

செல்வத்தை சரியான முறையில் கையாளுவதில்தான் நாட்டின் வளர்ச்சியும் நாட்டு மக்களின் வளர்ச்சியும் அடங்கி இருக்கிறது என்கிறது அர்த்தசாஸ்திரம்.“ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை போகாறு அகலாக் கடை” என்ற திருக்குறளும் அதைத்தான் வலியுறுத்துகிறது. வருமானம் அளவில் சிறிது என்றாலும் செலவு பெரிதாகாதபோது கேடு ஏதும் இல்லை என்கிறது இக்குறள்.
தேர்தல் முடிவுகள் வந்துவிட்டன. வெற்றிகரமாக ஆட்சியைக் கைப்பற்றியுள்ள புதிய அரசு தான் அளித்த வாக்குறுதிகளை எல்லாம் செயல்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஏற்கெனவே பெரும் கடன் சுமையில் இருக்கிறது தமிழகம். இந்நிலையில் வாக்காளர்களைக் கவர்வதற்காக அறிவித்திருக்கும் இலவசங்கள், கடன் தள்ளுபடி திட்டங்கள் அனைத்தும் அதன் முன்னே வரிசை கட்டி நிற்கின்றன.
ஏற்கனவே கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவழங்கிய கல்விக் கடன், விவசாயக்கடன் ஆகியவை சமீபத்தில் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. பெருந்தொற்று காலத்தில் விவசாய நடவடிக்கைகளை நிறுத்தாத வண்ணம் ஊரடங்கு காலத்தில் விதிவிலக்கு அளிக்கப்பட்டிருந்தது. விளைச்சலும் விற்பனையும் நன்றாகவே இருந்தபோதிலும் கோரிக்கை ஏதும் இல்லாமலே இந்தக் கடன்கள் தேர்தல் வெற்றியை முன்வைத்து தள்ளுபடி செய்யப்பட்டன.
வழக்கமாகவே ஒரு கட்சி சத்துணவு கொடுத்தால், இன்னொரு கட்சி நாங்கள் முட்டையுடன் கூடிய சத்துணவு வழங்குவோம் என்று போட்டி போடும். அதற்கடுத்து ஆட்சியில் ஊட்டச்சத்து மிகுந்த தானியங்கள் சேர்த்து வழங்கப்படும் என்று அறிவிக்கும். இப்படி கழகத்துக்கு கழகம் மாறி மாறி இலவச திட்டங்களை வாரி வழங்கியதன் விளைவுதான் பெரும் கடன் சுமை. கடன் சுமை ஒருபக்கம் எனில் மறுபக்கம் அரசு துறைகளின் நிர்வாகமும் பல்வேறு குளறுபடிகளுக்கும் சிக்கல்களுக்கும் உள்ளாகியுள்ளன.
மின் துறை
முதலில் விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்கினார்கள். ஆனால் புதிய மும்முனை மின் இணைப்புகள் குறைக்கப்பட்டுவிட்டன. பிறகு குடிசை வீடுகளில் இலவச மின்சாரம். அதற்குப்பிறகு, ஒவ்வொரு இணைப்பிற்கும் தலா 100 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்கப்பட்டது. இப்படி படிப்படியாக, மின்சார விநியோகத்தில் உருவாக்கப்பட்ட குளறுபடிகளால் சிக்கித் தவிக்கிறது தமிழக மின்சார வாரியம். பிற மாநிலங்களில் இருந்தும், தனியாரிடமிருந்தும் மின்சாரத்தை அதிக விலைக்கு வாங்கி குறைந்த விலைக்கு விநியோகம் செய்வதில் ஏற்படும் நஷ்டங்கள் ஒருபுறமிருக்க, இரண்டு மாதத்திற்கு ஒருமுறை பில்லிங் என்பதை மாதத்திற்கு ஒருமுறை என மாற்றுவதால் வரக்கூடிய இழப்புகள் மறுபுறம். இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால் அதன்மூலம் இழப்புகள் அதிகமாகக் கூடும்.
ஜெர்மனி போன்ற நாடுகளில் ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்ச நிரந்தர கட்டணம் செலுத்தும் நடைமுறை உண்டு. ஆண்டு இறுதியில் தோராயமான பயன்பாட்டு தொகைக்கு அதிகமோ குறைவோ இருந்தால் பின்னர் சரி செய்து கொள்ளப்படும். மேலும் அங்கு பல்வேறு மின்சாரம் வழங்கும் நிறுவனங்கள் இருப்பதால், ஒரு அலைபேசி எண்ணிலிருந்து இன்னொரு எண்ணுக்கு மாறுவதைப் போல மின்சார சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு மாற்றிக்கொள்வது மிக எளிது. ஆனால் நமக்கு அந்த மாதிரி வாய்ப்புகள் இப்போதைக்கு இல்லை.
