Published : 07 Jun 2021 09:43 AM
Last Updated : 07 Jun 2021 09:43 AM

கிரிப்டோ கரன்சிக்கு ரிசர்வ் வங்கி பச்சைக்கொடியா?

சிறிய தீவு, வல்லரசு நாடு என்றெல்லாம் பாகுபாடு பார்க்காமல், மனிதர்கள் வாழும், பூமி பரப்பெங்கும் பரவி, எல்லோரின் வாழ்க்கையையும் கரோனா புரட்டி போட்டிருக்கிறது. ஊரடங்கு அறிவிப்பதும், பின்னர் தளர்வு தருவதும், மீண்டும் மூடுவதுமாக, எல்லா நாடுகளும் திணறிக் கொண்டிருக் கின்றன. இன்னும் குணப்படுத்தும் மருந்து இல்லாத கரோனாவுக்கு தடுப்பூசி மட்டுமே தீர்வு என்றாகிவிட்டது.

நடுத்தரக் குடும்பங்கள் தொடங்கி, நிறுவனங்கள், நாடுகளின் நிர்வாகங்கள் வரைக்கும் உள்ள ஒரே கேள்வி, பொருளாதாரத்தை எப்படி சரி செய்வது என்பதுதான். இதுபோன்ற பொருளாதார தேக்க நிலைக்குப்பின் பொதுவாகவே, ‘‘பெண்ட்-அப் டிமாண்ட்’’ (Pent-Up Demand) உருவாகி, அணை திறந்ததும், தண்ணீர் அடித்துக்கொண்டு ஆவேசமாக வெளியேறுவதுபோல, சில மாதங்களாக, செலவு செய்யாமல், பொருட்கள் வாங்குவதை தள்ளிப்போட்ட நுகர்வோர், ‘‘நியூ நார்மல்’’ தொடங்கியதும், வாங்கிக்குவிப்பார்கள்.

அப்போது, நாட்டின் பொருளாதாரம் புது வேகமெடுக்கும். பணம் புரளும் உயர்தட்டு மக்கள், எப்போதும் செலவுகளுக்கு அஞ்சுவதில்லை. உயர்நடுத்தர மக்கள், அவசிய செலவுகளை தள்ளிப்போடுவதில்லை. இந்த இரண்டு வர்க்கத்திலும் இடம்பெறாத, 95 சதவீத நடுத்தர, ஏழை மற்றும் அடித்தட்டு மக்களில், பலருக்கு, வேலை இழப்பு, வருமானம் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. அவர்களின் வாழ்வாதாரத்தை அரசுகள் முடிந்த அளவு கவனித்துக்கொள்ள முயற்சிக்கின்றன.

முதலீடு வேட்டை

கரோனா தொற்று குறைந்ததும், அடுத்தது முதலீட்டை பெருக்குவது, வியாபாரத்தை விஸ்தரிப்பது ஆகியவைதான் முதலீட்டாளர்களின் முதல் வேட்டை. வருமான வரி, தொழில் வரிகளை சரியாகச் செலுத்தி, நாட்டின் பொருளாதார இயந்திரத்தை இயல்பாக இயங்க வைக்கும், முதலீட்டாளர்களின் அடுத்த இலக்கு, தங்கள் முதலீடுகளை எங்கெங்கே, எப்படி போடுவது என்று திட்டமிடுவதுதான். இந்த நேரத்தில், முதலீட்டாளர்களுக்கு காதில் தேன் பாய்வதுபோன்ற செய்தியை ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது. ‘‘கிரிப்டோ கரன்சி’’ என்று சொல்லப்படும் மெய்நிகர் நாணய வர்த்தகத்திற்கு தடை இல்லை என்பதுதான் அது. வங்கிகள், தங்கள் வாடிக்கையாளர்களின் கிரிப்டோ கரன்சி வர்த்தகத்தை கண்காணித்து, முறைப்படுத்த வேண்டும் என்றும் ஆர்.பி.ஐ., சொல்லி இருக்கிறது.

சரியா? தவறா?!

