

வங்கிகள் அளிக்கும் சேவை அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று மத்திய அரசு 2014ம் ஆண்டு “ஜன்தன்'’ கணக்கை அறிமுகம் செய்தது. அரசு அளிக்கும் அனைத்து நிதிச் சலுகைகளும் ஏழை மக்களுக்கு ஒளிவு மறைவின்றி கிடைப்பதற்காக இது செயல்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இவை எல்லாம் ஒருபுறம் இருந்தாலும் வங்கிகள் யாருக்காக செயல்படுகின்றன என்ற கேள்வி பல சமயங்களில் ஏழை மக்கள் மட்டுமல்ல நடுத்தர வர்க்கத்தினர் மத்தியிலும் எழுந்துகொண்டேதான் இருக்கின்றன.
சமீபத்தில் விவேக் வேலங்கர் எனும் தகவல் அறியும் உரிமை சட்ட போராளி ஒருவர் வங்கிகளின் கடன் விவரங்கள் தொடர்பாக பெற்ற தகவல்கள் நம்மை கலக்கமடையச் செய்கின்றன. பொதுத்துறை வங்கிகளில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக கடன் பெற்ற தொழிலதிபர்களின் கடன்களில் கடந்த 8 ஆண்டுகளில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள தொகை ரூ.6.32 லட்சம் கோடி. 12 பொதுத்துறை வங்கிகள் 8 ஆண்டுகளில் பெரும் தொழிலதிபர்களுக்காக தள்ளுபடி செய்த தொகை ரூ.2.78 லட்சம் கோடி. இவ்விதம் தள்ளுபடி செய்யப்பட்டாலும் கடனை செலுத்தாதவர்கள் மீதான நடவடிக்கை தொடரும் என்றும் கடன் வசூலிக்கப்படும் என அரசு அறிவித்தது. ஆனால் வங்கிகள் வசூலித்த தொகை மொத்த கடன் தொகையில் 7 சதவீதம் மட்டுமே.
அதாவது ரூ.19,207 கோடி மட்டுமே வசூலானது. கடந்த நான்கு ஆண்டுகளில் 12 பொதுத்துறை வங்கிகள் தள்ளுபடி செய்த வாராக் கடன் தொகை ரூ.4.95லட்சம் கோடி. இதில் வசூலானது வெறும் ரூ.79 ஆயிரம் கோடி மட்டுமே. பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), பாங்க் ஆப் பரோடா (பிஓபி), பாங்க் ஆப் மகாராஷ்டிரா (பிஓஎம்), யூனியன் பாங்க் ஆப் இந்தியா (யுபிஐ), ஐடிபிஐ வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐஓபி), சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, கனரா வங்கி, யூகோ வங்கி, இந்தியன் வங்கி, பாங்க் ஆப் இந்தியா (பிஓஐ) ஆகிய வங்கிகள்தான் இவ்விதம் கடன் வழங்கி தள்ளுபடி செய்த 12 பொதுத்துறை வங்கிகளாகும். இதில் ஐடிபிஐ வங்கியின் 51 சதவீத பங்குகளை எல்ஐசி வாங்கியுள்ளது. இதன் பின்னர் அது தனியார் துறை வங்கியாக அறிவிக்கப்பட்டது.
வரும் ஆனா வராது....
வங்கிகளின் நிதி நிலை அறிக்கையை தூய்மையாக்க வாராக்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்டன. இதனால் பல வங்கிகள் கடந்த சில ஆண்டுகளாக நஷ்டத்தை எதிர்கொண்டன. அப்போது வங்கிகளின் கடன் தள்ளுபடி குறித்து கடுமையான விமர்சனம் எழுந்தது. ஆனால் அரசு ஆலோசகர்களும், நிதித்துறையைச் சேர்ந்தவர்களும், வாராக்கடன் தள்ளுபடி என்பது நிதி நிலை அறிக்கையை துல்லியமாக வைப்பதற்காக என்றும் இது தொழில்நுட்ப ரீதியிலான நடவடிக்கையே தவிர, வசூல் நடவடிக்கை தொடரும் என்று கூறினர். ஆனால், கடந்த 8 ஆண்டுகளில் வங்கிகள் தள்ளுபடி செய்த தொகை மற்றும் வசூல் செய்த தொகை விவரங்கள் நமக்கு வேறொன்றைச் சொல்கின்றன.
