Published : 19 Jul 2021 10:59 AM
Last Updated : 19 Jul 2021 10:59 AM

தெற்காசியாவின் அடையாளமாகிறதா வங்கதேசம்?

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு துபாய் சென் றிருந்தபோது, ‘ஹோர் அல் அன்ஸ்’ (Hor Al Anz) வீதியில் உள்ள ‘டீ மேன்’கடையையொட்டிய நடைபாதையில் ஒரு வெள்ளிக்கிழமை மாலைப்பொழுதில் கண்ட ஒரு காட்சி இன்னும் என்னுள் உயிர்ப்புடன் இருக்கிறது. வளைகுடா நாடுகளில் வெள்ளிக்கிழமை என்பது பொது விடுமுறை தினம். பிழைப்புக்காக வளைகுடா நாடுகளுக்குச் சென்றவர்களுக்கு வியாழக்கிழமை மாலையும், வெள்ளிக்கிழமையும் கொண்டாட்டத்துக்கான தருணங்கள். மாலை நேரத்தில் உணவு விடுதிகளில், தேநீர் கடைகளில் நண்பர்களின் கூடுகை நிகழும். பண்டிகை தினம்போல் அது காட்சியளிக்கும்.

அப்படியான, ஒரு வெள்ளிக்கிழமை மாலைப்பொழுதில் ‘ஹோர் அல் அன்ஸ்’ வீதியின் நடைபாதையில், கையில் தேநீர் குவளையுடன் ஒருபுறம் வங்கதேசிகள், ஒருபுறம் பாகிஸ்தானிகள், ஒருபுறம் இந்தியர்கள் தங்கள் நண்பர்களுடன் அளவலாவிக் கொண்டிருந்தனர். சிலர் தாயம் விளையாடிக்கொண்டிருந்தனர்; சிலர் சுவற்றில் சாய்ந்துகொண்டு தேநீர் குவளையை உற்றுநோக்கியபடி இருந்தனர்; சிலர் கடல் கடந்து இருக்கும் தங்கள் குடும்பத்தினரிடம் பேசிக்கொண்டிருந்தனர். மூன்று தேச மக்களையும் ஒரே இடத்தில் அருகருகே பார்த்தபோது ஒருவகையான துயர் உணர்வு ஏற்பட்டது. 1947 ஆகஸ்டு வரையில் ஒரே நாடாக இருந்தவர்கள், தற்போது சமூகரீதியாக, கலாச்சாரரீதியாக பொருளாதாரரீதியாக வேறுவேறு தளத்தில் பயணித்துக்கொண்டிருக்கிறார்கள். தனித்தனி துயர வரலாறுகள்.

அங்கு இந்தியர்கள், பாகிஸ்தானியர்களை விட வங்கதேசிகளைப் பார்க்கையில் மிகுந்த வருந்தமாக இருந்தது. அவர்களில் பெரும்பாலானோர் வளைகுடா நாடுகளில் மிகக் குறைந்த ஊதிய வேலைகளுக்கே பணியமர்த்தப்படுகிறார்கள். குடும்பத்தைக் காப்பாற்ற பல வருடங்களுக்கு ஊருக்குப் போகாமல், உழைத்துக்கொண்டிருப்பார்கள். அவர்கள் முகத்தில் வெளிப்படும் வறுமையும், துயரும், உறுதியும், உழைப்பும் வங்கதேசத்தின் உருவகமாகவே தென்படும்.

வங்கதேசத்தின் 50 ஆண்டுகள்

1971-ம் ஆண்டு மார்ச் மாதம் பாகிஸ்தானிலிருந்து பிரிந்து தனிநாடாக வங்கதேசம் உருவாகிறது. கடும் பஞ்சத்தின் ஊடாக அந்நாடு தன் பயணத்தைத் தொடங்குகிறது. வங்கதேசம் நீண்ட நாள் தாக்குப் பிடிக்காது என்று பல நாடுகள் கருதின. ஆனால், இன்று தெற்காசிய நாடுகளில் இந்தியாவைவிடவும் உலக அளவில் கவனிக்கத்தக்க நாடாக மாறியிருக்கிறது வங்கதேசம். கடந்த மார்ச் மாதத்தோடு வங்கதேசம் உருவாகி 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்த 50 ஆண்டுகளில் அந்நாடு சமூகரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும் பாகிஸ்தானை விட பல மடங்கு முன்னர்கந்து சென்றுள்ளது. சில அம்சங்களில் இந்தியாவை விடவும் முன்னேறிய நிலையில் உள்ளது. குறிப்பாக தனிநபர் வருவாய், வேலைவாய்ப்பில் பெண்களின் பங்கு, குழந்தை இறப்பு விகிதம், பொதுக் கடன் - ஜிடிபி விகிதாச்சாரம், முதலீடு - ஜிடிபி விகிதாச்சாரம் ஆகிய தளங்களில் இந்தியாவை விடவும் வங்கதேசம் முன்னிலையில் இருக்கிறது.

