Published : 14 Jun 2021 11:38 AM
Last Updated : 14 Jun 2021 11:38 AM

கவலை வேண்டாம் அண்ணாச்சி

அன்புள்ள கடைக்காரருக்கு,

உங்கள் நலம் விரும்பியின் வணக்கம். கரோனா கடித்துக் குதறும் இக்காலத்தில் எப்படி இருக்கீங்க என்று கேட்டால் ‘யாரை கேக்கறீங்க, என்னையா, என் கடையையா’ என்று நொந்து போய் கேட்கும் நிலையில் உங்கள் வாழ்க்கை இருப்பது தெரிகிறது. உங்கள் வியாபார வலியும் புரிகிறது. உங்கள் கடை எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்று கூறவே இந்த கடிதம்!

பாகுபலி படம் போல் கரோனா முதல் பகுதி, இரண்டாம் அலை, மூன்றாவது பாகம் விரைவில் என்று வயிற்றெரிச்சலில் பெட்ரோல் ஊற்றும் வைபவம் ஒருபுறம், கடைக்கு வந்து சாமான் வாங்குவதா, வேண்டாமா என்று மக்கள் பொறுமை காத்து வீட்டில் முடங்கும் வில்லங்கம் மறுபுறம். உங்கள் வியாபார மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் அடி. அந்த சோக சத்தத்தை இளையராஜா ரிதமாய் மாற்றவே இக்கடிதம்!

உங்களுக்கும் உங்கள் கடைக்கும் அர்ஜென்டாய் தேவை ஒரு வேக்சீன். உங்களுக்கான வேக்சீனை அரசு கவனிக்கும். உங்கள் கடைக்கான வேக்சீன் பற்றி நாம பேசுவோம். கரோனா அலம்பலில், மக்கள் புலம்பலில், டீவி அலறலில் கடைகளை கரைசேர்க்க வந்திருக்கும் புதிய ஆப்ஸ்கள் கண்டுகொள்ளப்படாமல் கிடக்கின்றன. கரோனா காலத்திற்கென்றே அளவெடுத்து ஆர்டர் செய்து அருள் பாலிக்கும் ஆப்ஸ்களை (செயலி) உங்களுக்கு அறிமுகம் செய்யவே இம்முயற்சி.

சோஷியல் டிஸ்டன்சிங் செய்கிறேன் பேர்வழி என்று மக்கள் கடைக்கு வருவதையே குறைத்து கொண்டுவிட்டார்கள். தப்பித் தவறி வருபவர்களும் காலில் வெந்நீரை கொட்டிக்கொண்டு அரக்கப் பரக்க வாங்குகிறார்கள். வராதவர்கள் வாங்க வழியில்லை. வந்தவர்கள் வாங்க வகையுமில்லை. இந்த லட்சணத்தில் எப்படி வியாபாரம் செய்வது என்ற விசாரம். கவலைவேண்டாம், உங்களுக்குத் தேவை ஒரு புதிய மார்க்கம். மனதளவில் துவங்கி கடையளவு பரவும் சிறிய மாற்றம். அதைச் செய்தால் உங்களுக்கும் நல்லது. உங்கள் கடைக்கும் புண்ணியம்.

நீங்கள் என்ன செய்யவேண்டும்? ரொம்ப சிம்பிள். உங்கள் வாடிக்கையாளர்களை கடை பக்கமே வராமல் செய்யவேண்டும். முடியுமா! பேஷாக முடியும். உங்கள் கடையும் விடியும். வாடிக்கையாளர்களை வீட்டிலிருந்தே ஆர்டர் செய்ய வைக்கும் `ஆர்டர்ஈசி’ போன்ற புதிய ஆப்ஸ் இப்பொழுது சல்லிசாக கிடைக்கின்றன.

அதை வாங்கி உங்கள் கடை பெயரிலேயே ஒரு பிரத்யேக ஆப் உருவாக்கி உங்கள் வடிக்கையாளர்களை டவுன்லோட் செய்யச் சொல்லுங்கள். பிறகு அவர்கள் எதற்கு கடைக்கு வந்துகொண்டு. மாடியில் மல்லாக்க படுத்துக்கொண்டே உங்கள் கடை பொருள்களை ஹோட்டல் மெனு கார்டை பார்ப்பது போல் பார்த்து சுலபமாய் ஆர்டர் செய்யலாம். கடைக்குப் போகும் வழியில் கரோனா கடிக்குமோ என்ற கவலையும் இல்லை. அவசரம் அவசரமாக ஷாப்பிங் செய்து பாதியை வாங்கி மீதியை மறந்து விட்டோமே என்று தலையில் அடித்துக்கொள்ளவும் வேண்டியதில்லை.

