

ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் தயாரிப்பில் உலக அளவில் பிரபலமாக விளங்குவது மேக்னா இண்டர்நேஷனல் நிறுவனம். கனடாவில் அன்டாரியோ மாகாணத்தில் அரோரா எனுமிடத்தில் தலைமையகத்தைக் கொண்டுள்ள இந்நிறுவனம் குஜராத் மாநிலம் சனந்த் நகர் பகுதியில் இரண்டு ஆலைகளைத் தொடங்கியுள்ளது. ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் தயாரிப்பில் சர்வதேச அளவில் மிகப் பெரிய நிறுவனம் இந்தியாவில் இரண்டு ஆலைகளைத் தொடங்கியிருப்பது, இத்துறையில் இந்தியா அபரிமித வளர்ச்சியை எட்டிவருவதையே சுட்டிக் காட்டுவதாக உள்ளது.
ஏற்கெனவே இந்நிறுவனத்துக்கு 9 ஆலைகள் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் உள்ளன. தற்போது கூடுதலாக 2 ஆலைகளை இந்நிறுவனம் திறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிறுவனம் இன்ஜின்கள், வெளிப்புற பாகங்கள், கார்களுக்கான சீட்கள், கண்ணாடிகள், மின்னணு உபகரணங்கள் என பலவற்றையும் தயாரிக்கிறது. ஜெனரல் மோட்டார்ஸ், ஃபோர்டு, கிறைஸ்லர் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு இந்நிறுவனம் உதிரி பாகங்களை சப்ளை செய்கிறது. இது தவிர டெஸ்லா மோட்டார்ஸ், ஃபோக்ஸ்வேகன், பிஎம்டபிள்யூ, டொயோடா உள்ளிட்ட கார் தயாரிப்பு நிறுவனங்ளும் மேக்னாவின் வாடிக்கை யாளர்களாக உள்ளன.
29 நாடுகளில் 287-க்கும் அதிகமான ஆலைகளைக் கொண்டுள்ள இந்நிறுவ னத்துக்கு 81 பொருள் உற்பத்தி மேம்பாட்டு மையங்கள் உள்ளன. இந்நிறுவனத்துக்கு சொந்தமான ஆலைகளில் மொத்தம் 1.24 லட்சம் பணியாளர்கள் உள்ளனர். மேக்னா இண்டர்நேஷனல் நிறுவனம் தொடங்கியுள்ள இரண்டு ஆலை களில் ஒன்று கார்களின் இருக்கை களைத் தயாரிக்கும். மேக்னா சீட்டிங் என்ற பெயரில் இந்த ஆலை தொடங்கப்பட்டுள்ளது. இந்நிறுவ னத்தின் துணை நிறுவனமான காஸ்மா இண்டர்நேஷனல் பெயரில் மற்றொரு ஆலை செயல்படும். இந்த ஆலை கார்களுக்கான சேஸிஸ் மற்றும் பொறியியல் சார்ந்த தீர்வுகளை அளிக்கும். இந்தியாவில் உள்ள இந்நிறுவன வாடிக்கையாளர்களுக்கு தேவையான பொருள்களை தயாரித்து அளிப்பதற்காக குஜராத் மாநிலத்தில் ஆலையைத் தொடங்கியுள்ளதாக நிறுவனத்தின் இந்தியப் பிரிவு மேலாளர் டி. தேசாய் தெரிவித்துள்ளார்.
ஃபோர்டு உள்ளிட்ட வாடிக்கையா ளர்களுக்குப் போதுமான உதிரி பாகங்களை சப்ளை செய்யும் அளவுக்கு இந்த ஆலை உள்ளது. வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து தேவை உயரும்போது ஆலைகள் விரிவாக்கம் செய்யப்படும் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். எதிர்காலத்தில் இங்கிருந்து பிற நாடுகளில் உள்ள வாடிக்கையாளர் நிறுவனங்களுக்கு ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு உள்ளதாகவும் அவர் கூறினார். அடுத்த நான்கு ஆண்டுகளில் நிறுவனத்தின் வருமானம் மூன்று மடங்கு உயரும் என தேசாய் நிச்சயமாக கூறுகிறார். இதற்கு அவர் கூறும் காரணம் சீனாவில் கார் சந்தை 2004-ம் ஆண்டு 40 லட்சமாக இருந்தது. 2014-ல் 2.40 கோடியாக உயர்ந் துள்ளது. அதேபோல இந்தியாவிலும் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும்போது கார்களின் விற்பனை மூன்று மடங்கு உயரும் என்று குறிப்பிட்டுள்ளார்.
சனந்த் நகரில் தொடங்கியுள்ள 2 ஆலைகள் மூலம் 600 பேருக்கு வேலை வாய்ப்புக் கிடைக்கும். இந்தியாவில் இந்நிறுவனத்தில் 1,600 பேர் பணிபுரிகின்றனர். 11 ஆலைகள் தவிர 3 பொறியியல் மையங்களையும் இந்நிறுவனம் செயல்படுத்துகிறது.
இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்களும் இத்துறையின் வளர்ச்சியைக் கணித்து தங்களது தொழில் வளர்ச்சிக்குத் திட்டமிடுவது பயனுள்ளதாயிருக்கும்.