Published : 13 Sep 2021 06:32 AM
Last Updated : 13 Sep 2021 06:32 AM

ஜாக் மா - எப்போது விலகும் மர்மம்?

ஜாக் மா - அமேசான் போன்றொரு இணையவழி வணிக நிறுவனமான அலிபாபாவை சீனாவில் கட்டியெழுப்பியவர்; கடந்த இருபது ஆண்டுகளில் சீனாவில் உருவாகிவந்த மிகப் பெரும் தொழில்முனைவர்; சீனாவின் முகமாக இருந்தவர். அப்படியான ஜாக் மா தற்போது இருந்த சுவடே இல்லாமல் மறைந்திருக்கிறார்.

கடந்த ஆண்டு அக்டோபர் 24, ஜாக் மாவின் நிறுவனக் குழுமங்களில் ஒன்றான ‘அன்ட் குழும’த்தின் (Ant group) பொதுப் பங்கு வெளியீடு நடத்தப்பட இருந்தது. இதையொட்டி ஷாங்காயில் நடந்த நிகழ்வில் ஜாக் மா பேசிய பேச்சுதான் அவரை மாயமாக்கியது. “சீன வங்கிகள் அடகு கடை மனநிலையில் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. அதிகாரிகள் ரயில் நிலையத்தை நிர்வகிக்கும் வழிமுறையை விமானநிலையத்தை நிர்வகிக்கப் பயன்படுத்துகின்றனர்” என்று டிஜிட்டல் நிதி செயல்பாடுகள் தொடர்பாக சீன வங்கிகளின் செயல்பாடுகளை அந்த நிகழ்வில் அவர் விமர்சித்தார். இது சீன வங்கி அதிகாரிகளிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் அதிபர் ஜி ஜின்பிங் காதுக்குச் சென்றது. மறுநாளே ஜாக் மாவுக்கும் அன்ட் குழுமத்தின் சில நிர்வாக அதிகாரிகளுக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. அன்ட் குழுமத்தின் பொதுப் பங்கு வெளியீடும் நிறுத்தப்பட்டது. இந்த நிகழ்வுக்குப் பிறகு ஜாக் மா மாயமானார். அடுத்த சில மாதங்களில் அவரது அலிபாபா குழுமம் மீதும் விதிமுறை மீறல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு அந்நிறுவனமும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டது. கடும் இழப்பை ஜாக் மா சந்திக்க நேரிட்டது. கடந்த அக்டோபர் மாத நிலவரப்படி அவரது நிறுவனங்களின் சந்தை மதிப்பு 1366 பில்லியன் டாலராக இருந்து. தற்போது அது 696 பில்லியன் டாலராக குறைந்துள்ளது.

ஜாக் மா எங்கு இருக்கிறார்?

ஜாக் மா எங்கு இருக்கிறார், என்ன செய்கிறார், சீன அரசால் கடத்தப்பட்டாரா அல்லது தானாகவே தனிமைக்குள் சென்றுவிட்டாரா என்று குழப்பம் நீடித்தது. அவரைப் பற்றி எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. உயிரோடுதான் இருக்கிறாரா என்றளவில் சந்தேகம் ஏற்பட்டது. இந்நிலையில் மூன்று மாதங்கள் கழித்து, அதாவது இவ்வாண்டு ஜனவரி மாதம் ஜாக் மாவின் வீடியோ ஒன்றை சீன அரசு ஊடகம் வெளியிட்டது. கிராமப்புற ஆசிரியர்களுடனான கலந்துரையாடலின்போது எடுக்கப்பட்ட வீடியோ என்று அதைக் கூறினர். 45 வினாடிகள் ஓடும் அந்த வீடியோவில், ‘நானும் எனது சில அலுவலக நண்பர்களும் புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டும் சிந்தித்துக்கொண்டும் இருக்கிறோம். கல்வி மற்றும் பொதுவாழ்வில் எங்களை முழுமையாக அர்ப்பணிக்க இருக்கிறோம். கிராமப்புற மறுமலர்ச்சி மற்றும் சமூக மேம்பாட்டுக்கு அனைத்து சீன தொழில் அதிபர்களும் தங்கள் நேரத்தை செலவிட வேண்டும்’ என்று அவர் பேசியிருந்தார். இது சீன அதிபர் ஜின்பிங் கட்சியின் கோட்பாடு. ஜாக் மா எங்கே இருந்து பேசுகிறார், இவ்வளவு நாள் எங்கே இருந்தார் என்பது தொடர்பான விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. எப்போதும் உற்சாகமாகவும், துணிச்சலாகவும் பேசக்கூடியவர் என்று ஜாக் மாவைக் கூறுவார்கள். ஆனால் அவர் அந்த வீடியோவில் அமைதியாகவும், தணிந்த குரலிலும் பேசினார். அவரது தோற்றம், அவர் பிணையில் வைக்கப்பட்டிருப்பதுபோலவும், யாரோ ஒருவர் சொல்லச் சொல்லி பேசுவது போலவும் இருப்பதாக சந்தேகத்தை எழுப்பியது.