16 கோடி மக்கள் தொகையைக் கொண்டிருக்கும் வங்கதேசம், தெற்காசிய நாடுகளில் அதிகமான பொருளாதார வளர்ச்சி விகிதத்தைக் கொண்டிருக்கும் நாடாக திகழ்கிறது. அனைத்திலும் உச்சமாக வங்கதேசத்தின் தனிநபர் வருமானம் இந்தியாவை விட அதிகம். தற்போது வங்கதேசத்தின் தனிநபர் வருமானம் 2,227 டாலராக உள்ளது. இந்தியாவில் அது 1,947 டாலராகவும், பாகிஸ்தானில் 1,543 டாலராகவும் உள்ளது. நீண்ட நாள் தாக்குப்பிடிக்க முடியாது என்று கருதப்பட்ட ஒரு நாடு, ஐம்பது ஆண்டுகளில் தெற்காசியாவின் கவனிக்கத்தக்க நாடாக எப்படி மாறியது? நான்கு காரணங்களைச் சொல்லலாம். ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் கவனம் செலுத்தியது, பிற நாடுகளுடனான வரியில்லா
வர்த்தக உறவு, வெளிநாடுகளில் வேலைசெய்யும் வங்கதேசிகள் வழியிலான பண வரத்து, வேலைவாய்ப்பில் பெண்களின் பங்களிப்பு.

ஜவுளி உற்பத்தியும் ஏற்றுமதியும்

வங்கதேசம் தனிநாடாக உருவான பிறகு ஜவுளி உற்பத்தியிலும் ஏற்றுமதியிலும் கவனம் செலுத்தத் தொடங்கியது. இன்று ஜவுளி ஏற்றுமதியில் உலகின் இரண்டாவது நாடாக வங்கதேசம் உள்ளது. ஆண்டுக்கு 35 பில்லியன் டாலர் அளவில் ஜவுளித் தயாரிப்புகள் வங்கதேசத்திலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. வங்கதேசத்தின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் ஜவுளிப் பொருட்களின் ஏற்றுமதி மட்டும் 80 சதவீதப் பங்கு வகிக்கிறது. ஆரம்ப கட்டத்தில் ஜவுளி உற்பத்தியிலும், ஏற்றுமதியிலும் வங்கதேசத்துக்குப் போட்டியாக இந்தியா இருந்துவந்தது. ஆனால், கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவை தாண்டி வங்கதேசம் முன் சென்றுவிட்டது. 2006-07ம் நிதி ஆண்டில் 9.21 பில்லியன் டாலராக இருந்த வங்கதேசத்தின் ஜவுளி ஏற்றுமதி, 2018-19ம் நிதி ஆண்டில் 34 பில்லியன் டாலராக உயர்ந்தது. அதுவே 2006-07ம் ஆண்டில் 8.8 பில்லியன் டாலராக இருந்த இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதி தற்போது 18 பில்லியன் டாலராக உள்ளது.

