Last Updated : 05 Jul, 2021 10:37 AM

 

Published : 05 Jul 2021 10:37 AM
Last Updated : 05 Jul 2021 10:37 AM

வாராக் கடனும் வாராக் குற்றவாளிகளும்

“நான் சட்டத்தை மதித்து நடக்கும் குடிமகன். மருத்துவ சிகிச்சைக்காகத்தான் அமெரிக்காவுக்குச் சென்றேன். இந்தியாவின் சட்ட விதிகளை மீறவில்லை. இந்தியாவிலிருந்து புறப்படும் முன்பு எனக்கெதிராக கைது வாரண்ட் எதுவும் பிறப்பிக்கப்பட வில்லை” டொமி னிக்கன் உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட80 பக்க பிரமாண பத்திரத்தில் மெகுல் சோக்சி குறிப்பிட்டிருந்த வாசகங்கள்தான் இவை.

தேடப்படும் குற்றவாளிகளில் ஒருவரான வைர வியாபாரி மெகுல் சோக்சியை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க வாய்ப்பில்லை. இவர் மீது அந்நியச் செலாவணி மோசடி வழக்கு, ஊழல், கடனை திரும்ப செலுத்தாத வழக்கு உள்பட கிரிமினல் குற்ற வழக்குகளை மத்திய புலனாய்வு அமைப்பும், அமலாக்கத்துறையும் பதிவு செய்துள்ளன. பஞ்சாப் நேஷனல் வங்கியில் நீரவ் மோடியும் அவரது உறவினர் மெகுல் சோக்சியும் ரூ.13,500 கோடி அளவில் மோசடி செய்துவிட்டு 2018-ம் ஆண்டு வெளிநாடு தப்பிச் சென்றனர். இதில் நீரவ் மோடி லண்டனுக்கும், மெகுல் சோக்சி ஆன்டிகுவா தீவுக்கும் தப்பிச் சென்றனர்.

நீரவ் மோடி 2019 மார்ச் மாதம் லண்டனில் கைது செய்யப்பட்டார். அவரை இந்தியா அழைத்து வரும் முயற்சி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மெகுல் சோக்சி ஆன்டிகுவாவில் குடியுரிமைப் பெற்று தன் நாட்களை கழித்து வந்தார். இந்நிலையில்தான், ‘ஆன்டிகுவா தீவிலிருந்து மெகுல் சோக்சி மாயம்’, ‘கியூபாவுக்கு தப்பிக்க மெகுல் சோக்சி முயற்சி’, ‘மொகுல் சோக்சி கடத்தல்’, ‘காதலியுடன் மெகுல் சோக்சி’ என அவரைப் பற்றியான செய்திகள் கடந்த மே மாதத்தில் அதிகம் வலம் வந்தன. அதைத் தொடர்ந்து மே மாதம் கடைசி வாரத்தில் டொமினிக்கன் நாட்டில் அவர் கைது செய்யப்பட்டார்.

அவரை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கு பிரத்யேகமாக மத்திய அரசால் ஒரு தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு டொமினிக்கனுக்கு அனுப்பப்பட்டது. அதற்கென்று எட்டு அதிகாரிகள் டொமிக்கன் சென்றனர். வழக்கு விசாரணைக்காக ஏறக்குறைய ஒரு வார காலம் அவர்கள் காத்திருந்தனர். ஆனால், வழக்கு விசாரணை நீடித்துக்கொண்டே சென்றதால், இந்திய அதிகாரிகளுடன் விமானம் டெல்லிக்கு வந்துவிட்டது. எனினும், எப்படியும் அவரை இந்தியா அழைத்து வந்துவிட வேண்டும் என்று மத்திய அரசு தீவிரம் காட்டிவருகிறது.

4 ஆண்டுகளில் 38 பேர்

வங்கிகளில் பணம் பெற்று திரும்ப செலுத்தாமல் நாட்டை விட்டு ஓடிப் போனவர்கள் என்றால் விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சி இவர்கள்தான் நினைவுக்கு வருபவர்கள். ஆனால், 2015-ம் ஆண்டிலிருந்து2019-ம் ஆண்டு வரையான நான்கு ஆண்டுகளில் மோசடி வழக்குகளிலிருந்து தப்பிப்பதற்காக இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு தப்பியோடியவர்களின் எண்ணிக்கை38. இதில் மிகப் பெரும் மோசடி செய்வதர்கள் சந்தேசர் சகோதர்கள். வங்கிகளில் ரூ.15,000 கோடி அளவில் மோசடி செய்துவிட்டு சந்தேசர் சகோதர்கள் தங்கள் குடும்பத்தோடு 2017-ம் ஆண்டு வெளிநாடு தப்பிச் சென்றனர். இவர்கள் அல்பேனியா நாட்டில் குடியுரிமைப் பெற்று வசித்துவருகின்றனர்.