சரி, நீ சொன்னபடி இது போன்ற ஆப்ஸை பிரயோகப்படுத்துகிறேன், ஆனால் ஆர்டர் செய்த சாமான்களை டெலிவரி செய்வது பெரிய தலைவலியாய் இருக்கிறது என்பதுதானே உங்கள் அடுத்த கவலை. விடுங்கள் அதையும். எளிதாய் வாடிக்கையாளர் வீட்டு அட்ரஸ்ஸை கண்டுபிடித்து டெலிவரி செய்ய உதவும் ‘கோடெலிவர்’ போன்ற ஆப்ஸ் அதற்காகவே அவதரித்திருக்கின்றன.

ஆர்டர் செய்தவர்களை ஆறு தரம் கூப்பிட்டு உங்கள் டெலிவரி பாய் அட்ரஸ் விசாரித்துக்கொண்டு அவஸ்தைப்படாமல் ஆர்டர் செய்த வாடிக்கையாளர்களையும் அவதிக்குள்ளாக்காமல் கூகுள் மேப்புகளை உள்ளடக்கி சரியான விலாசத்திற்கு எளிதாக ரூட் போட்டு படம் வரைந்து பாகங்களைக் குறிக்கும் ஆப்ஸ் இவை.

கிட்டத்தட்ட டெலிவரி பையன்களின் கையை பிடித்து செல்ல வேண்டிய அட்ரஸுக்கு அழைத்து செல்லும் ஆப்ஸ். பத்தாக் குறைக்கு ஆர்டரை எடுத்துக்கொண்டு வருபவர் எங்கிருக்கிறார் என்று நாம் ஓலா காரை ட்ராக் செய்வது போல் கஸ்டமர் தங்கள் ஆர்டர் வரும் அழகை பார்க்கலாம். இதனால் உங்கள் கஸ்டமருக்கு ஆர்டர் செய்த பொருள்கள் சரியான நேரத்தில் கிடைக்கும். உங்கள் டெலிவரி பாய்ஸின் நேரம் மிச்சமாகும். உங்களால் அதிக டெலிவரிகள் செய்ய முடியும். விற்பனையும் வியாபாரமும் கூடும்!

அது சரி, இந்த ஆப்ஸ்களை நம் கடையின் வியாபாரத்துக்கு ஏற்ப தயார்படுத்துவது எப்படி என்பதுதானே உங்கள் எண்ணம்.டோன்ட் ஒரி. பெயருக்குதான் இவை எல்லாம் ஆப்ஸ். ஆனால் அல்ப மேட்டர். வாட்ஸ்அப் பயன்படுத்த உங்களுக்கு யாரேனும் கற்றுத் தந்தார்களா? அதே எளிமைதான் இவ்வகை ஆப்ஸ்ஸும். ஜூஜிபி!

கடைப்பையன்களை நம்பமுடியவில்லை. தாங்கள் லீவு போட இல்லாத தாத்தாவை, ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கும் பாட்டியை மேலோகம் அனுப்புகிறார்கள். இல்லை கரோனா லாக்டவுனிற்கு பயந்து செத்தாலும் சொந்த ஊரில் சாகிறேன் என்று ஊருக்கு ஓடுகிறார்கள். இவர்கள் இல்லாமல் டெலிவரி செய்ய ட்ரோன், க்ரேன் என்று ஏதாவது இருக்கிறதா என்றுதானே கேட்கிறீர்கள். சாரி, இது வரை அப்படி ஒன்றும் இல்லை. வந்தவுடன் அதைப் பற்றி எழுதுகிறேன். அவையும் விரைவில் வந்து டெலிவரி செய்து அளவுக்கு தொழிற்நுட்பம் வளரலாம்.யார் கண்டது.

பெற்றெடுத்த குழந்தையைவிட மொபைல் ஃபோனை அதிகமாக தூக்கி சுமக்கும் நம்மவர்கள், அதனுடனே இரவு, பகல் குடித்தனம் செய்யவே பழகிவிட்டார்கள். ஆடுகிற மாட்டை ஆடியும் அலைபேசியோடு அலையும் இவர்களை ஆப்ஸ் கொண்டும் நீங்கள்தான் அட்ஜஸ்ட் செய்யவேண்டும். அதற்கான சாஃப்ட்வேர் சமாச்சாரங்கள் ரெடி.

நீங்கள் கொஞ்சத்துக்கு கொஞ்சம் டிஜிட்டலை அனுசரித்து ஆப்ஸை அரவணைத்தால் போதும். கரோனா கவலையில்லாமல் கலகலவென்று கல்லா கட்டலாம். இன்னும் ஆறு வருடங்கள் தள்ளிப் போயிருக்க வேண்டிய கடைகாரர்களின் டிஜிட்டல் மாற்றத்தை கரோனா துரிதப்படுத்தியிருக்கிறது என்கிறது ஒரு சமீபத்திய ஆய்வு. மற்றவர்கள் திருந்தி வந்து சேரட்டும். உங்கள் கடை பூனைக்கு நீங்கள் முதலில் மணி கட்டுங்கள். பிறகு பாருங்கள். கோணி பையில் ``money’’-ஐ கட்டுவீர்கள்.

satheeshkrishnamurthy@gmail.com

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x