Published : 10 May 2021 10:47 am

Updated : 10 May 2021 10:47 am

 

Published : 10 May 2021 10:47 AM
Last Updated : 10 May 2021 10:47 AM

நவீனத்தின் நாயகன் அத்தியாயம் 22: தொட்டது துலங்கும் கை!

navainathin-nayagan

விக்ரம் சாராபாய் இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் தந்தை. 1986 – இல்வெளியான ‘‘விக்ரம்” படம் நினைவிருக்கிறதா? கதை சுஜாதா. ஏவுகணை ராக்கெட்டை வில்லன் சத்யராஜ் கடத்த, நாயகன் கமல் வீரதீர சாகசத்தோடு மீட்டுவருவார். ”விக்ரம், விக்ரம், விக்ரம், நான் வெற்றி பெற்றவன், இமயம் தொட்டுவிட்டவன்” என்னும் பாட்டு சூப்பர் ஹிட். விக்ரம் சாராபாய் மீது இருந்த பெருமதிப்பால்தான் சுஜாதா நாயகனுக்கு ”விக்ரம்” என்று பெயர் வைத்தார் என்பது பலர் யூகம்.

1900 – களில் பிசினஸில் கொடிகட்டிப் பறந்த காலிக்கோ மில்ஸ் குழும நிறுவனர் அம்பாலால் சாராபாய் – சரளா தம்பதிகளுக்கு எட்டுக் குழந்தைகள். ஆறாமவராக, 1919 – இல்விக்ரம் பிறந்தார். கோடீஸ்வரக் குடும்பம். அகமதாபாதில் வீடு 20 ஏக்கர் பரப்பு. மூன்று மாடி. ஐம்பது அறைகள். வாசல் கேட்டிலிருந்து வீட்டுக்குப்போகும் வழி நெடுக வானுயர்ந்த மரங்கள், கவனமாகப் பராமரிக்கப்பட்ட பூச்செடிகள், பச்சை வெல்வெட் புல்தரை. தோகை விரித்தாடும் வண்ண மயில்கள், உலகின் பல நாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்ட அபூர்வ வளர்ப்பு மிருகங்கள், பறவைகள்.

வகை வகையான கார்கள், எட்டுக் குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் குதிரை, வீட்டைச்சுற்றிய பரப்பில் நீச்சல் குளம், பாட்மின்டன், கிரிக்கெட் ஆடுகளங்கள், மாட்டுத் தொழுவம், குதிரை லாயம், எண்ணற்ற கேரேஜ்கள், வண்ணார் துறை. இவற்றைப் பராமரிக்க 26 பணியாட்கள், 30 தோட்டக்காரர்கள், 2 சமையல்காரர்கள், 10 காவலாளிகள், கணக்கிலாக் கார் ஓட்டுநர்கள். இவர்களுக்கு இருப்பிடங்கள். வீட்டுக்குள் ஒரு பள்ளிக்கூடம். குஜராத்தி, இந்தி, சம்ஸ்கிருதம், வங்க மொழி, வரலாறு, பூகோளம், கணிதம், இயற்பியல், கெமிஸ்ட்ரி, ஓவியம், நடனம், மண்பாண்டக் கலை, கைவினைக் கலை, சிற்பம், பாட்மின்டன், டென்னிஸ், குதிரை சவாரி, வில்வித்தை, யோகா, சித்தார், வீணை, வயலின், தபேலா என முழு மனிதனை உருவாக்கும் கல்வித்திட்டம்.


