சூழல் பாதுகாப்பில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள்

சூழல் பாதுகாப்பில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
Updated on
3 min read

சுற்றுச்சூழலைக் காக்கும் பொறுப்பு அனைவருக்குமே உள்ளது. தலைநகர் டெல்லியில் வாகனங்கள் வெளியிடும் புகையைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்துவரும் நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் 13-வது ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் சூழல் பாதுகாப்பு வாகனங்களைக் காட்சிப்படுத்த பெரும்பாலான நிறுவனங்கள் ஆர்வம் காட்டின. இதிலிருந்தே வாகனத் தயாரிப்பில் தங்களுக்குள்ள பொறுப்பை உணர்ந்து நிறுவனங்கள் செயல்படுவது வெளிப்படையாக தெரிய வந்துள்ளது.

கண்காட்சியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியைக் கவர்ந்த வாகனங்களில் ஒன்று முதலில் அவர் பயணம் செய்த டிரைவர் இல்லாத வாகனம்தான். ``நோவுஸ் டிரைவ்’’ என்ற பெயரிலான இந்த வாகனத்தில் அவரும் அமைச்சக அதிகாரிகள் உள்ளிட்டோர் வியப்புடனே பயணம் செய்ததைப் பார்க்க முடிந்தது.

தாமாக வழிகாட்டு உதவியோடு (ஏஜிவி) தொழில்நுட்பத்தில் இயங்கும் இந்த வாகனம் குர்காவ்னைச் சேர்ந்த ஹைடெக் ரோபோடிக் சிஸ்டம்ஸ் லிமிடெட் (டிஹெச்ஆர்எஸ்எல்) என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டதாகும். 14 பேர் பயணிக்கும் வகையிலான இந்த வாகனம் ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் சுற்றிவந்தது, அதில் பயணம் செய்தவர்களை மட்டுமின்றி பார்வையாளர்களையும் வியப்புக்குள்ளாக்கியது.

இந்த வாகனத்தைச் சுற்றியுள்ள உணர் கருவிகள் (சென்சார்) இதன் குறுக்கே எவராவது வரும்போது நிற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு பொருளின் அசைவை இந்த உணர் கருவிகள் உணர்ந்தவுடனேயே வாகனத்தின் வேகம் குறைந்து படிப்படியாக அந்த பொருளுக்கு ஒரு அடி முன்பாகவே நின்றுவிடுகிறது.

இத்தனைக்கும் மேலாக இந்த வாகனம் பேட்டரியில் இயங்குகிறது. இதனால் சுற்றுச் சூழல் பாதிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. ஒரு முறை சார்ஜ் செய்தால் 150 கி.மீ. வரை இது ஓடக்கூடியது.

இதில் பயணிப்போர் வாகனத்தின் முன்பகுதியில் உள்ள திரையில் செல்ல வேண்டிய இடத்தை பதிவு செய்தால் இது தனது பயணத்தைத் தொடங்கும். நெரிசலுக்கேற்ப நின்று புறப்பட்டு அதன் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை சென்றடையும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த வாகனம் நிச்சயம் பெரிய வளாகங்களில் பயன்படுத்தப்படுவதற்கு மிகவும் ஏற்றது. இதன் வெற்றியைப் பொறுத்து இதுபோன்று மேலும் பல டிரைவர் இல்லா வாகனங்களைத் தயாரிக்க உற்சாகமளிக்கும் என்று பெருமையுடன் குறிப்பிடுகிறார் இந்நிறுவன தலைமைச் செயல் அதிகாரி அனுஜ் கபூரியா.

பேட்டரி பஸ்

இந்தியாவைச் சேர்ந்த ஜேபிஎம் ஆட்டோ லிமிடெட் நிறுவனம் பேட்டரியில் இயங்கும் பஸ்ஸை அறிமுகப்படுத்தியுள்ளது. ஐரோப்பிய நிறுவனமான சோலோரிஸ் பஸ் அண்ட் கோச் நிறுவனத்துடன் இணைந்து ஜேபிஎம் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த பஸ் ஒரு முறை சார்ஜ் செய்தால் 150 கி.மீ முதல் 200 கி.மீ. தூரம் வரை செல்லக் கூடியது. பேட்டரி அதிக நேரம் தாங்கும் வகையில் இதில் லித்தியம் பேட்டரிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்த பஸ்ஸுக்கு எகோலைஃப் என பெயரிடப்பட்டுள்ளது. இது எடை குறைந்த எளிதில் துருப்பிடிக்காத மோனோ கியூ வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இது தற்போது இந்திய சாலைகளில் ஓடும் பஸ்களின் ஆயுள்காலத்தை விட இருமடங்கு அதிகமாகும். இதில் கேன்டிலீவர் இருக்கைகள் உள்ளன. இதனால் உயரமானவர்கள் வசதியுடன் அமர்ந்து பயணிக்க முடியும். இந்த பஸ்ஸின் மேல்பகுதியில் சார்ஜ் செய்யும் வசதி உள்ளது. அதேபோல பயணிகளின் உடமைகளை வைப்பதற்கு போதுமான இட வசதி உள்ளது.

