப் பெரும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் ஒன்றான எவர்கிராண்ட், 300 பில்லி
யன் டாலர் அளவில் கடன் நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறது என்ற செய்தி கடந்த சில வாரங்களாக உலக அளவில் பேசுபொருளாக உள்ளது.

சீனாவில் ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சியடையத் தொடங்கிய காலகட்டமான, 1996ம் ஆண்டு தொழிலதிபர் ஹூய் கா யானால் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம்தான் எவர்கிராண்ட். ரியல் எஸ்டேட் துறையில் பெரும் லாபம் ஈட்டத் தொடங்கியதையெடுத்து மின்சார கார் தயாரிப்பு, விளையாட்டுத் துறை, தீம் பார்க், உணவு மற்றும் குடிபானங்கள் தயாரிப்பு என பல பிரிவுகளிலும் கால் பதித்தது. 2010-ம் ஆண்டு சீனாவின் கால்பந்து அணி ஒன்றை விலைக்கு வாங்கியது. 1.7பில்லியன் டாலர் செலவில் உலகின் மிகப் பெரிய கால்பந்து மைதானத்தையும் கட்டும் பணியில் இறங்கியது. அந்த அளவுக்கு எவர்கிராண்டின் சாம்ராஜ்யம் கடந்த 15 ஆண்டுகளில் பரந்து விரிந்தது. அந்நிறுவனத்தில் கிட்டத்தட்ட 2 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். 38 லட்சம் பேர் மறைமுக வேலைவாய்ப்பைப் பெறுகின்றனர்.

சீன மக்கள் இந்நிறுவனத்தின் மீது பெரும்நம்பிக்கைக் கொண்டிருந்தனர். அம்மக்கள் சொந்த வீடு வாங்கும் கனவில், வீடு கட்டப்படு
வதற்கு முன்பாகவே இந்நிறுவனத்திடம் பணம் கொடுத்தனர். அவ்வகையில், வீடு கட்டித்தருவதாக 14 லட்சம் பேரிடம் 195 பில்லியன் டாலர்பணம் திரட்டியது எவர்கிராண்ட். சீன வங்கிகள் மட்டுமல்லாது, வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் உட்பட 300-க்கும் மேற்பட்ட வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் இந்நிறுவனத்துக்கு கடன்வழங்கியுள்ளன. இப்படியான ஒரு நிறுவனம் மிகப் பெரும் கடன் நெருக்கடியை எதிர்கொண்டால் என்ன ஆகும்?

“எவர்கிராண்ட் நிறுவனம் 300 பில்லியன் டாலர் அளவில் கடன் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. போதிய நிதி இல்லாமல் கட்டு
மானப் பணிகளைத் தொடரமுடியாததால், 800 கட்டங்கள் பாதியில் நிற்கின்றன” என்ற செய்தி கடந்த மாதம் வெளியானதும், சீன மக்கள் அதிர்ச்சியில் உறைந்துபோயினர். இந்தச் செய்தியானது சீனாவில் மட்டுமல்ல, உலக நாடுகளிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உலகளாவிய பங்குச்சந்தைகளில் கடும் சரிவு ஏற்பட்டது. எலான் மஸ்கின் சொத்து மதிப்பில் 7.2 பில்லியன் டாலர் சரிந்தது. அமேசான் நிறுவனர் ஜெஃப் பிஸோஸ் 5.6 பில்லியன் டாலர் இழப்பைச் சந்தித்தார். உலகின் 500 கோடீஸ்வரர்கள் மொத்த
மாக 135 பில்லியன் டாலர் அளவில் இழப்பைச் சந்தித்தனர். இந்தியா அதன் இரும்புத் தயாரிப்பில் பெரும் பகுதியை சீனாவுக்கு ஏற்றுமதி செய்துவருகிறது. எவர்கிராண்ட் விவகாரத்தை ஒட்டி, இந்திய இரும்பு தயாரிப்பு நிறுவனங்களின் பங்கு மதிப்பு சரிவைக் கண்டது.

2008-ம் ஆண்டு அமெரிக்காவின் லேமன் பிரதர்ஸ் நிறுவனம் ஏற்படுத்தியது போன்றொரு உலகளாவிய பொருளாதார நெருக்கடியை எவர்கிராண்ட் நிறுவனமும் ஏற்படுத்துமா என்ற அச்சம் எழுந்தது. ஆனால், “சர்வதேச கடன் பத்திரங்கள் சார்ந்து 20 பில்லியன் டாலர் அளவிலே எவர்கிராண்ட் கடன்பட்டுள்ளது. உலகளாவிய அளவில் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தும் அளவுக்கு இது பெரிய தொகையல்ல” என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். அதேசமயம், எவர்கிராண்டின் மொத்த கடன் தொகை சீனாவில் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது என்று அவர்கள் கூறுகின்றனர். அந்தவகையில் எவர்கிராண்ட் தற்போது சந்தித்திருக்கும் பிரச்சினை அந்த நிறுவனத்தின் பிரச்சினை மட்டுமல்ல, சீனாவின் பொருளாதாரக் கட்டமைப்பு சந்தித்திருக்கும் பிரச்சினையும் கூட.