இந்தியாவை விடவும் வங்கதேசம் ஜவுளி ஏற்றுமதியில் முன்னிலை வகிப்பதற்கு சில காரணங்கள் உள்ளன. முதல் காரணம். வங்கதேசம் ஜவுளிப் பொருட்களை குறைந்த ஊதியத்தில் தயாரிக்கிறது. அமெரிக்காவில் ஒரு சட்டை தயாரிக்க ஊழியருக்கு வழங்கப்படும் கூலி 7 டாலர் என்றால், இந்தியாவில் அது 50 சென்ட்ஸ் (0.5 டாலர்), வங்கதேசத்திலோ அது 22 சென்ட்ஸ் (0.22 டாலர்) மட்டுமே. இதனால் இந்தியாவில் தயாரிக்கப்படும் ஆடைகளைவிடவும் வங்கதேசத்தில் தயாரிக்கப்படும் ஆடை 10 முதல் 20 சதவீதம் வரையில் மலிவானது. இரண்டாவது காரணம். வங்கதேசத்தில் ஜவுளி ஏற்றுமதியில் ஈடுபடும் நிறுவனங்களில் 80 சதவீதம் பெரிய நிறுவனங்கள். அதுவே இந்தியாவில் ஜவுளி ஏற்றுமதியில் ஈடுபடும் நிறுவனங்களில் 80 சதவீதம் சிறிய நிறுவனங்கள். இதனால் ஒரு நாளில் இந்திய நிறுவனங்களில் தயாரிக்கப்படும் ஆடைகளின் எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு அதிகமாக வங்கதேச நிறுவனங்கள் தயாரிக்கின்றன.

வரிச் சலுகையும் வெளிநாட்டுப் பணமும்

1975- ம் ஆண்டு முதலே வங்கதேசம் பின்தங்கிய நாடுகளில் பட்டியலில் உள்ளது. பின்தங்கிய நாடுகளுக்கு வளர்ந்த நாடுகள் வரிச் சலுகை வழங்குவதுண்டு. அதன்படி, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, கனடா, நியூசிலாந்து, ஸ்விட்சர்லாந்து, ஜப்பான், சீனா, தென்கொரியா உட்பட 52 நாடுகளுக்கு பல்வேறு தயாரிப்புகளை வரியேதுமின்றி வங்கதேசம் ஏற்றுமதி செய்கிறது. வங்கதேசத்தின் பொருளாதார வளர்ச்சியில் இத்தகைய வரியில்லா வர்த்தகம் குறிப்பிடத்தக்க அளவில் பங்கு வகிக்கிறது. ஜவுளி ஏற்றுமதி, வரிச் சலுகைக்கு அடுத்த படியாக வங்கதேசத்துக்குப் பக்கபலமாக அமைவது வெளிநாடுகளில் வேலை செய்யும் வங்கதேசிகள் மூலம் நாட்டுக்குள் வரும் பணம். உலக அளவில் வேலைக்காக வெளிநாடுகளுக்கு புலம்பெயர்பவர்களில் வங்கதேசிகளின் எண்ணிக்கை அதிகம். குறிப்பாக வளைகுடா நாடுகளில் அதிக எண்ணிக்கையில் வங்கதேசிகள் உள்ளனர்.
பெரும்பாலானோர் கூலி வேலைகளில்தான் ஈடுபடுகிறார்கள் என்றாலும், அவர்கள் மூலம் ஆண்டுக்கு 16 பில்லியன் டாலர் அளவிலானபணம் வங்கதேசத்துக்குள் வருகிறது. பலர் வெளிநாடுகளில் வேலை செய்வது வங்கதேசத்தில் வேலையின்மைப் பிரச்சினையை சற்று தணித்துவிடுகிறது.

சமூகரீதியான முன்னேற்றம்

ஜவுளி ஏற்றுமதி முதன்மைப் பொருளாதாரமாக இருப்பதால், அது வங்கதேசத்தில் பொருளாதாரரீதியாகவும், சமூகரீதியாகவும் புதிய சாத்தியங்களை கொண்டுவந்திருக்கிறது. ஜவுளித் துறையின் வளர்ச்சியின் காரணமாக, வங்கதேசத்தில் வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வேலைச் சந்தையில் பெண்களின் பங்களிப்பு அதிகரிப்பது என்பது ஒரு நாட்டின் வளர்ச்சியைத் துரிதப்படுத்தும் காரணிகளில் ஒன்றாகும். வேலைவாய்ப்புச் சந்தையில் பெண்களின் பங்களிப்பு வங்கதேசத்தில் 36 சதவீதமாகவும், இந்தியாவில் 20 சதவீதமாகவும் உள்ளது.