பெருநகரங்களில் வாகன புகை பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்து வருகிறது. இத்தகைய சூழலில் மக்கள் போக்குவரத் துக்கு இது சிறந்த மாற்றாக அமையும் என்று நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் நிஷாந்த் ஆர்யா தெரிவித்தார்.

எலெக்ட்ரானிக் பிரேக்கிங் சிஸ்டம், சக்கர நாற்காலியில் செல்பவர் பயணிக்கும் வகையிலான தாழ்வான இறங்கு தள வசதி, ஆபத்துகால வெளியேறும் வழிகள் உள்ளிட்டவை இதன் சிறப்பம்சங்கள். 9 மீட்டர் நீளம் மற்றும் 12 மீட்டர் நீள அளவுகளில் இவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

ஹைபஸ்

அசோக் லேலண்ட் நிறுவனம் `ஹைபஸ்’ எனும் பேட்டரி பஸ்ஸை அறிமுகப்படுத்தியுள்ளது. இதிலுள்ள பேட்டரியை சார்ஜ் செய்யத் தேவையில்லை. பஸ் ஓடும்போது அதிலிருந்து ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் உற்பத்தியாக பேட்டரி சார்ஜ் ஆகும். பேட்டரி வாகனங்களில் இது முன்னோடி மாடலாகும்.

இ20

மஹிந்திரா நிறுவனம் தனது இ20 ரக காரை இங்கு காட்சிப்படுத்தியுள்ளது. 80 கிலோவாட் மோட்டார் உள்ள இந்த கார் 4 விநாடிகளில் 60 கி.மீ வேகத்தை எட்டக் கூடியது. பொதுவாக பேட்டரியில் இயங்கும் கார்கள் மெதுவாக ஓடும் என்ற குறையை இது போக்கியுள்ளது. மேலும் ஒரு முறை சார்ஜ் செய்தால் 200 கி.மீ. தூரம் ஓடும் என்பதும் இதன் சிறப்பம்சமாகும். இந்த ஆண்டு பிற்பாதியில் இது விற்பனைக்கு வரும் என தெரிகிறது. இதேபோல இ வெரிடோ என்ற காரையும் மஹிந்திரா காட்சிப்படுத்தியுள்ளது. இது ரேவா இ20-ல் உள்ள மோட்டாரைக் கொண்டது. இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 100 கி.மீ. தூரம் ஓடக் கூடியது.

ஹீரோ டூயட் இ

இரு சக்கர வாகன உற்பத்தியில் முன்னணியில் உள்ள ஹீரோ குழுமம் இம்முறை ஆட்டோ எக்ஸ்போவில் பசுமையான அரங்கை அமைத்திருந்தது. அரங்கின் பெரும்பகுதி செடிகள் சூழ இருந்தது. இது நிறுவனத்தின் பசுமைகாப்புக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக அமைந்தது. இக்கண்காட்சியில் மூன்று மோட்டார் சைக்கிள்களை இந்நிறுவனம் அறிமுகப்படுத்தினாலும் அதில் ஒன்று பேட்டரியில் இயங்கும் ஸ்கூட்டராகும். டூயட் இ என்ற பெயரில் இது அறிமுகமாகியுள்ளது.

பேட்டரி ஸ்கூட்டர்

கார், பஸ் உள்ளிட்ட வாகனங்களைத் தொடர்ந்து லித்தியம் பேட்டரியைக் கொண்ட இரு சக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது லோஹியா நிறுவனம். பேட்டரியால் இயங்கும் இ-ரிக்‌ஷாக்களையும் இங்கு காட்சிப்படுத்தியிருந்தது. மேலும் பேட்டரியால் இயங்கும் ஆட்டோக்களையும் இக்கண்காட்சியில் அறிமுகப்படுத்தியது. பயணிகளுக்கென்றும் சரக்குப் போக்குவரத்துக்கென்றும் பிரத்யேகமாக தனித்தனியே ஆட்டோக்களை இந்நிறுவனம் கொண்டுவந்துள்ளது. லித்தியம் அயான் பேட்டரியைக் கொண்ட இந்த இரு சக்கர வாகனங்கள் மணிக்கு 25 கி.மீ வேகத்தில் செல்லக் கூடியவை. நான்கு கண்கவர் வண்ணங்களில் இது அறிமுகமாகியுள்ளது.

எதிர்கால சந்ததியினருக்கு பசுமை சூழ் உலகை விட்டுச் செல்லும் நடவடிக்கையில் ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு பெரும்பங்கு உள்ளது. இதை இத்துறையினரும் உணர்ந்து இதுபோன்ற வாகன உற்பத்தியில் தொடர்ந்து கவனம் செலுத்துவார்கள் என நம்பலாம். அதை இந்த கண்காட்சியில் உணர முடிந்தது.

தொடர்புக்கு - ramesh.m@thehindutamil.co.in

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in