போக்குவரத்து துறை
பேருந்துகளில் இலவச பாஸ்கள் வழங்கப்படுகின்றன. மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் ஓரளவிற்கு குறைவான பயண கட்டணங்கள் இருப்பதால் வருமானமும் குறைவு, போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு நீண்டகாலமாக வழங்கப்படாத பணிக்கொடை, ஓய்வூதியங்கள், தினசரி கலெக்ஷனை வைத்துக்கொண்டு பேருந்துகளுக்கு டீசல் நிரப்புவதற்கே சிரமப்படும் கிளைகள், உதிரி பாகங்கள் வாங்க முடியாத நிலையில் இயக்கப்பட முடியாத பேருந்துகள், என பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளாகின்றது. இது போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் ஊழியர்களின் வாழ்வாதாரத்தையே கேள்விக் குறியாக்கிவிடும்.
இந்த நிலைமை நீடித்தால் போக்குவரத்து துறை முற்றிலும் தனியார் மயமானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இப்படி பல துறைகள் வருமானம் இன்மையால் கடனிலும், நிதி நெருக்கடியிலும் உள்ளன. 100 நாள் வேலைத்திட்டம் 150 நாள் ஆக மாற்றப்படும் என்னும் வாக்குறுதி கிட்டத்தட்ட உழைக்காமலேயே ஊதியம் பெறும் திட்டம். உழைக்கும் வர்க்கத்தினர் எல்லோரையும் சோம்பேறியாக்கியதோடு விவசாய வேலை களுக்கும் தொழிற்சாலைகளுக்கும் மற்றமாநில வேலையாட்களை நம்பி இருக்க வேண்டியதிருக்கிறது.
இவை மட்டுமல்லாமல் குடும்பத்தலைவிக்கு மாதாமாதம் உதவித்தொகை, பல்வேறு மானியத் திட்டங்கள் உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றை யெல்லாம் செயல்படுத்தும்பட்சத்தில் கடன் மேலும் அதிகரித்துக் கொண்டுதான் போகும். ஆனால், அரசு தன் வருமான ஆதாரங்களை வளர்ச்சியை நோக்கி கொண்டு செல்வதற்கான வழிகளை கண்டறிவதாகத் தெரியவில்லை. பெட்ரோல், டீசல் மீதான வரி விதிப்பை உயர்த்துவது போன்ற உத்திகளைத் தவிர வேறெதுவும் தெரியவில்லை. இந்த விலை உயர்வு மீண்டும் மக்கள் நுகரும் பொருள்களின் விலை உயர்வுக்குதான் வழி வகுக்கின்றன.
இலவச தொலைக்காட்சி பெட்டி, மின்விசிறி, கிரைண்டர், மிக்ஸி, விலையில்லா ஆடு மாடு என இதுவரை தமிழகத்தில் வழங்கப்பட்ட இலவசத் திட்டங்களுக்கு கோடிக்கணக்கில் நிதி ஒதுக்குவதால், உள்கட்டமைப்பு வசதிகளான மின்சாரம், தரமான சாலை, போக்குவரத்து வசதி போன்றவற்றிற்கு நிதி பற்றாக்குறையாக இருக்கிறது என்று கையை விரிக்கிறது அரசு. பொதுவாக நம் வீட்டில் நமக்கு வரும் வருமானத்தில் என்ன செலவு செய்யலாம் எதற்கு செலவு செய்யலாம் என்பதை முடிவு செய்வது குடும்பத்தினர்தான். ஆனால் நமது வரிப்பணத்தில் இயங்கக்கூடிய அரசுதான் நிலத்தின் செலவுகளைத் தீர்மானம் செய்கிறது. குறுகிய கால பலன்களை மட்டுமே தரக்கூடிய இலவசங்களை வழங்கும் ஆட்சியாளர்கள் மக்கள் நீண்டகால நலன்களுக்கான திட்டங்களில் கோட்டை விட்டுவிடுகிறார்கள்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில்சொத்து வரியுடன் சேர்த்து குப்பையைச் சேகரிப்பதற்கும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி கடந்த ஆண்டு டிசம்பரில் இறுதிவாக்கில் அறிவித்திருந்தது. இந்தக் கட்டணம் பிற மாவட்டங்களில் வசூலிப்பது ஏற்கனவே அமலுக்கு வந்துவிட்டது. பின்னர் இந்த வரி வசூலிப்பு தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி நிறுத்தி வைக்கப்பட்டதாக செய்தி வந்தது.
குப்பைகளை அகற்றுவதற்கான ஒப்பந்தம் Urbaser SA நிறுவனத்திற்கு எட்டு ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. தற்போது வரிவிதிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் நிலையில், ஒப்பந்த பணத்தை வழங்குவதில் தாமதங்கள் ஏற்படுவதைப் பார்க்க முடிகிறது. இதனால் குப்பைகளை அகற்றும் பணி சற்று தொய்வடைந்து இருக்கிறது இலவசங்களுக்காக ஒதுக்கப்படும் நிதி, இதுபோன்ற சமூக நலத் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டால் ஊரும் நன்றாக இருக்கும். சுகாதாரமும் மேம்படும்.