சீனாவும் ரியல் எஸ்டேட்டும்

சீனாவின் பொருளாதார வளர்ச்சியில் ரியல் எஸ்டேட் துறையின் பங்கு முதன்மையானது. சீனாவின் ஜிடிபியில் 29 சதவீதம் அளவில் ரியல் எஸ்டேட் துறை பங்கு வகிக்கிறது. சீனாவைப் பொருத்தவரையில் நிலம் அரசின் கைகளில் இருக்கும். அதாவது தனிநபர்கள் நிலத்துக்கு உரிமை கோர முடியாது. மாறாக, சீன அரசு நிலங்களை குத்தகைக்கு விடும். வீடுகளுக்கு என்றால் 70 ஆண்டுகளுக்கு, நிறுவனங்களுக்கு என்றால் 50 ஆண்டுகளுக்கு குத்தகைவிடப்படும். இவ்வாறு நிலங்களை குத்தகைக்கு விடுவதன் மூலம் சீனா பெரும் வருவாய் ஈட்டுகிறது. 2009 – 2015 வரையிலான காலகட்டத்தில் 3.4 டிரில்லியன் டாலர் (22 டிரில்லியன் யுவான்) சீன அரசு வருவாய் ஈட்டியுள்ளது. அந்த வருவாய் மூலமே சீன அரசு உள்கட்டமைப்புத் திட்டம் முதல் சமூக மேம்பாட்டுத் திட்டங்கள் வரை மேற்கொள்கிறது. எனவே, சீன அரசு ரியல் எஸ்டேட் துறையை ஊக்கப்படுத்தியது.

1996-ம் ஆண்டு சீன மக்கள் தொகையில் 29 சதவீத மக்களே நகர்புறத்தில் வசித்தனர். 2018ம் ஆண்டில் அது 60 சதவீதமாக உயர்ந்தது. இந்த இருபது ஆண்டு காலகட்டத்தில் சராசரியாக ஒவ்வொரு ஆண்டு 1.7 கோடி மக்கள் நகரங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். இதனால் ஆண்டுக்கு 80 லட்சம் அளவில் வீடுகளுக்கான தேவை அதிகரித்தது. சீனாவில் கட்டிடங்கள் கட்டப்படுவது நிறுத்தப்பட்டால் அதன் ஜிடிபி குறைந்துவிடும் என்று கூறப்படுவதுண்டு. அந்தவகையில், ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில் சீன வங்கிகள் ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு கடன்களை வாரி இறைத்தன.

2008-ம் ஆண்டு சீன ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் வாங்கிய கடன் 1.63 டிரில்லியன் டாலர். 2016ம்ஆண்டில் அது 7.59 டிரில்லியன் டாலராக உள்ளது. அந்த அளவுக்கு ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் வங்கிகளிடமிருந்து கடன் வாங்குதல் அதிகரித்தது. ஆனால், கட்டிடங்கள் கட்டப்பட்ட அளவுக்கு அங்கு குடியேற்றம் நிகழ்வில்லை.

தற்போது சீனாவில் 9 கோடி மக்கள் புதிதாக குடியேறும் வகையில் அடுக்குமாடி குடியிருப்புகள் காலியாக இருக்கின்றன. பொது
வாக சீனாவில்ஒரு குடும்பம் என்றால் மூன்று பேர் சராசரி. அந்த வகையில் 3கோடி குடும்பங்கள் அவற்றில் குடியேறலாம். அந்த அளவுக்கு சீனாவில் தேவைக்கும் அதிகமாக கட்டிடங்கள் கட்டுப்பட்டுள்ளன. ஒருபக்கம் கட்டிடங்கள் காலியாக உள்ளன. மறுபக்கம் வீடு வாங்கும் அளவில் மக்களிடம் பணம் இல்லை. ஆனால், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் வங்கிகளிடமிருந்து கடன் வாங்குதல் மட்டும் அதிகரித்துக் கொண்டே சென்றது. இப்படியே நீடித்தால், சீனாவின் பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்படுத்தும். நீண்ட கால அளவில் ரியல் எஸ்டேட் துறையை நம்பி இருக்க முடியாது என்பதை சீன அரசு உணரத்தொடங்கியது.

