மரணங்களுக்கு அப்பால்...

மரணங்களுக்கு அப்பால்...
Updated on
4 min read

உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா பெருந்தொற்று பேரழிவுக்கு பணக்காரர், ஏழை மற்றும் பிரபலங்கள், சாமான்யர்கள் என பாரபட்சமின்றி அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தியாவில் இறப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. முதல் முறை பரவல் ஆரம்பித்த போது இருந்த எச்சரிக்கை உணர்வு கூட இப்போது மக்களிடம் இல்லையோ எனும் அளவுக்கான

அலட்சியப் போக்கை பரவலாகப் பார்க்க முடிகிறது. நெருங்கிய உறவினர்களிடமே கூட தங்களுக்கு அறிகுறிகள் இருப்பதையோ, தொற்று இருப்பதையோ சொல்ல தயங்குகிறார்கள். ‘எதையுமோ அவர் சொல்லவில்லை, நன்றாகத்தான் இருந்தார்.
திடீரென்று இறந்துபோய்விட்டார்’ என்ற பதிலைப் பெரும்பாலானோரிடம் கேட்க முடிகிறது.

அதற்குக் காரணம் கரோனா தொற்று உறுதி என்பது தெரிந்த பிறகு உறவினர்களிடையே ஏற்படுகிற பயம், தனியாக விடப்பட்டுவிடுவோமோ, ஒதுக்கப்பட்டுவிடுவோமோ என்கிற அச்சம்தான். ஆனால், அந்தக் கட்டத்தை எல்லாம் நாம் கடந்து, அபாயகரமான நிலையில் இருக்கிறோம் என்றே தோன்றுகிறது. கரோனா மரணங்கள், மரணங்கள் குறித்தும் மரணங்கள் தொடர்பான சாஸ்திர, சம்பிரதாயங்கள் குறித்தும் உறவுகள் குறித்தும் மிகப்பெரிய கேள்வியை எழுப்பியிருக்கிறது.

அனைத்தையும் இந்த கரோனா காலத்தில் தூக்கி தூற எறிந்துவிட்டார்கள் மக்கள். சுப காரியங்களுக்குக் கூடாதவர்கள்கூட இறப்புகளில் கூடிவிடுவார்கள். ஆனால், இப்போது இறப்புகளுக்கும் இரங்கல் செய்திகளை செல்பேசியிலேயே முடித்துக்கொள்கிறார்கள். ஆனால், மரணத்துக்கு அப்பால் உள்ள சில முக்கிய சிக்கல்களை நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. மரணம் குறித்த பயத்தை விட, மரணத்துக்குப் பிறகான இழப்புகள் குறித்து நாம் நிச்சயம் பேச வேண்டியிருக்கிறது.

நாம் நன்றாக இருக்கிறோமா இல்லையா என்பது ஒருபக்கம் இருக்கட்டும், நாம் இல்லாமல் போகும்பட்சத்தில் அன்புக்குரியவர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதைப் பற்றி கொஞ்சமேனும் கவலைப்பட வேண்டியிருக்கிறது. இதை கவலை என்று சொல்வதை விட ஆரோக்கியமான முன்னெடுப்பு என்று சொல்லலாம். நம்முடைய நிதி நிலை, வருமானம், கடன்கள், குடும்பத்தின் நிதி பொறுப்புகள் ஆகியவற்றை பற்றி நிச்சயம் பேச வேண்டிய கட்டாயத்தை எல்லோருமே உணர வேண்டும்.

