

கோவை குனியமுத்தூரைச் சேர்ந்தவர் ஜெயந்தி. குறிப்பிடும்படியான கல்வித்தகுதி கிடையாதுதான். ஆனால் கொசுவிரட்டி புட்டிகள் தயாரிப்பில் பெரிய நிறுவனங்களோடு போட்டி போட்டு வருகிறார் என்றால் நம்ப முடியவில்லையா? ஆனால் அதுதான் உண்மை. இன்னும் அதிக முதலீடு இருந்தால் சந்தையில் அசைக்க முடியாத இடத்தில் இருப்பார் என்பதை அவருடன் பேசியதிலிருந்து தெரிந்து கொண்டோம். மூலிகைக் கொசுவிரட்டி தயாரிப்பிலிருக்கும் அவரது அனுபவம் இந்த வாரம் `வணிக வீதி’யில் இடம் பெறுகிறது.
படித்தது பத்தாவதுதான். ஆனால் குடும்பத்தினர் நாட்டு மருத்துவத்தில் கைதேர்ந்தவர்கள். அதனால் இயல்பாகவே எனக்கும் நாட்டு மருத்துவ அறிவு கிடைத்தது. திருமணத்துக்குப் பிறகு வீட்டில்தான் இருந்துவந்தேன். எனது கணவர் ராமநாதன் ஒரு மருந்து நிறுவனத்தின் விற்பனை பிரதிநிதியாக வேலைபார்த்து வந்தார். வருமானம் அதிகமில்லை என்றாலும் அவரும் அவ்வப்போது ஏதாவது சொந்த தொழில்
முயற்சிகளில் இறங்குவார். எதுவும் சரியாக இருக்காது. இதனால் எங்கள் குடும்பத்தினரின் நாட்டு மருத்துவ அனுபவத்தைக் கொண்டு சில முயற்சிகளில் இறங்கத் தொடங்கினோம். அப்படி தொடங்கியதுதான் ராஜா நைஸ் நைட் மூலிகை கொசுவர்த்திச் சுருள்.
கம்ப்யூட்டர் சாம்பிராணியை சுயதொழிலாக பலரும் வீட்டிலேயே செய்து வருவதுதான் எனக்கு கிடைத்த உத்வேகம். கெமிக்கல் கொசுவர்த்திகளுக்கு மாற்றாக கம்ப்யூட்டர் சாம்பிராணி தொழில்நுட்பத்தில் வேப்பிலை, துளசி, நொச்சி, தும்பை போன்ற நமது நாட்டு மூலிகைகளை கலந்து கொசுவர்த்தி செய்யலாம் என்றுதான் இறங்கினேன். ஆனால் இதை விற்பனைக்கு கொண்டுவரும் தரத்தில் தயாரிக்க ஆறுமாதங்கள்வரை ஆனது. முதலில் நாங்களே பயன்படுத்துவதும், உறவினர்களுக்குக் கொடுத்தும் சோதித்தோம். அதிலிருந்து கிடைத்த அனுபவத்தை வைத்து மீண்டும் மேம்படுத்துவோம்.
இப்படி ஒரு தரத்துக்கு வர ஆறுமாதங்கள் ஆனது. இந்த அளவுகோலை வைத்து கோவையில் கொசுவர்த்தி காயில் தயாரிக்கும் இயந்திரம் வைத்திருந்த ஒருவரிடம் முதலில் ஆர்டர்கள் கொடுத்து வாங்கினோம். இந்த மாற்று தரத்திலான கொசுவர்த்திக்கு மக்களிடம் நல்ல ஆதரவு கிடைத்தது. எனது கணவர் ஏற்கெனவே விற்பனை பிரதிநிதியாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர் என்பதால் மார்கெட்டிங் செய்வது எளிதாகவே இருந்தது. ஆனால் சந்தையின் தேவைக்கு ஏற்ப எங்களால் உற்பத்தி செய்ய முடியவில்லை. தவிர எங்களுக்கு தயாரித்து கொடுத்தவராலும் தொடர்ச்சியாக அதே தரத்துக்கு செய்து கொடுக்க முடியவில்லை. இந்த மூலிகை கொசுவர்த்திகளை கையாளுவதற்கும் அதிக கவனம் தேவைப்பட்டது.
இதனால் இந்த உற்பத்தியிலிருந்து அடுத்த கட்டத்துக்கு பயணப்பட எண்ணி, மூலிகைக் கொசுவிரட்டி தயாரிக்க தொடங்கினோம்.
இதற்கும் ஆரம்பம் போலவே மிகுந்த தயாரிப்பு வேலைகள் செய்து மூலிகைகளிலிருந்து சாறு எடுத்தோம். கொசுவிரட்டி மிஷின்கள் தயாரிப்பது அதிக முதலீடுகளைக் கொண்டது. அதனால் அதில் இறங்கவில்லை. ஆனால் அனைத்து நிறுவன கொசு விரட்டி மிஷின்களிலும் எங்களது மூலிகை கொசுவிரட்டியைப் பொருத்திக் கொள்ள முடியும். இதற்கு ஏற்ற குடுவையையும் எங்களது வடிவமைப்பிலேயே தயாரித்து வாங்கினோம். இப்படி ஒவ்வொரு வடிவத்துக்கு பின்னும் பல முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறோம். கடந்த பத்து ஆண்டுகளாக இந்த கொசுவிரட்டி சந்தையில் இருக்கிறோம். தமிழ்நாடு முழுவதும் பரவலாக எல்லா கடைகளிலும் இல்லை என்றாலும், குறிப்பிட்ட கடைகளில் கிடைக்கச் செய்கிறோம். பாண்டிச்சேரியிலும், கேரளாவிலும் அதிக சந்தை உள்ளது.
குறைவான முதலீடு என்பதால் தினசரி 500 குடுவைகள் உற்பத்தி செய்து வருகிறோம். பத்து நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து வருகிறோம். குடுவைக்கு ரூ. 25 வரை கமிஷன் கொடுக்க வேண்டியிருப்பதால் நேரடி விற்பனையாளர்களை உருவாக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறோம். மேலும் கூடுதலாக இன்னொரு இயந்திரத்தையும் வங்கிக்கடன் மூலம் வாங்க முயற்சி செய்து வருகிறோம்.
பெரிய நிறுவனங்கள் தயாரிக்கும் கொசுவர்த்தி, கொசுவிரட்டிகள் ரசாயனங்களால் ஆனது, உடல்நலத்துக்கு கெடுதல் என்கிற எச்சரிக்கை மக்களுக்கு இருக்கிறதுதான் ஆனால் சந்தையில் அவற்றுக்கு மாற்று இல்லாததால் அவற்றை பயன்படுத்தி வருகின்றனர். எங்களது மூலிகை கொசுவிரட்டி அந்த ரசாயனத் தயாரிப்புகளுக்கு மாற்றாக இருக்கிறது. அதனால்தான் மக்கள் தொடர்ந்து வாங்கி ஆதரவு அளித்து வருகின்றனர். அதனால்தான் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பெரிய நிறுவனப் போட்டிகளைச் சமாளித்து நிற்க முடிகிறது என்றார்.
இப்போது பெரிய நிறுவனங்களும் மூலிகை பொருட்கள் கலந்தது என விளம்பரம் செய்ய வேண்டிய நிலையில் உள்ளனர். அதற்கு இவரைப்போன்ற தொழில்முனைவோர்களே காரணம்.
- தொடர்புக்கு maheswaran.p@thehindutamil.co.in