இவற்றைக் கற்றுத்தர 12 ஆசிரியர்கள். அவர்களுள் 3 பேர் வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில் டாக்டரேட் பட்டங்கள் வாங்கியவர்கள்; பலர் உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களின் பட்டதாரிகள்; இந்திய மொழிகள், கவிதை, இசை, நுண்கலைகள், விளையாட்டு ஆகியவற்றுக்கு இந்திய வல்லுநர்கள். நூற்றுக்கணக்கான புத்தகங்கள் இருந்த நூலகம். பள்ளியில் எத்தனை மாணவ மாணவிகள் தெரியுமா? எட்டே எட்டுப்பேர்! ஆமாம், விக்ரமும், அவருடைய ஏழு சகோதர சகோதரிகளும் மட்டுமே! இப்படித் தங்கத் தொட்டிலிலே, வைரமணிக் கட்டிலிலே வளரும் வாரிசுகள் சாதாரணமாக உந்துதல் சக்தி இல்லாமல் குடும்பச் சொத்தில் குளிர்காய்வார்கள். விக்ரம் வித்தியாசமானவர். சொந்தக்காலில் நிற்கவேண்டும், தனக்கெனத் தனி முத்திரை பதிக்கவேண்டும் என்று துடித்தார்.

அவருக்கு இயற்பியல் மிகுந்த ஈடுபாடு. இந்தியாவில் பள்ளிப் படிப்பை முடித்ததும், உலகப் புகழ்பெற்ற இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். இயற்பியல், கணிதம் ஆகிய துறைகளில் இளங்கலைப் பட்டம் பெற்றார். வானியல் தொடர்பான இயற்பியலில் (Astrophysics – தமிழில் “வான் இயற்பியல்.”) தனிப் பிரியம் வந்தது. ஆராய்ச்சி செய்து டாக்டரேட் பட்டம் வாங்க விரும்பினார். சேர்ந்தார்.

விக்ரம் தேர்ந்தெடுத்த விஷயம், “வெப்பமண்டல நேர்க்கோடுகளில் காஸ்மிக் கதிர்கள் பற்றிய ஆய்வுகள்” (Cosmic Ray Investigations in Tropical Latitudes). தலைப்பே தலைசுற்ற வைக்கிறதா? கவலைப்படாதீர்கள். தனக்கு வழிகாட்டத் தேவையான விஞ்ஞானியை விக்ரமே நொந்து நூலாகித்தான் கண்டுபிடிக்கவேண்டியிருந்தது. இந்தச் சமாச்சாரம் என்ன என்று எளிமையாகச் சொல்கிறேன். காஸ்மிக் கதிர்கள், பால்வழி விண்கூட்டத்தில் பயணம் செய்யும் அதிவேக அணுக்கருக்கள் அல்லது எலெக்ட்ரான் துகள்கள். இவற்றுள் சில சூரியனிலிருந்து புறப்பட்டாலும், பெரும்பாலானவை சூரிய மண்டலத்திற்கு அப்பாலிருந்தே உற்பத்தியாகின்றன.

இவை பூமியை வந்தடையும்போது பூமியின் ஈர்ப்பு சக்தியால் பாதிக்கப்படுகின்றன. நில நேர்க்கோடு அல்லது அட்சரேகை, பூமத்திய ரேகைக்கு இணையாகப் பூலோக உருண்டையின் மேற்பரப்பில் வரையப்படுகிற கற்பனைக் கோடு. இந்தியா. இந்தக் கோட்டிலிருந்து 20.5937 கோணம் வடக்கிலும், 78.9629 கோணம் கிழக்கிலும் இருக்கிறது. வெப்பமான பகுதியான தென்னிந்திய மண்ணுக்கு வரும்போது காஸ்மிக் கதிர்கள் எப்படிப் பாதிக்கப்படுகின்றன என்பதை ஆராய்வது விக்ரமின் முயற்சி.

