

முகேஷ் பன்சால் மிந்திரா நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனத்தை பிளிப்கார்ட் நிறுவனம் கையகப்படுத்த, அந்த நிறுவனத்தில் சில வருடங்கள் பணியாற்றிய முகேஷ் பன்சால் பிப்ரவரி மாத ஆரம்பத்தில் அங்கிருந்து வெளியேறினார். அவர் வெளியேறிய ஒரு வாரத்துக்குள் மிந்திரா நிறுவனத்தின் செயல்பாட்டில் முக்கிய மாற்றம் நிகழ்ந்துள்ளது.
மீண்டும் மொபைல் இணையதளத்தை கொண்டுவந்துள்ளது மிந்திரா. கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் முதல் மொபைல் வெப்சைட் மூடப்பட்டது. அதன் பிறகு மே மாதம் டெக்ஸ்டாப் வெப்சைட்டும் மூடப்பட்டது. கடந்த சில மாதங்களாக இந்த நிறுவனத்தின் ஆப்ஸ் (செயலி) மூலமாக மட்டும் வாங்க முடியும் என்ற சூழல் இருந்தது. இந்த நிலையில் மொபைல் வெப்சைட் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த முடிவு வருமான அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு கிடையாது. முதல் முறை வரும் வாடிக்கையாளர்களை திருப்திபடுத்துவதற்காக எடுத்த முடிவு என்று நிறுவனம் தெரிவித்திருக்கிறது. தவிர எங்களது உத்தியில் எந்த விதமான மாற்றமும் நாங்கள் செய்யவில்லை. மொபைலில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம், டெஸ்க்டாப் வெப்சைட் கொண்டு வரப்படமாட்டது என்று நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
என்ன காரணம்?
நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் கூறும் போது, ஸ்மார்ட்போன் வாங்குபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்துகொண்டே இருக்கிறது. முதல் முறை வாங்குபவர்கள் மிந்திரா என்று தேடும் பட்சத்தில் செயலியை டவுன்லோடு செய்தால் மட்டுமே, அவர்களால் வாங்க முடியும். இதனால் நிறுவனம் புதிய வாடிக்கையாளர்களை இழக்கிறது. அவர்களை உள்ளே இழுப்பதற்காக இந்த உத்தி பயன்படும்.
தவிர இந்த துறை வல்லுநர்கள் கூறும்போது, செயலி மூலமாக விற்பனை என்பது சரியானதாக இருக்காது. புதுப்புது செயலிகள் வருகின்றன. அத்தனை செயலிகளையும் டவுன்லோடு செய்யும் போது ஸ்மார்ட்போனில் இடம் இருக்காது. அதனால் அடிக்கடி பயன்படுத்தாத செயலியை நீக்குவார்கள். மிந்திரா துணிவகைகளை விற்பதால் அடிக்கடி யாரும் வாங்கமாட்டார்கள். அதனால் அதிக நபர்கள் அந்த செயலியில் இருந்து விலகி இருக்கலாம் என்று கருத்து தெரிவித்தார்கள்.
தவிர நடப்பு நிதி ஆண்டுக்குள் 100 கோடி டாலர் என்ற விற்பனை இலக்கை நிறுவனத்தால் அடையமுடியவில்லை. அடுத்த வருடத்துக்கு இந்த இலக்கு மாற்றி அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த வருடம் பிளிப்கார்ட் நிறுவனமும் மொபைல் வெப்சைட்டை மூடி, தங்களது செயலியை பிரபலமாக்க நினைத்தது. அதன் பிறகு நடந்த பிக் பில்லியன் விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லை. அதனால் கடந்த நவம்பரில் மீண்டும் மொபைல் வெப்சைட்டை பிளிப்கார்ட் கொண்டு வந்தது. அதனை தொடர்ந்து மிந்திராவும் மொபைல் வெப்சைட் கொண்டு வந்திருக்கிறது. செயலி மூலம் மட்டுமே விற்பனை என்ற முடிவை ஸ்நாப்டீல், அமேசான் ஆகிய நிறுவனங்கள் எப்போதோ நிராகரித்துவிட்டன.
வாடிக்கையாளர்கள்தான் ராஜா என்பது மீண்டும் மீண்டும் நிரூபனம் ஆகிக்கொண்டே இருக்கிறது