

கரோனா வைரஸ் பரவல் பல்வேறு நெருக்கடிகளை அனைவர் வாழ்விலும் ஏற்படுத்தியிருந்தாலும், மக்களிடையே உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை ஆணித்தரமாக உணர்த்தியுள்ளது. அதன் வெளிப்பாடுதான் சைக்கிள் விற்பனை முன்பை விட அதிகரிக்க காரணமாகும்.
நடப்பு நிதி ஆண்டில் 20 சதவீத அளவுக்கு சைக்கிள்விற்பனை அதிகரிக்கும் என்றும் 1.45 கோடி சைக்கிள்கள் விற்பனையாகும் என்றும் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
கரோனா வைரஸ் பரவலால் பலரும் வீட்டிலிருந்து பணி புரியும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் அருகிலிருக்கும் பகுதிகளுக்குச் செல்வதற்கு பெரும்பாலும் சைக்கிளை உபயோகிக்கும் போக்கு அதிகரித்துள்ளது. மேலும் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுவதும் இதன் தேவையை அதிகரிக்கச் செய்துள்ளது.
2019-ம் ஆண்டில் சைக்கிள் துறையின் வளர்ச்சி விகிதம் 5 சதவீதமாகத்தான் இருந்தது. ஆனால் 2020-ல் அரசின் ஆர்டர்கள் குறைந்ததால் பெரும் பின்னடைவை சந்தித்தது. ஆனால் இந்த ஆண்டு சைக்கிள் விற்பனை சூடுபிடித்துள்ளது.
உலகிலேயே சீனாவுக்கு அடுத்தபடியாக அதிகமாக சைக்கிள் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா திகழ்கிறது. பொதுவாக ஸ்டாண்டர்டு எனப்படும் சைக்கிள்கள் வழக்கமான பணிகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன. இவை தவிர குழந்தைகளுக்கு பல்வேறு உயர அளவுகளில் தயாரிக்கப்படுகின்றன. இது தவிர ஏற்றுமதிக்கென பிரத்யேகமாக தயாராகிறது.
மொத்த விற்பனையில்50 சதவீதம் ஸ்டாண்டர்டு சைக்கிளின் பங்களிப்பாகும். இதில் அரசு பல்வேறு துறைகளுக்காக குறிப்பாக மாணவர்களுக்கு இலவசமாக வழங்க வாங்கும் சைக்கிள்களும் அடங்கும்.
இலகு ரக, ரேஸ் சைக்கிள் மற்றும் குழந்தைகளுக்கான சைக்கிள் சந்தை 40 சதவீதத்தைக் கொண்டுள்ளது. இது தவிர ஏற்றுமதியின் பங்களிப்பு 10 சதவீதமே.
கரோனா ஊரடங்கு காரணமாக உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்கள், விளையாட்டு மைதானங்கள் மூடப்பட்டுவிட்டன. இந்நிலையில் உடல் செயல்பாட்டுக்கு ஒரே தீர்வாக இருப்பது சைக்கிள் ஓட்டுவதுதான். இதையே பலரும் தேர்வு செய்வதால் சைக்கிள் விற்பனை படு ஜோராக அதிகரித்துள்ளது.
அதிலும் குறிப்பாக பிரீமியம் மற்றும் குழந்தைகள் பிரிவு சைக்கிகள் விற்பனை அதிகரித்திருப்பது, சைக்கிள் உற்பத்தியாளர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
சைக்கிளைப் பற்றிய சில சுவாரஸ்யமான செய்திகள்.
1980வரை சைக்கிளுக்கு இருந்த மவுசை விவரிக்க வார்த்தைகளே கிடையாது. எனது தாத்தா காலத்து சைக்கிள், இன்னமும் ஓடுகிறது என பெருமை பேசும் தலைமுறையைப் பார்த்திருக்கலாம். ராலி, ஹம்பர், ஹெர்குலிஸ், பிஎஸ்ஏ என்ற பெயர்கள் மிகவும் பிரசித்தம்.
சைக்கிளுக்கு லைசென்ஸ் டோக்கன் இருந்ததும், இருவர் (டபுள்ஸ்) பயணிக்க அப்போதைய முதல்வர் எம்ஜிஆர் அனுமதி வழங்கியதும் மகிழ்ச்சியான நினைவுகளே.
பள்ளி படிப்பை முடித்து கல்லூரி செல்லும் மகன் தந்தையிடம் அதிகபட்ச கோரிக்கையாக சைக்கிள் வாங்கித் தரச் சொல்வதாகத்தான் இருந்தது.
ஆனால் இன்றோ எல்லாம் தலைகீழ், பள்ளி நாள்களிலேயே சீறிப்பாயும் பைக்குகளை விரும்புகின்றனர் மாணவர்கள். தற்போது நிலைமை மீண்டும் மாறி வருவதைப் பார்க்கும்போது பின்வரும் வாசகங்களை மக்கள் உணரத் தொடங்கியிருக்கிறார்கள் எனலாம்.
``கார் வைத்திருந்தால் ஆடம்பரமாக வாழலாம்...
அதுவே ஒரு சைக்கிள் வைத்திருந்தால் ஆரோக்கியமாக வாழலாம் ....’’