அதன் விவரங்கள் பின்வருமாறு: எஸ்பிஐ ரூ.2,35,091 கோடி ( ரூ.34,677 கோடி - 15%), பாங்க் ஆப் மகாராஷ்டிரா ரூ.15,361 கோடி (ரூ.2,219கோடி - 14%), பாங்க் ஆப் பரோடா ரூ.44,437 (ரூ.12,105 கோடி -27%), யூனியன் பாங்க் ரூ.26,073 கோடி (ரூ.4,555 கோடி -17%), ஐடிபிஐ வங்கி ரூ.45,693 கோடி (ரூ.3,704 கோடி - 8%), பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.61,741கோடி (ரூ.15,762 கோடி - 25%), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ரூ.41,392 கோடி (ரூ.7,253 கோடி - 17%), சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா ரூ.21,989 கோடி (ரூ.1,923 கோடி - 9%), கனரா வங்கி ரூ.47,310 கோடி (ரூ.8,901 கோடி -19%), யூகோ வங்கி ரூ.25,266 கோடி (ரூ.1,702 கோடி - 7%), இந்தியன் வங்கி ரூ.10,249 கோடி (ரூ.2,183 கோடி - 21%), பாங்க் ஆப் இந்தியா ரூ.57,275 கோடி (ரூ.13,560 கோடி - 23%). ஆக ஒட்டு மொத்தமாக வங்கிகள் தள்ளுபடி செய்த தொகை ரூ.6,32,377 கோடி. இதில் வசூலானது ரூ.1,08,544 கோடி.
சாமானியனுக்கு ஒரு நீதி, செல்வந்தர்களுக்கு ஒரு நீதியா?
ரூ.100 கோடிக்கும் அதிகமான கடன் பெற்று திரும்ப செலுத்தாதவர்கள் பெயர்களை எஸ்பிஐ மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிகள் மட்டுமே தங்களது பங்குதாரர்கள் கூட்டத்தில் வெளியிட்டன. மற்ற வங்கிகள் அந்த விவரத்தையும் தெரிவிக்கவில்லை. எஸ்பிஐ-யில் கடன் பெற்று திரும்ப செலுத்தாத 225 பெரும் புள்ளிகள் பெயர்களையும். ஐஓபி 66 பேரின் பெயர்களையும் வெளியிட்டன. ஆனாலும் பத்திரிகையில் பெயர் வந்துவிட்டதே என கலங்கும் நெஞ்சம் படைத்தவர்களா தொழிலதிபர்கள். “கடன் பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன்” என்று ராமாயணத்தில் ஒரு வரி வரும். ஆனால் இன்றோ “கடன் அளித்த வங்கிகள் போல் கலங்கி நின்றான் இலங்கை வேந்தன்” என மாற்றிச் சொல்வதே சாலப் பொருத்தமாக இருக்கும்.
வங்கிகளில் வீடுகளின் பேரில் கடன் பெற்று அல்லது வீடு வாங்க கடன் பெற்று தவணை செலுத்தத் தவறியவர்களின் வீடுகளை ஜப்தி செய்து அதை ஏலம் விடும் நடைமுறையை வங்கிகள் எவ்வித தயக்கமும் இன்றி செயல்படுத்துகின்றன. இந்த வகையில் அதிகபட்ச கடன் தொகை ரூ.1 கோடி இருந்தால் அதுவே அதிகம். ஆனால் ரூ.100 கோடிக்கும் மேலாக கடன் பெற்றவர்களின் பெயர் பட்டியலை வங்கிகள் வெளியிட தயங்குவதற்கான காரணம் என்னவென்றே புரியவில்லை.
