

சொகுசு கார் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஜெர்மனியின் மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ-2016-ல் ஒரு சைக்கிளை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்நிறுவனத்தின் புதிய அறிமுக கார்களுக்கு மத்தியில் நடு நாயகமாக வீற்றிருந்த சைக்கிள் பெரும்பாலானோரை வெகுவாகக் கவர்ந்தது. ஃபிட்னெஸ் பைக் என்ற ரகத்தில் இந்த சைக்கிளை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. சைக்கிள் ரேஸில் பயன்படுத்தக் கூடிய அதேசமயம் மற்றவர்களும் பயன்படுத்தும் வகையில் இந்த சைக்கிளை இந்நிறுவனம் கொண்டுவந்துள்ளது.
கார் ஓட்டுபவர்களுக்கும் சைக்கிள் ஒட்டுபவர்களுக்கும் இலக்கு ஒன்றுதான். அதாவது பென்ஸ் நிறுவனத்தின் சித்தாந்தத்தின்படி இரு தரப்பினருமே ஒரு வாகனம் மூலம் இடம்பெயர நினைப்பவர்கள்.
கார்களில் சொகுசான பயணம் அதேசமயம் உடல் திறனை சரிவர பராமரிக்கவும் மலையேற்ற, சாகச பயணங்களில் பயன்படுத்தவும் பலரும் சைக்கிளை விரும்புகின்றனர். அதனாலேயே வெறுமனே கார் தயாரிப்பில் மட்டுமின்றி சைக்கிள் தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளதாக நிறுவனம் தெரிவிக்கிறது.
உடல் திறனை பராமரிக்க தனியாக ஃபிட்னெஸ் சைக்கிள், மலையேற்ற சாகச பயணத்துக்கு தனி சைக்கிள் தயாரிப்போடு நின்றுவிடாமல் சிறுவர்களுக்கான சைக்கிளையும் இந்நிறுவனம் தயாரிக்கிறது.
சைக்கிள் ஓட்டுபவரின் பாதுகாப்புக்கென சைக்கிள் ஹெல்மெட் உள்ளிட்டவற்றையும் இந்நிறுவனம் தயாரிக்கிறது.
டெல்லி கண்காட்சியில் இடம்பெற்ற சைக்கிள் மொத்தம் 27 கியர்களைக் கொண்டது. அதாவது கிராங் வீலில் 3 பற்சக்கரமும், பிரீஃவீலில் 9 பற்சக்கரங்களும் உள்ளன. இதனால் மொத்தம் 27 கியர்கள் இதில் உள்ளன.
இரு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக், முன்புற போர்க்கில் ஷாக் அப்சார்பர் வசதி உள்ளிட்டவை இதன் கூடுதல் சிறப்பம்சங்களாகும். மெர்சிடஸ் கார் என்றாலே அது விலை அதிகமாகத்தான் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அதைப்போலவே நிறுவன சைக்கிளும் விலை அதிகமாகத்தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. விற்பனைக்கு வந்துள்ள இந்த சைக்கிள் விலை ரூ. 1.30 லட்சமாகும்.
சீறிப் பாயும் பைக் விலையில் சைக்கிளா என ஆச்சர்யம் மேலோங்கும். ஆனால் மெர்சிடஸ் என்றால் அந்த பிராண்டுக்கே தனி மவுசு இருக்கத்தானே செய்கிறது. பிராண்டை விரும்பும் வசதி படைத்தவர்கள் தங்கள் அந்தஸ்தை பறைசாற்ற மெர்சிடஸ் சைக்கிளை வாங்க தயங்கமாட்டார்கள்.
மடக்கும் சைக்கிள்
சைக்கிளை மடக்கி எடுத்துச் செல்லும் வகையில் வடிவமைத்து காட்சிப்படுத்தியுள்ளது ஃபயர்பாக்ஸ் நிறுவனம். மோட்டார் வாகன கண்காட்சியில் பார்வையாளர்களைக் கவர்ந்ததில் ஃபயர்பாக்ஸ் நிறுவன சைக்கிள்களுக்கு முக்கிய பங்குண்டு. அதிலும் குறிப்பாக இந்த மடக்கு ரக சைக்கிளைக் கண்டு வியக்காதவர் இருக்க முடியாது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துத் தரப்பினர் மற்றும் மலையேற்ற சாகச வீரர்களுக்கான சைக்கிள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஃபயர்பாக்ஸ் நிறுவனத்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஹீரோ சைக்கிள் குழும நிறுவனம் கையகப்படுத்தியது. இருப்பினும் இந்நிறுவனம் தொடர்ந்து ஃபயர்பாக்ஸ் என்ற பெயரில் பொருள்களை சந்தைப்படுத்தி விற்பனை செய்து வருகிறது. 9 கியர்களுடன் எடை குறைவாக, தேவைக்கேற்ப உயரத்தை அதிகரித்துக் கொள்ளும் வசதியுடன் இது வடிவமைக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.