Published : 26 Apr 2021 10:14 AM
Last Updated : 26 Apr 2021 10:14 AM

மெய்நிகர் உலகில் உங்களுக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது?

பீப்பிள் என்ற பெயரில் அறியப்படும் அமெரிக்காவைச் சேர்ந்த மைக் விங்கெல்மேனின் டிஜிட்டல் ஓவியங்கள் மிகப் பிரபலமானவை. பாப் காலச்சார பிம்பங்கள், கார்ட்டூன் கதாபாத்திரங்கள், எமோஜி போன்றவை இவரது ஓவியங்களில் பிரதானமாக இடம்பெறும். இன்ஸ்டாகிராமில் தினமும் ஒரு ஓவியத்தை பதிவிடுதை வழக்கமாக கொண்டிருப்பவர். அவ்வாறாக 2007-ம் ஆண்டு முதல் 2021 வரையில் தினமும் அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டப் படங்களைத் தொகுத்து ‘எவ்வரிடேய்ஸ்: தி ஃப்ர்ஸ்ட் 5000 டேய்ஸ்’ (Everydays: the First 5000 days) என்றொரு டிஜிட்டல் ஓவியத்தை உருவாக்குகிறார். கிரிஸ்டி என்ற ஏல நிறுவனம் பீப்பிள்ஸின் இந்த ஓவியத்தை கடந்த மாதம் இணையவழி ஏலம் விட்டது. ஆரம்ப விலை 100 டாலர்.

ஏலம் போன விலை 69.3 மில்லியன் டாலர். இந்திய மதிப்பில் 525 கோடி ரூபாய். புகழ்பெற்ற ஓவியர்கள் வரைந்த ஓவியங்களை பெரும் செல்வந்தரோ, தொழில் அதிபரோ அதிக விலை கொடுத்து வாங்கும் செய்திகளை நாம் படித்திருப்போம். ஆனால், பீப்பிள்ஸின் ஓவியம் அத்தகையது அல்ல. டிஜிட்டல் ஓவியமான அது, என்எஃப்டி (non-fungible token) முறையில் விற்கப்பட்டிருக்கிறது என்பதுதான் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. டிஜிட்டல் ஓவியம் ஒன்று கிட்டத்தட்ட 70 மில்லியன் டாலருக்கு ஏலம் போனது வரலாற்றில் இதுவே முதல் முறை. ஆனால், ஆச்சரியம் டிஜிட்டல் ஓவியம் பெரும் தொகைக்கு ஏலம்போனது மட்டுமல்ல, அவ்வளவு தொகைக்கு அதை வாங்கியவர்தான் கூடுதல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்.

மெய்நிகர் பில்லியனர்

பரம்பரை கோடீஸ்வரரோ அல்லது பெரும் தொழில் அதிபர் எவரோதான் பீப்பிள்ஸின் ஓவியத்தை அவ்வளவு தொகை கொடுத்து வாங்கியிருப்பார் என்று நினைத்துவிடாதீர்கள். நிஜ உலகில் எந்தச் சொத்தும் வைத்திருக்காத சிங்கப்பூரில் வசிக்கும் தமிழரான விக்னேஷ் சுந்தரேசன் என்ற இளைஞர்தான் அந்த ஓவியத்தை வாங்கியுள்ளார். விக்னேஷ் சாதாரண குடும்பப் பின்புலத்திலிருந்து வந்தவர்.

சொந்தமாக மடிக்கணினி கூட வாங்க முடியாத பொருளாதார பின்புலத்தைக் கொண்டிருந்த அவர், நண்பர்களின் மடிக்கணினியைப் பயன்படுத்தியே நிரல் எழுதக் கற்றுக்கொள்கிறார். அவ்வாறாக கிரிப்டோ உலகம் அவருக்கு அறிமுகமாகிறது. அந்த சமயத்தில் கிரிப்டோ கரன்ஸியில் 5,000 டாலர் முதலீடு செய்கிறார். தற்போது கிரிப்டோகரன்சியில் அவரது மதிப்பு 1 பில்லியன் டாலருக்கும் மேல் என்று கூறப்படுகிறது. அவருக்கு நிஜ உலகத்தில் கார், வீடு, நிலம் என எந்தச் சொத்தும் இல்லை. ஆனால், மெய்நிகர் உலகில் அவர் பில்லியனர்.

என்ன நடக்கிறது?