கிரிப்டோ கரன்சி வர்த்தகம் பல நாடுகளில் கொடிகட்டி பறந்தாலும், இந்தியாவில் அவற்றை அனுமதிக்கலாமா, வேண்டாமா என்ற சர்ச்சை பல ஆண்டுகளாக இருந்துவருகிறது. காரணம், கிரிட்டோகரன்சி வர்த்தகம், முதலீடு சார்ந்ததாக இருந்தாலும், சட்டவிரோத பண பரிமாற்றம், பண மோசடி, தேச விரோத, பயங்கரவாத செயல்களுக்கான பணவர்த்தனையாக இருந்துவிடக்கூடாது என்பதற்காகவே அரசின் பல்வேறு துறை அதிகாரிகள் அதுகுறித்து கவலை தெரிவித்து வந்தனர். சாதாரண கரன்சி அரசால் அங்கீகாரம் பெற்ற ஒன்று. கிரிப்டோ கரன்சி என்பது அதில் ஈடுபடும் ஒரு குறிப்பிட்ட பங்குதாரர்களால் மட்டும் ஏற்கப்படும் ஒன்று. இது முகமற்றது மற்றும் சுவடுகளை கண்டுபிடிக்க முடியாதது. எந்த ஒரு அமைப்பும் இதன் வணிகத்தைக்கட்டுப் படுத்த முடியாது.

தடையும், விலக்கும்

இந்தக் காரணங்களால், 2018ஆம் ஆண்டில், இந்திய ரிசர்வ் வங்கி, ‘‘கிரிப்டோ கரன்சி, பிட்காயின் வர்த்தகத்தை அனுமதிக்க வேண்டாம்’’என்று இந்திய வங்கிகளுக்கு அறிவுறுத்தி இருந்தது. அந்த சுற்றறிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, பின்னர் ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கை நிறுத்திவைக்கப்பட்டது.

சமீபத்தில், இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய சுற்றிக்கையில், ‘‘கிரிப்டோ கரன்சி வர்த்தகத்துக்கு தடை இல்லை. ஆனால், கிரிப்டோ கரன்சி வர்த்தகத்தில் ஈடுபடும் வாடிக்கையாளர் விவரம், அது முறையான பண பரிவர்த்தனையா?, சட்டவிரோத பண பரிமாற்றமா, வெளிநாடுகளில் இருந்து வரும் நிதியாக இருந்தால், அது, வெளிநாட்டு முதலீடு சட்டத்திற்கு உட்பட்டதா போன்றவற்றை அந்தந்த வங்கி நிர்வாகங்கள் கண்காணித்து, கிரிப்டோ கரன்சி வர்த்தகத்தை கவனமாகக் கையாள வேண்டும்’’ என்று கூறியுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியான நாள் முதல், இந்த புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது.

உச்சநீதிமன்ற தீர்ப்புக்குபிறகே, இந்திய ரிசர்வ் வங்கி தனது முடிவை மறுபரிசீலனை செய்துள்ளது. தற்போது, கிரிப்டோ கரன்சி வர்த்தகத்திற்கான பெரும் பொறுப்பு, இந்திய வங்கிகள் மீது சுமத்தப்பட்டுள்ளது. அவ்வளவு எளிதில், வாடிக்கையாளர்களின் கிரிப்டோ கரன்சி வர்த்தகத்துக்கு வங்கி நிர்வாகங்கள் தலையாட்டுமா என்பது தெரியவில்லை. இருந்தபோதும், கிரிப்டோ கரன்சி வர்த்தகத்திற்கு, இந்திய ரிசர்வ் வங்கி பச்சைக் கொடி காட்டி இருப்பது, இதில் ஈடுபட்டுள்ள இந்திய முதலீட்டாளர்களுக்கு, இந்த கோவிட் காலத்திலும், ஒரு மகிழ்ச்சியான செய்தியே.

ஒரே உலகம், ஒரே கரன்சி என்ற அடையாளத்தை பெற்றிருக்கும் கிரிப்டோ கரன்சியை பங்குச்சந்தை மற்றும் பிளாக் செயின் தொழில்நுட்பம் வாயிலாக வர்த்தகம் செய்ய முடியும். அதனால் வரும் வருமானத்திற்கு வருமான வரி செலுத்திவிட்டால், அந்த வருமானம், சட்டப்பூர்வமாகி விடுகிறது. ஆனால், வெளிநாட்டுக்கு பணம் அனுப்பி, கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வதை அன்னிய செலாவணி சட்டம் அனுமதிக்கவில்லை. 21 ஆம் நூற்றாண்டின், உலகப் பொது வர்த்தகமாக மாறியிருக்கும் கிரிப்டோ கரன்சி வர்த்தகம் குறித்து இந்தியாவில் தெளிவான, சட்டப்பூர்வமான, வழிகாட்டு நெறிமுறைகள் இல்லை. அதை வகுத்து, கட்டுப்பாடுகளை கொண்டு வர வேண்டிய நேரம் கனிந்திருக்கிறது.