இந்தியாவுடன் ஒப்பிடுகையில் அளவில் பன்மடங்கு சிறியதான பின்லாந்து நாட்டில் இலவசமாக சமச்சீர் கல்வி வழங்கப்படுகிறது. ஏழையாக இருந்தாலும் சரி பணக்காரராக இருந்தாலும் சரி, எல்லோருக்கும் ஒரே மாதிரியான கல்வித் திட்டம்தான். தனியார் பள்ளிகள் என்ற பேச்சுக்கே இடமில்லை. நமக்கு முன்பாக அனைத்து மாணவர்களுக்கும் மதிய உணவு சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு பின்லாந்தில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. கிராமத்தில் இருந்தாலும் நகரத்தில் இருந்தாலும் ,பள்ளிகளின் தரமும் கல்வித்தரமும் கல்விமுறையும் ஒரே மாதிரிதான். ஏழு வயதில் அடிப்படைக் கல்வி ஆரம்பமாகிறது. முதல் வகுப்பு முதல் ஆறாவது வகுப்பு வரை ஒரே வகுப்பாசிரியர்தான்.
இதனால் ஆசிரியர் மாணவர் உறவு மேம்படுகிறது. பின்லாந்து கல்விமுறையின் முக்கியமான அம்சம் என்னவென்றால் படிப்பில் பலவீனமாக இருக்கும் மாணவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. அந்தப் பாடங்களில் அவர்களுக்கு கூடுதல் வகுப்புகள் வழங்கப்படுவதோடு பள்ளிக்கு வெளியில் இருந்து ஆசிரியர்களையும் அழைத்து மாணவர்கள் புரிந்துகொள்ளவும், தேர்ச்சி பெறவும் உதவுகிறார்கள். முதல் வகுப்பிலிருந்து 12 வகுப்பு வரை எந்தவிதமான தேர்வுகளும் கிடையாது.
இன்டர்னல் அசஸ்மென்ட் என்னும் உள் மதிப்பீட்டின் அடிப்படையில்தான் அடுத்தடுத்த வகுப்புகளுக்கு செல்கிறார்கள். சமூகமும் அரசியலும் மக்களும் இணைந்திருப்பதால் பின்லாந்தின் இந்த கல்வி முயற்சி வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இலவச சைக்கிள், மடிக்கணினி, டேப்லெட் என்றெல்லாம் இலவசங்கள் கொடுப்பதற்கு பதிலாக உண்மையான சமச்சீர் கல்வி அமைப்பை கொண்டு வரலாம்.
பசியால் வாடுவோர்களுக்கு மீன்கொடுப்பதை விட மீன் பிடிக்கக் கற்றுக் கொடுப்பது நல்லது என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு பழமொழி. ஆக்கப்பூர்வமாக உள்கட்டமைப்பு பணிகளுக்கும் ,வளர்ச்சிப் பணிகளுக்கும் செலவிட வேண்டிய தொகைகளை சமூகநலத் திட்டங்கள் என்ற பெயரில் இலவசங்களுக்கு செலவழிப்பதற்கு இவர்களுக்கு அதிகாரம் கொடுத்தது நாம் தானே?. பெருந்தொற்று, சுனாமி போன்ற பேரிடர் காலங்களில் இலவசங்கள் வழங்குவது தவறல்ல. அதேபோல் கல்வி, மருத்துவம் போன்றவற்றை அனைவருக்கும் இலவசமாக வழங்கி அதன் மூலம் மக்களது வாழ்வாதாரத்தை உயர செய்ய வேண்டும்.
ஆனால் மற்ற இலவசங்களுக்காக ஒதுக்கப்படும் தொகையை கொண்டு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் திட்டங்கள் வகுக்க முயற்சிக்க வேண்டும். பேருந்து பயணமாக இருந்தாலும், மின்சாரமாக இருந்தாலும் சரி பயன்பாட்டுக்கான உரிய கட்டணங்கள் வசூலிக்கப்பட வேண்டும். பெரும்பாலும் இலவச திட்டங்களில் கிடைக்கும் பொருட்களுக்கு உரிய மதிப்பும் கிடைப்பதில்லை. குறைந்த ஒப்பந்த நிதியில் இலவசமாகத் தரப்படும் பொருள்களின் தரத்தில் அரசும் சமரசம் செய்து கொள்ள வேண்டியிருக்கிறது. இதனால் அரசுக்கு கடன் சுமையும், மக்களுக்கு நல்ல திட்டங்கள் கிடைக்காமல் போவதும்தான் மிச்சம். இந்த நிலை இனியேனும் மாற வேண்டும். புதிய அரசு திட்டமிட்டு செயல்பட வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு.
meenachisundaram.r@thehindu.co.i