அரசியல், வேலைவாய்ப்பு, கல்வி உள்ளிட்ட அடிப்படையான விஷயங்களில் இந்தியாவுடன் ஒப்பிடுகையில் வங்கதேசம் சிறப்பான முறையில பாலின சமத்துவத்தை கடைப்பிடிக்கிறது. பாலின சமத்துவத்தில் வங்கதேசம் 65-வது இடத்திலும் இந்தியா 140-வது இடத்திலும் உள்ளன. அதேபோல் இந்தியாவுடன் ஒப்பிடுகையில் வங்கதேசத்தில் ஏற்றத்தாழ்வும் குறைவு. இந்த ஐம்பது ஆண்டு காலகட்டத்தில் கல்வி, சுகாதாரம் போன்றவற்றிலும் குறிப்பிடத்தக்க அளவில் வங்கதேசம் மேம்பட்டுள்ளது. குழந்தை இறப்பு விகிதத்தை பெருமளவில் குறைத்துள்ளது. பாதுகாப்பற்ற குடிநீர், சுத்தமின்மை உள்ளிட்ட காரணங்களால் ஏற்படும் இறப்பு விகிதம் இந்தியாவில் 18.6 சதவீதமாக உள்ளது. வங்கதேசத்தில் 12 சதவீதமாக உள்ளது. சராசரி ஆயுட்காலம் இந்தியாவில் 69.4 வயதாக உள்ள நிலையில், வங்கதேசத்தில் அது 72.3 வயதாக உள்ளது. பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப சமூக மேம்பாட்டையும் வங்கதேசம் சாத்தியப்படுத்தியிருப்பது கவனிக்கத்தக்கது.

வங்கதேசத்தின் முன் இருக்கும் சவால்கள்

2024-க்குப் பிறகு வங்கதேசம் வளரும் நாடுகளின் பட்டியலில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி இடம்பெற்றுவிட்டால், இதுவரையில் பிற நாடுகளுடனான வர்த்தக உறவில் அனுபவித்துவந்த வரிச் சலுகைகள் கிடைக்காது. அது வங்கதேசத்தின் ஏற்றுமதியில் சற்று நெருக்கடியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல்ரீதியாக வன்முறை நிறைந்த நிலமாக வங்கதேசம் உள்ளது. கருந்துச் சுதந்திரம் அடிப்படையில் வங்கதேசம் இந்தியாவைப் போலவே பின்தங்கிய நிலையில் உள்ளது. அதேபோல் லஞ்சம் இல்லாமல் ஒரு காரியமும் நடக்காது என்ற சூழல் அங்கு இருக்கிறது.

இவற்றைக் களைவதே தற்போது வங்கதேசம் முன்னிருக்கும் முதன்மையான சவால்கள்.
வங்கதேசம் பொருளாதாரரீதியாக மேம்பட்டுவந்தாலும், அந்நாட்டு மக்கள் மிக மோசமான வாழ்க்கைச் சூழலையே கொண்டிருக்கின்றனர் என்பதையும் மறுக்கமுடியாது. தங்கள் வாழ்நாள் முழுவதும் இரவு, பகலாக தொழிற்சாலைகளில் அடைந்துகிடக்க வேண்டிய நிர்பந்தத்தில் அவர்கள் இருக்கின்றனர். வங்கதேசம் ஒளிர்கிறதா? ஆம், ஒளிர்கிறது. மக்களின் வாழ்வை உறிஞ்சியபடி.

இத்தகைய துயர்மிகு வாழ்க்கை மூன்றாம் உலக நாடுகளுக்கான விதியாக உள்ளது. எப்படியாயினும், பொருளாராத மேம்பாடு வழியாகவே இச்சூழலை மாற்றி அமைக்க முடியும். அதை தவிர வேறு வழியில்லை என்ற நிலையில்தான் உலகின் கட்டமைப்பு இருக்கிறது. அந்தவகையில் வங்கதேசத்தின் ஐம்பது ஆண்டுகால பயணம் வியக்கத்தக்கதாகவே உள்ளது. வங்கதேசம் உருவான சமயத்தில் பாகிஸ்தானின் பொருளாதாரம் வங்கதேசத்தைவிடவும் 70 சதவீதம் அதிகமாக இருந்தது. தற்போது வங்கதேசத்தின் பொருளாதாரம் பாகிஸ்தானைவிடவும் 45 சதவீதம் அதிகம். ஒருவகையில் வங்கதேசத்தின் வளர்ச்சியானது, பாகிஸ்தான் எவ்வளவு தேக்கத்தில் இருக்கிறது என்பதை உணர்த்துவதாகவும் இருக்கிறது. வங்கதேசத்திடமிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய இடத்தில் பாகிஸ்தான் இருப்பது எவ்வளவு துரதிர்ஷ்டமானது!

riyas.ma@hindutamil.co.i

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x