அதையெடுத்து சில வாரங்களில் ஜாக் மா கோல்ஃப் மைதானத்தில் கோல்ஃப் விளையாடியதாக செய்திகள் வெளியாயின. ஆனால், புகைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை. ஏப்ரல் மாதம் ரஷ்ய அதிபர் புதின் ஏற்பாடு செய்திருந்த இணைய வழி சந்திப்பில் பல தலைவர்களில் ஒருவராக ஜாக் மாவும் கலந்துகொண்டதாக செய்திகள் வெளியாகின. அந்த நிகழ்வில் யாரும் அவரைக் குறிப்பிட்டுப் பேசவில்லை. அவரும் பேசவில்லை. கடந்த மே மாதம் ஜாக் மா அலிபாபா தலைமையிடத்துக்குச் சென்றதாகவும் ஊழியர்களைச் சந்தித்ததாகவும் கூறப்பட்டது. ஆனால், அது தொடர்பான புகைப்பட ஆதாரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
மொத்தத்தில் ஜாக் மா நிலவரம் குறித்து இன்னும் தெளிவான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.

உலகின் மிகப் பெரும் நிறுவனத்தை கட்டியெழுப்பிய ஒருவர், சீன அரசால் ஊக்குவிக்கப்பட்ட ஒருவர் ஏன் திடீரென்று மாயமானார்? அவருக்கும் சீனா அரசுக்கும் என்னதான் பிரச்சினை? என்பதைப் பார்ப்பதற்கு முன்னால், ஜாக் மா எப்படி சீனாவின் முதன்மை தொழில்முனைவோராக உருவெடுத்தார் என்பதைப் பார்த்துவிடலாம்.

ஜாக் மாவின் வளர்ச்சி

1964-ம் ஆண்டு சீனாவில் ஹாங்சோ என்ற நகரில் ஒரு எளிமையான குடும்பத்தில் பிறந்த ஜாக் மா, கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வளர்ந்தார். இளம் வயதில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டியாக வேலை பார்த்தார். அப்போது ஆங்கிலம் கற்றுக் கொள்வதை பெரும் இலக்காகக் கொண்டிருந்த அவருக்கு, வெளிநாட்டினருக்கு வழிகாட்டியாக வேலை பார்ப்பது நல்லதொரு வாய்ப்பாக அமைந்தது. 1988ம் ஆண்டு ஜாக்மா ஆங்கிலத்தில் இளங்கலைப் பட்டம் பெற்ற பிறகு பல்வேறு வேலைக்கு விண்ணப்பித்தார். ஆனால், எங்கும் தேர்வாகவில்லை. இறுதியாக, உள்ளூரில் ஒரு பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் கற்பிக்கும் வேலை அவருக்குக் கிடைத்தது. மாதம் 15 டாலர் ஊதியம். இந்த சமயத்தில்தான் இணையத்தின் வருகை நிகழ்கிறது. உலகின் போக்கை இணையம் மாற்றி அமைக்கும் என்பதை கணிக்கும் ஜாக் மா, அது சார்ந்து ஏதாவது செய்ய வேண்டும் என்று திட்டமிடுகிறார்.