இந்தச் சூழலில்தான், 2017ம் ஆண்டு சீன அதிபர் ஜின்பிங் ஒரு கூட்டத்தில், ‘வீடுகள் என்பது மக்கள் வாழ்வதற்காகத்தான். காட்சிப்படுத்துவதற்காக இல்லை’ என்று பேசினார். ரியல் எஸ்டேட் துறையில் நிலவும் அதீதப் போக்கை கட்டுப்படுத்தும் நோக்கில் கட்டுப்பாடுகள் கொண்டுவரத் தொடங்கினார். சென்ற ஆண்டு ஜின்பிங், ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் கடன் தொடர்பாக மூன்று விதிமுறைகளைக் கொண்டுவந்தார். ஒன்று, நிறுவனத்தின்கடன் மற்றும் அதன் சொத்து மதிப்புகளுக்கிடையிலான விகிதாச்சாரம் 70 சதவீதத்துக்கு மேலாக இருக்கக்கூடாது. இரண்டு, நிறுவனத்தின் மொத்த கடன் மற்றும் பங்குகள் விகிதாச்சாரம் 100 சதவீதத்துக்கு மேலாக இருக்கக்கூடாது. மூன்று, நிறுவனத்தின் குறுகிய கால கடன் மற்றும் பண இருப்பு விகிதாச்சாரம் 100 சதவீதத்துக்கு மேலாக இருக்க வேண்டும்.

இந்தப் புதிய கட்டுப்பாடுகள் பெரிய நிறுவனங்களுக்கு கடும் நெருக்கடியாக அமைந்தன. இந்தக் கட்டுப்பாடுகள் காரணமாக பெரிய நிறுவனங்கள் எதிர்கொண்டுவந்த கடன் நெருக்கடி வெளிவர ஆரம்பித்திருக்கிறது. அப்படி வெளியானதுதான்எவர்கிராண்ட் விவகாரம்.இப்படி சீன நிறுவனங்கள் பெரும் கடன் நெருக்கடியை எதிர்கொண்டு, தொடர்ந்து செயல்பட முடியாமல் முடங்கும் நிலைக்கு உள்ளாகுவது தொடர்கதையாக மாறியிருக்கிறது. இந்தச் சூழலில் கடன் மூலமான முதலீட்டுத் திட்டங்களை மேற்கொள்வது குறித்து சீனா மறுபரீசிலனை செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

புதிய சீனா

இது சீனாவுக்கு தடுமாற்றமான காலகட்டமா என்றால், ஆம், தடுமாற்றமான காலகட்டம்தான். ஆனால், சீன அரசு அதன் பொருளாதாரக் கட்டமைப்பு சார்ந்து வேறு திட்டத்தில் இருக்கிறது. தற்போது சீனா அதன் பொருளாதாரக் கட்டமைப்பை டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மற்றும் பசுமை தொழில்நுட்பங்கள் சார்ந்து வலுப்படுத்திவருகிறது. அதேசமயம், தனியார் நிறுவனங்கள் அரசை விட பலம் பொருந்தியவையாக மாறக்கூடாது என்பதில் சீன அரசு மிகக்கவனமாக இருக்கிறது. ஜின்பிங் மேற்கத்திய முதலாளித்துவ பொருளாதார கட்டமைப்பை விரும்பவில்லை. செல்வங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்; பெரும் தொழில் அதிபர்கள், தொழில்முனைவோர்கள் தங்கள் தனிப்பட்ட வளர்ச்சிக்காக அல்லாது நாட்டின் மேம்பாட்டுக்காக பாடுபட வேண்டும் என்ற நோக்கில் தொழில் சார்ந்து புதிய கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தி வருகிறார். மாவோ பாதையில் சீனாவின் பொருளாதாரம் மற்றும் சமூகக் கட்டமைப்பை மாற்றி அமைக்கும் முயற்சியில் ஜின்பிங் இறங்கியிருக்கிறார்.

உலகின் இரண்டாவது வல்லரசு நாடாக சீனா திகழ்கிறது. இந்தச் சூழலில், புதிய பாதையில் பயணத்தைத் தொடங்கும் சீனா, தற்போது ரியல்எஸ்டேட் துறையில் ஏற்பட்ட சரிவிலிருந்து நாட்டின் பொருளாதாரத்தை எப்படி மீட்கப் போகிறது என்
பதையும், அது உருவாக்க முயலும் புதியபொருளாதாரக் கட்டமைப்பு அங்கு என்னவிதமான மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதையும் உலகமே உற்று நோக்கத் தொடங்கியிருக்கிறது.

முகம்மது ரியாஸ், riyas.ma@hindutamil.co.in

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in