அடிப்படையாக, என்எஃப்டியின் (NFT) வருகை கலை உலகை ஜனநாயகப்படுத்தி இருக்கிறது என்பதே அதன் மீதான மதிப்பீடாக இருக்கிறது. உதாரணமாக, வழக்கமான ஏல முறையில் மேற்கத்திய கலைஞர்களுக்குதான் வாய்ப்புக் கிடைத்து வந்தது. ஆனால், என்எஃப்டி முறையால் பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் உள்ள கலைஞர்கள் தங்கள் படைப்பை சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த வகையில், என்எஃப்டியால் கலைப்படைப்புகளை சேகரித்தல் விற்றல் நடைமுறையில் புதிய சகாப்தம் உருவாகி இருக்கிறது என்று கூறுகின்றனர்.

சரி, கலை உச்சம் தொட்ட படைப்புகள்தான் என்எஃப்டி முறையில் விற்கப்படுகிறதா? நிச்சயம் இல்லை. ஏப்பம் விடும் ஓசை, மீம்ஸ், எமோஜி, பாடல்கள், வீடியோ காட்சிகள், கட்டுரைகள் என பலவும் என்எஃப்டிகளாக பல மில்லியன் டாலருக்கு விற்பனை செய்யப்படுகின்றன. பீப்பிள்ஸின் ஓவியம் போலவே, சென்ற மாதம் ட்விட்டர் நிறுவனர் ஜாக் டோர்சி, அவர் முதன்முதலாக பதிவிட்ட ட்விட்டை என்எஃப்டி முறையில் ஏலம்விட்டார். 2.2 மில்லியன் டாலருக்கு அந்த ட்விட் ஏலம்போனது. சில வாரங்களுக்கு முன்பு அமெரிக்காவில் ஒரு காதல் ஜோடி என்எஃப்டி முறையில் மோதிரம் மாற்றி திருமணம் செய்துகொண்டனர். கை விரலில் அணியும் மோதிரம் சில காலங்களுக்கு மட்டுமே இருக்கும். ஆனால், என்எஃப்டி அழிவற்றது என்று அந்த தம்பதியினர் பெருமிதம் கொள்கின்றனர். சிறு கலைஞர்கள் முதல் எலான் மஸ்க் வரையில் பலர் தற்போது என்எஃப்டி நோக்கிச் செல்லத் தொடங்கியுள்ளனர்.

பீப்பிள்ஸின் அந்த ஓவியத்தையும், ஜாக் டோர்சியின் முதல் ட்விட்டையும் எல்லோராலும் இணையத்தில் பார்க்க முடியும். பிறகு ஏன் ஒருவர் பல கோடி செலவிட்டு அவற்றை வாங்க வேண்டும்? டாவின்சி வரைந்த மோனலிசா ஓவியத்தை பிரதியெடுத்து வரையப்பட்ட ஓவியங்கள் விற்பனைக்கு உண்டு. ரூபாய் நூறோ, இருநூறோ கொடுத்து அவற்றை வாங்க முடியும். ஆனால், டாவின்சி கைப்பட வரைந்த மோனலிசா ஓவியத்தின் மதிப்பு என்ன? பல மில்லியன் டாலர்கள். அந்த ஓவியத்தை முக்கியமானதாக கருதுபவர்களின் வழியே அதற்கான மதிப்பு அதிகரிக்கிறது.

சரி, ஓவியங்கள், பழங்கால பொருட்களை ஏலத்தில் வாங்கும்போது அவை நம் கைகளில் கிடைக்கும். அவற்றை வீட்டிலோ, அருங்காட்சியகத்திலோ பார்வைக்கு வைத்துக்கொள்ளலாம். ஆனால், பீப்பிள்ஸின் ஓவியத்தை எங்கு வைப்பது? டிஜிட்டல் ஓவியத்தில் ஒரிஜனல் என்ன, நகல் என்ன. பிறகு ஏன் அது பல மில்லியன் டாலருக்கு ஏலம்போனது? என்எஃப்டி என்பது ஒருவகை டோக்கன். அந்த ஓவியத்தை வாங்கியவர்தான் இனி அதன் உரிமையாளர் என்பதற்கான உறுதியை என்எஃப்டி அளிக்கிறது. அந்தத் தகவல் அனைவரின் பார்வைக்கும் இருக்கும். எவராலும் ஹேக் செய்ய முடியாது. அதுதான் என்எஃப்டியை முக்கியத்துவப்படுத்துகிறது.

அது என்ன என்எஃப்டி?

என்எஃப்டி பற்றி புரிந்துகொள்ள வேண்டும் என்றால், நாம் முதலில் பிளாக்செயின் தொழில்நுட்பத்தைப் பற்றி புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். எவ்வாறு 90களில் இணையம் புழக்கத்துக்கு வந்தபோது, அது உலகின் போக்கை மாற்றி அமைத்ததோ அதுபோலவே பிளாக்செயின் தொழில்நுட்பமும் உலகின் போக்கை மாற்றி அமைத்துக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் இணையத்தின் இரண்டாம் கட்ட பரிமாணமாகவே பிளாக்செயின் பார்க்கப்படுகிறது.

