மீண்டும் மோசமாகிறதா வேலைவாய்ப்புச் சூழல்?

மீண்டும் மோசமாகிறதா வேலைவாய்ப்புச் சூழல்?
Updated on
2 min read

கரோனா முதல் அலையின்போது கரோனா தொற்று குறித்த அச்சத்தை விடவும் வேலையிழப்பு, பொருளாதார நெருக்கடி முதன்மை பேசுபொருளாக இருந்தன. ஆனால், இரண்டாம் அலையில் நோய்த் தொற்றின் தீவிரம், உயிரிழப்புகள், ஆக்சிஜன் பற்றாக்குறை, மருத்துவமனையில் படுக்கைகள் தட்டுப்பாடு என சுகாதார ரீதியிலான பிரச்சினை மிகப் பெரும் அச்சுறுத்துலாக உள்ள நிலையில், வருமான இழப்பு, வேலையிழப்பு என வாழ்வாதாரப் பிரச்சினைகள் பின்னுக்குச் சென்றுவிட்டன. சென்ற ஆண்டைப் போல் இந்த ஆண்டு மிக அதிகமான அளவில் வேலையிழப்பு ஏற்படவில்லை என்றாலும், இந்திய வேலைவாய்ப்புச் சூழல் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகிவருவதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்துள்ளன.

சென்ற ஆண்டு மார்ச் மாத இறுதியில் நாடு தழுவிய ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்ட சில வாரங்களிலே, அமைப்புசாரா துறைகளில் இருந்தவர்களில் 10 கோடி பேர் வேலையிழந்தனர். சிறு, குறுந் தொழில்கள் முடங்கின. நாடு பொருளாதார ரீதியாக பெரும் தடுமாற்றத்துக்கு உள்ளானது. அதன் விளைவாகவே, இரண்டாவது அலையை எதிர்கொள்வது குறித்த அறிவிப்பில், பிரதமர் மோடி ஊரடங்கை கடைசி வாய்ப்பாகவே பயன்படுத்த வேண்டும் அறிவுறுத்தினார். முதல் அலையைவிடவும் இரண்டாவது அலையில் தொற்றுக்கு உள்ளாகுபவர்களின் எண்ணிக்கையும், இறப்பு விகிதமும் அதிகரித்தபடி உள்ளன.

இதனால், நாடு தழுவிய ஊரடங்குக்குப் பதிலாக, தொற்று அதிகமாக இருக்கும் மாநிலங்கள் மட்டும் ஊரடங்கை அறிவித்து வருகின்றன. தொழிற்செயல்பாடுகள் முடங்கிடாத வகையில் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதனால், சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில் அமைப்புசார் துறைகளில் வேலையிழப்பு இன்னும் பெரிய அளவில் ஏற்படத்தொடங்கவில்லை. ஆனால், அமைப்புசாரா துறைகள் நெருக்கடிக்கு உள்ளாக ஆரம்பித்துவிட்டன. இரண்டாம் அலையில் உள்ள சவாலை, வேலையிழப்பு எண்ணிக்கைக் கொண்டு மட்டும் அளவிட்டுவிட முடியாது. புதிய வேலைவாய்ப்பு எந்த அளவில் உள்ளது, ஊதியக் குறைப்பு நிலவரம் ஆகியவற்றையும் கணக்கில் கொள்ள வேண்டியது அவசியம்.

கரோனா இரண்டாம் அலை வேகமெடுக்கத் தொடங்கியதும், பல்வேறு மாநிலங்கள் ஏப்ரல் மாதத்தில் ஊரடங்கை தீவிரப்படுத்தின. விளைவாக, ஏப்ரல் மாதத்தில் 75 லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர். மே மாதத்தில் நிலைமை இன்னும் மோசமடைந்துள்ளது. இவ்வாண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஏப்ரல் மாதத்தில் வேலையின்மை விகிதம் 8 சதவீதமாக அதிகரித்தது. அது மே மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் 14.5 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று இந்தியப் பொருளாதார கண்காணிப்பு அமைப்பான சிஎம்ஐஇ, இந்தியாவின் தற்போதைய வேலைவாய்ப்பு நிலவரம் தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவில் இவ்வாண்டு ஜனவரி மாதம் 40.07 கோடி பேர் வேலையில் இருந்தனர். அந்த எண்ணிக்கை மார்ச் மாதத்தில் 39.81 கோடியாகவும் ஏப்ரல் மாதத்தில் 39.08 கோடியாகவும் குறைந்துள்ளது. வேலை இழப்பை எதிர்கொண்டு புதிய வேலையை தேடாமல் இருப்பவர்களின் எண்ணிக்கை மார்ச் மாதத்தில் 1.60 கோடியாக இருந்தது. ஏப்ரலில் 1.94 கோடி உயர்ந்துள்ளது என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

இது ஒரு புறம் என்றால், புதிய வேலை வாய்ப்பு நிலவரமும் மோசமாகவே உள்ளது. சுற்றுலாத் துறையில் புதிதாக ஆள் எடுப்பு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஏப்ரல் மாதத்தில் 30 சதவீதம் அளவிலும், கல்வி, ரியல் எஸ்டேட் போன்ற துறைகளில் 20 முதல் 30 சதவீதம் அளவிலும் தொலைத் தொடர்புத் துறை, வங்கிகள் சார்ந்த வேலைகளில் 10 முதல் 20 சதவீதம் வரையில் குறைந்துள்ளது. சென்ற ஆண்டு முதல் அலையின்போது வேலையிழந்தவர்களில் பலர் இன்னும் புதிய வேலைவாய்ப்புகளைப் பெற முடியாமல் திணறிவருகின்றனர். இந்தச் சூழலில், கரோனா இரண்டாம் அலையில் ஏற்படத் தொடங்கியிருக்கும் வேலையிழப்பும், நிறுவனங்கள் புதிதாக ஆட்கள் எடுப்பதை குறைத்து வருவதும் நிலைமை இன்னும் மோசமாக்கும்.

இதில், பெண்களும், இளம் பணியாளர்களும் தான் அதிகம் பாதிக்கப்படுபவர்களாக உள்ளனர். சென்ற ஆண்டு ஊரடங்கு காலகட்டத்தில் வேலையிழந்தப் பெண்களில் 47சதவீதம் பேருக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரையிலும் வேலை ஏதும் கிடைக்கவில்லை என்று அஸிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் சமீபத்தில் வெளியிட்ட ‘ஸ்டேட் ஆஃப் வொர்க்கிங் இண்டியா 2021’ (State of Working India 2021) அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அதேபோல், 15 -24 வயதுக்குட்பட்ட இளம் பணியாளர்களில் 33 சதவீதத்தினர் புதிய வேலைவாய்ப்பை பெற முடியாமல் திணறி வருவதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

riyas.ma@hindutamil.co.in

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in