2015-19 வரையில் தப்பியோடிய 38 பேரில் 2 பேர் மட்டுமே இதுவரையில் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். மீதமுள்ள 36 பேர் இன்னும் வெளிநாடுகளில்தான் உள்ளனர். இவர்களில் 20 பேர் மீது அந்நியச் செலாவணி மோசடி வழக்குகள் உள்ளன. 11 பேர் மீது பொருளாதார குற்றங்களுக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர்களை இந்தியாவுக்கு அனுப்புமாறு14 நாடுகளுக்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. சென்ற ஆண்டு, ரூ.414 கோடி மோசடி வழக்கில் டெல்லியைத் தலைமையிடமாகக்கொண்ட ‘ராம் தேவ் இன்டர்நேஷனல் லிமிடெட்’ நிறுவனத்தின் இரு இயக்குநர்களும், ரூ.350 கோடி மோசடி வழக்கில் ‘பஞ்சாப் பாஸ்மதி ரைஸ் லிமிட்’ நிறுவனத்தின் இயக்குநர் ஒருவரும் வெளிநாடு தப்பிச் சென்றுள்ளனர்.

இவ்வாறு வங்கிகளில் பெருமளவு கடன் பெற்று மோசடி செய்துவிட்டு வெளிநாடு தப்புவது என்பது இந்தியாவில் தொடர்கதையாகி விட்டது. தப்பியோடியவர்கள் எதாவது ஒரு நாட்டில் தஞ்சம் அடைந்து குடியுரிமை பெற்றுவிட்டால், அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வருவது சிக்கலாகிறது. அதிகபட்சம் அவர்களது சொத்துக்களை முடக்குவது மட்டும்தான் இந்திய அரசால் செய்யக் கூடியதாக இருக்கிறது. அந்தவகையில், விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சி தொடர்புடைய ரூ.18,170 கோடி மதிப்பிலான சொத்துக்களை இதுவரையில் அமலாக்கத்துறை கைப்பற்றியுள்ளது. இதில் ரூ.9,371 கோடி மதிப்பிலான சொத்துகள் வங்கிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அந்த மூவர் வங்கிகளுக்கு ஏற்படுத்திய இழப்பு ரூ.22,585 கோடி. அந்தவகையில் 40 சதவீதம் மட்டுமே இதுவரையில் வங்கிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தப்பியோடியவர்களை என்ன செய்யப்போகிறோம்?

உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடுகளில் இந்தியாவும் ஒன்று. பிற வளரும் நாடுகள் எதிர்கொள்ளும் சவால்களை விட அதிகமான சவால்கள் இந்தியாவுக்கு வளர்ச்சி இலக்கை எட்டுவதில் முட்டுக் கட்டையாக அமைந்துள்ளது. வங்கிகளில் கடனை திரும்ப செலுத்தும் வழக்கம் அபூர்வமானதாகி வருவது இந்தியா எதிர்கொள்ளும் சவால்களில் ஒன்று. சிறிய கடன், கல்விக் கடன் உள்ளிட்ட அனைத்தும் தள்ளுபடி செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பினரிடையே மேலோங்கி இருக்கிறது.

அனைத்துக்கும் மேலாக தொழில் தொடங்குவதற்கு வங்கிகளில் பெருமளவு கடன் தொகை பெற்று அதை திரும்ப செலுத்தாமல் வெளிநாடுகளுக்கு தப்பியோடிய தொழிலதிபர்களால் வங்கிகள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகின்றன. வங்கிகள், வங்கிசாரா நிதி நிறுவனங்கள் கணக்கு வழக்கு இல்லாமல் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு கடனை கடனை வாரி வழங்கி திவாலாகும் நிலைக்கு உள்ளாகுவது சமீப காலங்களில் தொடர்ச்சியாக நடந்துவருகிறது. ஐஎல் அண்ட் எஃப்எஸ் தொடங்கி யெஸ் வங்கி வரையில் உதாரணம் சொல்ல முடியும்.

கரோனா வைரஸால்இந்தியாவின் பொருளாதாரம் பாதாளத்திற்கு சென்றுள்ளது. கடந்த நாற்பது ஆண்டுகளில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி மைனஸ் 7.3 சதவீதமாக சரிந்துவிட்டது. ஊரடங்கு, அதனால் ஏற்பட்ட வேலை முடக்கம் உள்ளிட்ட சவால்களை சமாளிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இப்போது நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டதற்கு கரோனா வைரஸைக் காரணமாகக் கூறலாம். ஆனால் கடந்த காலங்களில் நாட்டின் பொருளாதாரத்தை சூறையாடி, வங்கிகளை நிதி நெருக்கடிக்குத் தள்ளி வெளிநாட்டிற்கு தப்பியோடிய தொழிலதிபர்களை என்ன செய்யப் போகிறோம்? அவர்களின் சொத்துக்களை முடக்கினால் மட்டும்போதுமா, அவர்களுக்கு எப்போது தண்டனை வழங்குவது?