(என் விளக்கம் புரிந்ததோ இல்லையோ, இத்தனை நூடுல்ஸ் சிக்கல் சமாச்சாரத்தை ஆராய்ச்சிப் பாடமாக எடுத்துக்கொண்டவரைப் பார்த்து, “என்னா மூளைய்யா?” என்று வியக்கத் தோன்றுகிறதா? இந்த ஆச்சச்சரியம் போதும் விக்ரமின் ஆளுமையைக் காட்ட.) விண்வெளிப் பயணம் பற்றி ஆராய, காஸ்மிக் கதிர்களின் பாதிப்பை அறிவது அத்தியாவசியம். விக்ரம் இந்தப் பொருளைத் தேர்ந்தெடுக்கக் காரணம், விண்வெளியில் அவருக்கு இருந்த அறிவார்வம்தான். விக்ரமின் முயற்சிக்கு வந்தது ஒரு தடைக்கல் – 1939 – இல் தொடங்கிய இரண்டாம் உலகப்போர். மகனின் பாதுகாப்புக்காகக் கவலைப்பட்ட அப்பாவின் வற்புறுத்தலால் தாயகம் திரும்பினார். இந்தியாவில் ஆராய்ச்சிப் படிப்பைத் தொடரக் கேம்ப்ரிட்ஜ் அனுமதி தந்தது. ஒரே ஒரு நிபந்தனை – உலகப்புகழ் பெற்ற ஒரு விஞ்ஞானியின் வழிகாட்டலில் ஆராய்ச்சி தொடரவேண்டும்.

அத்தகைய ஒரு மாமனிதர் பெங்களூரு இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸில் (Indian Institute of Science) இயக்குநராக இருந்தார். அவர், 1930 – இல் பிசிக்ஸ் நோபல் பரிசு பெற்ற சி. வி. ராமன். விக்ரம் அவரிடம் மாணவராகச் சேர்ந்தார். ஆராய்ச்சிப் படிப்பின்போது விக்ரம் காதலில் விழுந்தார் – தமிழ்நாட்டுக் கனெக்‌ஷன். நம்ம ஊர் மாப்பிள்ளையானார். மனைவி மிருணாளினி நடனத் தாரகை. இவர் பெற்றோர் வீடு, சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் இருக்கிறது.

மாமனார் சுவாமிநாதன் சென்னையில் பிரபல வழக்கறிஞர்; மாமியார் அம்மு சுவாமிநாதன் விடுதலைப் போராட்டத்தில் சிறை சென்ற வீரர். பாராளுமன்ற மக்கள் அவைக்கு முன் இருந்த ”அரசியல் சட்டம் உருவாக்கும் மக்கள் மன்றம்” (Constituent Assembly of India), பாராளுமன்ற மேலவை ஆகியவற்றில் சென்னை மாநிலத்தின் பிரதிநிதியாக இருந்தார். பெண்கள் உரிமை, சாதி ஒழிப்பு, சாரணர் இயக்கம் ஆகியவற்றுக்காக நாளும் உழைத்தவர். நேத்தாஜியின் விடுதலைப் படையில் சேவை செய்த கேப்டன் லட்சுமியும், மிருணாளினியும் சுவாமிநாதன், அம்மு மகள்கள்.

1942நாடு முழுக்க “வெள்ளையனே வெளியேறு” விடுதலைப் போராட்டம். ரெயில்கள் ஓடவில்லை. விக்ரமின் சொந்தங்கள் ஒருவர் கூடவர முடியவில்லை. திருமண மண்டபங்கள் மூடிக்கிடந்தன. சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலை வீட்டு வரவேற்பறையில் கல்யாணம் தந்துனானே.

1945உலகப் போர் முடிந்தபின், விக்ரம் கேம்பிரிட்ஜ் திரும்பினார். போகும்போது விக்ரம் சாராபாய். திரும்பும்போது டாக்டர் விக்ரம் சாராபாய்.

1947சுதந்திர இந்தியாவின் பிரதமர் நேரு விஞ்ஞானம் நாட்டின் வறுமையை ஒழித்து, மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் ஆயுதமாக இருக்கவேண்டும் என்று விரும்பினார். விக்ரமின் மனப்போக்கும் இதேதான். பணம் கொழிக்கும் குடும்ப பிசினஸ்களைத் தாண்டி, நாட்டுக்கு நன்மை தரும் லாப நோக்கில்லாத அமைப்புகளை உருவாக்க அவர் இள நெஞ்சம் துடித்தது.