எப்படி இருக்கும் வரி?

இந்தியாவிற்கு கிரிப்டோ கரன்சி வர்த்தகம் புதிய ஒன்று. அதனால், வருமான வரி சட்ட நடைமுறைகளில், இதற்கான தனியான வரி விதிப்பு விதிமுறைகள் இன்னும் பிரத்யேகமாக வகுக்கப்படவில்லை. இருந்தபோதும், கிரிப்டோகரன்சி வர்த்தகம் வாயிலாக பெறப்படும் வருமானம், வரி விதிப்புக்கு உட்பட்டுள்ளது. பெரும்பாலானவர்கள் இதை மூலதன ஆதாயம் (Capital gain) என்று வரிக்குட்படுத்தினாலும், வருமான வரி அதிகாரிகள் இந்த வருமானத்தை யூக ஆதாய வருமானமாக (speculation income) மதிப்பீடு செய்திருக்கிறார்கள்.

இந்தியாவில் தற்போது ஒன்றரைக்கோடிபேர், இரண்டு பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புக்கு கிரிப்டோ கரன்சி வர்த்தகத்தில் முதலீடு செய்துள்ள
தாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி தடை விலக்கி கொண்டதால், முறையாக நடைபெறும், கிரிப்டோ கரன்சி வர்த்தகம் மீது இனி சட்டப்பூர்வமாக வங்கிகள் நடவடிக்கை எடுக்க முடியாது. அதுமட்டுமல்ல, டிஜிட்டல் கரன்சிகள் மீதான முதலீடு, அதன் வர்த்தக வேகத்தை பார்த்து, இந்திய ரிசர்வ் வங்கியே, பிரத்யேக டிஜிட்டல் கரன்சி உருவாக்கும் ஆலோசனையை செய்து வருவதாக தகவல்கள் வருகின்றன.

ஆரம்பத்தில் கிரிப்டோ கரன்சி சட்டத்திற்கு உட்பட்டதா என்பதில் பல்வேறு கருத்துக்கள் நிலவினாலும், தற்போது ரிசர்வ் வங்கி தடையை நீக்கியதன் மூலம் சட்டத்திற்கு உட்பட்டதாக மாறியுள்ளது- மீண்டும் ஒர் புதிய ஒரு சட்டத்தின் மூலம் மாற்றம் கொண்டு வராதவரை. இந்திய முதலீட்டாளர்கள், பணம் பார்ப்பதற்கு இன்னொரு கடையை கிரிப்டோ கரன்சி வர்த்தகம் திறந்துவிட்டிருக்கிறது என்றே சொல்லலாம்.

இதுதான் டிஜிட்டல் கரன்சி!

கிரிப்டோ கரன்சி, பிட் காயின் போன்றவை வழக்கமாக நாம் பயன்படுத்தும் நாணயங்கள் / பணத்தாள்கள் போன்று நாம் தொட்டு உணர முடியாத ஒரு டிஜிட்டல் நாணயம். இதன் மதிப்பு சர்வதேசச் சந்தையில் நிர்ணயிக்கப்படுகிறது. தற்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிரிப்டோ கரன்சிகள் புழக்கத்தில் உள்ளதாக சொல்கிறார்கள். பிட்காயின் போன்ற கிரிப்டோ கரன்சிகள் விர்ச்சுவலாக மட்டுமே இருக்கும். அது, எல்லா நாடுகளுக்குமான பொதுவான பணமாகும். அவற்றை ஆன்லைன் பணப்பரிவர்த்தனை, ஆன்லைன் ஷாப்பிங் உள்ளிட்டவற்றில் மட்டுமே பயன்படுத்த முடியும்.

அதன் புழக்கம், சில ஆண்டுகளாகவே இந்தியாவில் அதிகரிக்கத் தொடங்கியது. இதில் நடக்கும் பண பரிவர்த்தனை யாரால் யாருக்கு கொடுக்கப்படுகிறது என்பதைக் கண்டுபிடிக்க முடியாது. அதனாலேயே இந்தியாவில் இதை இந்திய ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வமாக ஏற்காமல் இருந்தது. சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனைக்குத் தடை விதிக்கப்பட்டு ஒழுங்குமுறை வகுக்கப்பட்டுள்ளன.

karthi@gkmtax.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x