

எந்த வேலையிலும் அதிகபட்ச ஆதாயம் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டோம். அதுவும் அதிக சிரமமில்லாமல் கிடைக்க வேண்டும். இதை நமது அனைத்து வேலைகளிலும் பொது பண்பாகவே வைத்திருக்கிறோம். இது உற்பத்தி, வர்த்தகம், சேவை என சகல துறை சார்ந்த பணிகளிலும் இருக்கவே செய்கிறது. இதற்கேற்ப வாடிக்கையாளர்களைக் கவர புதுப்புது உத்திகளை நிறுவனங்கள் செயல்படுத்தவும் செய்கின்றன.
முறைப்படுத்தபட்ட முதலீட்டு திட்டங்களிலும், அதிக ஆதாயம் தரும் புதுப்புது திட்டங்கள் இருந்தால்தான் வாடிக்கையாளர்களைக் கவர முடியும். அந்த வகையில் சாதாரணமாக கையாளப்படும் சேமிப்புக் கணக்கில், பல கூடுதல் வசதிகளையும் சேர்த்து கொண்டுவரப்பட்டதுதான் சேவிங்ஸ் பிளஸ் கணக்கு மற்றும் பிளக்ஸி டெபாசிட் (flexi deposit) திட்டங்கள்.
பொதுவாக நமது அன்றாட செலவு, அவசர செலவுகளுக்காக குறிப்பிட்ட தொகையை வங்கியில் சேமிப்புக் கணக்குகளில் இருப்பாக வைத்திருப்போம். வங்கிகள் இதற்கு 4 சதவீத வட்டி வழங்கும். சிலர் குறுகிய கால பிக்ஸட் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்திருப்பார்கள். இதற்கு 30 நாட்கள் முதல் ஒரு ஆண்டு வரை சராசரியாக 5.5 சதவீதம் முதல் 9 சதவீதம் வரை வட்டி கணக்கிடப்படுகிறது. ஆனால் அவசர தேவைக்கு வைப்பு நிதியை வெளியே எடுக்க முடியாது. இதனால் பலரும் சேமிப்பு கணக்கில் குறைவான வட்டி கிடைத்தாலும் குறிப்பிட்ட தொகையை அப்படியே வைத்திருக்கின்றனர். இங்குதான் பிளக்ஸி டெபாசிட் மற்றும் சேவிங்ஸ் பிளஸ் கணக்குகள் புதிய பலன்களைத் தருகின்றன.
திட்டங்கள்
ஒரு குறிப்பிட்ட தொகைக்குமேல் சேமிப்புக் கணக்கில் பணம் இருந்தால், கூடுதலாக இருக்கும் தொகை தானாகவே டெபாசிட் திட்டத்துக்கு மாறிக்கொள்ளும். சேமிப்பு கணக்கில் தொகை குறையும்போது பிக்ஸட் டெபாசிட்டிலிருந்து சேமிப்புக் கணக்கிற்கு வந்துவிடும். இது சேவிங்ஸ் பிளஸ் கணக்கு.
சேமிப்புக் கணக்கு மற்றும் பிளக்ஸி டெபாசிட் இரண்டிலும் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும். சேமிப்பு கணக்கில் இருப்பு குறையும்போது பிளக்ஸி டெபாசிட்டிலிருந்து சேமிப்புக் கணக்கிற்கு பணம் செல்லும். அதேபோல சேமிப்பில் உயர்ந்தாலும் டெபாசிட்டுக்கு பணம் மாறிவிடும். இது பிளக்ஸி டெபாசிட் சேமிப்புக் கணக்கு.
இவற்றை மாற்றிக் கொண்டிருக்க வங்கி கிளைக்கு நாம் அலையத் தேவையில்லை. இந்த இரண்டு வங்கிக் கணக்குகளுக்கும் சேமிப்புக் கணக்கைவிட அதிக வட்டி கிடைக்கிறது.
எங்கு எடுக்க வேண்டும்
பல்வேறு வங்கிகளும் பிளக்ஸி டெபாசிட் திட்டத்தை வழங்கி வருகின்றன. ஆனால் ஒவ்வொரு வங்கிகளும் சில தனிப்பட்ட விதிமுறைகளை வைத்துள்ளன. சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை, பிளக்ஸி டெபாசிட்டுக்கான தொகை மற்றும் கால வரம்புகளையும் வைத்துள்ளன.
எப்படி செயல்படுகிறது?
உதாரணமாக பிளக்ஸி டெபாசிட் கணக்கில் 50 ஆயிரமும், சேமிப்புக் கணக்கில் 50 ஆயிரமும் இருக்கிறது என்றால், சேமிப்புக் கணக்கில் ரூ.5,000 குறைகிறபோது பிளக்ஸி டெபாசிட்டிலிருந்து வந்துவிடும். டெபாசிட்டில் இருக்கும் தொகைக்கு டெபாசிட் வட்டியும், சேமிப்புக் கணக்கில் இருக்கும் தொகைக்கு அதன் வட்டியும் கிடைக்கும். அதாவது சேமிப்புக் கணக்கில் உள்ள இருப்புத் தொகைக்கு மேல் காசோலை அளிக்கிறோம் என்றால் சேமிப்புக் கணக்கில் பணம் இல்லை என்றால் காசோலை திரும்பி வராது. பிளக்ஸி கணக்கிலிருந்து சேமிப்புக் கணக்கிற்கு பணம் பரிமாற்றம் செய்யப் பட்டு காசோலைக்கு தொகை அளிக்கப்படும்.