1947 அகமதாபாதில் “இயற்பியல் ஆராய்ச்சிப் பரிசோதனைச்சாலை” (Physical Research Laboratory) தொடங்கினார்.

1947 `‘‘அகமதாபாத் ஜவுளித்தொழில் ஆராய்ச்சிக் கழகம்” (Ahnmedabad Textile Industry Research Association) Physical Research Laboratory – சுருக்கமாக ATIRA). அகமதாபாதின் முக்கிய தொழில் ஜவுளி. இந்த ஆலைகள் நவீனத் தயாரிப்பு முறைகளைப் பயன்படுத்தவில்லை. இதனால், உலகச் சந்தையில் போட்டியிட முடியவில்லை. இந்தக் குறையைத் தீர்ப்பது ATIRA – - வின் குறிக்கோள். முதல் இயக்குநராகப் பொறுப்பேற்ற விக்ரம் அடுத்த 9 ஆண்டுகள் வழி நடத்தினார். இன்றும் தொடரும் ATIRA – வின் வெற்றி, விக்ரம் போட்ட விதை விருட்சமாகியிருக்கும் கதை.
ATIRA அனுபவம் இன்னொரு முயற்சிக்கு அழைத்துப்போனது.

பொருளாதார வளர்ச்சிக்கு நவீனத் தொழில்நுட்பத்தோடு நவீன நிர்வாகத் திறமையும் தேவை என்பதை விக்ரம் உணர்ந்தார். 1956 – இல் “அகமதாபாத் மேனேஜ்மென்ட் அசோசியேஷன்” தொடங்கினார். தொழில் அதிபர்களுக்கும், ஊழியர்களுக்கும் பயிற்சி முகாம்கள் நடத்தி அவர்களைப் பட்டை தீட்டினார். அகமதாபாதுக்கு மட்டுமல்ல, அகில இந்தியாவுக்கே இது தேவை என எண்ண மின்னல் வெட்டியது. 1962 – இல், உலகப் புகழ் பெற்ற அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக் கழகத்துடன் கை கோர்த்து, அகமதாபாதின் ”இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்” பிறந்தது.

விக்ரமுக்கு எப்படித்தான் நேரம் கிடைத்ததோ? இத்தனை பொதுநலப் பொறுப்புகளுக்கிடையில், சாராபாய் கெமிக்கல்ஸ் என்னும் மருந்துகள் தயாரிப்பு நிறுவனத்தை நிர்வகிக்கும் கடமையைக் குடும்பம் அவரிடம் தந்தது. நம் புதுமைப் பித்தர் அங்கும் பல நிர்வாக முன்னேற்றம் செய்தார்.

1962இந்திய ‘‘அணுசக்தித் துறை”யின் தலைவராக இருந்தார் ஹோமி பாபா. விக்ரம் போலவே தொலைநோக்குக் கொண்டவர். தன் துறையின் கீழ், விக்ரம் தலைமையில் ”இந்திய தேசிய விண்வெளி ஆராய்ச்சிக் குழு” (Indian National Committee for Space Research) அமைத்தார். திறமையும், இளமைத் துடிப்பும் கொண்ட 10 பொறியியல் வல்லுநர்களை விக்ரம் தன் அணிக்குத் தேர்ந்தெடுத்தார். இப்போது உங்களுக்கு ஒரு க்விஸ். அருகில் இருக்கும் போட்டோவைப் பாருங்கள். அந்தப் பத்துப்பேரில் இருவர் ராக்கெட் தயாரிப்பில் ஈடுபட்டிருக்கிறார்கள். உங்கள் வலதுகைப் பக்கம் இருப்பவர் யார்?

(புதியதோர் உலகம் செய்வோம்!)

slvmoorthy@gmail.com


நவீனத்தின் நாயகன்தொட்டது துலங்கும்துலங்கும் கைNavainathin Nayaganஇந்திய விண்வெளி ஆராய்ச்சிவிக்ரம்சுஜாதா

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x