பெரும்பாலும் குடும்பத்தின் நிதி ஆதாரமாக இருப்பவர்கள் பெரும்பாலும் நிதி சுமைகளையும், பொறுப்புகளையும் யாருக்கும் தெரியாமல் தானே சமாளிக்க வேண்டும் என்று நினைப்பதுண்டு. இதன் காரணமாகவே தங்களுக்குள்ள பிரச்சினைகள், சிக்கல்கள் போன்றவற்றை குடும்பத்தினரிடம் வெளிப்படையாகப் பகிர்வதில்லை. இதுபோன்ற சூழலில் இருப்பவர்கள் இறக்கும்போது தங்களுடைய குடும்பத்தினரை திசை தெரியாத நிச்சயமற்ற எதிர்காலத்தில் நிறுத்திவிடுகிறார்கள். அதுவரையில் ஒரு சமநிலையில், நேர்கோட்டில் சென்றுகொண்டிருந்த வாழ்க்கை சிதறிப்போகும் சூழலுக்கு ஆளாகிறது. அப்படியான சூழலுக்கு ஆளாகாமல் இருக்க நம்முடைய குடும்பங்களில் சில மாற்றங்களைச் செய்தாலே போதுமானது.

இரண்டாவது வருமானம்

இன்றைய நிச்சயமற்ற பொருளாதார சூழலில் வேலை, தொழில் அனைத்திலும் சிக்கல்கள் உள்ளன. அப்படி இருக்கும்பட்சத்தில் ஒரு குடும்பத்தில் இரண்டாவது வருமானம் இருப்பது மிகவும் முக்கியம். சிறிதோ, பெரிதோ இரண்டாவது வருமானத்துக்கான முயற்சி எடுப்பது அவசியம். பெரும்பாலும் ஆண்கள் வேலைக்குப் போகும் நிலையில் மனைவிகளின் படிப்பு, திறமை போன்றவற்றைப் பயன்படுத்தி இரண்டாம் வருமானத்துக்கான முயற்சிகளை எடுக்கலாம். பெண்கள் வேலைக்குச் செல்வதை ஊக்குவிக்க வேண்டும். குடும்பச் சூழல் காரணமாக வேலைக்குச் செல்ல முடியாதவர்கள் வீட்டிலிருந்தபடியே சிறு சிறு தொழில் முயற்சிகளில் ஈடுபட்டு வருமானம் ஈட்டலாம். குடும்பத்தின் பொறுப்புகளை கணவன், மனைவி இருவரும் பகிர்ந்துகொள்ளும்போது நிதிச் சுமை பெருமளவு குறைவதோடு, மகிழ்ச்சியான சூழலும் உருவாகும்.

வெளிப்படைத்தன்மை

குடும்பத்தின் அடிப்படை செலவுகள் முதல், பெரிய நிதிப் பொறுப்புகள், கடன்கள் வரை அனைத்தையும் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும். பலர் தான் என்ன வேலை செய்கிறோம் என்பதைக்கூட குடும்பத்தினரிடம் மறைப்பதுண்டு. வேலையில் உள்ள சிக்கல்கள், தொழிலில் உள்ள சிக்கல்கள் போன்றவற்றையெல்லாம் பகிர வேண்டும். மேலும் குறிப்பாக சொத்துகள் குறித்தும், அதில் ஏதேனும் சிக்கல்கள் அவை குறித்தும் தெரிவிக்க வேண்டும்.

சொத்து, முதலீடு, கடன் மற்றும் காப்பீடு போன்றவற்றின் ஆவணங்கள், அதற்குரிய சான்றுகள் போன்றவை குறித்தும் குடும்பத்தில் ஒருவரிடம் தெரிவிக்க வேண்டும். அதைவிட முக்கியமாக நோய்கள், உடல், மனப் பிரச்சினைகள் குறித்தும் பேச வேண்டும். இதன்மூலம் குடும்பத்தினரிடம் பரஸ்பர நம்பிக்கையை நாம் பெறுவதோடு, சமயங்களில் குடும்பத்தினரிடமிருந்து உதவியையும் பெற முடியும். எதிர்பாராத விதமாக இறக்க நேரிட்டால் ஏற்படும் பிரச்சினைகளையும், சவால்களையும் எதிர்கொள்ளும் பாதை குடும்பத்தினருக்குத் தெளிவாகத் தெரியும்.