உதாரணமாக ரூ.50,000-க்கு காசோலை அளித்துள்ளோம், ஆனால் கணக்கில் ரூ40,000 தான் பணம் இருக்கிறது என்றால், பிளக்ஸி டெபாசிட்டிலிருந்து ரூ.10 ஆயிரம் பரிமாற்றம் செய்யப்படும். இதற்கு தனியாக எந்த கட்டணங்களையும் பிடித்தம் செய்வதில்லை என்பதும் முக்கியமானது. இந்த வசதிகளையும் சில குறிப்பிட்ட வங்கிகள் வழங்குகின்றன.
பொதுவான அடிப்படைகள்
இந்த பிளக்ஸி வங்கிக் கணக்கை எல்லா வங்கிகளும் ஒரே மாதிரியாக வழங்கவில்லை. ஒவ்வொரு வங்கியும் தங்களுக்கு ஏற்ப வெவ்வேறு விதிமுறைகளை வைத்துள்ளன. ஆனால் எல்லா வங்கிகளுக்கும் பொதுவாக சில அடிப்படையில் இந்த இரண்டு கணக்குகளையும் வழங்கி வருகின்றன.
பிளக்ஸி டெபாசிட் கணக்கை எளிதாக தொடங்கிவிடலாம் என்பதும், தேவைப்படும் போது பணத்தை வெளியே எடுத்துவிடலாம் என்பதும் இந்த கணக்கில் உள்ள வசதி. இதற்கான அதிக தொகையை முதலீடு செய்ய வேண்டும் என்கிற கட்டாயமில்லை. சேவிங்ஸ் பிளஸ் கணக்கிற்கு வங்கிகள் நிர்ணயிக்கும் குறைந்த பட்ச இருப்பு தொகை கணக்கிடப்படும். ஆனால் இந்த வரம்பு வங்கிக்கு வங்கி வேறுபடும்.
எவ்வளவு இருப்பு
ஒவ்வொரு வங்கியிலும் குறைந்தபட்ச இருப்புதொகை அளவு வெவ்வேறாக உள்ளது. குறிப்பாக எஸ்பிஐ வங்கியில் சேவிஸ் பிளஸ் கணக்கிற்கு குறைந்தபட்ச இருப்புத்தொகை ரூ.25 ஆயிரம். கூடுதலாக உள்ள தொகை 1000 ரூபாயின் மடங்கில் டெபாசிட்டுக்கு சென்றுவிடும். ஐசிஐசிஐ வங்கியில் இந்த கணக்கிற்கு குறைந்தபட்ச இருப்புத் தொகை ரூ10,000. கூடுதலாகும் தொகை 5,000 மடங்கில் டெபாசிட் திட்டத்துக்குச் செல்லும்
இலகுதன்மை
பிக்ஸட் டெபாசிட் திட்டம் வழங்கும் பாதுகாப்பு மற்றும் அதிக வட்டி, சேமிப்புக் கணக்கின் இலகுதன்மை போன்ற இரண்டும் இணைந்த பலன்களை இந்த பிளக்ஸி சேமிப்புக் கணக்கு மற்றும் டெபாசிட் திட்டங்கள் வழங்குகின்றன. ஆனால் இது குறுகிய கால திட்டம் என்பதால் ஒரு ஆண்டுக்கு மேல் பிக்ஸட் டெபாசிட் கணக்கிடப்பட மாட்டாது.
திட்டத்தின் நோக்கம்
இந்த கணக்கின் நோக்கம் கையிருப்பு தொகையை பல இடங்களில் முடக்குவதைவிட சேமிப்பு திட்டமே முதலீடாகவும் இருக்கும் என்பது தான். அதனால் அடிக்கடி சேமிப்புக் கணக்கி லிருந்து அதிக தொகையை எடுத்தால் வட்டி கணக்கிடுவதும் குறையும். இதனால் சேமிப்பு தொகையிலிருந்து கிடைக்கும் வருமானம் குறையும்.
ஆலோசனை தேவை
சேமிப்புக் கணக்கிலிருந்து அதிக வட்டி கிடைக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்களுக்கு இது போன்ற வங்கிக் கணக்குகள் உதவியாக இருக்கும்.
என்னதான் பல யோசனைகள் வெளியிலிருந்து வந்தாலும், உங்கள் நிதி நிலைமை, தேவைகள் மற்றும் நிதி ஆலோசகர்களின் ஆலோசனையுடன் உங்கள் முடிவின்படி எந்த முதலீடுகளையும் மேற்கொள்வதே சிறந்த நிதி மேலாண்மை என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.