Published : 15 Feb 2016 11:32 AM
Last Updated : 15 Feb 2016 11:32 AM

உன்னால் முடியும்: நல்ல பெயரோடு சந்தையை விரிவாக்குவோம்

கல்லூரி விரிவுரையாளராக பணியாற்றிக் கொண்டிருந்தவர் ராஜேஸ்வரி. கணவர் தொடங்கிய தொழிலுக்கு உதவியாக இருக்க வேலையை துறந்து, இன்று திருச்சியில் பெயர் சொல்லும் அளவுக்கு தங்களது பிராண்டை வளர்த்த இவரது அனுபவம் இந்த வாரம் ``வணிகவீதி’’-யில் இடம் பெறுகிறது.

ராஜேஸ்வரியின் கணவர் தில்லை ஆனந்தன் முதலில் பேசத் தொடங்கினார். மார்கெட்டிங் மேனேஜ்மெண்ட் படித்து முடித்துவிட்டு பல நிறுவனங்களில் மார்க்கெட்டிங் துறை வேலைகளில் இருந்தேன். அந்த நிறுவனங்களுக்காக மும்பை, டெல்லி என பல ஊர்களிலும் தங்கி வேலை பார்க்க வேண்டிய சூழல். கடைசியாக வேலைபார்த்த நிறுவனத்தில் மார்க்கெட்டிங் தலைமை பொறுப்பில் இருந்த போது ஏதோ ஒரு வெறுமையான உணர்வு எழுந்தது. இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு இப்படியே அடுத்தவர்களுக்காக வேலை செய்வது என்று யோசனை வந்தது.

சொந்த தொழில்தான் தீர்வாக இருக்கும் என்று முடிவு செய்தாலும், அது தலைமுறைக்கும் தொடரும் தொழிலாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். சொந்த தொழிலில் இறங்க வேண்டும் என்று முடிவான பிறகு சற்றும் யோசிக்காமல் வேலையிலிருந்து விலகிவிட்டேன்.

உணவு தயாரிப்பு தொழிலுக்கு எப்போதும் நல்ல சந்தை இருக்கும் என்பது எனது அனுபவத்திலிருந்து தெரிந்துகொண்டிருந்ததால், இந்த துறையை தேர்ந்தெடுத்து இறங்கினேன். இதற்காக பல்வேறு பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டேன். எம்எஸ்எம்இ நிறுவனம் வழங்கும் உணவுத்தொழில் சார்ந்த பயிற்சிகள், தொழில்முனைவோர் அமைப்புகளின் கூட்டங்கள் என இதற்காக பல ஊர்களுக்கும் சென்று பயிற்சிகளின் மூலம் தெரிந்து கொண்டேன்.

உணவு தயாரிப்பு துறையில் இறங்கும் எல்லோரும் முதலில் முயற்சிப்பது ஊறுகாய் தயாரிப்பதுதான். நாங்களும் இதற்கு விதிவிலக்கு அல்ல. முதலில் ஊறுகாய் தயாரித்தேன். ஆனால் தொழிலில் நிற்க ஒரு தயாரிப்போடு மட்டும் நின்றுவிடக்கூடாது என்பதால் அடுத்தடுத்த முயற்சிகளிலும் இறங்கத்தொடங்கினேன்.

இப்போது தொழிலுக்கு எனக்கு உதவியாக இன்னொரு ஆள் தேவைப்பட்டவுடன் எனது மனைவியும் தனது வேலையை விட்டு என்னோடு சேர்ந்து கொண்டார்.

அவரைத் தொடர்ந்து தனது அனுபவத்தை தொடர்ந்தார் ராஜேஸ்வரி. அவருக்கு மார்க்கெட்டிங் அனுபவம் உள்ளதால், அந்த வேலைகளை கவனித்துக் கொண்டார். நான் தயாரிப்பில் கவனம் செலுத்தினேன். உணவுப் பொருள் என்பதால் ஒவ்வொரு நொடியும் கவனமாக இருக்க வேண்டும். நான் கவனிக்கத் தொடங்கிய பிறகு ஊறுகாய் தயாரிப்பிலிருந்து, ரெடிமிக்ஸ் தயாரிப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தோம்.

உணவு தயாரிப்பு துறையில் உள்ளூர் அளவில் தொழில் தொடங்கி சிறு தொழிலாக நடத்துவது சிரமமானது என்பதை அனுபவத்திலிருந்து புரிந்து கொண்டோம். பெரிய பெரிய நிறுவனங்கள்கூட ஊறுகாய் தயாரித்து, கிராமங்களுக்கும் கொண்டு செல்கின்றன. இந்த சந்தையில் நுழைந்து நிற்க வேண்டும், நமக்கான சந்தையை உருவாக்க வேண்டும் என்றால் சுவையில்தான் மக்களை இழுக்க முடியும். அதுபோல ஒப்பீட்டளவில் விலையும் குறைவாக இருக்க வேண்டும். அதாவது நமது லாபத்தில் கொஞ்சம் குறைத்தால் சந்தையில் நிற்க முடியும். இதைத்தான் நான் அவரிடம் வலியுறுத்துவேன்.

சொந்த தொழில் என்று முடிவு செய்து இரண்டு பேருமே வேலையை விட்டுவிட்டோம். இனிமேல் தொழிலில் நிற்க முடியவில்லை என்று திரும்ப முடியாது. இந்த தொழில் நம்மோடு மட்டும் நின்றுவிடாது. நமக்கு பிறகு நமது குழந்தைகளும் ஈடுபட வேண்டும். அதற்கேற்ப சந்தையில் நாம் நல்ல பெயரோடு நிலைத்து நிற்பதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்ய வேண்டும். என்று அடிக்கடி அவருக்கு ஞாபகமூட்டுவேன்.

இப்போதும் தொடர்ச்சியாக அடுத்து எப்படி விரிவுபடுத்துவது, என்ன சுவையில் தயாரிக்க முடியும் என்பதை முயற்சித்துப் பார்த்து வருகிறோம். தற்போது 13 வகையான ஊறுகாய் வகைகள் 6 வகையான ரெடிமிக்ஸ் வகைகள் தயாரிக்கிறோம். அடுத்த கட்டமாக தக்காளி சாஸ் தயாரிப்பு முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளோம். மொத்த விற்பனையிலிருந்து சில்லறை விற்பனைக்கும் திட்டமிட்டுள்ளோம்.

தற்போது நிரந்தரமாக 6 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்துள்ளோம். திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், கரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் தயாரிப்புகள் கிடைக்கச் செய்திருக்கிறோம். இந்த தொழிலில் எங்களுக்குப் பிறகு குழந்தைகளும் ஈடுபடுவார்கள். அதற்கேற்ப நல்ல பெயரோடு சந்தையை மேலும் விரிவாக்கிக் கொடுப்போம் என்கிற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என்றார். நம்பிக்கை வெற்றிபெற வேண்டும்.

சொந்த தொழில் என்று முடிவு செய்து இரண்டு பேருமே வேலையை விட்டுவிட்டோம். இனிமேல் தொழிலில் நிற்க முடியவில்லை என்று திரும்ப முடியாது. இந்த தொழில் நம்மோடு மட்டும் நின்றுவிடாது. நமக்கு பிறகு நமது குழந்தைகளும் ஈடுபட வேண்டும். அதற்கேற்ப சந்தையில் நாம் நல்ல பெயரோடு நிலைத்து நிற்பதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்ய வேண்டும்.

- maheswaran.p@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x