கடன்கள்

முடிந்தவரை கடன் இல்லாத வாழ்க்கை முறையைக் கடைபிடிப்பது நல்லது. ஆனால், இன்று கடன் இல்லாதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். தேவையென்றால் மட்டும் கடன் பக்கம் தலைகாட்டுங்கள். ஒரு கடனை அடைத்து முடிக்கும் வரை இன்னொரு கடனை வாங்காதீர்கள். வீட்டுக்கடன், கல்விக் கடன் போன்றவை அவசியமாக இருக்கும்பட்சத்தில் வாங்கலாம். ஆனால் கடன்களை வீட்டில் உள்ளவர்களிடம் கலந்தாலோசித்த பிறகு வாங்குவது நல்லது. அல்லது கடன்கள் குறித்து குடும்பத்தினரிடம் தெரியப்படுத்துங்கள். வாங்கிய கடன் மட்டுமல்ல, கடன் கொடுத்திருந்தாலும் அதை தெரிவிப்பது அவசியம்.

காப்பீடு

இந்தியாவைப் பொறுத்தவரை குடும்ப அமைப்புகளையோ, குழந்தைகளையோ பாதுகாக்கக் கூடிய சமூகப் பாதுகாப்பு சட்டங்கள், அமைப்புகள் ஆக்கபூர்வமானதாக இல்லை. எனவே நம்முடைய குழந்தைகளுக்கான எதிர்காலத்தை வளமாக உருவாக்க வேண்டிய பொறுப்பு பெற்றோர்களுக்கு உள்ளது. எதிர்பாராத இழப்புகளைத் தடுத்தாலே பெருமளவிலான நிதிச் சுமைகளைத் தவிர்க்க முடியும். அதற்கு காப்பீடுதான் சரியான வழி. காப்பீடு எடுத்துக்கொள்ள முடிந்தவர்கள் சரியான காப்பீடை தேர்ந்தெடுங்கள். எந்தக் காப்பீடு இருக்கிறதோ இல்லையோ, குடும்பத்தில் வருமானம் ஈட்டும் நபர் ஒரு டேர்ம் இன்ஷீரன்ஸ் எடுத்துக்கொள்வது மிகவும் முக்கியமானது.

உதவிக்கரம்

இதுபோன்ற பேரழிவு காலங்களில் பொது நிவாரணமாக சில சலுகைகளை அரசு வழங்கினாலும், உயிரிழப்புகளுக்கு இழப்பீடாக பெரிய தொகை எதையும் அரசால் அறிவிக்க முடியாது. அது அரசின் நிதி நிலைக்கு மிகுந்த சவாலானதாக மாறிவிடும். எனவே பேரிடர் காலங்களில் நிர்கதியாக விடப்படும் குடும்பங்களுக்கு சில தொண்டு நிறுவனங்கள் உதவ முன்வரும். அதுபோன்ற தொண்டு நிறுவனங்களின் தகவல்களை தெரிந்தவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பகிரலாம்.

பேரிடர்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊர் மக்கள், அல்லது அலுவலக நண்பர்கள் ஒன்று சேர்ந்து முடிந்த உதவிகளைச் செய்யலாம். எல்லாவற்றுக்கும் தேவை சிறு முயற்சிதான். நம்முடைய சிறு பகிர்தல், தேவை உள்ளவர்களுக்கு பெரிய உதவியாக இருக்கலாம். மரணம் நொடியில் நிகழ்ந்துவிடக்கூடியது ஆனால், மரணிப்பவரை சார்ந்தவர்கள் உயிருள்ளவரை வாழ்ந்தாக வேண்டிய நிர்பந்தம் உள்ளது. அவர்களுக்கு எதிர்காலம் சிக்கலானதாக மாறிவிடக்கூடாது. எனவே பெருந்தொற்று காலத்தை அனைவரும் கவனமாக எதிர்கொண்டு எந்தவித இழப்புகளுக்கும் ஆளாகாமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

saravanan.j@hindutamil.co.in

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in