1999-ம் ஆண்டு ஜாக் மா அவரது மனைவி மற்றும் நண்பர்களின் ஆதரவில் அலிபாபா நிறுவனத்தைத் தொடங்குகிறார். இணைய வழியாக பொருட்களை விற்பதற்கும் வாங்குவதற்கும் தளமாக அலிபாபா செயல்படுகிறது. ஜாக் மாவின் நிறுவனத்தில் கோல்ட்மேன் சாக்ஸ் மற்றும் சாஃப்ட் பேங்க் உட்பட பல்வேறு நிறுவனங்கள் முதலீடு செய்கின்றன. நிறுவனம் பெரும் வளர்ச்சியை நோக்கிப் பயணிக்கிறது. அலிபாவைத் தொடர்ந்து நிதி சேவை, கிளவுட் கம்ப்யூட்டிங், சினிமா தயாரிப்பு என பல்வேறு தளங்களில் நிறுவனங்களைத் தொடங்கிப் பயணிக்கிறார். அவரது நிறுவனங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர். சீனாவின் நாயகனாக அடையாளப்படுத்தப்படுகிறார். சீனாவில் மட்டுமல்ல உலக அளவில் முக்கியமான நபராக ஜாக் மா உருவெடுக்கிறார்.

ஜி ஜின்பிங்கின் வருகை

சீன அதிபராக ஜி ஜின்பிங் 2013-ம் ஆண்டு பொறுப்பேற்றது முதலே சீன அரசுக்கும் ஜாக் மாவுக்குமான உரசல் தொடங்கிவிட்டது. ‘ஒரு நாட்டின் தொழில்முனைவர்கள் நாட்டின் வளர்ச்சிக்காகத்தான் செயல்பட வேண்டும்; தனியார் நிறுவனங்கள் தன் கட்சியின் ஒரு அங்கமாக செயல்பட வேண்டும்’ என்ற நிலைப்பாட்டைக் கொண்டவர் ஜின்பிங் என்று அவரை பற்றி கூறப்படுவதுண்டு. சீனாவில் இணைய வழி வர்த்தகம் 1990-ம் ஆண்டு முதலே வளர்ச்சி காணத் தொடங்கிவிட்டாலும், அவை தொடர்பான நெறிமுறைகள் அங்கு முறைப்படுத்தப்படவில்லை. இந்நிலையில் ஜின்பிங் ஆட்சிக்கு வந்தது முதலே இணையவழி தொடர்பான வர்த்தகத்தில் புதிய கட்டுப்பாடுகள் கொண்டுவரத் தொடங்கினார்.

மறுபுறம், அரசைவிட பலம் பொருந்திய நபராக ஜாக் மா உருவாகத் தொடங்கினார். ஏனைய தொழில் முனைவோர்கள் போல் இல்லாது அரசின் பிரச்சினைகளை விமர்சிக்கக் கூடியவராக அவர் இருந்தார். அரசின் விதிமுறைகளில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என்று பேசி வந்தார். அலிபாபா நிறுவனமும் மிகப் பெரும் அளவில் வருவாய் ஈட்டிவந்தது. அதேபோல் நிதி சேவை வழங்கும் ஜாக் மாவின் அன்ட் குழுமம், சீனாவின் தேசிய வங்கிகளுக்கு நிகரான பலம் கொண்டதாக செயல்பட்டு வந்தது. இந்த வளர்ச்சி சீன அரசுக்கு பெரும் உறுத்தலைத் தந்தது. எப்படி ஒரு தனியார் நிறுவனம் அரசு நிறுவனத்தை விட பலம்பொருந்தியதாக செயல்படலாம் என்று சீன அரசு வட்டாரங்கள் கருதியதாக கூறப்படுகிறது. ஜாக் மா தனது லாபத்தில் பெரும் பகுதியை கட்சியின் வளர்ச்சிக்கு பங்களிக்க வேண்டும் என்று சீன அரசு எதிர்பார்த்தது. ஆனால், அவரது வளர்ச்சி தனிப்பட்ட ஒருவரின் வளர்ச்சியாக, தனிப்பட்ட நிறுவனத்தின் வளர்ச்சியாக இருந்தது. சீன அரசு அதை விரும்பவில்லை.