உங்களுடைய மொபையிலிருந்து வாட்ஸ்அப் வழியாக உங்கள் நண்பருக்கு புகைப்படம் ஒன்று அனுப்புகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். தற்போதைய தொழில்நுட்பத்தின்படி உங்கள் கேலரியில் இருக்கும் புகைப்படம் உங்கள் வாட்ஸ்அப்புக்கு நகலாகும். அங்கிருந்து உங்கள் நண்பரின் வாட்ஸ் அப்புக்கு அனுப்பப்படும். அவரது வாட்ஸ்அப்புக்கு அந்தப் புகைப்படம் வந்ததும், அது அவரது கேலரியில் சேகரமாகும். ஆக, நீங்கள் உங்கள் நண்பருக்கு அனுப்பியது உங்களிடமிருந்த ஒரிஜினல் புகைப்படம் அல்ல. அதனுடைய நகல்தான் அவருக்கு சென்றுள்ளது. மேலும் பல நகல்கள் உருவாக்கப்படுகிறது.

இங்குதான், பிளாக்செயின் தொழில்நுட்பம் வேறுபடுகிறது. பிளாக்செயின் தொழில்நுட்பத்தில், உங்களிடம் உள்ள புகைப்படத்தை உங்கள் நண்பருக்கு அனுப்பும்போது, அந்தப் புகைப்படம் உங்கள் கேலரியில் இருந்து நீங்கி அவரது சேமிப்புக்குச் சென்றுவிடும். அதாவது, உங்களிடம் இருந்த ஒரிஜினல் புகைப்படமே அவருக்கு செல்லும். எந்த நகலும் உருவாகாது.

இந்தப் பரிமாற்றம், அதாவது அந்தப் புகைப்படம் யாரிடமிருந்து யாருக்குச் சென்று இருக்கிறது, எப்போது அனுப்பப்பட்டது என்ற விவரங்கள் அனைத்தும் இணையவெளியில் அனைவரின் பார்வைக்கும் இருக்கும். அந்தவகையில், அந்தப் புகைப்படத்தின் உரிமை பாதுகாப்புக்குரியதாக மாறிவிடுகிறது.இந்த தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டுதான் கிரிப்டோகரன்ஸி, என்எஃப்டி போன்றவை செயல்படுகிறது. பரிமாற்றம் பாது காப்பானதாகவும், வெளிப்படையாகவும் இருப்பதால் வங்கிகள் போன்ற இடைத்தரக அமைப்புகளின் தேவையை பிளாக்செயின் தொழில்நுட்பம் இல்லாமல் செய்துவிடுகிறது.

அந்த வகையில் டிஜிட்டல் சொத்துகளின் பரிமாற்றத்துக்கு பிளாக்செயின் தொழில்நுட்பம் வழிசெய்கிறது. இதனால் தான் பிட்காயின், ஈதரம் போன்ற கிரிப்டோகரன்ஸிகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. மேற்பார்வையில், பிட்காயின் போலதான் என்எஃப்டியும் என்று தோன்றலாம். ஆனால் இரண்டும் வெவ்வேறானவை. என்எஃப்டி என்பது கிரிப்டோ உலகில் ஒரு அங்கமேதவிர அதன் செயல்பாடு பிட்காயின், ஈதரம் போன்றது அல்ல.

அதாவது இரண்டு பிட்காயின்கள் இருக்கிறதென்றால், அவை இரண்டுக்கும் ஒரே மதிப்புதான். ஆனால், என்எஃப்டி அவ்வாறானது அல்ல. ஒவ்வொரு என்எஃப்டிக்கும் ஒரு மதிப்பு. ஒரு பிட்காயினைக் கொடுத்து இன்னொரு பிட்காயின் வாங்கிக் கொள்ளலாம். ஆனால், ஒரு என்எஃப்டியைக் கொடுத்து இன்னொரு என்எஃப்டி வாங்க முடியாது. இப்படி புரிந்துகொள்ளலாம். இரண்டு வெள்ளைத் தாள்கள் இருக்கின்றன. அவற்றில் எதுவும் வரையப்படவில்லை, எழுதப்படவில்லை.