அவசியமாகும் தொடர் கண்காணிப்பு

2020-21-ம் நிதி ஆண்டில் வங்கி மோசடி எண்ணிக்கை 15 சதவீதம் அளவில் குறைந்திருப்பதாக சமீபத்தில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட ஆண்டறிக்கை கூறுகிறது. 2019-20ம் நிதி ஆண்டில் வங்கிகளில் கடனாகப் பெற்று மோசடி செய்யப்பட்ட தொகை ரூ.1.85 டிரில்லியனாக உள்ள நிலையில், 2020-21ல் அது ரூ.1.35 டிரில்லியனாக குறைந்துள்ளது. அதேபோல், ஒப்பீட்டளவில் சென்ற நிதி ஆண்டில் பொதுத்துறை வங்களில் மோசடிகள் குறைந்துள்ளதாகவும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. பொதுத்துறை வங்கிகளில் 2019-20 நிதி ஆண்டில் 4,410 கடன் மோசடிகள் நடைபெற்ற நிலையில், சென்ற நிதி ஆண்டில் அது 2,903 ஆக குறைந்துள்ளது. பொதுத்துறை வங்கிகளில் 2019-20ம் நிதி ஆண்டில் மோசடி செய்யப்பட்ட தொகை ரூ.1,48,224 கோடியாக இருந்தது.

சென்ற நிதி ஆண்டில் அது ரூ.81,901 கோடியாக குறைந்துள்ளது. ஆனால் தனியார் வங்கிகளில் மோசடிகள் பெரிய அளவில் அதிகரித்துள்ளன. 2019-20ம் நிதி ஆண்டில் தனியார் வங்கிகளில் நடந்த மோசடிகளின் எண்ணிக்கை 3,065. அந்த எண்ணிக்கை 2020-21ம் நிதி ஆண்டில் 3,710 ஆக அதிகரித்துள்ளது. 2019-20-ம் நிதி ஆண்டில் மோசடி செய்யப்பட்ட தொகை ரூ.34,211 கோடி. 2020-21-ம் நிதி ஆண்டில் அது 35 சதவீதம் உயர்ந்து ரூ.46,335 கோடியாக உள்ளது. ஒட்டுமொத்த அளவில் சென்ற நிதி ஆண்டில் வங்கி மோசடி குறைந்திருக்கிறது என்பது நல்ல செய்திதான். ஆனால், அதை நாம் வெற்றியாக கருதிவிட முடியாது. கடன் மோசடிகள் பலவும் நீண்ட நாட்களுக்குப் பிறகே பூதாகரமாக வெடிக்கக் கூடியவை. எனவே, வங்கிக் கடன்கள் சார்ந்து தொடர் கண்காணிப்பு மேற்கொள்வது அவசியம்.

காகித இலக்குகள்

2029 -ம் ஆண்டில் இந்தியாவை5 லட்சம் டாலர் பொருளாதார நாடாக உயர்த்துவதற்குஇலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இப்போது கரோனா ஊரடங்கால் சரிந்த பொருளாதாரம் காரணமாகஇந்த இலக்குதள்ளிப்போடப்பட்டுள்ளது. அதாவது, 2032-ல் இந்தியா5 லட்சம் டாலர் பொருளாதார நாடாக உயரும் என்று அரசு குறிப்பிடுகிறது. இலக்கு நிர்ணயிக்கப்பட்டது சரி, நாட்டில் வங்கிகளுக்கு மிகப்பெரும் வாராக் கடன் சுமையை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய தொழிலதிபர்களிடமிருந்து பணத்தை வசூலிக்காமல் இலக்கை எப்படி எட்ட முடியும்? எளிதில் வங்கிகளை ஏமாற்ற முடியும், பணத்தைக் கட்டாமல் வெளிநாடுகளுக்கு தப்பியோட முடியும் என்பதற்கு முன்னோடிகளாக38 பேர் உள்ளனரே.

ஒவ்வொரு தவறுக்குப் பிறகும்தான் வங்கிகள் விழித்துக்கொள்வது வாடிக்கை போலும். இப்போது ரூ.50 கோடிக்கு மேல் கடன் பெறும் நிறுவனங்களின் இயக்குநர்களின் பாஸ்போர்ட் நகலை வங்கிகள் கட்டாயம் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை சம்பந்தப்பட்ட நபர் வெளிநாடு தப்பி ஓடினாலோ அல்லது தப்பி ஓடுவார் என்று கருதப்படும்பட்சத்தில் சர்வதேச போலீஸுக்கு தேடப்படும் நபர் என்ற விவரத்தை பாஸ்போர்ட் நகல் மூலம் அளிக்க முடியும். இதை கட்டாயம் செய்ய வேண்டும் என பொதுத்துறை வங்கிகளுக்கு மத்திய நிதி அமைச்சகம் உத்தரவாக பிறப்பித்துள்ளது. தவறு செய்தால் தண்டனை கிடைக்கும் என்ற நிலை உருவாக வேண்டும். அதற்கு வலுவான சட்டங்கள் ஏற்படுத்த வேண்டும். அத்தகைய சூழல் உருவாகாத வரை இலக்குகள் அனைத்தும் வெறும் காகிதத்தில் மட்டும்தான் இருக்கும். ஒருபோதும் அவற்றை எட்ட முடியாது.

ramesh.m@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x