

முன்பெல்லாம் மில்லியன் டாலர் கேள்வி என்ற பதம் மிகப் பிரபலம். பதில் தெரியாத கேள்விக்கு மில்லியன் (10 லட்சம்) டாலர் கேள்வி என்று சொல்லி தப்பிப்பார்கள். இப்போது மில்லியனுக்கெல்லாம் வேலை இல்லை. இப்போது அனைத்துக்குமே பில்லியனில்தான் பதில் கூறுகிறார்கள். `என்னுடைய நிறுவனத்தை பில்லியன் டாலர் வருமானம் உள்ள நிறுவனமாக மாற்றுவேன், பில்லியன் வாடிக்கையாளர்களை பிடிப்பேன்’ என்று எல்லாமே பில்லியனில் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். (ஒரு பில்லியன் என்றால் 100 கோடி). மாற்றம் நல்லதுதானே.
பில்லியன் டாலரில் வருமானம் கூட சம்பாதித்துவிடலாம். அதாவது இந்தியாவில் பல நிறுவனங்கள் 6,500 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டுகின்றன. ஆனால் 100 கோடி வாடிக்கையாளர்களை சென்றடைவது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. ஆனால் கடந்த வாரம் இரண்டு நிறுவனங்கள் அந்த சாதனையைச் செய்தன.
ஜிமெயில் மற்றும் வாட்ஸ்அப் ஆகிய இரண்டு நிறுவனங்களும் கடந்த வாரம் 100 கோடி வாடிக்கையாளர்களை பிடித்துள்ளன. அதாவது உலகில் 7 பேரில் ஒருவர் இந்நிறுவன வாடிக்கை யாளர்களாக உள்ளனர்.
கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஃபேஸ்புக் நிறுவனம் வாட்ஸ் அப்-பை வாங்கியது. அப்போது 45 கோடி நபர்கள் மட்டுமே பயன்படுத்தி வந்தனர். ஃபேஸ்புக் நிறுவனம் வாங் கிய பிறகு வாட்ஸ்அப் பயன்படுத்து பவர்களின் எண்ணிக்கை இரு மடங் காக உயர்ந்துள்ளது. சமீபத்தில் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்துபவர் களுக்கான கட்டணம் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து மிகவேகமாக வாட்ஸ்அப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
முன்னனியில் வாட்ஸ்அப்
வாட்ஸ்அப் 2009-ம் ஆண்டு தொடங் கப்பட்டது. ஆனால் ஜிமெயில் 2004-ம் ஆண்டே அறிமுகப்படுத்தப்பட்டது. வாட்ஸ்அப் வேகமாக வளர்ந்ததற்கு காரணம் ஸ்மார்ட்போன்கள். தவிர ஆரம்பத்தில் ஜிமெயில் பயன்படுத்து வதற்கான அழைப்பு இருந்தால் மட்டுமே அதை உபயோகிக்க முடியும். இந்த நிலையிலே மூன்று வருடங்கள் இருந்தது. அதன் பிறகுதான் அனைவரும் பயன்படுத்தும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டது.
இந்த இரண்டு நிறுவனங்களை தவிர மேலும் சில 100 கோடி வாடிக்கை யாளர்களை பெற்றுள்ளன. உதாரணத் துக்கு ஃபேஸ்புக்கை 159 கோடி வாடிக்கையாளர்கள் பயன்படுத்துகின் றனர். கடந்த பிப்ரவரி 4-ம் தேதியுடன் ஃபேஸ்புக் தனது 12-வது பிறந்த நாளை கொண்டாடியது. 2030-ம் ஆண்டு 500 கோடி வாடிக்கையாளர்களுக்கு கொண்டு செல்ல இலக்கு நிர்ணயம் செய்திருக்கிறார் மார்க் ஜூகர்பெர்க்.
முதலில் ஆண்ட்ராய்ட்
கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்ட் இயங்குதளம்தான் இந்த மைல்கல்லை எட்டிய முதல் நிறுவனம். இதன் பிறகு தான் ஃபேஸ்புக் 100 கோடி வாடிக்கை யாளர்கள் என்ற மைல்கல்லை எட்டியது. ஜிமெயிலுடன் சேர்த்து கூகுள் நிறுவனத்தில் மட்டும் 7 சேவைகள் 100 கோடி வாடிக்கையாளர்களுக்கு மேல் பயன்படுத்தப்படுகிறது.
கூகுள் சர்ச், கூகுள் பிளே, ஆண்ட் ராய்ட், யூடியூப், குரோம் மற்றும் கூகுள் மேப்ஸ் ஆகிய 6 பிரிவுகளும் 100 கோடிக்கும் மேலான வாடிக்கை யாளர்களைப் பெற்றுள்ளன. குறிப் பாக இணையத்தில் இருக்கும் மூன்றில் ஒருவர் யூடியூபை பயன்படுத்துகின்ற னர். கூகுள் சர்ச்சில் ஒரு நாளைக்கு 300 கோடிக்கும் மேலான தேடல்கள் நடக்கின்றன.
இதுதவிர மைக்ரோசாஃப்ட் ஆபிஸ் மற்றும் விண்டோஸ் ஆகியவை 100 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்டிருக்கின்றன.
காத்திருக்கும் நிறுவனங்கள்
ஏற்கெனவே இருக்கும் நிறுவனங் கள் தவிர பல நிறுவனங்கள் 100 கோடி வாடிக்கையாளர்கள் என்ற மைல் கல்லை எட்ட தயாராகி வருகின்றன. சமீபத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் தலைவர் டிம் குக் கூறும் போது எங்களது உற்பத்தி திறன் 100 கோடி பொருட்கள் என்ற அளவில் உயர்ந்துள்ளது. இது மேக்புக், வாட்ச் உள்ளிட்ட அனைத்தையும் சேர்த்து என்று கூறியிருந்தார்.
அதேபோல ஃபேஸ்புக் நிறுவனத் தின் இன்னொரு செயலியான மெசஞ்சர் தற்போது 80 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டிருக்கிறது. இதற் கடுத்து இருக்கும் நிறுவனங்கள் 100 கோடி வாடிக்கையாளர்கள் என்ற மைல்கல்லை அடைய இன்னும் சில காலம் ஆகலாம் என்றாலும் அதற்கான வாய்ப்புகள் உள்ளன.
யாகூ நிறுவனத்தில், யாகூமெயில், உள்ளிட்ட பிற சேவைகள் அனைத்தையும் சேர்த்து 100 கோடி வாடிக்கையாளர்கள் இருந்தாலும் தனிப்பட்ட முறையில் 100 கோடி வாடிக்கையாளர்கள் இல்லை.
சீனாவைச் சேர்ந்த செயலி வீசாட்-க்கு 65 கோடி வாடிக்கையாளர்கள் இருக் கின்றனர். ஃபேஸ்புக் நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் 40 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டிருக்கிறது. ட்விட்டர் 32 கோடி வாடிக்கையாளர் களைக் கொண்டிருக்கிறது.
தற்போது உலகம் முழுக்க சுமார் 320 கோடி நபர்கள் இணையம் பயன்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த நிலைமையில் வருங்காலத்தில் 100 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்ட நிறுவனங்களின் எண்ணிக்கை மேலும் உயர்வதற்கான வாய்ப்புகளே உள்ளன.