வெற்றுத் தாள்கள். எனில், அந்த இரு தாள்களுக்கும் ஓரே மதிப்புதான். ஒரு வெள்ளைத் தாளைக் கொடுத்து அந்த மற்றொரு வெள்ளைத் தாளை வாங்கிக் கொள்ளலாம். அதுவே இரு தாள்களிலும் வெவ்வேறு ஓவியங்கள் வரைகிறோம் என்று வைத்துக் கொள்வோம். இப்போது அந்த தாள்களின் மதிப்பு ஒன்றாக இருக்காது. தனித்தனி மதிப்பைக் கொண்டிருக்கும். பிட்காயின் என்பது எதுவும் வரையப்படாத வெற்றுத் தாள். என்எஃப்டி என்பது ஓவியம் வரையப்பட்ட தாள். இதுதான் பிட்காயின், ஈதரம் போன்ற கிரிப்டோ கரன்ஸிக்கும் என்எஃப்டிக்குமான அடிப்படை வேறுபாடு.

டிசென்டர்லேண்ட்

என்எஃப்டி முதன்முதலாக 2017-ம் ஆண்டு கிரிப்டோகிட்டீஸ் என்ற ஆன்லைன் கேமில் தான் அறிமுகமானது. அதில் வரும் பூனைகளை ஒருவர் விலைகொடுத்து சொந்தமாக வாங்கிக்கொள்ளலாம் என்பதாகத் தான் என்எஃப்டி நடைமுறைக்கு வந்தது. பூனையில் ஆரம்பித்தது தற்போது மெய்நிகர் ரியல் எஸ்டேட் அளவு வளர்ந்து இருக்கிறது. தற்போது நிஜ உலகில் நிலம் வாங்குவது எல்லாம் பழைய கதையாக மாறிவிடும் அளவுக்கு மெய்நிகர் உலகில் நிலம் வாங்கும் போக்கு ஆரம்பமாகி இருக்கிறது. டிசென்டர்லேண்ட் (Decenterland) மெய்நிகர் ரியல் எஸ்டேட்டில் முதன்மைத் தளமாக விளங்குகிறது.

இங்கு ஒரு லேண்ட் பார்சலின் தற்போதைய மதிப்பு 1,650 டாலர். விளையாட்டு மைதானம், பூங்கா, தியேட்டர், மது விடுதி என நிஜ உலகில் இருக்கும் அனைத்தும் அங்கு இருக்கும். நீங்கள் அங்கு நிலம் வாங்கி உங்களுக்கு விருப்பமான வகையில் அந்த நிலத்தை பயன்படுத்திக்கொள்ளலாம். பீப்பிள்ஸின் ஓவியத்தை விக்னேஷ் வாங்கி இருப்பதுகூட, மெய்நிகர் உலகில் உள்ள அவருக்குச் சொந்த இடங்களில் அந்தப் படங்களைக் காட்சிப்படுத்தத்தான். வீடியோ கேம்களில் நாம் பார்த்த உலகம் தற்போது நிஜமானதாக மாறிக்கொண்டிருக்கின்றன.

ஆனால், என்எஃப்டிக்கான மதிப்பு நிரந்தரமில்லை. எப்போது வேண்டுமானாலும் வெடித்து மாயமாகும் நீர்குமுழி போல்தான் இதன் கட்டமைப்பு என்று சில பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். காரணம், கிரிப்டோ உலகில் ஒரு பொருளுக்கான மதிப்பு தேவையின் அடிப்படையில் உருவாகுவதில்லை. மாறாக, தனி மனிதர்கள் செயற்கையாக உருவாக்குகிறார்கள். அது நீடிக்காது என்பது அவர்களது வாதம். அதேசமயம், என்எஃப்டி, பிட்காயின் போன்றவற்றை பொருளாதாரம் சார்ந்ததாக மட்டும் நாம் அணுகிவிட முடியாது.

இவை அனைத்தும் மனிதச் சிந்தனையில் நிகழ்ந்துவரும் பரிணாமத்தின் வெளிப்பாடுகளாகவும் நாம் பார்க்க வேண்டியதாக உள்ளது. எப்படியாயினும், தெரிந்தவர்களிடம் சீட்டுபோடுவது, வங்கியில், தங்கத்தில் முதலீடு செய்வது என நிஜ உலகில் சாமனியர்கள் ஐந்துக்கோ, பத்துக்கோ அல்லல்பட்டுக்கொண்டிருக்க, கிரிப்டோ உலகமோ, கற்பனைக்கு எட்டாத வகையில் இயங்கிக்கொண்டிருக்கிறது. ஒரு வகையில் கிரிப்டோ உலகம் வாழ்க்கையின் தத்துவம், அற விழுமியங்கள் போன்ற பிடிமானங்களை அர்த்தமிழக்கச் செய்வதாக இருக்கிறது.

riyas.ma@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x