வங்கிகள் கடனை தள்ளுபடி செய்த பிறகு அவற்றின் நிதி நிலை அறிக்கையில் கடன் அளித்த நிறுவனம் மற்றும் அதற்கு ஈடான சொத்து பற்றிய விவரம் இடம்பெறாது. இந்நிலையில் அந்தக் கடனை வசூலிப்பது குறித்து வங்கிகள் ஸ்திரமாக செயல்படும் என்று எதிர்பார்ப்பது எப்படி சரியாக இருக்கும் என்பது புரியாத புதிர். அதேசமயம் திரும்பாக் கடன் (bad debt) தள்ளுபடி செய்யப்பட்டால், தள்ளுபடி செய்யப்பட்ட சொத்து மதிப்பு வங்கிக் கணக்கில் இருக்கும்.
அதை திரும்ப வசூலிக்கும் பணியை வங்கிகள் மேற்கொள்ள முடியும் என்பது உண்மைதான். ஆனால், வங்கிகள் கடந்த 8 ஆண்டுகளில் தள்ளுபடி செய்த தொகைக்கும் வசூல் செய்யப்பட்ட தொகைக்கும் இடையிலே வேறுபாடு மிகப்பெரியது. பொதுவாக இங்கு நிகழும் கடன் தள்ளுபடி நடவடிக்கைகள் பெரும்பாலானவை ஆட்சியாளர்களின் வற்புறுத்தலில் எடுக்கப்படுபவை. இதனால் வங்கிகளும் கடன் வசூலில் அக்கறை காட்டாமல் போனது இயல்பே.
அனைத்துக்கும் மேலாக வங்கிகளின் உயர்அதிகாரிகளுக்கும், கடனை திரும்ப செலுத்தத்தவறிய தொழிலதிபர்களுக்கும் நெருங்கிய உறவு பல சமயங்களில் வெளிப்பட்டுள்ளது. இதுவும் கடன் வசூலில் மந்த நிலை உருவாகக் காரணமாக உள்ளது என்பதை சொல்லவும் வேண்டுமா! கரோனா தொற்று ஆரம்பித்ததிலிருந்து பொருளாதார நிலைமை மிக மோசமாக மாறியிருக்கிறது. பல சிறு, குறு தொழில்கள் முடங்கியுள்ளன. பலர் வேலையிழந்து, வங்கியில் வாங்கிய கடனை செலுத்தமுடியாமல் உள்ளன.
இவர்களுக்கு உதவும் வகையில் ரிசர்வ் வங்கி கடந்த ஆண்டு மார்ச் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை கடன் தவணை ஒத்திவைப்பு சலுகையை அறிவித்தது. தற்போது இந்த ஆண்டுக்கும் கடன் தவணை ஒத்திவைப்பு தொடர்பாக சில சலுகைகளை அறிவித்து இருக்கிறது. ஆனால், ஒத்திவைக்கப்படும் மாதங்களுக்கான வட்டியை இறுதியில் செலுத்த வேண்டும். இது, ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் இருப்பவர்களுக்கு கூடுதல் சுமையைத்தான் தருகிறது. ஆனால், இத்தகைய வட்டியை தள்ளுபடி செய்ய தயங்கும் அரசு, எந்தத் தயக்கமுமின்றி பெரும் செல்வந்தர்கள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்கிறது. எனில், வங்கிகள் யாருக்காகச் செயல்படுகின்றன என்ற கேள்வியை கேட்காமல் எப்படி இருக்க முடியும்?
2,426 பேர் ரூ.1.47 லட்சம் கோடி
வங்கிகளில் கடனைப்பெற்று அதைத் திரும்ப செலுத்துவதற்கு வசதியிருந்தும் செலுத்த விரும்பாத
வர்களை “வில்ஃபுல் டிபால்டர்ஸ்” (wilful defaulters) என்று கூறுவர். அந்த வகையில் பொதுத்துறை வங்கிகளில் கடன் பெற்று திரும்ப செலுத்தாதவர்களின் எண்ணிக்கை 2,426. இவர்கள் செலுத்த வேண்டிய கடன் தொகை ரூ.1.47 லட்சம் கோடி.
எம். ரமேஷ்,
ramesh.m@hindutamil.co.in