2015-ம் ஆண்டு நடந்த சம்பவம் ஒன்று இங்கு குறிப்பிடத்தக்க்து. 2015-ம் ஆண்டு வாஷிங்டனில் சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்படிருந்தது. அதில் சீன அதிபர் ஜின்பிங், அமெரிக்கா அரசு அதிகாரிகள், சீனா மற்றும் அமெரிக்காவின் முக்கிய தொழில்முனைவர்கள் கலந்துகொண்டனர். அதில் கலந்துகொண்டவர்களில் ஜாக் மாவும் ஒருவர். அந்தச் சந்திப்பில் அரசியல் தலைவர்கள் முன்னால் பேச தொழில்முனைவர்கள் ஒவ்வொருவருக்கும் மூன்று நிமிடங்கள் வழங்கப்பட்டன. ஜாக் மா மட்டும் தன்னுடைய பேச்சை மூன்று நிமிடங்களுக்குள் முடித்துக்கொள்ளாமல் பத்து நிமிடங்களுக்குப் பேசினார். அப்போது அவர் சீனாவின் போக்கு குறித்து, சீன நிறுவனங்களால் சீனா – அமெரிக்கா உறவில் என்ன மாதிரியான முன்னெடுப்புகளை மேற்கொள்ள முடியும் என்பது குறித்துப் பேசினார். ஜாக் மாவின் அந்தப் பேச்சை ஜின்பிங் விரும்பவில்லை. அப்போதே பலரும் ஜாக் மாவை எச்சரிக்கத் தொடங்கிவிட்டனர், இந்த அரசு உங்களைச் சும்மா விடாது என்று.

ஜாக் மாவை சூரியனுக்கு அருகில் பறக்கும் பறவை என்றும் என்றாவது ஒருநாள் அவர் சாம்பலாக்கப்படுவார் என்றும் சீனாவில் பேசத் தொடங்கினர். இப்படியான சூழ்நிலையில்தான் அவரது அக்டோபர் பேச்சு அவருக்கு வினையாக வந்து முடிந்தது. ‘ஜின்பிங்கின் சீனாவில் ஒருவர் என்ன பேசலாம், என்ன செய்யலாம் என்ற அறிவிக்கப்படாத எல்லைக் கோடு உண்டு. அந்த எல்லையைத் தாண்டுவது தற்கொலை செய்துகொள்வதற்கு சமம். அந்தக் கோட்டை ஜாக் மா தாண்டிவிட்டார்.’ என்று ஜின்பிங்கின் செயல்பாடுகளைக் கவனித்து வருபவர்கள் கூறுகின்றனர் . இப்படி திடீரென்று மாயமானதில் ஜாக் மா முதல் நபர் அல்ல. சீன அரசை விமர்சித்த பல்வேறு முக்கியஸ்தர்களும் பிரபலங்களும் மாயமாகி இருக்கின்றனர். ரென் ஷிகியாங் என்ற ரியல் எஸ்டேட் ஜாம்பவான், கரோனா வைரஸ் பரவல் தொடர்பாக சீன அதிபர் மேற்கொண்ட நடவடிக்கைகளை விமர்சித்தார். அதைத் தொடர்ந்து அவர் மாயமானார்.

ஜாக் மா மற்றும் ஜின்பிங் இடையிலான மோதலில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இரண்டாயிரத்தின் தொடக்கத்தில் அலிபாபா பெரும் வளர்ச்சியை எட்டியபோது சீன அரசு அதிகாரிகள் ஜாக் மாவின் செயல்பாடுகளை பாராட்டி ஊக்குவித்தனர். அப்படி பாராட்டிய அதிகாரிகளில் ஜின்பிங்கும் ஒருவர். அப்போது ஜின்பிங் செஜியாங் மாகாணத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்தார். அந்த மாகாணத்தில்தான் அலிபாபாவின் தலைமையிடம் இருந்தது. அப்போது ஜின்பிங் ஸ்டார்ட்அப் நிறுவனங்களை ஊக்குவித்து வந்தார். அலிபாபா போன்ற நிறுவனங்களின் வளச்சி நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றுகிறது என்று அவர் கருதினார். 2007-ம் ஆண்டு ஜின்பிங் செஜியாங் மாகாணத்திலிருந்து ஷாங்காய்க்கு மாறுதலடைந்தார். அப்போது அவர் ஜாக் மாவைச் சந்தித்து, ‘நீங்கள் ஷாங்காய் வந்து, அதன் மேம்பாட்டுக்கு எங்களுக்கு உதவ முடியுமா?’ என்று கேட்டார். ஆனால் இப்போது? பத்து ஆண்டுகளில் நிலைமை தலைகீழாக மாறி இருக்கிறது. காலம் எப்போது என்ன நிகழ்த்தும் என்பது யாருக்குதான் தெரியும்!

முகம்மது ரியாஸ்,
riyas.ma@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x